Friday, May 30

வடக்கு ரத வீதி


நேற்று வடக்கு ரத வீதி போத்தீஸ் விளம்பரம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் வந்த ஞாபகங்கள். வடக்கு ரத வீதி என்பது நெல்லை டவுணில் மிக முக்கியமான இடம். லாலா சத்திர முக்கிலிருந்து கோயில் வாசல் வரை உள்ள கடைகளுக்குச் சென்றால் ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி விட முடியும். பேருந்து நிறுத்தத்திலிருந்து எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழி என்பதால் ஓராயிரம் தடவை என்ன ஒன்பதாயிரம் தடவை அந்த வீதியில் நடந்திருப்பேன். இன்னும் சலிப்பு வரவில்லை.

கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளில் இந்த வீதி மட்டும் இந்தளவு புகழ் பெற முழு முக்கியக் காரணம் ஆரெம்கேவி மற்றும் ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகள் தான். ஆரெம்கேவி க்கு இப்போது வயது 75க்கு மேல். ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகளுக்கு எப்படியும் 50 இருக்கலாம். புதிதாக(?) வந்த பெரிய கடைகளில் மிக விரைவாகப் பெயர் வாங்கியவர்கள் என்று சொன்னால் போத்தீஸ் தான் (சுமார் 20, 22 வருடங்கள்). ஆனால் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரொம்ப பழைய ஆட்கள்.

இருட்டுக்கடை அல்வாவும் அங்கே இருப்பதால் கூட்டத்திற்கு எப்போதும் குறைவே இருக்காது. தினந்தோறும் நடையாய் நடந்தாலும் எனக்கு சலிக்காத தெரு. அங்கேயிருந்த ஸ்ரீராயல் தியேட்டரும் மிக முக்கியமானது. 1992 வரை அந்தத் தியேட்டரில் வந்த எல்லாப் படங்களையும் கண்டிப்பாக இரண்டு தடவை பார்த்து விடுவோம். அதன்பின் வாழ்க்கையே ஹாஸ்டலாகிப் போனதால் தியேட்டர் பக்கம் போவது குறைந்துவிட்டது. இப்போது ஸ்ரீராயல் தியேட்டரை போத்தீஸ் வாங்கி விட்டார்கள். இடிக்க ஆரம்பித்து விட்டார்களா என்று தெரியவில்லை.

ஆரெம்கேவி கடைகளை இப்போது நெல்லை வண்ணாரப்பேட்டை பக்கம் மாற்றிவிட்டார்களாம். (இன்னும் முழுதாக மாற்றவில்லையாம்!) ஆரெம்கேவி இல்லாத வடக்கு ரத வீதி எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியவில்லை. ஊருக்குச் சென்றால் தான் தெரியும். எங்கள் குடும்பம் வழக்கமாக ஆரெம்கேவி மட்டுமே செல்வதால் எங்கள் அம்மா சொல்லுவது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது, தெருவில் கூட்டமே இல்லையாம். அங்குள்ள மற்ற சிறு கடைகளில் (ஸ்னாக்ஸ் கடைகள், ஹோட்டல்கள், செருப்புக்கடைகள்... ) எல்லாம் வியாபாரம் குறைந்து விட்டதாம். தெருவோரக் கடைகள் (ப்ளாட்பார்ம்) குறைந்து விட்டனவாம். போத்தீஸ் கடையும் இதனால் பாதிக்கப்பட்டதாக்க் கேள்வி, உண்மையா பொய்யா, தெரியவில்லை.

இப்போது போத்தீஸ் வடக்கு ரத வீதியை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்வது போத்தீஸ் கடைகளுக்காகவா இல்லை வடக்கு ரத வீதிக்காகவா?

ஒரு ஆறுதலான விஷயம், அடுத்த மாதம் (ஜூன் 18) எங்கள் நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர்த்திருவிழா. கொடியேற்றியதிலிருந்து 9 நாட்களும் நான்கு ரத வீதிகளும் அல்லோலப்படும். திருநெல்வேலி தேரோட்டம் மிகப் புகழ் பெற்றது. 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர் எங்களுடையது. (திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர்). ஜே ஜே என்ற கூட்டமும், அசைந்து அசைந்து வரும் தேரின் அழகும், முரசு அடித்து மக்களை உற்சாகப்படுத்துவதும்...எப்போதடா ஊருக்குச் செல்வோம் என்றுள்ளது. இப்போதெல்லாம் காலையில் இழுக்க ஆரம்பித்தால் மாலைக்குள் நான்கு ரத வீதிகளையும் சுற்றி தேர் நிலையம் சேர்ந்து விடுகிறது. (எல்லாம் பல இந்துமதக் கழகங்களின் ஆதரவு!) ஆனால் முன்பெல்லாம் இரண்டு, மூன்று நாட்களாவது ஆகும். பள்ளியிலிருந்து வரும் போது மிக அருகில் தேரைப் பார்ப்பது; (அதன் சக்கரம் மாத்திரம் 6 அடி உயரம்(தோராயமாக)) மாலை வேளைகளில் தினந்தோறும் ரத வீதிகளைச் சுற்றிவிட்டு வருவது சுகம். அந்த சுகத்தை இப்போது என் மகளுக்கு அனுபவிக்கச் சொல்லித் தர ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்கள் நாத்திகராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் ஊர் ஆனித்தேர்த்திருவிழாவிற்கு வாங்க!!!

அடுத்த பதிவு கண்டிப்பாக நெல்லையப்பர் கோயில் பற்றித்தான்.!

Thursday, May 29

காதல் இல்லை என்று சொன்னால்

இன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தா எப்போதும் போல் காலை டிஃபன் வேலையில் மூழ்கியிருந்தாள். காலிங்பெல் சத்தம் கேட்டது. “இந்நேரம் யாரு?” என்று யோசிப்பதற்குள் குமார் எழுந்து போய் கதவைத் திறந்தான்.

“அடடே! வா வா, என்ன திடீர் விசிட்?”

“ரொம்ப நாள் ஆச்சே! எல்லாரும் எப்படி இருக்கிறீங்கன்னு பார்த்திட்டு போகலாமேன்னு வந்தேன்.”

ரவியின் குரலைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட வசந்தா கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.

“ஹேய் எப்படி இருக்கிற?, உன் ஆளு சௌக்கியமா? எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?” என்றாள்.

“அடடா! ஒரு மனுஷன் வந்தா அவனுக்குக் காஃபி கொடுப்போம், சூடா தோசை தருவோம்ன்னு இல்லாம இது என்ன கேள்வி?”

“காஃபி ஓகே! ஆனா இன்னைக்கு தோசை இல்ல உன்னோட ஃபேவரைட் ஆப்பம்” என்றபடி உள்ளே போனாள்.

“எனக்கும் ஒரு காஃபி” என்றான் குமார்.

அவள் காஃபி போட்டு வருவதற்குள் எல்லாரையும் பற்றி ஓரு அறிமுகம்.

ரவி வசந்தாவின் அத்தை பையன். இவளை விட ஒரு மாதம் சின்னவன். எப்போதாவதுதான் வசந்தாவின் வீட்டுக்கு வருவான்.

குமார், வசந்தா இருவருக்கும் திருமணமாகி நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. தினந்தோறும் வரும் செல்லச்சண்டைகள், அரிதாய் வரும் நிஜச்சண்டை என்றிருந்தாலும் அன்னியோன்யமான தம்பதிகள் தான்.

போனவாரம் இப்படித்தான். சினிமாவிற்குப் போகலாம் என்று போனார்கள். டிக்கெட் எடுக்கப் போகும் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

“வசு,லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லை, நீ போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடு”

“சரி, பாப்பாவைப் பார்த்துக்கோங்க” என்றபடி போனாள். டிக்கெட் எடுத்துட்டுத் திரும்பும் போது, குமாரைக் காணோம், குழந்தை கூட ஷீபாவும், ரம்யாவும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் குமார் கூட வேலைப் பார்க்கும் நண்பர்களின்(ராஜா,பிரபு முறையே) மனைவிகள்.

“ஹாய் வசு, குமாரைத் தேடுறீங்களா, டிக்கெட் வாங்கப் போயிருக்கிறாரு” என்றாள் ஷீபா.
அப்பவே வசுவிற்கு எரிச்சல் வந்தாச்சு. குமார் வர 9 நிமிஷம் ஆச்சு.

“இந்தாங்க டிக்கெட்!” என்றபடி வந்தான். இவள் முகம் மாறியது அவனுக்குப் புரியவில்லை,

“வசு, நீ போகவும் இவங்க வந்தாங்க, தனியாத்தான் வந்தாங்களாம், அதான் டிக்கெட் வாங்கித்தரலாம்ன்னு... உன்னைக் கூப்பிட்டேன், நீ கவனிக்கலை. இல்லைன்னா சேர்ந்தே டிக்கெட் எடுத்திருக்கலாம்.”

டிக்கெட் காண்பிச்சிட்டு உள்ளே போனார்கள். நல்லவேளை அவர்களுக்கு கொஞ்சம் தள்ளித்தான் ஸீட். அவர்கள் இடத்தில் உட்காரும் வரை இவன் கூடவே போனான். இவள் இன்னும் கடுப்பானாள். இவளுக்கு மற்றவர்களுக்கு உதவறது எல்லாம் பிடிக்கும். ஆனா இவளைக் கண்டுக்காம அடுத்தவங்களுக்கு விழுந்து விழுந்து குமார் கவனிச்சா இவளுக்கு பிபி எகிறிடும்.

ஒரு வழியா குமார் வந்து உட்காரவும், படம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது. ஒண்ணும் பேச முடியலை. இன்டெர்வல் விடவும்,

“நான் ஏதாவது வாங்கிட்டு வாரேன்” என்று சொல்லிட்டு நேரா அவர்களிடம் போனான்.

திரும்பி வரும் போது அவன் கையில் ஒரே ஒரு டீ கப் இருந்தது.

“மூணு கப் தான் கொண்டு வர முடிந்தது. நம்ம இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம், பாப்பாவிற்கு ஐஸ்கிரீம் வாங்க முடியலை. நீ பிஸ்கெட் கொண்டு வந்தேல்ல, அதைக் கொடுத்துடு.”

இவளுக்கு ஏனோ படம் பார்க்கவே பிடிக்கலை. ஒரு வழியா படம் முடிந்தது.

“நீ பார்க்கிங் ஏரியாவில வெயிட் பண்ணு; நான் அவங்களுக்கு ஏதாவது ஆட்டோ அரேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.”

சரியாக 15 நிமிடம் கழித்து வந்தான். வீடு போறவரைக்கும் இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள்.

குழந்தையை மெதுவாகக் கட்டிலில் போட்டான். உடை மாற்றிக் கொண்டே “அவங்க
இரண்டு பேரும் வந்தது உனக்குப் பிடிக்கலை, கரெக்ட்?” என்று குமார் ஆரம்பிக்கவும் இவள் அவனை முறைத்த முறையில்...

“நான் சண்டையெல்லாம் போடலை. லேடீஸ் பக்கம் கூட்டமே இல்லைன்னு சொல்லித்தானே என்னை அனுப்பினீங்க, அதே மாதிரி அவங்களையும் எடுக்கச் சொல்லியிருக்கலாமே! ஸீட் பார்த்து உட்கார அவர்களுக்குத் தெரியாதா, கூடவே போகணுமா? அடுத்து, டீ வாங்கித் தரச் சொல்லி உங்ககிட்ட கேட்டாங்களா? சரி, வாங்கிக் கொடுத்திட்டீங்க, எனக்கு ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரக் கூடாதா? வெளியில டீ,காஃபி குடிக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா? அது கூட மறந்து போச்சா உங்களுக்கு? கடைசியா, வீட்டிலிருந்து அவங்களாத்தானே வந்தாங்க. இங்கிருந்து ஆட்டோ பிடிச்சுட்டு போகத் தெரியாதா? நான் பார்க்கிங்ல தனியா எவ்வளவு நேரம் நிற்கிறது? உங்க ஃப்ரெண்ட்ஸ்க்காக செய்றீங்க சரி, அவங்களும் அதே மாதிரி செய்யணுமில்ல, முந்தாநாள் கல்யாண வீட்டுல என்னை வா ன்னு கேட்டதோட சரி, நீங்க வரலைன்னு ஏதாவது ஸ்பெஷலா செஞ்சாங்களா என்ன, அவங்க பாட்டில அரட்டை அடிச்சுட்டுத்தானே இருந்தாங்க, நீங்க மட்டும் ஏன் இப்படி செய்யணும்? அதும் பொண்டாட்டி பிள்ளையைக் கண்டுக்காம?”

இவ்வளவு கேள்விகள் இருந்தன. ஆனால் அவள் வாயைத் திறக்கவில்லை. அவனே தொடர்ந்தான்.

“இதையெல்லாம் நீ தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதே, ஜஸ்ட் ஒரு ஹெல்ப் அவ்வளவுதான்.”

அதோடு அவளும் விட்டு விட்டாள். என்ன பேசி என்ன புண்ணியம்? இது என் புருஷன் மேல இருக்கிற பொஸ்ஸிவ்னெஸ் ன்னு சொன்னா சிரிப்பான், அவனால இதைப் புரிஞ்சுக்க முடியாது,

காஃபி கலக்கும் போது தான் வசுவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ரவியை ஸ்பெஷலா கவனிச்சா, குமாருக்குப் பொஸ்ஸிவ்னெஸ் வராதா? அவன் புரிஞ்சுக்க மாட்டானா?

ஆனா பாவம் அவளுக்குத் தெரியலை, குமார் முகம் மாறினால் இவளால் வேறு யாரையும் ஸ்பெஷலா என்ன, சாதாரணமாகக் கூட கவனிக்க முடியாது என்று. அவன் மேல் அவளுக்கு இருக்கும் காதல் எல்லாவற்றையும் மறக்க வைத்து விடும்.

Tuesday, May 27

தொலைபேசியிலிருந்து கைப்பேசி வரை...

பஸ்ஸில் ஏறி அப்பாடா! என்று உட்கார்ந்தவனுக்கு வயது முப்பத்தைந்து தான் ஆகிறது. ஆனால் பார்க்க நாற்பதைக் கடந்தவன் போல் இருப்பான். அவன் பெயர் கிருஷ்ணன். காலையிலிருந்து இப்ப வரை மதுரையவே ஒரு சுத்து சுத்தி வந்தாச்சு. அவன் முதலாளி ஆட்டோ, சாப்பாட்டுக்குன்னு கொடுத்த 200 ரூபாயில் 50 மட்டும் தான் செலவாச்சு. முதலாளியும் இதையெல்லாம் கணக்குக் கேட்க மாட்டார். அவரைப் பொறுத்தவரைக்கும் வேலையானா சரி. என்ன வேலைன்னு கேட்டாதீங்க, அது நமக்குத் தேவையில்லை.

எப்படியும் திருநெல்வேலி போய்ச்சேர 4 மணிநேரமாவது ஆகும். அதுவரை நிம்மதியாகத் தூங்கலாம். பஸ்ஸில் இன்னும் இடம் இருந்தது. இவனுக்குப் பக்கத்தில் யாரும் வரலை. பின்னாடி சீட்டில இரண்டு பேர் காலேஜ் பசங்க போல இருந்தார்கள். பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் இரண்டு பேரும் செல்போனில் பேசியபடி வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

டிரைவருக்குப் பின் சீட்டில் மூன்று பெண்மணிகள் என்னவோ பேசிக் கொண்டு வந்தனர். நடுவில் இருந்த பெண் பார்ப்பதற்கு அவன் அம்மா போல இருந்தாள். அந்தப்பெண் அணிந்திருந்த மொத்தையான செயின் அம்மாவிடம் கிடையாது. நவரத்தினம் பதித்த அந்த பெரிய கம்மல், மயில் வடிவ மூக்குத்தி, கையிலிருந்த ஆறு தங்க வளையல் ஏதும் கிடையாது அம்மாவிடம். எல்லாம் போய்விட்டது.

இவன் பிறக்கும் போது அவன் வீடு நிஜமாகவே கோகுலம் போல் இருக்குமாம். அவ்வளவு செல்வச்செழிப்பு. குறைந்தது 4 வேலைக்காரர்களாவது இருந்தார்களாம். கிருஷ்ணன் ஐந்து வயதில் அவனது தாத்தாவுடன் நடந்து செல்லும் போது தெருவே வணக்கம் வைக்கும். அவனது அப்பா இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

இப்போது இவனுக்கு எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவரின் செல் அடித்தது. யாரும் பார்க்காத மாதிரி காதை மூடிக் கொண்டான். என்னவோ அவனுக்கு செல்போன் சத்தமே பிடிப்பதில்லை.

அவன் வீட்டில் தொலைபேசி இருந்தது. நல்ல கறுப்பு கலர். இருபது வருடங்கள் முன்பு இவனது தெருவில் தொலைபேசி இருந்த நான்கைந்து வீடுகளில் இவனது வீடும் ஒன்று. தொலைபேசி வந்த புதிதில் யாரையும் தொட விட மாட்டான்.


தொலைபேசியைத் துடைப்பதற்குக் கூட வேலைக்காரர்களுக்கு அனுமதி இல்லை. அதற்காகவே ஒரு அழகான கைக்குட்டை வாங்கினான்.

பக்கத்து வீடு, எதிர் வீடு, நாலு வீடு தள்ளியிருந்த நாடார் கடை, எதிர் வரிசையிலிருந்த டீக்கடை என கிட்டத்தட்ட தெருவில் பாதி பேர் இவர்கள் வீட்டு நம்பரைத்தான் அவங்க அவங்க சொந்தக்காரங்க, நண்பர்களுக்கெல்லாம் தந்திருந்தாங்க. கிருஷ்ணனோட அப்பா அம்மா குணம் தங்கம். இவனுக்கு தான் பணக்காரன் அப்படிங்கற திமிர் கொஞ்சம் உண்டு.

ஒரு தடவை டீக்கடை ரத்தினத்துக்கு அவன் பொண்டாட்டி கிட்ட இருந்து போன் வந்தது. இவன் ரத்தினம் கையில தரவே இல்லை.

“என்ன விஷயம் சொல்லுங்க, நான் டீக்கடை அண்ணன்கிட்ட சொல்லிடுறேன்” என்றான்.

அவன் பொண்டாட்டி லேசுப்பட்டவளா? அவளும் விடாம “என் வீட்டுக்காரர்கிட்டத் தான் சொல்லுவேன்”னு நின்னா. அவளுக்கு இந்த சின்னப் பையன்கிட்ட என்னத்த சொல்லுறதுன்னு கடுப்பு.

ஆனா கடைசி வரை கிருஷ்ணன் ரத்தினத்துக்கு போனைத் தரவே இல்லை.

போன் வந்தாலே இப்படி. யாராவது போன் பண்ணனும் என்று வந்து விட்டால் அவ்வளவு தான். இந்த பந்தா ன்னு சொல்வாங்களே அதை இவன் பண்றதைப் பார்த்து நீங்க புரிஞ்சிக்கலாம். சின்னப்பையனிடம் இப்படி வாய்மூடி நிற்க வேண்டியிருக்கிறதே என்று இவன் பள்ளிக்கூடம் போற சமயமாக வருபவர்களும் உண்டு,

இவன் கோட்டடித்து கோட்டடித்து 8ம் வகுப்பு வருவதற்குள் பதினாறு வயதைத் தொட்டிருந்தான். அப்போது திடீரென அவன் அப்பா தவறிவிட , பொறுப்புகளை ஏற்க வேண்டிய பக்குவமும், திறமையும் இல்லாததால் தடுமாறிப் போனான். ஆனால் அதிகாரமும், திமிரும் கொஞ்சமும் குறையவில்லை,

இவனது அம்மா எப்படியாவது இவனைப் பள்ளியாவது முடிக்க வைத்து விட வேண்டும் என்று நகைகளையும், பொருட்களையும் விற்று சமாளித்தாள். இவன் பள்ளி முடித்து (அப்படியும் +2 தேறவில்லை) சுதாரிப்பதற்குள், வருமானமும் ஏதும் இல்லாததால் பத்தே வருடங்களில் ஏழையாகுப் போனார்கள். அவன் அம்மா வீட்டு வேலை செய்யப் போய் விட்டாள்.

எந்த வேலையையும் கௌரவம் பார்க்காமால் செய்யும் மனப்பக்குவம் வரும் போது வயது முப்பதைக் கடந்திருந்தது. கடைசியில் இந்த முதலாளியிடம் சேர்ந்தான். இந்த ஐந்து வருடங்களில் எல்லோர் கைகளிலும் செல்போன் முளைத்திருந்தது. முதலாளி வீட்டில் மட்டும் மூன்று செல்போன்கள்.

1000 ரூபாய்க்கு ஒரு செகண்ட் ஹேண்டாவது வாங்கிடணும்ன்னு எத்தனையோ பிரயத்தங்கள் எடுத்து முட்டி மோதி பார்த்து விட்டான். ஊஹூம்...

ஒரு தடவை முதலாளி வீட்டில வைத்து யாருக்கோ போன் செய்ய வேண்டியிருந்தது. முதலாளி அவர் செல்லைத் தராமல் அவரோட சின்ன மகனோட செல்போனை எடுத்துக் கொடுத்துட்டாரு. அப்போது கைத்தவறுதலா கிருஷ்ணன் செல்போனைக் கீழே போட்டுட்டான். அவ்வளவுதான் ஏற்கனவே கோவத்துல இருந்த அந்த பையன் படாரென்று கிருஷ்ணனை அடிச்சுட்டான்.

அதிலிருந்து இவனுக்கு செல்போன் வைத்திருப்பவர்களையும் பிடிப்பதில்லை. செல்போன் சத்தமும் பிடிப்பதில்லை.

டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போது அவருடைய செல் அடிக்க ஆரம்பித்தது. இவன் தூங்குவது போல் அழ ஆரம்பித்தான்.