Tuesday, June 3

பாசம் என்னும் கத்தி

May 2008:-

அன்புள்ள சம்பத்துக்கு,
நான் பிறந்தவுடன் நீதான் என்னைக் கையிலெடுத்தாய். “வினோத்” என்று என் பெயரையும் நீதான் தேர்வு செய்தாய். உன் முகம் பார்த்தால் மட்டுமே என் பொக்கை வாய் முழுதும் திறந்து சிரிப்பேனாம். நீ பள்ளியிலிருந்து திரும்பி வரும் வரை வீட்டை இரண்டு பண்ணும் நான், உன்னைக் கண்டவுடன் வாலாட்டிக் கொண்டு வரும் நாய் போல உன் பின்னே அலைவேனாம். நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.

‘நீ படிக்கும் பள்ளியில் தான் நானும் படிப்பேன்’ என்று அழுது அடம் வைத்து மழலைப்பள்ளியில் சேராமல் நேராக முதல் வகுப்பில் சேர்ந்தேனாம். உன் கை பிடித்து பள்ளி செல்லும் போதும், திரும்பி வரும் போதும் நீ சொன்ன கதைகள் எத்தனை? நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.

நீ கல்லூரியில் சேர்ந்த நாளில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று நான் அழுத அழுகையை நினைத்து இன்றும் மெதுவாகச் சிரித்துக் கொள்கிறேன். எனக்கு புதுமைப்பித்தனிலிருந்து எழில்வரதன் வரை அறிமுகப்படுத்தினாய். ஆங்கிலம் எழுதத் தடுமாறிய நான் இன்று ‘ஹிண்டுவில்’ கட்டுரைகள் எழுதுவது உன்னால் தான். நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.

நான் பத்தாம் வகுப்பு எழுதும் போது, எனக்காய் கண் விழித்தாய்; பன்னிரண்டாம் வகுப்பில் என் பரீட்சை அறைக்கே வந்து காத்து நின்றாய்; இதோ ஒரு மனிதனாய் இந்தச் சமூகத்தின் முன்பு நான் நிற்பதற்கு நீ தான் முழு முதற் காரணம் என்பதை நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.

உன் திருமணத்தன்று கூட ‘நான் சாப்பிட்டேனா, நான் தூங்கினேனா’ என்று எனக்காய் கவலைப்பட்டவன் நீ! உனக்கென்று குடும்பம் வந்தபின்பு கூட என் மேல் கொண்ட அக்கறையைக் குறைத்துக் கொள்ளாதவன் நீ! அம்மாவும், அப்பாவும் தவறிய போதும், யாருமில்லாதவன் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததில்லை. என் திருமணம் முடிந்து என்னைத் தனியே சென்று இருக்கச் சொன்ன போதுதான் சற்றே கலங்கினேன்.

நாம் வாழ்ந்த வீட்டைப் பற்றி, என் மனைவி சொன்ன போதெல்லாம் புரிந்து கொள்ளாத நான், வீட்டை அப்பா உன் பேரிலும், ஊரிலிருக்கும் வீட்டை என் பெயரிலிலும் எழுதி வைத்திருந்ததை வக்கீல் வந்து சொன்ன பின்புதான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நான் பிறந்து வளர்ந்த வீடு என்னிடம் இருந்தால் என்ன, என் அண்ணனிடம் இருந்தால் என்ன? உன் பிள்ளைகள் நம் வீட்டில் வளரட்டும், வேறு வீடாக இருந்தால் என் பிள்ளைகள் வளராதா என்ன?

வீடு உன் பெயரிலேயே இருக்கட்டும், நான் வரும் போது வாசல் கதவை மட்டும் மூடி விடாதே!

அன்புடன்
வினோத்குமார்.
(கையெழுத்து கூட நீ கற்றுத் தந்ததுதான்!)










June 2008:-
அன்புள்ள லலிதாவிற்கு,
வினோத் எழுதுவது, நீ சொன்னபடி நான் அண்ணனுக்கு எழுதிய கடிதத்திற்கு இவ்வளவு வலிமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணன் வீட்டை என் பெயரில் எழுதி வைத்து விட்டாராம். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதற்குள் நீ உன் அம்மா வீட்டிலிருந்து கிளம்பி மதுரை வந்து சேர். அண்ணன் எப்படியும் இரண்டு மூன்று மாதங்களில் வீட்டைக் காலி செய்து விடுவார் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
வினோத்குமார்.

Sunday, June 1

நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி டவுணில் மிகப் பிரதானமாக அமைந்திருப்பது நெல்லையப்பர் கோயிலும் அதனைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளும் தான். இந்தக் கோயில் பரப்பளவில் மிகப் பெரியது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பரந்த 5 கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மூன்று வாசல்கள் அதாவது மூன்று கோபுரங்கள் உண்டு. கிழக்கு வாசல் பிரதானமான வாசல். மேலும் வடக்கு வாசலும் மேற்கு வாசலும் உண்டு.

இங்கு மூலவருக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள். அவற்றை “அம்மா மண்டபம்” என்ற மண்டபம் இணைக்கின்றது. “காந்திமதி அன்னை” என்பது இங்கேயுள்ள அம்மனின் திருப்பெயராகும். “காந்திமதி, காந்திமதி நாதன், நெல்லையப்பன்” ஆகிய பெயர் கொண்டவர்கள் இங்கு அதிகம்.

இந்தக் கோயிலின் தல விருட்க்ஷம் “மூங்கில்” ஆகும். பஞ்சரத்தின சபைகளில் ஒன்றான “தாமிர சபை” இங்கு தான் உள்ளது. கோயிலை நீங்கள் எவ்வளவு வேகமாகச் சுற்றி வந்தாலும் சரியாக ஒரு மணி நேரம் ஆகும். நிதானமாக சுற்றி வந்தால் இரண்டு, மூன்று மணி நேரம் வேண்டும். எவ்வளவு கூட்டம் கோயிலில் இருந்தாலும் நாம் உணர முடியாத அளவிற்கு மிகப் பெரியது. வருடத்தில் 365 நாட்களும் ஏதாவது ஒரு சிறப்பு வழிபாடு இருந்து கொண்டேயிருக்கும். இதில் பாதி என்னைப் போன்ற அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட தெரியாது. மிக முக்கியமானது ஆனித்தேர்த்திருவிழா.

"வடக்கு ரத வீதி"யில் பாருங்களேன்.

கோயிலின் மூலக்கதை:-
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது. பாண்டிய மன்னர்களால் சுமார் பதினான்காம் நூற்றாண்டில்(சரிதானா?) உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கில் விநாயகர் சிலைகளும், சிவலிங்கங்களும் உள்ளன.

பெயர்க்காரணம்:-
கோயில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் தினமும் நைவேத்தியம் செய்து வந்தார் அர்ச்சகர் ஒருவர். ஒரு சமயம் நைவேத்தியத்திற்காக நெல்லைக் காய வைத்து விட்டு தூங்கச் சென்றாராம். திடீரெனக் கொட்டிய மழையைக் கண்டு, நெல் நனைந்து விடுமே என்று முற்றத்திற்கு ஓடினாராம். அங்கே அதிசயம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. நெல் இருந்த இடத்தைச் சுற்றி மழை கொட்டிக் கொண்டிருக்க நெல்லுக்கு மட்டும் சூரிய வெளிச்சம் பட்டு நெல் காய்ந்து கொண்டிருந்ததாம்.

நெல்லுக்கு வேலியிட்டதால் நெல்வேலி ஆனது. புண்ணிய தலம் என்பதால் திருநெல்வேலி ஆயிற்று. மூலவரும் நெல்லையப்பர் என அழைக்கப்பட்டார். நெல்லையப்பர் கோயிலின் அமைப்பும் இங்குள்ள சிலைகளும் புகழ் பெற்றவை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மனதைப் பறி கொடுப்பது நிச்சயம்.

கோயிலின் அமைப்பு:-
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். நந்நியின் கொம்பு வளர்ந்து அந்தத் திரையைத் தொட்டு விட்டால் உலகம் அழிந்து விடும் என்று ரொம்ப நாள் நம்பிக் கொண்டிருந்தோம்.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்திருக்கும். கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இந்த மண்டபம், அதனைச் சுற்றியுள்ள தோப்பு ஆகிய இடம் மட்டும் சென்னையில் இருந்திருந்தால், 4 கோயில்கள் கட்டியிருப்பார்கள். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. (நம்ம பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இங்குதான் உருவேற்றிக் கொண்டிருப்பார்கள்.) வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் “தங்கப்பாவாடை” சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

அம்மனுக்கு சேலை, நம்மைப் போல் சாதாரணமான சேலைக்கட்டாக இல்லாமல் பிராமணப்பெண்களைப் போல மடிசார்கட்டாக உடுத்துவதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியிலிலிருந்து அப்படியே வெளியேறலாம். மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும்.

அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும். முன்பு “ஆறுமுக நயினார்” என்ற ஆண்யானை இருந்தது. இப்போது ஒரு பெண்யானை என்று நினைக்கிறேன்.

அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும். (இவ்விடங்களைத்தவிர பொதுமக்களுக்கு அனுமதியில்லா இடங்களும் உண்டு.)

அவ்வளவுதான், நவக்கிரகத்தைச் சுற்றி விட்டு அப்பாடா என்று உட்கார வேண்டியது தான்! இதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதன்பின் வெளியே வந்து கோயில்வாசல் கடைகளிலும், ஹோட்டல்களிலும், அல்வாக்கடைகளிலும், பூக்கடைகளிலும் இன்னும் இரண்டு மணி நேரம் செலவிடலாம்.

ஒருமுறை வந்துதான் பாருங்களேன்!

(பி.கு): நெல்லையில் கட்டிய பூக்கள் நெருக்கமாக பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இங்கு கட்டிய பூக்களை வாங்கி விட்டு, சென்னையில் பூ வாங்கும் போது நம்மை அறியாமல் கண்ணில் நீர் வரும்.

Friday, May 30

வடக்கு ரத வீதி


நேற்று வடக்கு ரத வீதி போத்தீஸ் விளம்பரம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் வந்த ஞாபகங்கள். வடக்கு ரத வீதி என்பது நெல்லை டவுணில் மிக முக்கியமான இடம். லாலா சத்திர முக்கிலிருந்து கோயில் வாசல் வரை உள்ள கடைகளுக்குச் சென்றால் ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி விட முடியும். பேருந்து நிறுத்தத்திலிருந்து எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழி என்பதால் ஓராயிரம் தடவை என்ன ஒன்பதாயிரம் தடவை அந்த வீதியில் நடந்திருப்பேன். இன்னும் சலிப்பு வரவில்லை.

கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளில் இந்த வீதி மட்டும் இந்தளவு புகழ் பெற முழு முக்கியக் காரணம் ஆரெம்கேவி மற்றும் ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகள் தான். ஆரெம்கேவி க்கு இப்போது வயது 75க்கு மேல். ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகளுக்கு எப்படியும் 50 இருக்கலாம். புதிதாக(?) வந்த பெரிய கடைகளில் மிக விரைவாகப் பெயர் வாங்கியவர்கள் என்று சொன்னால் போத்தீஸ் தான் (சுமார் 20, 22 வருடங்கள்). ஆனால் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரொம்ப பழைய ஆட்கள்.

இருட்டுக்கடை அல்வாவும் அங்கே இருப்பதால் கூட்டத்திற்கு எப்போதும் குறைவே இருக்காது. தினந்தோறும் நடையாய் நடந்தாலும் எனக்கு சலிக்காத தெரு. அங்கேயிருந்த ஸ்ரீராயல் தியேட்டரும் மிக முக்கியமானது. 1992 வரை அந்தத் தியேட்டரில் வந்த எல்லாப் படங்களையும் கண்டிப்பாக இரண்டு தடவை பார்த்து விடுவோம். அதன்பின் வாழ்க்கையே ஹாஸ்டலாகிப் போனதால் தியேட்டர் பக்கம் போவது குறைந்துவிட்டது. இப்போது ஸ்ரீராயல் தியேட்டரை போத்தீஸ் வாங்கி விட்டார்கள். இடிக்க ஆரம்பித்து விட்டார்களா என்று தெரியவில்லை.

ஆரெம்கேவி கடைகளை இப்போது நெல்லை வண்ணாரப்பேட்டை பக்கம் மாற்றிவிட்டார்களாம். (இன்னும் முழுதாக மாற்றவில்லையாம்!) ஆரெம்கேவி இல்லாத வடக்கு ரத வீதி எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியவில்லை. ஊருக்குச் சென்றால் தான் தெரியும். எங்கள் குடும்பம் வழக்கமாக ஆரெம்கேவி மட்டுமே செல்வதால் எங்கள் அம்மா சொல்லுவது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது, தெருவில் கூட்டமே இல்லையாம். அங்குள்ள மற்ற சிறு கடைகளில் (ஸ்னாக்ஸ் கடைகள், ஹோட்டல்கள், செருப்புக்கடைகள்... ) எல்லாம் வியாபாரம் குறைந்து விட்டதாம். தெருவோரக் கடைகள் (ப்ளாட்பார்ம்) குறைந்து விட்டனவாம். போத்தீஸ் கடையும் இதனால் பாதிக்கப்பட்டதாக்க் கேள்வி, உண்மையா பொய்யா, தெரியவில்லை.

இப்போது போத்தீஸ் வடக்கு ரத வீதியை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்வது போத்தீஸ் கடைகளுக்காகவா இல்லை வடக்கு ரத வீதிக்காகவா?

ஒரு ஆறுதலான விஷயம், அடுத்த மாதம் (ஜூன் 18) எங்கள் நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர்த்திருவிழா. கொடியேற்றியதிலிருந்து 9 நாட்களும் நான்கு ரத வீதிகளும் அல்லோலப்படும். திருநெல்வேலி தேரோட்டம் மிகப் புகழ் பெற்றது. 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர் எங்களுடையது. (திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர்). ஜே ஜே என்ற கூட்டமும், அசைந்து அசைந்து வரும் தேரின் அழகும், முரசு அடித்து மக்களை உற்சாகப்படுத்துவதும்...எப்போதடா ஊருக்குச் செல்வோம் என்றுள்ளது. இப்போதெல்லாம் காலையில் இழுக்க ஆரம்பித்தால் மாலைக்குள் நான்கு ரத வீதிகளையும் சுற்றி தேர் நிலையம் சேர்ந்து விடுகிறது. (எல்லாம் பல இந்துமதக் கழகங்களின் ஆதரவு!) ஆனால் முன்பெல்லாம் இரண்டு, மூன்று நாட்களாவது ஆகும். பள்ளியிலிருந்து வரும் போது மிக அருகில் தேரைப் பார்ப்பது; (அதன் சக்கரம் மாத்திரம் 6 அடி உயரம்(தோராயமாக)) மாலை வேளைகளில் தினந்தோறும் ரத வீதிகளைச் சுற்றிவிட்டு வருவது சுகம். அந்த சுகத்தை இப்போது என் மகளுக்கு அனுபவிக்கச் சொல்லித் தர ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்கள் நாத்திகராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் ஊர் ஆனித்தேர்த்திருவிழாவிற்கு வாங்க!!!

அடுத்த பதிவு கண்டிப்பாக நெல்லையப்பர் கோயில் பற்றித்தான்.!

Thursday, May 29

காதல் இல்லை என்று சொன்னால்

இன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தா எப்போதும் போல் காலை டிஃபன் வேலையில் மூழ்கியிருந்தாள். காலிங்பெல் சத்தம் கேட்டது. “இந்நேரம் யாரு?” என்று யோசிப்பதற்குள் குமார் எழுந்து போய் கதவைத் திறந்தான்.

“அடடே! வா வா, என்ன திடீர் விசிட்?”

“ரொம்ப நாள் ஆச்சே! எல்லாரும் எப்படி இருக்கிறீங்கன்னு பார்த்திட்டு போகலாமேன்னு வந்தேன்.”

ரவியின் குரலைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட வசந்தா கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.

“ஹேய் எப்படி இருக்கிற?, உன் ஆளு சௌக்கியமா? எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?” என்றாள்.

“அடடா! ஒரு மனுஷன் வந்தா அவனுக்குக் காஃபி கொடுப்போம், சூடா தோசை தருவோம்ன்னு இல்லாம இது என்ன கேள்வி?”

“காஃபி ஓகே! ஆனா இன்னைக்கு தோசை இல்ல உன்னோட ஃபேவரைட் ஆப்பம்” என்றபடி உள்ளே போனாள்.

“எனக்கும் ஒரு காஃபி” என்றான் குமார்.

அவள் காஃபி போட்டு வருவதற்குள் எல்லாரையும் பற்றி ஓரு அறிமுகம்.

ரவி வசந்தாவின் அத்தை பையன். இவளை விட ஒரு மாதம் சின்னவன். எப்போதாவதுதான் வசந்தாவின் வீட்டுக்கு வருவான்.

குமார், வசந்தா இருவருக்கும் திருமணமாகி நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. தினந்தோறும் வரும் செல்லச்சண்டைகள், அரிதாய் வரும் நிஜச்சண்டை என்றிருந்தாலும் அன்னியோன்யமான தம்பதிகள் தான்.

போனவாரம் இப்படித்தான். சினிமாவிற்குப் போகலாம் என்று போனார்கள். டிக்கெட் எடுக்கப் போகும் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

“வசு,லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லை, நீ போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடு”

“சரி, பாப்பாவைப் பார்த்துக்கோங்க” என்றபடி போனாள். டிக்கெட் எடுத்துட்டுத் திரும்பும் போது, குமாரைக் காணோம், குழந்தை கூட ஷீபாவும், ரம்யாவும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் குமார் கூட வேலைப் பார்க்கும் நண்பர்களின்(ராஜா,பிரபு முறையே) மனைவிகள்.

“ஹாய் வசு, குமாரைத் தேடுறீங்களா, டிக்கெட் வாங்கப் போயிருக்கிறாரு” என்றாள் ஷீபா.
அப்பவே வசுவிற்கு எரிச்சல் வந்தாச்சு. குமார் வர 9 நிமிஷம் ஆச்சு.

“இந்தாங்க டிக்கெட்!” என்றபடி வந்தான். இவள் முகம் மாறியது அவனுக்குப் புரியவில்லை,

“வசு, நீ போகவும் இவங்க வந்தாங்க, தனியாத்தான் வந்தாங்களாம், அதான் டிக்கெட் வாங்கித்தரலாம்ன்னு... உன்னைக் கூப்பிட்டேன், நீ கவனிக்கலை. இல்லைன்னா சேர்ந்தே டிக்கெட் எடுத்திருக்கலாம்.”

டிக்கெட் காண்பிச்சிட்டு உள்ளே போனார்கள். நல்லவேளை அவர்களுக்கு கொஞ்சம் தள்ளித்தான் ஸீட். அவர்கள் இடத்தில் உட்காரும் வரை இவன் கூடவே போனான். இவள் இன்னும் கடுப்பானாள். இவளுக்கு மற்றவர்களுக்கு உதவறது எல்லாம் பிடிக்கும். ஆனா இவளைக் கண்டுக்காம அடுத்தவங்களுக்கு விழுந்து விழுந்து குமார் கவனிச்சா இவளுக்கு பிபி எகிறிடும்.

ஒரு வழியா குமார் வந்து உட்காரவும், படம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது. ஒண்ணும் பேச முடியலை. இன்டெர்வல் விடவும்,

“நான் ஏதாவது வாங்கிட்டு வாரேன்” என்று சொல்லிட்டு நேரா அவர்களிடம் போனான்.

திரும்பி வரும் போது அவன் கையில் ஒரே ஒரு டீ கப் இருந்தது.

“மூணு கப் தான் கொண்டு வர முடிந்தது. நம்ம இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம், பாப்பாவிற்கு ஐஸ்கிரீம் வாங்க முடியலை. நீ பிஸ்கெட் கொண்டு வந்தேல்ல, அதைக் கொடுத்துடு.”

இவளுக்கு ஏனோ படம் பார்க்கவே பிடிக்கலை. ஒரு வழியா படம் முடிந்தது.

“நீ பார்க்கிங் ஏரியாவில வெயிட் பண்ணு; நான் அவங்களுக்கு ஏதாவது ஆட்டோ அரேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.”

சரியாக 15 நிமிடம் கழித்து வந்தான். வீடு போறவரைக்கும் இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள்.

குழந்தையை மெதுவாகக் கட்டிலில் போட்டான். உடை மாற்றிக் கொண்டே “அவங்க
இரண்டு பேரும் வந்தது உனக்குப் பிடிக்கலை, கரெக்ட்?” என்று குமார் ஆரம்பிக்கவும் இவள் அவனை முறைத்த முறையில்...

“நான் சண்டையெல்லாம் போடலை. லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லைன்னு சொல்லித்தானே என்னை அனுப்பினீங்க, அதே மாதிரி அவங்களையும் எடுக்கச் சொல்லியிருக்கலாமே! ஸீட் பார்த்து உட்கார அவர்களுக்குத் தெரியாதா, கூடவே போகணுமா? அடுத்து, டீ வாங்கித் தரச் சொல்லி உங்ககிட்ட கேட்டாங்களா? சரி, வாங்கிக் கொடுத்திட்டீங்க, எனக்கு ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரக் கூடாதா? வெளியில டீ,காஃபி குடிக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா? அது கூட மறந்து போச்சா உங்களுக்கு? கடைசியா, வீட்டிலிருந்து அவங்களாத்தானே வந்தாங்க. இங்கிருந்து ஆட்டோ பிடிச்சுட்டு போகத் தெரியாதா? நான் பார்க்கிங்ல தனியா எவ்வளவு நேரம் நிற்கிறது? உங்க ஃப்ரெண்ட்ஸ்க்காக செய்றீங்க சரி, அவங்களும் அதே மாதிரி செய்யணுமில்ல, முந்தாநாள் கல்யாண வீட்டுல என்னை வா ன்னு கேட்டதோட சரி, நீங்க வரலைன்னு ஏதாவது ஸ்பெஷலா செஞ்சாங்களா என்ன, அவங்க பாட்டில அரட்டை அடிச்சுட்டுத்தானே இருந்தாங்க, நீங்க மட்டும் ஏன் இப்படி செய்யணும்? அதும் பொண்டாட்டி பிள்ளையைக் கண்டுக்காம?”

இவ்வளவு கேள்விகள் இருந்தன. ஆனால் அவள் வாயைத் திறக்கவில்லை. அவனே தொடர்ந்தான்.

“இதையெல்லாம் நீ தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதே, ஜஸ்ட் ஒரு ஹெல்ப் அவ்வளவுதான்.”

அதோடு அவளும் விட்டு விட்டாள். என்ன பேசி என்ன புண்ணியம்? இது என் புருஷன் மேல இருக்கிற பொஸ்ஸிவ்னெஸ் ன்னு சொன்னா சிரிப்பான், அவனால இதைப் புரிஞ்சுக்க முடியாது,

காஃபி கலக்கும் போது தான் வசுவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ரவியை ஸ்பெஷலா கவனிச்சா, குமாருக்குப் பொஸ்ஸிவ்னெஸ் வராதா? அவன் புரிஞ்சுக்க மாட்டானா?

ஆனா பாவம் அவளுக்குத் தெரியலை, குமார் முகம் மாறினால் இவளால் வேறு யாரையும் ஸ்பெஷலா என்ன, சாதாரணமாகக் கூட கவனிக்க முடியாது என்று. அவன் மேல் அவளுக்கு இருக்கும் காதல் எல்லாவற்றையும் மறக்க வைத்து விடும்.

Tuesday, May 27

தொலைபேசியிலிருந்து கைப்பேசி வரை...

பஸ்ஸில் ஏறி அப்பாடா! என்று உட்கார்ந்தவனுக்கு வயது முப்பத்தைந்து தான் ஆகிறது. ஆனால் பார்க்க நாற்பதைக் கடந்தவன் போல் இருப்பான். அவன் பெயர் கிருஷ்ணன். காலையிலிருந்து இப்ப வரை மதுரையவே ஒரு சுத்து சுத்தி வந்தாச்சு. அவன் முதலாளி ஆட்டோ, சாப்பாட்டுக்குன்னு கொடுத்த 200 ரூபாயில் 50 மட்டும் தான் செலவாச்சு. முதலாளியும் இதையெல்லாம் கணக்குக் கேட்க மாட்டார். அவரைப் பொறுத்தவரைக்கும் வேலையானா சரி. என்ன வேலைன்னு கேட்டாதீங்க, அது நமக்குத் தேவையில்லை.

எப்படியும் திருநெல்வேலி போய்ச்சேர 4 மணிநேரமாவது ஆகும். அதுவரை நிம்மதியாகத் தூங்கலாம். பஸ்ஸில் இன்னும் இடம் இருந்தது. இவனுக்குப் பக்கத்தில் யாரும் வரலை. பின்னாடி சீட்டில இரண்டு பேர் காலேஜ் பசங்க போல இருந்தார்கள். பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் இரண்டு பேரும் செல்போனில் பேசியபடி வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

டிரைவருக்குப் பின் சீட்டில் மூன்று பெண்மணிகள் என்னவோ பேசிக் கொண்டு வந்தனர். நடுவில் இருந்த பெண் பார்ப்பதற்கு அவன் அம்மா போல இருந்தாள். அந்தப்பெண் அணிந்திருந்த மொத்தையான செயின் அம்மாவிடம் கிடையாது. நவரத்தினம் பதித்த அந்த பெரிய கம்மல், மயில் வடிவ மூக்குத்தி, கையிலிருந்த ஆறு தங்க வளையல் ஏதும் கிடையாது அம்மாவிடம். எல்லாம் போய்விட்டது.

இவன் பிறக்கும் போது அவன் வீடு நிஜமாகவே கோகுலம் போல் இருக்குமாம். அவ்வளவு செல்வச்செழிப்பு. குறைந்தது 4 வேலைக்காரர்களாவது இருந்தார்களாம். கிருஷ்ணன் ஐந்து வயதில் அவனது தாத்தாவுடன் நடந்து செல்லும் போது தெருவே வணக்கம் வைக்கும். அவனது அப்பா இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

இப்போது இவனுக்கு எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவரின் செல் அடித்தது. யாரும் பார்க்காத மாதிரி காதை மூடிக் கொண்டான். என்னவோ அவனுக்கு செல்போன் சத்தமே பிடிப்பதில்லை.

அவன் வீட்டில் தொலைபேசி இருந்தது. நல்ல கறுப்பு கலர். இருபது வருடங்கள் முன்பு இவனது தெருவில் தொலைபேசி இருந்த நான்கைந்து வீடுகளில் இவனது வீடும் ஒன்று. தொலைபேசி வந்த புதிதில் யாரையும் தொட விட மாட்டான்.


தொலைபேசியைத் துடைப்பதற்குக் கூட வேலைக்காரர்களுக்கு அனுமதி இல்லை. அதற்காகவே ஒரு அழகான கைக்குட்டை வாங்கினான்.

பக்கத்து வீடு, எதிர் வீடு, நாலு வீடு தள்ளியிருந்த நாடார் கடை, எதிர் வரிசையிலிருந்த டீக்கடை என கிட்டத்தட்ட தெருவில் பாதி பேர் இவர்கள் வீட்டு நம்பரைத்தான் அவங்க அவங்க சொந்தக்காரங்க, நண்பர்களுக்கெல்லாம் தந்திருந்தாங்க. கிருஷ்ணனோட அப்பா அம்மா குணம் தங்கம். இவனுக்கு தான் பணக்காரன் அப்படிங்கற திமிர் கொஞ்சம் உண்டு.

ஒரு தடவை டீக்கடை ரத்தினத்துக்கு அவன் பொண்டாட்டி கிட்ட இருந்து போன் வந்தது. இவன் ரத்தினம் கையில தரவே இல்லை.

“என்ன விஷயம் சொல்லுங்க, நான் டீக்கடை அண்ணன்கிட்ட சொல்லிடுறேன்” என்றான்.

அவன் பொண்டாட்டி லேசுப்பட்டவளா? அவளும் விடாம “என் வீட்டுக்காரர்கிட்டத் தான் சொல்லுவேன்”னு நின்னா. அவளுக்கு இந்த சின்னப் பையன்கிட்ட என்னத்த சொல்லுறதுன்னு கடுப்பு.

ஆனா கடைசி வரை கிருஷ்ணன் ரத்தினத்துக்கு போனைத் தரவே இல்லை.

போன் வந்தாலே இப்படி. யாராவது போன் பண்ணனும் என்று வந்து விட்டால் அவ்வளவு தான். இந்த பந்தா ன்னு சொல்வாங்களே அதை இவன் பண்றதைப் பார்த்து நீங்க புரிஞ்சிக்கலாம். சின்னப்பையனிடம் இப்படி வாய்மூடி நிற்க வேண்டியிருக்கிறதே என்று இவன் பள்ளிக்கூடம் போற சமயமாக வருபவர்களும் உண்டு,

இவன் கோட்டடித்து கோட்டடித்து 8ம் வகுப்பு வருவதற்குள் பதினாறு வயதைத் தொட்டிருந்தான். அப்போது திடீரென அவன் அப்பா தவறிவிட , பொறுப்புகளை ஏற்க வேண்டிய பக்குவமும், திறமையும் இல்லாததால் தடுமாறிப் போனான். ஆனால் அதிகாரமும், திமிரும் கொஞ்சமும் குறையவில்லை,

இவனது அம்மா எப்படியாவது இவனைப் பள்ளியாவது முடிக்க வைத்து விட வேண்டும் என்று நகைகளையும், பொருட்களையும் விற்று சமாளித்தாள். இவன் பள்ளி முடித்து (அப்படியும் +2 தேறவில்லை) சுதாரிப்பதற்குள், வருமானமும் ஏதும் இல்லாததால் பத்தே வருடங்களில் ஏழையாகுப் போனார்கள். அவன் அம்மா வீட்டு வேலை செய்யப் போய் விட்டாள்.

எந்த வேலையையும் கௌரவம் பார்க்காமால் செய்யும் மனப்பக்குவம் வரும் போது வயது முப்பதைக் கடந்திருந்தது. கடைசியில் இந்த முதலாளியிடம் சேர்ந்தான். இந்த ஐந்து வருடங்களில் எல்லோர் கைகளிலும் செல்போன் முளைத்திருந்தது. முதலாளி வீட்டில் மட்டும் மூன்று செல்போன்கள்.

1000 ரூபாய்க்கு ஒரு செகண்ட் ஹேண்டாவது வாங்கிடணும்ன்னு எத்தனையோ பிரயத்தங்கள் எடுத்து முட்டி மோதி பார்த்து விட்டான். ஊஹூம்...

ஒரு தடவை முதலாளி வீட்டில வைத்து யாருக்கோ போன் செய்ய வேண்டியிருந்தது. முதலாளி அவர் செல்லைத் தராமல் அவரோட சின்ன மகனோட செல்போனை எடுத்துக் கொடுத்துட்டாரு. அப்போது கைத்தவறுதலா கிருஷ்ணன் செல்போனைக் கீழே போட்டுட்டான். அவ்வளவுதான் ஏற்கனவே கோவத்துல இருந்த அந்த பையன் படாரென்று கிருஷ்ணனை அடிச்சுட்டான்.

அதிலிருந்து இவனுக்கு செல்போன் வைத்திருப்பவர்களையும் பிடிப்பதில்லை. செல்போன் சத்தமும் பிடிப்பதில்லை.

டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போது அவருடைய செல் அடிக்க ஆரம்பித்தது. இவன் தூங்குவது போல் அழ ஆரம்பித்தான்.

Tuesday, February 12

உறவாகிப் போகும் நட்புகள்

தலைப்பைப் பார்த்ததும் நட்புக்காக வக்காலத்து வாங்கும் பதிவு என்றெண்ணி வந்திருந்தீர்களேயானால் மன்னிக்கவும்! இது உறவுகளுக்காகப் பேசப் போகும் பதிவு.. அதற்காக நட்பே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நட்பு போதும், உறவே வேண்டாம் என்று சொல்லி வருபவர்களுக்காக சில வார்த்தைகள்.

நமக்கு பள்ளி, கல்லூரிகளில் தான் நட்பு என்பது அறிமுகம். அதற்கு முன்பு உறவுகள் தான் நமக்கெல்லாமே. அந்த உறவுகள் தான் நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. அந்த உறவுகளை வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியத்தையும் அவைதான் தருகின்றன.

நமது அப்பா அல்லது அம்மா வின் நெடுங்கால நண்பர்கள் நமது வீட்டுக்கு முதன்முதலாக வரும்போது “யாரோ வந்திருக்காங்க” என்று சொல்லும் வாய் அவர்களே இரண்டாம் முறை, மூன்றாம் முறை வரும் போது, ‘மாமா/அத்தை’ என்றோ ‘அங்கிள்/ஆன்ட்டி’ என்றோ அழைத்து விடுகிறது. அப்படி நாம் அழைக்கவில்லை என்றால் அவர்கள் நமக்கு அந்நியப்பட்டு விடுகிறார்கள்.

அவ்வளவு ஏன்?, நமது நண்பர்களை நம் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் போது கூட ‘அங்கிள்/ஆன்ட்டி’ அல்லது ‘மாமா/அத்தை’ என்று தான் சொல்லுகிறோம். “ஹலோ Mr.------” என்று பெரியவர்களை அழைக்கும் கலாச்சாரம் இன்னும் நமது நாட்டை எட்டிப் பார்க்கவில்லை என்பது நல்ல விஷயமாகத் தான் எனக்குப் படுகிறது.

எல்லாரும் அவரவர் தோழி/தோழன் வீட்டில் பழகும் போது அவர்களுடைய அம்மாவை அம்மா என்று அழைப்போம். அப்படி அழைக்காதவர்கள் 30% தான் இருக்கும். அவர்கள் ‘ஆன்ட்டி’ என்று அழைப்பார்கள். நண்பனின் தங்கையைத் தனது தங்கையாகவோ இல்லை சிலர் காதலியாகவோ நினைப்பார்கள். இன்னும் ஏன், அவர்களின் சொந்தக்காரர்களைக் கூட அதே உறவுமுறைகளைக் கொண்டு நாம் அழைக்கிறோம்.

இப்படி எல்லாரையும் நமது உறவாகவே எண்ணுவதால் தான் அவர்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இன்னும் எங்கள் தெருவில் எனது அம்மாவை ‘அக்கா’, ‘மதினி’, ‘அத்தை’, ‘பாட்டி’, ‘அம்மா’ என்று அவரவர்க்குத் தகுந்தாற்போல் உறவுமுறை சொல்லித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கல்லூரிகளில் ஆயிரம் பேர் இருந்தாலும் நமது நண்பர்கள் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதற்காக மற்றவர்களை நாம் வெறுப்பதில்லை. அதே போல உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நெருக்கமானவர்கள் ஒரு சிலர் தான். அதற்காக ‘மற்றவர்களை நாம் வெறுப்பதில் என்ன நியாயம்’ என்பது தான் என் கேள்வி.

ஒரு தோழி/தோழன் நமக்கு ஏதாவது உதவி செய்தால் எவ்வளவு நன்றியுணர்வோடு இருக்கிறோம்? அதே உதவிகளை நமது உறவுகள் செய்தால், ‘அவர்களின் கடமை’ என்று எவ்வளவு எளிதாகத் தள்ளிவிடுகிறோம்.
பொதுவாக உறவுகளைப் பற்றி ‘என்னைப் பார்த்து பொறாமைப் படுறான், சார்!’ என்று சொல்வது வழக்கம். அவர்களை விட நீங்கள் மேம்பட்ட நிலையில் இருந்தால் இயல்பாகவே ஒரு பொறாமை எட்டிப் பார்க்கத் தான் செய்யும். ‘நண்பர்களுக்குள் பொறாமை இல்லை’ என்று தயவு செய்து சொல்லாதீர்கள். ஒரு ஏழை தோழி/தோழன் ‘எங்க வீட்டில் ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லும் போது இயல்பாகவே அவர்கள் மேல் பரிதாபப்பட்டு உதவுவோம். அதே சமயம் பணக்கார நண்பன் ‘எங்கள் வியாபாரம் ரொம்ப நஷ்டத்தில் நடக்கிறது’ என்று சொன்னால் அதற்காக உதவுபவர்கள் எத்தனை பேர்? உதவவில்லை என்றாலும் பரிதாபமாவது படுவோமா?
“நல்லா விடுறான் கதை” என்று எளிதில் சொல்லிவிடுவோம்.

எல்லா உறவுகளுமே சிக்கல் நிறைந்தது தான். நட்பு மட்டும் விதிவிலக்கல்ல. முதன்முதலாக நம்மைப் பார்க்கும் ஒருவர் “என்னங்க இவ்வளவு அசிங்கமாக டிரஸ் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்கிறார். இன்னொருவரோ “உங்க டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்கிறார். உண்மை எதுவாகவோ இருக்கட்டும், அடுத்த நாள் நாம் யாரைப் பார்த்து சிரிப்போம்? நமக்கு யார் ஒத்து வருகிறார்களோ அவர்களிடம் நமக்கு நட்பு பாராட்டத் தோன்றுகிறது. மற்றவர்களை ஒதுக்குகிறோம். இப்படி தேர்ந்தெடுக்கும் வசதி உறவுகளில் இல்லை என்பதால் அவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறோமோ?

நீங்கள் சொல்லும் “நண்பர்கள் மட்டுமே நம்மால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்” என்ற வாக்கியம் முற்றிலும் உண்மை. நண்பர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என்றுள்ள உறவுகள் இப்போது விட்டால், பின்பு அமைய வாய்ப்புகள் குறைவு.
இப்போது அம்மா/அப்பா/அண்ணன்/அக்கா/தம்பி/தங்கை என்றிருப்பவர்கள் தான் பின்னாளில் நமது குழந்தைகளுக்கு பாட்டி/தாத்தா/மாமா/அத்தை/சித்தி/சித்தப்பா என்ற உறவுகள் ஆகின்றன என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம்???

நட்புகளையே உறவுகளாக ஆக்கிக் கொள்ளும் நம்மால் ஏன் நமக்கென்றுள்ள உறவுகளைக் கொண்டாடத் தெரியவில்லை?

Thursday, February 7

எந்த சாமி நல்ல சாமி

இன்னைக்கு மல்லிக்குக் கணக்கு பரீட்சை. போன தடவை போல் இல்லாமல் இந்த தடவை எப்படியும் பாஸாகிடணும் என்ற படியே சர்ச்சுக்குள் போனவள் சிலுவையைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள். “ஐயையோ! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று ஓட ஆரம்பித்தவள் முக்கினிலிருந்த நாயக்கரம்மா வீட்டு பிள்ளையாருக்கு 3 தோப்புக்கரணம் போட்டாள். “பாஸாகிட்டே, 108 போடுறேன்” என்று டீல் முடித்துக் கொண்டு திரும்ப ஓட ஆரம்பித்தாள்.

அவளுக்கு இந்த தடவ நம்பிக்கை இருக்கு. நாலு மாசத்துக்கு முன்னாடி இருவத்தியஞ்சு வந்தாலே பெரிய விஷயம். ஒருநா பக்கத்தில இருந்த சர்ச்சுக்குப் போனா. அதுவும் இந்த துரைப்பய தான் கூட்டிட்டு போனான். அங்கே எல்லாரும் சத்தமா சேர்ந்து பாடறதைப் பார்த்து இவளுக்கு ஆச்சரியமா இருந்தது. துரையைப் பாரத்து அவன் பண்றாப்பலே பண்ணினா. அந்த தடவ கணக்குல நுப்பது வந்துச்சு..

அதுக்கப்பறம் இயேசு போட்டோ ஒண்ணை துரை கையைகாலைப் புடிச்சு வாங்கிட்டா. இயேசுவை மட்டும் கும்பிட்டா எப்படி? “வீட்டுலே இருக்குற என்னைக் கும்பிடாம, வேற சாமியக் கும்புடுறியா?”ன்னு பிள்ளையார் வந்து கனவுல கேட்க பிள்ளையாருக்கும் மூணு மூணு தோப்புக்கரணம் போட்டுட்டு இருக்கா.

அப்படியும் ரெண்டு மாசமா நுப்பதைத் தாண்டலை. ஆனா அவளும் விடாம சர்ச்சுக்கும் கோயிலுக்கும் ஓடிட்டுதான் இருக்கா.

அப்பத்தான் அவளுக்கு ஒண்ணு உறைச்சது. அவ கிளாஸ் நசீமா மட்டும் கணக்குல ஃபெயில் ஆனதே இல்லை. ஆனா அவளுக்கு சயின்ஸ்ல சரியா நுப்பத்தியஞ்சு தான் எடுப்பா. அதைப் பத்தி நமக்கென்ன, அப்படின்னுட்டு அவகிட்ட “நீ என்ன சாமி கும்புடுவே ?” ன்னு மெதுவா கேட்டா.

அவுக மசூதிக்கெல்லாம் போவ மாட்டாங்களாம். வீட்டுலே தான் தொழுவாங்களாம். அவங்க அம்மாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி அவங்க தொழும் போது கூட இருக்க சம்மதம் வாங்கிட்டா. இந்த மாசம் முழுசும் அல்லா கிட்டேயும் தொழுதாச்சு. இடையில நாலஞ்சு நாள் மட்டும் போக முடியலை. அவங்க வாப்பா இருந்தாரு. அவரு எப்பவும் முறைச்சுட்டே இருக்கிறதுனாலே இவ போகல.

என்ன இருந்தாலும் இயேசுவையும், பிள்ளையாரையும் மறக்கக்கூடாதில்லே, அதான் சர்ச்சுக்கும், கோயிலுக்குமா ஓடிட்டு பரீட்சை எழுதப் போனா.


பின்குறிப்பு: அந்த பரீட்சையிலே நுப்பத்தி நாலுதான் வந்துச்சாம். அந்த நாலு நாளும் தொழாம விட்டதுதான் தப்புன்னு புலம்பிட்டு இருந்தா. இப்பல்லாம் நானு அவ கூட பேசுறதே இல்ல.

Monday, February 4

மஸ்கட் தமிழ்ச்சங்கம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெறும்.

இந்த வருடம் கடந்த வார வெள்ளிக்கிழமை(Feb 1) மிகக் கொண்டாட்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் கலந்து கொண்டன.

Muscat Cicilization Club என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகள், தம்பதியர், வயதானவர்கள் என்று அனைவருக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டது, மெகா போட்டியாக ‘தம்போலோ’ நடத்தப்பட்டது, பரிசு, ‘ Air Arabia Return ticket to Chennai. 2 பேருக்குக் கிடைத்தது.

சென்ற வருடம் போட்டிகள் அல்லாமல் பம்பரம்விடுதல், ஏழுகல், கில்லி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த வருடமும் அதேபோல் கும்மி, பச்சைக்குதிரை போன்றவை நடத்தப்பட்டன.

அது மட்டுமல்லாமல் மதிய உணவு, மாலை தேநீருடன் சிற்றுண்டி வழங்கப்பட்டது, விடைபெறும் சமயம் Gift hampers ம் அளிக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, அன்றைய குளிரும், காற்றும். விர்,விர் என்று கடல்காற்று சுழன்றதில் மக்கள் நடுங்கி விட்டனர், மஸ்கட்டில் கடல் எனக்குத் தெரிந்து ஒரு பெரிய குளம் போல இருக்கும்.(அளவில் அல்ல!) அலையே இல்லாமல், சப்தமுமில்லாமல் அமைதியாக இருக்கும், ஆனால் அன்று கடற்கரையில் நின்ற போது திருச்செந்தூரில் நிற்பது போல் அலையும், சப்தமும் ஆகா!

வந்திருந்த அத்தனை பேரும் சொன்னது, “இத்தனை வருஷமா மஸ்கட்டில் இருக்கிறோம், இந்த மாதிரி காற்று பார்த்ததே இல்லைப்பா,”

(Gonu - Cyclone க்கு அப்புறம் மஸ்கட் பருவ நிலையில் நிறைய மாற்றங்கள்!)


உங்கள் பார்வைக்கு...

















Thursday, January 31

முற்றுப் பெறாத காதல்

மெதுவாக எட்டி எட்டிப் பார்த்தமானிக்கு “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்துக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன்.

“ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” அப்படின்ட்டு வந்தா ராசாத்தி.

“காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்கும் போதே “தனம், தனம்” ன்னு அக்கா சத்தம் கேட்டுச்சு.

இப்ப என்ன பண்ண? அக்கா கூடவே போய்தான் ஆகணும்.. ஸ்கூலிலிருந்து எங்க வீட்டுக்கு நடந்து போக அரைமணி நேரம் ஆகும். ஆனா அக்காகூட வந்தா 20 நிமிஷத்துலேயே போயிருவோம். என் வீட்டுக்கு ஐஞ்சு வீடு தள்ளித்தான் காமாட்சியக்கா வீடு இருக்கிறதால அம்மை அவிக கூடத்தான் வரணும்ன்னு சொல்லியிருக்கு.

பிள்ளையார் கோயில் முக்குத் திரும்புனவுடனேயே ஒரு அண்ணாச்சி வடை, பஜ்ஜி எல்லாம் சூடா போட்டு விப்பாங்க. ஆனா அக்கா அதை வாங்கவே விடாது, அதுவுமில்லாம, வழியில ஏதாவது கடையில ஜில்லுன்னு பானைத்தண்ணி குடிக்கலாம்; பாய் கடையில டபுள் கலர் மிட்டாய் வாங்கி சாப்பிடலாம்; புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தானா வாய் பார்க்கலாம்; ஆனா அக்கா எங்கனயும் நிக்காம விறு விறுன்னு எங் கையைப் பிடிச்சிகிட்டு நடக்கும், ராசாத்தியைக் கூப்புட அவங்க அப்பா வருவாங்க, சிலநாள் என்கூட வருவா. இன்னைக்கு அவங்கப்பா வரலைங்கிறதால நானும் அவளும் போயிடலாமுன்னு இருந்தோம், அக்கா பார்த்துடுச்சு.

அக்கா கூட நீலவேணிக்காவும் வந்தாங்க. இரண்டு பேரும் பதினொண்ணாப்பு படிக்கிறாங்க. நானும் ராசாத்தியும் ஐஞ்சாப்பு படிக்கிறோம் அவிக ரெண்டு பேரும் பேசுறது எங்க ரெண்டு பேருக்கும் தெரியக்கூடாதென்னு எப்பவும் குசுகுசுன்னு பேசிட்டே தான் வருவாங்க. எனக்கா தெரியாது, எங்க வளவில இருக்குற குமார் அண்ணனும் காமாட்சியக்காவும் ரகசியமாகப் பாத்துக்கிடதும், சிரிச்சுக்கிடதும். நீலவேணிக்கா வீடு புட்டாரத்தியம்மன் கோயில் தெருங்கிறதால அவங்க அங்ஙனயே திரும்பிடுவாங்க. ராசாத்தியும் குத்தாலரோடுமுக்குல திரும்பிடுவா. அதனால எங்க தெருவில போறப்போ நானும் அக்காவும் தான் போவோம்.

எங்க தெரு வார்ற வரைக்கும் அக்கா விறுவிறுன்னு நடக்கும். தெரு திரும்பிட்டோம்... அம்புட்டுதேன், அக்கா வேற அக்காவா மாறிடும். அக்கா பார்க்க அம்புட்டு அழகா இருக்கும். குமார் அண்ணனும் நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா அக்காகிட்டே பார்க்கும் போது சுமார்தான். தெருமுக்குத் திரும்பும் போதே அரிசி மண்டி கிட்டே இருந்து அண்ணன் பின்னாடி வர ஆரம்பிச்சுருவாங்க. அக்காவும் திரும்பித் திரும்பி பார்த்துட்டே வருவாங்க. அவங்க கண்ணிலே அப்படி ஒரு சந்தோஷம் தெரியும். எங்க வளவுகிட்டே வரும் போது குமார்அண்ணன் எங்ககூடவே வந்துடுவாங்க. எங்கூட பேசிற மாதிரி அவுக இரண்டு பேரும் பேசிக்கிருவாங்க.


இன்னைக்கும் நானும் அக்காவும் விறுவிறுன்னு நடந்து வந்துட்டோம். எனக்கு எப்பவுமே அக்கா கையைப் புடிச்சுட்டு நடக்க இஷ்டமே இருக்காது. அதனால தெரு வந்துட்டா கையை உதறிட்டு ஓடிடுவேன். இன்னைக்கும் அப்படித்தான், கையை உதறிட்டு ஓட ஆரம்பிச்சேன். ஆனா தெருமுக்கு திரும்பும்போதே ஏதோ வித்தியாசமாப் பட்டுச்சு.

அக்காவைப் பார்த்தா மூஞ்சி உம்முன்னு இருக்கு. அப்பத்தான் கவனிச்சேன் குமார் அண்ணனைக் காணோம். சரிதான்னு நெனைச்சுகிட்டு வீட்டுக்கு ஓடினேன். நல்லபசி. ஆச்சி கடையில அம்மையை சுசியம் வாங்கியாற சொல்லணும்.

‘என்ன இது வீட்டுக்கிட்டே இம்புட்டு கூட்டம். வளவில நுழையவே முடியலை’. எல்லாரும் கத்தி கத்தி ஒரே அழுகை. அப்பத்தான் யாருக்கோ என்னமோ ஆச்சுன்னு வெளங்கிச்சு. ஐயையோ! அம்ம வேற நேத்து இருமிட்டே இருந்தாளே! பயத்தில யம்மா, யம்மா ன்னு கத்திட்டே போறேன். எதிர் வீட்டு மாரியம்மா அத்தைதான் என்னைக் கூட்டிட்டு அம்மாகிட்ட போச்சு. நல்லவேளை அம்மைக்கி ஒண்ணும் இல்லை.

அம்மையை இறுக்கக் கட்டிபிடிச்சுகிட்டேன். அப்ப, காமாட்சியக்காவும் வந்துட்டாங்க.

“என்ன மதினி, என்னாச்சு?” ன்னு அம்ம கையைப் பிடிச்சுகிட்டாங்க.

“நம்ம பழனிஅண்ணாச்சி இரண்டாவது மவன் இல்ல, அதாம்மா, குமார், அவன், பெரியவன் ஏதோ ஏசிட்டான்னு மருந்து குடிச்சிட்டான். ஹைகிரவுண்டு தூக்கிட்டு போனாங்க. வழியிலேயே... இன்னும் வீட்டுக்கு வரல” என்றபடி அழ ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் அழுகையா வந்தது, அக்காவை பாக்கவே முடியலை. நான் ரொம்ப அழவும்,
“ஏம்மா, காமாட்சி, தனம் ரொம்ப அழுறா. ஒண்ணுமண்ணா பழகின பயல்ல, ‘அண்ணே அண்ணே’ ன்னு பின்னாடியே சுத்திட்டு இருப்பா! நீ கொஞ்சம் அவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ! அங்ஙனயே தூங்கினாத் தூங்கட்டும். நான் இங்கே குமாரம்மா கூட இருக்கேன்”

அக்காவும் அழுதுட்டே சரின்னு சொல்லிச்சு. எனக்கு இப்ப அக்காவோட கையைப் பிடிக்கணும் போல இருந்துச்சு. கையை இறுக்கி பிடிச்சிகிட்டேன்.

மஸ்கட் ஃபெஸ்டிவல்

ஒவ்வொரு வருடமும் மஸ்கட்டில் நம்ம ஊர் பொருட்காட்சி போல Jan - Feb மாதங்களில் மஸ்கட் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடக்கும். இந்த வருடம் கிட்டத்தட்ட 5 இடங்களில் நடந்து வருகிறது. நாங்கள் ஒரே ஒரு இடம் (Azaiba) அஸைபா விற்கு சென்று வந்தோம்.

எல்லா இடங்களிலும் தினமும் 4.30 இலிருந்து 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். Circus Show, Russian Skill Show, Fire Show, Omanis music Bands, Popular Plays in multi languages, Kite Show, Childrens activities..... பொதுவாகக் குழந்தைகளுக்கு Fun Rides ம் பெரியவர்களுக்கு Challanging rides ம் இருக்கும்.

Food Court பற்றி கேட்கவே வேண்டாம். நம்ம ஊர் பஞ்சுமிட்டாய், மசாலா தோசையிலிருந்து லெபனான், சைனீஸ், KFC ... வரை எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். (என்ன, இந்த வருடம் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்.)






இந்த வாணவேடிக்கை வாரம் இரு நாட்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 5 - 10 நிமிடங்கள் நடக்கும்.


எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?

ஜனவரி 27, 2008 அன்று வெளியான ஜூவியில் "கட்டப்பட்ட காந்தியின் கண்கள்" என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக "PETA" கன்ற அமைப்பைச் சார்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி (இன்க்ரீட் நியூக்ரீக்) கோவையில் காவல்துறையின் கண்களை மறைத்து விட்டு காந்திஜியின் சிலையின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டாராம்.
ஜல்லிக்கட்டினால் யாருக்கு ஆபத்து என்கிறார்கள்? மாடுகளுக்கா? இல்லை மனிதர்களுக்கா? மாடுகளுக்குத் தான் என்றால், எந்த மாடுகளுக்கும் உயிர்ச்சேதம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) மனிதர்களுக்கு என்றால் ஜல்லிக்கட்டினால் மட்டும் தான் உயிர்ச்சேதம் ஏற்படுகிறதா? (என்னங்கடா டேய்?) வெள்ளைக்காரங்க மற்ற நாடுகளில் புகுந்து பண்ணுகின்ற அட்டூழியங்களுக்கு கறுப்புத் துணி கட்டவேண்டியதுதானே!

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அதற்கு வேண்டிய பாதுகாப்பைச் செய்து அதை ஒரு பெருமைக்குரிய விளையாட்டாக, விஷயமாக மாற்றாமல் ஜல்லிக்கட்டு என்றாலே கேவலமாக எண்ணவைத்து விட்டவர்களை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது? உங்களுக்கு?

தடை

மஞ்சு விரட்டு
வழுக்கு மரம்
உறியடி எளவட்டக்கல்
அனைத்தும்
தடை செய்யப்பட்ட பின்
நாம் ஒருவருக்கொருவர்
ரக்ஷா கட்டிவிட்டு சாயம் பூசிக்கொண்டு
பேல்பூரி தின்றுகொண்டே மெஸேஜ் அனுப்பலாம்

-செல்வேந்திரன் (நன்றி : ஆனந்தவிகடன் ஜனவரி 30, 2008)
(இந்த கவிதையைப் படிக்கும் போதும் இயல்பாய் எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?)

ஒருத்தனும் ஒருத்தியும்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தவள் அதே வேகத்தில் கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெடிப்பது போல் அழ ஆரம்பித்தாள்.

“சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது.

அப்போது கையிலிருந்த கைபேசி அழைத்தது. அப்போது தான் அலுவலகத்தில் விடுப்பு சொல்லாமலே வந்தது உறைத்தது. அவளுடைய பாஸ் தான் பேசினார்.

“என்னம்மா, வீட்டுக்கு போயிட்டீயா? அதையே யோசிச்சுட்டு இருக்காதே. சாதாரணமாக கூட சந்துரு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருந்துக்கோ, நான் நாளைக்குக் கூப்பிடுறேன்.” என்று கட் பண்ணிட்டார். செல்லை ஆஃப் செய்தாள். இப்போதைய மனநிலையில் அவளுக்கு யாரிடமும் பேச மனம் இல்லை.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் இவளோட பாஸ் தான் சந்துருவுக்காக இவகிட்ட 1 மணிநேரம் பேசி சம்மதிக்க வைத்தார். சந்துரு அவருக்குத் தூரத்துச் சொந்தம். அதுவுமில்லாம அவனோட நல்ல குணமும், அவர்கிட்ட அவனுக்கு இருக்கிற மரியாதையும் அவனோட காதலுக்காக அவரை தூதராக்கியது.

திருமணமான இந்த இரண்டு வருடங்களில் இருவரும் “ஐ லவ் யூ” சொல்லாத நாட்கள் ஒன்றிரண்டு தான் இருக்கும். அந்த நாட்களில் கூட வேறு ஏதாவது வார்த்தைகளில் காதலைச் சொல்லியிருப்பார்கள். போன மாதம் கூட அவளோட அம்மா வந்திருந்த போது இவள் முன் மண்டியிட்டு “ஐ லவ் யூ மதி” என்று சொல்ல அம்மா வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள்.

‘இன்று காலையில் ஆபிஸ் போனவுடனேயே பாஸ் கூப்பிட்டு “என் கூட நீயும் கான்ஃபெரன்ஸ் வாம்மா” என்று சொன்னவுடன் போனதுதான் தப்பு. அந்த ஹோட்டலுக்குப் போகாமல் இருந்திருந்தால் நான் சந்துருவை அந்த பொண்ணோட பார்த்திருக்கவே மாட்டேன். இப்படி இடிஞ்சு போயிருக்கவும் வேண்டாம்’ . மதியால் ஒண்ணும் யோசிக்கவும் முடியலை; யோசிக்காமல் இருக்கவும் முடியலை.

“அந்த பொண்ணு யாரா இருக்கும்? பார்த்த மாதிரியே இல்லையே; அவர்கள் நடந்து போன விதமும், ரிசப்ஷனிஸ்ட் அவங்களைப் பார்த்து கையசைத்த விதமும் தினமும் வர்றவங்க மாதிரியில்ல இருந்தது. சந்துரு கிட்ட நான் எப்படி கேட்பேன்?” யோசிக்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது. அவளைத்தவிர இன்னொரு பொண்ணை நேசிக்க எப்படி அவனால் முடியுது? அது தாங்கிக்கிடவே முடியாத விஷயமாகத் தோன்றியது. இதைப் பற்றி அவள் யாரிடம் பேசுவாள்? இந்த 2 வருடங்களில் சந்துரு மட்டுமே அவளது நண்பனாகிப் போனான். இப்போது மதிக்கு மட்டுமல்ல இன்னோர் பொண்ணுக்கும் அவன் தான் எல்லாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் தைரியம்தான் அவளுக்கு இல்லை.

சந்துருவுக்கும் வேறேதோ பொண்ணுக்கும் கல்யாணம் என்றவுடன் அவசரமாக கோயிலுக்கு ஓடினாள். அங்கே சந்துரு அந்தப் பெண்ணோடு சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இவள் சந்துரு என்று கூப்பிடவும், ஐயர் அவன் கையில் தாலியைக் கொடுக்கவும் சரியாக இருந்தது. ‘ப்ளீஸ், வேண்டாம் சந்துரு’ என்று அழுதபடியே அவள் ஓட வழியில் இருந்த நிலைப்படி தட்டி கீழே விழ,
‘மதி எழுந்திரு, என்ன ஆச்சு?’ என்ற சந்துருவின் குரல் கேட்கவும் அவளுக்கு ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை.

“என்னம்மா? உன் செல்லுக்கு கூப்பிட்டால் எடுக்கலை. ஆபிஸ்ல கேட்டா, நீ வீட்டுக்கு போயாச்சுங்கிறாங்க. சரி வீட்டுக்கு கால் பண்ணினாலும் பதில் இல்லை. இப்ப என்னடான்னா இப்படி முழிக்கிற. என்ன ப்ராப்ளம்?”

தூக்க கலக்கம் முற்றிலும் கலைய, கண்டது கனவு என்பதும் புரிய மெதுவாய் எழுந்து உட்கார்ந்தாள். வாட்சைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டியிருந்தது. இரண்டு மணிநேரமாகத் தூங்கியிருக்கிறாள்.

அவள் அருகில் அமர்ந்து தலையை மெதுவாகக் கோதி விடுபவனைக் கண்டதும் மீண்டும் கண்ணில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் அழுததைப் பார்த்ததும் பொறுக்க முடியாதவனாய்,

“என்னடா, விஷயம் என்ன?, எனக்குத் தெரியாம எந்த விஷயம் உன்னைக் கஷ்டப்படுத்துது? எதுவா இருந்தாலும் ஷேர் வித் மீ” என்றபடி அவள் கண்ணைத் துடைத்தான்.

சாய்ந்து கொள்ள தோள் கிடைத்தும், ஆறுதல் தேட முடியாமல் அவன் கையைத் தட்டிவிட்டாள். ஒரு நொடி யோசித்து, அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்தாள்.

“இன்னைக்குக் காலையிலே ஹோட்டல் ராம் வந்திருந்தோம். அங்கே உங்களைப் பார்த்தேன்.”

“ஹோட்டல் ராம்! ஓ! சரி, என்னைப் பார்த்ததுக்கா இவ்வளவு சோகம்? விஷயத்துக்கு வா”

அவன் கண்ணை நேராகப் பார்த்து, “உங்களைத் தனியா பார்க்கலை. கூட ஒரு பொண்ணோட பார்த்தேன். அந்தளவு நெருக்கமாக உங்க இரண்டு பேரையும் பார்த்த பிறகு எனக்கு... ”, குரலும் கண்ணும் அவளை முடிக்கவிடவில்லை. முகத்தை மூடியபடி அழ ஆரம்பித்தாள்.

“ம்...! உங்க பாஸ், அதான் என்னோட மாமா எல்லாம் சொன்னார். எப்படி உன்னாலே என்னைப்போய் சந்தேகப்பட முடியுது? குட், வெரிகுட்” என்றபடி நகர்ந்தான். சற்றுதூரம் சென்றவன் திரும்பி வந்து,

“ஆமா! அந்த பொண்ணுகூட என்னைப் பார்த்தேல்ல, அப்பவே வந்து என்கிட்டே கேட்க வேண்டியதுதானே! நீ என்னை சந்தேகப்பட்ட பிறகு நான் என்ன விளக்கம் சொன்னாலும் நீ நம்ப போறியா? நீ நம்பலைன்னாலும் ஒண்ணு சொல்றேன். ஐ லவ் யூ, ஐலவ் யூ வெரிமச், இந்த வார்த்தையை உன்னைத் தவிர வேற யார்கிட்டேயும் நான் சொன்னதே இல்லை.” என்றபடி படுக்கையில் விழுந்தான்.

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, மெதுவாய் அவனை அழைத்தாள்.

“சந்துரு, உன்னை ரொம்ப நம்பப் போய்தானே நான் இப்படி தவிக்கிறேன். நான் உன்னை சந்தேகப்படுறது மட்டும் தான் உனக்கு தெரியுதா? அந்தப் பொண்ணு உன் தோளிலேயும், நீ அவ இடுப்பிலேயும் கை போட்டு போறீங்க! என்னால அதை எப்படி தாங்கிக்கிற முடியும்?” என்று கேட்டாள்.

சந்துரு ஒன்றும் பேசாமல் இருக்கவும், அவனை உலுக்கினாள். மெதுவாக கண்ணைத் திறந்தவன், “அவ என்னோட க்ளைண்ட், லஞ்சுக்குப் போனோம், தனியா இல்லம்மா. நாலு பேர் போனோம். இந்தம்மா கொஞ்சம் டிரிங்ஸ் எடுத்தாங்க, ஒத்துக்கலை, என்னமோ மாதிரி ஆகி நிக்கவே முடியலை. ஸோ, நான் தான் கூட்டிட்டு போய் டாக்ஸியிலே ஏத்தி விட்டேன்.” என்றான்.

இவள் பேச ஆரம்பிப்பதற்குள், “ ஆனா, நீ இதை நம்புவியான்னு எனக்குத் தெரியலை. வேணும்னா, ஹோட்டல்ல நீ யார்கிட்டேன்னாலும் என்கொயர் பண்ணிக்கலாம், நானே கூப்பிட்டுட்டு போறேன்.” என்றவாறு அவளைப் பார்த்தான்.

“சாரி சந்துரு, நான் என்ன பண்ணினா நீ என்னை மன்னிப்பே?”

“இல்லை மதி, எனக்கு மனசே சரியில்லை, நீ என்னை சந்தேகப்படுற, அப்படிங்கறதை என்னால் ஏத்துக்கவே முடியலை. என் கூட சாய்ராம் வந்தான். அவன் கூட கிண்டலா, “இப்ப மதி பார்த்தா சந்துரு தொலைஞ்சான்” அப்படின்னு சொன்னப்போ கூட நான் அவனைப் பார்த்து சிரிச்சேன்.”

“தப்புதான், ப்ளீஸ், என்னை மன்னிச்சுடுப்பா!” என்றபடி அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்தபடி மதி கெஞ்ச,

இன்னும் மன்னிக்காமல் இருக்க அவன் என்ன முட்டாளா?

“ஐ லவ் யூ” என்றான் மீண்டும் ஒருமுறை!