Tuesday, June 5

பெற்ற கடன்

‘என்னங்க?’ என்ற காந்திமதியின் குரல் கேட்டதும் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவர் மெதுவாகத் திரும்பினார் சுந்தரம். அவர் கண்களில் இருந்த என்ன என்ற கேள்வியைப் பாரத்ததும் காந்திமதி கொஞ்சம் தயங்கினார்.

‘உங்க அண்ணனுக்குச் சொல்லி அனுப்ப வேண்டாமா?’

‘என்ன சொல்லணும?’

‘என்னங்க இப்படி கேட்கிறீங்க? மாமா உடம்பு இவ்வளவு மோசமாக இருக்குது. இப்பவே சொல்லிவிட்டால் அப்புறம் அவர் வந்து கேள்வி கேட்கிற மாதிரி இருக்காதில்ல?’

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், அப்பறமாப் பார்த்துக்கலாம். உன் வேலையை மட்டும் பாரு!’ என்று சொல்லி விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

பெருமூச்சோடு மாமனாரின் அருகில் அமர்ந்திருந்த மாமியார் ராமாயிப் பாட்டியைப் பார்த்தாள். இதை எதிர்பார்த்தவள் போல பாட்டியும் கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.

மூத்தவன் மாணிக்கத்துக்கு திருமணமான புதிதில் ஏற்பட்ட சிறு சலசலப்பு இப்போது அண்ணன் தம்பி விரிசலில் வந்து நிற்கிறது.

சின்னவன் சுந்தரத்துக்கே இப்போது வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அண்ணன் மாணிக்கம் செய்த்து போல தானும் பெண்டாட்டி பேச்சு கேட்டு நடக்கக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருந்தார். பெற்வர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து கவனமாகச் செய்து வந்தார். ஆனால் அவர் செய்த தவறு, நாம் மட்டும் தான் பெற்றவர்களைக் கவனிக்கிறோம் என்ற எண்ணத்தை ஆழமாக வளர்த்துக் கொண்டதுதான்.

அவர் சொல்ப டிதான் பெற்றவர்கள் கேட்க வேண்டும். பேசவேண்டும், நடக்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்.

ஒருதடவை மாணிக்கத்தின் மகனுக்கு காரில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்த போது ராமாயியும் அவள் கணவர் சுப்பையாவும் போகத் துடித்தனர். அவர்களுடையப் பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்களிடம் கோபப்பட்டு வாயில் வந்த வார்த்தைகளால் இருவரையும் வதக்கி விட்டார்.

அதிலிருந்து சுப்பையாவுக்கும் சுந்தரத்துக்குமான உறவில் விரிசல் விழத்தொடங்கி விட்டது, இது நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது அவர் படுத்த படுக்கையாகி இருக்கும் போது கூட யாருக்கும் சொல்லக்கூட மனமில்லாமல் இருக்கிறார் சுந்தரம்.

சரியாக ஒரே வாரத்தில் போய்ச்சேர்ந்து விட்டார் சுப்பையா. அதன் பிறகே மாணிக்கத்திற்கு சொல்லி விட சம்மதித்தார். எல்லாக் காரியமும் முடிந்து 2 வாரங்களுக்குப் பின் மாணிக்கம் ஊருக்குத் திரும்பத் தயாரானார். கூடவே ராமாயிப் பாட்டியும் கிளம்ப சுந்தரத்துக்கு ஒண்ணும் விளங்கவில்லை.

‘நீ எங்கம்மா கிளம்புற?’ - என்று கேட்டார் சுந்தரம்.

‘நான் மாணிக்கத்தோடேயே இருந்துக்கிறேன்டா’.

‘ஏன் என்னாச்சு திடீர்ன்னு?, நான் கவனிக்க மாதிரி அவன் உங்களக் கவனிச்சிருவானா?’ என்று சீறினார் சுந்தரம்.

‘இல்லப்பா, நிச்சயம் உன் வசதி அவன்கிட்ட இல்லை. ஆனால் கொஞ்சமாவது சுதந்திரமா இருக்கலாமுன்னு நம்புறேன். எப்போ அந்த மனுசன் மகனைப், பேரப்பிள்ளைகளைப் பார்க்காம உயிரை விட்டாரோ, அப்பவே நினைச்சுட்டேன், என் கடைசி காலம் உன் கூட கிடையாதுன்னு! நாங்களும் மனுசனுங்க தானே, உன் இஷ்டப்படி யே எல்லாம் பண்ணணும் நீ நினைக்கிறது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்குப் புரியும் போது நான் வர்றேன்.
மாணிக்கம் வீட்டில் இருந்தா எப்ப வேணா உங்க எல்லாரையும் வந்து பார்த்துப்பேன். ஆனா உன் கூட இருந்தா நான் உன் அடிமையாத்தான் வாழணும். வேண்டாப்பா! நான் கிளம்புறேன்.’
என்றபடி கிளம்பி விட்டார் ராமாயி.

தன்னைப் பெற்றவளிடமிருந்து இவ்வளவு வேகத்தை எதிர்பார்க்காத சுந்தரம் விக்கித்து நின்றார்.


பின் குறிப்பு : ‘இந்தக் கதையில் வரும் சம்பவம் கற்பனையே’ என்று எழுதத் தான் ஆசை. ஆனால்.. .?

Monday, June 4

ஓமனைத் தாக்கப் போகும் புயல்

நாங்கள் ஓமனில் இருக்கிறோம். மிக அமைதியான நாடு. இன்னும் இரு தினங்களில் இந்தியா செல்வதாக இருக்கிறோம். பெட்டிகளை எல்லாம் மேலிருந்து இறக்க ஆரம்பித்தாகி விட்டது. இப்போது புயல் போல ஒரு சேதி! மஸ்கட்டைப் புயல் தாக்க இருக்கிறதாம்.
இன்று இரவு கடலில் தோன்றும் புயல் நாளை ‘சலாலா’ என்னும் ஓமனின் ஒரு நகரைத் தாக்கி விட்டு பின்பு நாளை மறுநாள் மஸ்கட்டில் கரையேறுமாம்! கடந்த 6 வருடமாக இருக்கிறோம். இதற்கு முன்பு புயல் வந்ததாக கேள்வி கூடப் பட்டதில்லை. சுனாமி வரும் போது கூட கொஞ்சம் பெரிய மழை, அவ்வளவுதான். மஸ்கட்டைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய மழை பெய்தாலே ஊரெல்லாம் வெள்ளக் காடாகி விடும். இந்த முறை எப்படி என்றே தெரியவில்லை. எவ்வித பெரிய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடவாமல் இருந்தால் நல்லது. எல்லாம் வல்ல ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் தான். நாங்கள் நல்லபடியாக ஊருக்குச் சென்று வருகிறோ ம்! (2 மாதங்களுக்கு விடுமுறை. ஊரில் நேரமிருந்தால் பின்னூட்டமிட முயற்சிக்கிறேன்.)நன்றி - http://www.wunderground.com/

Wednesday, May 9

சிங்க ராஜாவும் சின்னப்பொண்ணும்

இது ஒரு சின்னப்பொண்ணுக்கும் சிங்கராஜாவுக்கும் இடையில் நடக்கும் விவாதம். சிங்க ராஜாவை ஊருக்குள்ளே அழைக்கிறா சின்னப்பொண்ணு. சிங்கம் என்ன பதில் சொல்லிய து? இதோ !

பல்லவி

(சின்னப்பொண்ணு பாடியது)

சிங்க ராஜா சிங்க ராஜா
வணக்கமுங்க சிங்க ராஜா !
சின்னப் பொண்ணு நானும் தான்
ஊரு விட்டு காடு வந்தேன்!(சிங்க ராஜா பாடியது)

சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
வணக்கமடி சின்னப் பொண்ணு !
ஊரு விட்டு காடு வந்த
காரணத்தை சொல்லு கண்ணு!(சின்னப்பொண்ணு பாடியது)

சரணம் 1

ஆத்தோரம் காட்டுக்குள்ளே
அரசாளும் சிங்க ராஜா !
காத்தாட காட்டுக்குள்ளே
நடைபோடும் சிங்க ராஜா!
பட்டணந்தான் வாரிரோ
பகட்டான சிங்க ராஜா !
ஏசியிலே தூங்கலாமே
ஏலேலோ சிங்க ராஜா !


சரணம் 2

மோட்டாரில போகலாமே
வாரீரோ சிங்க ராஜா !
டிவிப்பொட்டி பார்ககலாமே
வாரீரோ சிங்க ராஜா !
காட்டுக்குள்ளே ஒண்ணுமில்லை
வாரீரோ சிங்க ராஜா !
பட்டணத்தில் எல்லாமுண்டு
வாரீரோ சிங்க ராஜா!(சிங்க ராஜா பாடியது)

சரணம் 3

அழகாக பூச்சூடி
அசைந்தாடும் சின்னப்பொண்ணு!
பாங்காக மையெழுதி
வாயாடும் சின்னப்பொண்ணு !
பட்டணந்தான் வேணாமடி
நரகமது சின்னப்பொண்ணு!
இயற்கையே போதுமடி
இனிமையான சின்னப்பொண்ணு!

சரணம் 4


பட்டணத்தில் எல்லாமுண்டு
தெரியுமடி சின்னப்பொண்ணு!
பட்டணத்தில் நோய்க்கெல்லாம்
குறைவுமில்லை சின்னப்பொண்ணு!
காட்டுக்குள்ளே ஒண்ணுமில்லை
புரிஞ்சுக்கோடி சின்னப்பொண்ணு!
காட்டுக்குள்ளே நோயுமில்லை
பயமுமில்லை சின்னப்பொண்ணு!

சரணம் 5


நரிபுலி சிறுத்தையுமே
காட்டுக்குள்ளே இருந்தாலும்
காட்டழிச்சு பொழைச்சதில்லை
கேட்டுக்கோடி சின்னப்பொண்ணு!
ஓசோனை ஓட்டையாக்கும்
மனுசருண்டு ஊருக்குள்ளே!
மரங்களை அழிக்கச் செய்யும்
மாந்தருண்டு பாருக்குள்ளே!

சரணம் 6


ஊருக்குள்ளே நான் வந்தா
சர்க்கஸில போட்டிடுவே!
காட்டை விட்டு நான் வந்தா
கரணம் போட்டு பிழைக்கணுமே!
என்முன்னே நடுநடுங்கும்
மனுசருங்க நீங்களெல்லாம்
சவுக்கை வைச்சு சீண்டுவீங்க
தெரியாதா சின்னப்பொண்ணு!

சரணம் 7
காட்டுக்குள்ளே எனக்கு தானே
ராஜவாழ்க்கை சின்னப்பொண்ணு!
காட்டை விட்டு வரமாட்டேன்
கேட்டுக்கோடி சின்னப்பொண்ணு!
கொஞ்சம் நேரம் நீயிருந்தா
வயித்துக்குள்ளே போயிடுவே
காட்டை விட்டு ஓடிக்கோயேன்
களையான சின்னப்பொண்ணு!

Tuesday, March 13

கோழியும் மயிலும்

இல்லாத கொண்டையை
இருப்பதாக எண்ணிக் கொண்டு
தலையை ஆட்டி ஆட்டி
தத்தித் தத்தி வந்தது கோழி!

பாவமாய் தோட்டத்தில்
பத்தே இலைகளுடன்
குச்சியாய் நின்ற
ரோஜாச் செடியைக்

கொத்திக் கிளறிய கோழியை
கிளையில் படர்ந்திருந்த
தோகையை சிலுப்பிக்
கேட்டது மயில்,

‘பாவம், அந்த ரோஜா, தழைக்க விடேன்!’

ஆணவமாய் கோழியும்
‘முழுதாய் இருக்கிற எனக்கே
இல்லை உணவு,
அரைகுறை உயிர் பத்தி
எனக்கென்ன கவலை?’
என்று ஆர்ப்பரித்தது.

இளைப்பாற கூண்டு
வந்த கோழி
இட்ட முட்டைகளுக்கு
இதமாய் மேலமர்ந்தது.

பரபரவென வந்த மனிதன்
பட்டென இரு முட்டையைப்
பொ த்தி எடுத்தான்;
பரிதவித்தது கோழி!

மேலிருந்த மயில் சொன்னது
‘முழுதாய் இருக்கிற அவனுக்கே
இல்லை உணவு,
அரைகுறை உயிர் பத்தி
அவனுக்கென்ன கவலை?’

இந்த வருட வேலன்ஸ்டைன்ஸ் டே

கடந்த எல்லா வருடங்களிலும் வாலன்டைன்ஸ் டே - க்கு என் கணவரிடம் ஏதாவது பரிசு கேட்டால் , ‘இதெல்லாம் Business tactics, பணத்தை வேஸ்ட் செய்யக் கூடாது’ என்று ஒரு பாடமே நடக்கும். நான் மட்டும் ஏதாவது எனக்குத் தெரிந்த வகையில் ஒரு அழகான (?) கார்டு செய்து கொடுப்பேன்.

இந்த வருடம் தான் கவிஞி ஆகியாச்சே, ஏதாவது புதிதாக எழுதித் தரலாம் என்றால், உடல்நிலை சரியில்லை. ஒன்றரை நாட்களுக்கு படுத்த படுக்கையாகி விட்டேன்.

வாலன்டைன்ஸ் டே யும் வந்தது. பார்த்தால், ஒரு பெரிய கார்டுடன் காலை வணக்கம். அதனுடன் குட்டியாய்(அதில் கொஞ்சம் வருத்தம்தான்!) ஒரு பரிசும்.! அடடா! எதிர்பார்க்காமல் வந்த இன்ப அதிர்ச்சியில் காய்ச்சல் இன்னும் அதிகமாகி விட்டது.

இந்த பதிவு ஏன் போடணும் என்று தோணியது என்றால் , வாலன்டைன்ஸ் டே என்றாலே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டும் தான் கொண்டாட முடியும் என்கிற மாதிரி ஆக்கி விட்டார்கள். எந்த டி.வி. சானல்களைத் திருப்பினாலும், எந்த புத்தகங்களைப் பார்த்தாலும் காதல் திருமணம் செய்து கொண்டோர்களை மட்டுமே பேட்டி எடுத்து போட வேண்டியது. பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வாலன்டைன்ஸ் டே கிடையாதா? இல்லை அதற்குதான் உரிமை இல்லையா?
(திருவிளையாடல் படம் பார்த்த effect!) இது ஏதோ பொறாமை ப் பட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்? (நற,நற...)

பொதிகையில் 3 தம்பதியினரை பேட்டி எடுத்து போட்டார்கள். (காதலித்து திருமணம் செய்தவர்கள் தான்). அதில் ஒரு பெண்மணி ‘எங்களைப் போன்று காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு(இனி கா.தி.செ.கொ) சலுகைகள் வழங்கப்பட வேண்டும்’ என்று சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. இட ஒதுக்கீடு வேறு கேட்டார்! என்னுடைய சந்தேகம் என்னவென்றால், கா.தி.செ.கொ என்று ஒரு தனி ஜாதி கேட்டு விடுவார்களோ? அவர்களுக்கு முன்னுரிமை etc. எல்லாம் கேட்பார்களோ?

இப்போதே , கா.தி.செ.கொ - களுக்கு என்று அரசு சில சலுகைகளை அளித்து வருகிறது என்று நினைக்கிறேன். இனி தான் ஒரு முக்கிய சந்தேகம்,

கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதியர் எத்தனை பேர் மதம், ஜாதி நிஜமாகவே எங்களுக்குத் தேவையில்லை என நினைக்கிறார்கள்? இரு பக்க வீடுகளையும் சமாளிப்பதற்காக மட்டுமல்லாது உண்மையிலேயே அவர்கள் ஜாதி ,மதம் தேவையில்லை என நினைக்கிறார்களா? பின் ஏன் குழந்தைகளுக்கு மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த பழக்க வழக்கங்களைத் திணிக்கிறார்கள்?


கா.தி.செ.கொ ண்டவர்கள். செய்து கொள்ளப் போகிறவர்கள் எல்லோரும் - என்னை மன்னித்து விடுங்கள், இதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா இல்லையா?

ஒரே ஒரு கிராமத்திலே

கண்ணு இரண்டும் தூங்கலையே
மனசு இன்னும் ஆறலையே
ஆசை மச்சான் நீயும் தான்
எப்போ எனைப் பார்க்கப் போறே?

ஊதக்காத்து உசுரை உருக்குது
வாடைக்குளிர் மேனி துளைக்குது
வட்ட நிலவு மனசை அள்ளுது
புறாமனசு உன்னைத் தேடுது

கூவுற குயிலும் உன் பேரைச் சொல்லுதய்யா
ஆடுற மயிலும் என் மனசைச் சொல்லலையா
ஒத்தைப் பனைமரம் போல
ஒத்தையில நிக்குறேனே
ஓடி வந்தா என்ன மச்சான்?

கண்ணாமூச்சி ஆட்டத்திலே
என்னைத்தவிக்க விடமாட்டே
கண்ணைமூடித் திறக்கையிலே
என்னெதிரே வந்து நிப்பே!

தப்பாட்டமுன்னு உனை விலக்கி வைச்சாலும்
என் மச்சான் உன் மனசு புரிஞ்சிருச்சே
இப்போ மனசு மூடிப் போச்சா?
இவ முகம் மறந்து போச்சா?

கரும்பு காட்டிலே ஒளிஞ்சதும்
கம்பங்காட்டிலே பேசினதும்
நான் இன்னும் மறக்கலையே
நீயும் தான் நினைக்கலையே!

ஊர்க்கிணத்துலே நீ முங்கி முங்கிக் குளிக்கையிலே
உள் நீச்சல் போட்டு உள்ளே உள்ளே போகையிலே
கைநடுங்க கால் நடுங்க படியோரம் நான் தவிக்க
காத்து போல மேல வந்து கண்ணாலே உசுரு கொடுப்பே!

மாரியம்மன் கோயிலிலே நீ பால்குடம் எடுக்கையிலே
மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு சுத்தி சுத்தி வந்தேனே
மஞ்சள் அரைச்சா ஊத்தினேன் என் மச்சான்
மனசை அரைச்சுல்ல ஊத்தினேன்!

நூறுமுகம் பார்த்தென்ன?
உன்முகம் காணாம
ஆறலையே என் மனசு

ஆறு மாசமென்ன ஆறு வருசமென்ன
நான் இருப்பேன் உன் நினைப்பில
என் உசுரு நிக்காது
நித்தம் உன்னை காணாம!

ஒரு நாளும் என்னைப் பார்க்காம
ஒம்பொழுதும் போகாது
இப்போ ஐந்தாறு மாசமாச்சே
எப்படித்தான் இருக்கியோ?

இளஞ்சூரியனும் வரப்போகுது
இளங்காளை நீ வருவியா?
நல்ல பொழுதும் வரப்போகுது
நல்லவனே நீ வருவியா?

வாய்க்கா வரப்பிலே
சாதிச் சண்டையிலே
உன்னைத்தான் வெட்ட வந்தான் - என்
உசுரைத்தான் வெட்ட வந்தான்

உன் முதுகு ரத்தம் பார்த்து
என் முகம் வேர்த்து போச்சு
என்னாச்சு தெரியலை ஏதாச்சு புரியலை
என் கையெல்லாம் சிவப்பு ரத்தம்
என் கீரைக்கொத்தும் கத்தி
வெட்டினவன் நெஞ்சு பக்கம்

கண்ணு முழிச்சு பார்க்கையிலே
கம்பி போட்ட கதவு என் முன்னாலே
காக்கி உடுப்பு என் எதிரிலே!

கூண்டுக்குள்ளே அகப்பட்ட
கிளியாகிப் போனேனே!
நீ வந்து எனைப் பார்த்தா என் மச்சான்
வானத்துலே பறப்பேனே!

ஏக்கத்திலே நானும்தான்
துரும்பாகிப் போனேனே!
நீ வந்து எனைப் பார்த்தா என் மச்சான்
சொக்கத்திலே மிதப்பேனே!

எப்போ வருவே என் மச்சான்?

அவன் வந்தா சொர்க்கமுன்னு
இவ எண்ணி ஏங்குறா
அவன் போயிட்டான் சொர்க்கமுன்னு
யார் வந்து சொல்றது?

வரப்பிலேயே உசுரு போச்சே
பாவி இவ அறியலையே
மச்சான் வருவான்னு மனசு விட்டு போனாளே
மாமன் வரலைன்னா உசுரு விட்டுப் போவாளோ?

கை தொட்டதில்லை கட்டியணைச்சதில்லை
கண் பார்த்தது தான் கருத்தில் சேர்த்ததுதான்

இப்படித்தான் எத்தனையோ கதை உண்டு கிராமத்திலே
இப்படித்தான் எத்தனையோ உசுரும் போச்சு நாட்டிலே
இப்படித்தான் எத்தனையோ மனசுந் தவிக்குது ஊரிலே
எப்பத்தான் உங்க மனசு மாறும் ஐயா?

சாதி ஒண்ணும் நம்ம உசுரு இல்லே
சாய்ஞ்சு போனா ஒண்ணும் தப்பில்லே!

அஞ்சல் செய்யாத கடிதம்

எல்லார் பார்வைக்கும் பாவையாய் தெரிந்த நீ
என் கண்களுக்கு மட்டும்
தேவதையாய் ஆனது எப்போது?

ஆயிரம் நாட்கள் நம்மைச் சேர்த்திருந்தாலும்
நமக்கான ஓர் நாள் மட்டும்
இல்லாமல் போனது ஏன்?

எனக்கும் உனக்கும் இடையே
எத்தனையோ வர்த்தைகள்.
அத்தனையிலும் ஓரு வார்த்தை கூட
என் மனதைச் சொல்லாமல் விட்டது ஏன்?

நான் பார்த்த கணங்களில்
உன் பார்வை என்னிடம் இல்லை
பின் எப்படித் தெரிந்தது
என் சட்டை அழுக்கு உனக்கு?

குழந்தை பிறக்கும் போது மட்டும்
தான்பனிக்குடம் உடையுமாம்.
உன்னைப் பார்க்கும் ஒவ்வோர் முறையும்
என்னுள் உடைந்தது எதுவோ?

மனைவியிடம் சொல்ல முடிந்த என்னால்
நம் காதல் பற்றி
உன்னிடம் சொல்ல முடியாமல் போனது ஏனோ?

சந்தன வாசமும் மல்லி வாசமும்
சொல்லும் உன் வரவை
உனக்கு முன்னால்
எனக்கு முன்னால்
என் வரவை நீ
எப்படிக் கண்டு கொண்டாய்?

உன் பின்னால் நான்
அமரும் போது மட்டும்
உன் கைக்குட்டை அடிக்கடி
தவறியது ஏனோ?
ஒவ்வோர் முறையும் பதிந்தது
உன் முகநிலவு பௌர்ணமியாய்!

எனக்கான கடைக்கண் பார்வையும்
இதழோரச் சிரிப்பும்
எப்போதும் உண்டு
என் நிறுத்தத்தில்
உன் பேருந்து நிற்கையில்!

கல்லூரிக் கடைநாளில்
உனக்கான என் தவம்
கலையாமலே போனது!
நீ என் கனவுகளைக் கலைத்து விட்டு
போருந்தின் சக்கதங்களுக்கு அடியில்.
அப்போதும் இருந்தது அப்படியே
எனக்கான கடைக்கண் பார்வையும்
இதழோரச் சிரிப்பும்!

எத்தனையோ கேள்விகளுக்கிடையில்
இன்னமும் தூங்குகிறது
பரணில் உறங்கும்
என் புத்தகங்களுக்கிடயே
முகவரியின்றி உன் பெயர் மட்டும்
முகப்பில் உள்ள கடிதம்,
உனக்கான என் கடிதம்

என் மனம் சொல்லும் கடிதம்

அஞ்சல் செய்யாத கடிதம்!

அறிமுகம்

எனக்கு சிறு வயதிலிருந்தே கதை, கவிதை, கட்டுரை எல்லாம் எழுத ரொம்ப ஆசை. ஆனால் அதற்கான முயற்சி பண்ணியதே இல்லை. எல்லாரும் மிக அழகாக கதை எழுதிக் கொண்டு இருக்கும் போது, நான் மட்டும் "எப்படித்தான் இவர்களால் இந்தளவு கற்பனை பண்ண முடியுதோ?" என்று யோசித்துக கொண்டிருப்பேன். இப்போதும் அப்படித்தான். ரொம்ப யோசித்து யோசித்துக் கடைசியில் என்னைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறேன்.

நமக்குத் தாய்மண் என்றால் அது நெல்லைச்சீமைதான்! இப்போது வாசம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமன்! இப்போதைக்கு வீட்டு நிர்வாகம் மட்டும் என் கையில். மற்றபடி எல்லாவற்றிலும் கை வைத்துவிடுவேன். எல்லாவற்றையும் 5% ஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிய ஆசை! பளிச்சுன்னு சொன்னா நான் ஒரு நல்ல அரைகுறை! நிறைய படிப்பேன். மிகவும் தேர்ந்தெடுத்து உருப்படியான விஷயங்களைப் படிப்பேன் என்று நீங்கள் நினைத்தால் Sorry! ரொம்ப தப்பு. படிக்கிறதுக்கு அ,ஆ புத்தகம் கிடைத்தால் கூட 10 நிமிடம் உட்கார்ந்து படிப்பேன்!

வாழ்க்கை நமக்கு தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது என்ன கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளாமலேயே பல பேரின் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. எனக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் ‘விட்டுக் கொடு’ என்பது மட்டுமே! நான் விட்டுக் கொடுக்காத சமயங்களில் இழப்பு இரு பக்கத்திலுமே! நான் விட்டுக் கொடுத்து விட்டால் இழப்பு ஒரு பக்கத்தில் மட்டும்! என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அங்ஙாறு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நாம் கொடுக்க வேண்டிய வுலை நமது பொறுமை மட்டுமே! உங்கள் கோபத்தைப் புரிந்து கொள்பவர்களிடம் மட்டுமே உங்கள் கோபம் செல்லுபடியாகும். மற்றவர்களிடம் விழலுககு் இறைத்த நீர் தான்!

எனக்கும் என் கணவருக்குமான உடன் படிக்கையே இதுதான். இருவரில் ஒருவர் கோபப்ப்டும் போது மற்றவருக்கு சூடு சொரணை என்பது இருக்கவே கூடாது. அதேபோல தவறு செய்பவர் இறங்கி வரும்போது மற்றவர் உடனே அவரை மன்னித்துத் தவறினை மறந்து விட வேண்டும்! அதை விடுத்து இறங்கி வருபவர் மீது எகிறினால் யுத்தம் மீண்டுிம் ஆரம்பம்.

இது கணவன், மனைவி உறவுக்கு மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்கும்செல்லும்! ஆனால் கணவன், மனைவி உறவுக்குஇந்த மனப்பான்மை மிகவும் முக்கியம். ஏனெனில் அது குடும்பத்திற்கே வேட்டு வைத்து விடும்.

என்னடா இது ஒரே அட்வைஸ் மழை என்று எண்ணாதீர்கள். பின்னே என் மனதில் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் தத்துவங்களை நான் யாரிடம் கொட்டுவதாம்?


மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இருக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்களேன்! Please!