Sunday, September 19

அம்மாக்கள் என்னும் (பாவ)ஆத்மா

அம்மா என்றாலே நம் மனதில் தோன்றும் பிம்பத்தை உடைக்க டாக்டர் ஷாலினி விகடனில் வாரா வாரம் முயன்று வருகிறார். அவருடைய “உயிர்மொழி” தொடர் கட்டுரையில் அம்மாக்கள் என்றாலே சுயநலவாதிகள்; பெற்ற மக்களைத் தனது ஆயுதமாக வைத்திருப்பவர்கள்; இன்னும் நிறைய...! அவர் சொல்லும் உதாரணங்கள் எல்லாம் விதிவிலக்கானவை. எனக்கு அவருடைய எழுத்தில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எல்லா அம்மாக்களும் மோசமானவர்கள் என்ற விதத்தில் அவர் எழுதுவதை யாராவது கண்டிப்பார்கள் என்று பொறுத்துப் பார்த்தேன்; ஒருவரும் சொல்லுவதாய் இல்லை. “சரி இனிமே எல்லாம் அப்படித்தான்” என்று நானே ஆரம்பித்து விட்டேன்.
அவர் அம்மாக்களை எப்போதும் விலங்கின அம்மாக்களுக்கு ஒப்பிடுகிறார். நாம்தான் பரிமாண வளர்ச்சி அடைந்து விட்டோமே, அப்புறம் என்ன? பறவை, விலங்கு எல்லாம் அதனுடைய இனவிருத்திக்காக, அதனுடைய குழந்தைகளை ஒரு காலகட்டத்திற்கு மேல் வெளியில் விட்டுவிடுமாம். மனித இனத்தில் மட்டும் தான் அம்மாக்கள் கடைசிவரை மகன்களைக் கைக்குள் போட்டபடி தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்களாம்; எல்லா அம்மாக்களுமே நினைத்ததை சாதித்துக் கொள்பவர்களாக இருந்திருந்தால் ஏன் இத்தனை முதியோர் இல்லங்கள்? அம்மாக்கள், குழந்தைகளை இனப்பெருக்கமே செய்ய விட மாட்டார்களாம்; நம்முடைய மக்கள்தொகையைப் பார்த்தபின்புமா இந்த எண்ணம்?
எனது வீட்டு ஜன்னலில் புறாக்கள் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுண்டு. மிஞ்சிப் போனால் இரண்டு மாதம் அவைகள் ஒன்றாய் இருக்கும்; அவ்வளவே! சில நாட்கள் கழித்து அதற்கு தனது அம்மா யாரென்றே தெரியாது. ஆனால் நாம் அப்படி அல்ல. என்னுடைய இருபத்தியாறு வயது வரை எனது பெற்றோர் எனக்குக் கொடுத்தவற்றை என்னால் நிச்சயம் திருப்பிச் செய்ய இயலாது. ஏதோ என்னால் முடிந்தவற்றை நான் செய்து திருப்தி அடைகிறேன். அதேபோல் தான் ஒவ்வொருவரும்.
யாரோ ஒருவர் எப்போதோ செய்த சின்ன உதவிக்குக் கூட நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம், பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு அந்த நன்றியை காண்பித்தால் என்ன சார் தப்பு? தப்பாகவே இருந்தாலும் நான் செய்து கொண்டுதான் இருப்பேன் சந்தோஷமாக.
டாக்டர் ஷாலினி சென்ற வாரத் தொடரில் மகாத்மா காந்திஜியையும்,அவருடைய தாய் புத்லிபாயையும் வேறு இழுத்திருக்கிறார். சிரவணன் ஒரு தோல்வியாளன்; இனப்பெருக்கம் செய்யமுடியாத ஒரு தோல்வியாளன். அவனுடைய கதையைச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் எப்படி வளரும்? சிரவணன் கதையைச் சொன்னதனால் ஒரு மகாத்மா உருவானதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை; இனப்பெருக்கம் செய்யாமல் போய்விடுவார்களோ என்பதுதான் டாக்டர் ஷாலினியின் கவலை.
டாக்டர் ஷாலினியின் கருத்துப்படி அம்மாக்கள் இருபது, முப்பது வருடம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டு ஒன்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டும் இல்லையென்றால் மேலே போய் சேர்ந்து விட வேண்டும். குழந்தைகள் கூட வாழக் கூடாது. ஏதோ ஒரு சிலர் பாசத்தை ஆயுதமாகக் கொண்டு மோசமாக நடப்பதால் அத்துணை அம்மாக்களையும் பழிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
. இதை நான் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக எழுதவில்லை. என்னோட அம்மாவின் மகளாகவும், எனது மாமியாரின் மருமகளாகவும் தான் எழுதுகிறேன்.

Tuesday, September 7

மண் புழு வாழ்க்கை

மண் புழு வாழ்க்கை
கொடி பிடித்து கோஷம் போட்டு
தெரு இறங்கி போராடியதில்லை;

சின்னப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும்
ஈனப்புத்திகாரனின் சட்டை பிடித்ததில்லை;

தூங்கிக் கொண்டிருக்கும் நாயைக் கல்
கொண்டு எழுப்பும் சிறார்களைக்   கடிந்ததில்லை;

மயங்கிய முதியவரை சுற்றிக் கூடியக் கூட்டத்தை
விலக்கி முதலுதவி செய்ததில்லை; 

 சினையை வயிறு நிறைந்து வரும்
பூனைக்கு ஒரு வேளை பால் வைத்ததில்லை;

கண் சிவந்து முகம் வீங்கி அழுதபடி வேலைக்கு வரும்
கண்ணம்மாவிடம் காரணம் கேட்டதில்லை;

எதையும் செய்யாமல் எதுவும் கேட்காமல்
எப்படியோ போகிறது
முதுகெலும்பில்லாத என்
மண் புழு வாழ்க்கை!