Tuesday, September 6

இன்பம் எது?

போட்டிகளில் வெல்வதுதான் வாழ்க்கை என்பார்

போட்டியற்ற வாழ்வினை வாழ்ந்து பாராதார்.

வெல்வதுதான் மகிழ்ச்சி என்போரே அறிவீரா?..

எதனை வெல்லுதல் இன்றியமை என.


தம்புலன் வெல்லுதல், தம்செருக்கு வெல்லுதல்,

தம்புகழ் வெல்லுதல்

தம்அறிவு வெல்லுதல்

இவற்றை வென்று வாழ்ந்து பாரீர்

ஒவ்வோர் வெற்றியும் கனம் கூட்டி


மகிழ்ச்சியின் படிகளில் ஏறச் செய்யும்.

மனமாறி இன்பநிலை எட்டச் செய்யும் 

இதுவே வாழ்க்கை  இன்ப வாழ்க்கை.

இப்படி வாழ்வீர் யாவருமே!! 


Thursday, August 25

ஓடி ஓடி....

மூச்சுமுட்ட ஓடி 

முதலில் வந்தாச்சு.

கரவொலி கிறங்க வைக்க..

வெற்றிப்பெருமிதம் 

மனதில் பொங்க

சுற்றிமுற்றி பார்த்தேன்..

உலகே என்கையில் 

என்பதாய் உணர்ந்தேன்...


இளைப்பாற நேரமின்றி

கண்மூடித் திறப்பதற்குள்

மீண்டும் ஓட்டம் ஆரம்பம்.

ஓடத் தொடங்கினேன். 

முதலில் வருதலே போதையாய்...

முதலில் வருதலே தவமாய்..

ஓட்டத்திற்கு மேல் ஓட்டம்...


ஓடி ஓடிக் களைத்து

ஒடிந்து கீழே விழுந்தேன்.

நின்று நிதானமாய்

சுற்றிமுற்றி பார்க்கிறேன்..

உலகு என் கையிலிருந்து

நழுவி எங்கோ போயிற்று..

உணர்வற்று இருந்தேன்.

இப்போதும் கரவொலி .

எனக்கல்ல அவ்வொலி.


Tuesday, August 16

கோப்பை குழம்பி

குழம்பும் மனதை 

குழம்பிக் கோப்பை நிரப்பி

தெளிவாக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழம்பிக் கோப்பை நிரப்பி 

பேசவைக்கும்

தோழமை 

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழ்ம்பிக் கோப்பை நிரப்பி

புரியா சேதியை புரிய வைக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!


குழம்பும் மனதை

குழ்ம்பிக் கோப்பை நிரப்பி

வாழ்வைக்கும் தோழமை

கிட்டட்டும் யாவருக்கும்!!!

Thursday, August 4

சதுரங்கம்

எண்ணம் #1

அரசனுக்கு அதிகாரம் இல்லை என்பர்.

அரசிக்கு நிகர் அவளே என்பர்.

அவர்கள் அறிவது இல்லை ஒருபோதும்..

அரசி வெட்டுண்டாலும்

ஆட்டம் தொடரும்.

அரசன் சூழப்பட்டாலே ஆட்டம் முடிந்துவிடும் என்பதை.


எண்ணம் #2

களம் நின்று விளையாட

கணவனை விடுவது இல்லை.

களம் விட்டுச் சென்றாலும் 

மீண்டு வருவாள் அவன்தன்னைக் காத்திடவே!!!


எண்ணம் #3

வெட்டுண்டு களம் நீங்கினும்

மீண்டு வருவாள்

தலைவன் உயிர்காக்க...

செங்களத்தின் அரசி.


Wednesday, July 20

காதலின் போக்கு

மரமும் காற்றுமாய் 

நானும் அவனும் 

.

சிலநேரம் என்னைத்

தலையாட்ட வைக்கிறான்.


சிலநேரம் என்னை

பூஉதிர்க்கச் செய்கிறான்.


சிலநேரம் என்னை 

அசைக்க முயல்கிறான்.


சிலநேரம் என்னைச்

சாய்த்தே விடுகிறான்.


அவன் இல்லாது

நான் இல்லை என்பதை 

இருவரும் உணர்கிறோம்.


அதனால்தான் இன்னும்

உரசிக் கொண்டும்

உறவு கொண்டும்

இருக்கிறோம்.