Saturday, November 5

கடற்புரத்து பௌர்ணமி

அது ஏனோ எப்போதும்
கடற்புரத்து பௌர்ணமி
தனி அழகு....

முழுதாய் சூரியன்
மேற்கே மறையும் போது
அவனிடமிருந்து பெற்ற ஒளியை
அவனுக்கே வழங்கும் கம்பீரத்துடன்
கிழக்கே தோன்றும்
கடற்புரத்து பௌர்ணமி
எப்போதும் தனி அழகு...

மனங் கொள்ளா மகிழ்ச்சியோ
மனம் கொல்லும் கவலையோ
ஒரு நிமிடமாவது
உலகை மறக்கச் செய்யும்
கடற்புரத்து பௌர்ணமி
எப்போதும் தனி அழகு

எப்போதும் நச்சரிக்கும்
என்னை கூட
வாய்மூடி மௌனியாக்கும்
கடற்புரத்து பௌர்ணமி
என்னுடையவர்க்கு
எப்போதும் தனி அழகு

Sunday, April 24

காதல் புனிதமானது.

காதலில் சைவக்காதல் அசைவக்காதல் இருக்கலாம்
புனிதக் காதல் புனிதமில்லாக் காதல் உண்டா என்ன
புனிதமற்று போனபின்னே அது காதலில்  சேருமா
கண்பார்த்து  மனம் பார்த்த வந்த காதல் புனிதத்தில் சேரும்..
கண் பார்த்து பின் பொருள் பார்த்த வந்த காதல் எதில் சேரும்?
நல்லவன் காதல் கெட்டவன் காதல் நானிலத்தில் உண்டு
நல்ல காதல் கெட்ட காதல் நானிலத்தில் உண்டா??
கெட்டவன் காதலும் புனிதமே
நல்லவன காதலும் புனிதமே..
புனிதமான காதலுக்கு ....
தாஜ்மஹல் தான் வேண்டும் என்பதில்லை
தாளில் நீ கிறுக்கிய இரு வரி போதும்
நம் காதலும் புனிதமே....
காதலை புனிதமாக்க  என்ன தான் செய்ய வேண்டும்..?
காதலை புனிதமாக்க காதல் தான் செய்ய வேண்டும்..

அரும்புகள்

 
எப்போதும் மண்ணில் விழுந்து கொண்டே இருக்கிறது
வீழ்ந்தவைகளைத் தொடுக்கலாம் என அருகில் செல்ல
என் நிழல் பட்டு அவை மறைந்து விடுகிறது..
சூரிய அரும்புகள்...
 
 
 எப்போதும் மண்ணில் விழுந்து கொண்டே இருக்கிறது
விழுந்தவை பூக்கும் காய்க்கும் கனியும் என இருந்தேன்..
அவை பூக்கவுமில்லை காய்க்கவும் இல்லை கனியவுமில்லை
விழுந்த அரும்புகள் எல்லாம் பூத்தே ஆக வேண்டும் என்று
விதி ஒன்றும் இல்லை
இருந்து விட்டு போகட்டுமே சில சமயம்
பூக்காத அரும்புகளும்....

Sunday, February 7

பெரிதாய் என்ன கேட்டு விட்டேன்?என்னவன் பற்றி எனக்குத் தெரியாததா
என்றிருந்தேன்
ஒன்றுமே தெரியவில்லை எனும்போது
இன்னும் கீழே போனேன்...

உன் மீதான என் காதல்
பாலைவன மண்ணில்
புதையுண்டு விட்டதோ? - எனில்
என் மீதான உன் காதல்?
அப்படி ஒன்றை நான்தான்
உருவகப்படுத்திக் கொண்டேனா??

காதலைத் தொலைத்தவர்கள் பாக்கியவான்கள்..
காதல் என்ற ஒன்றை உணர்ந்தாவது இருப்பார்கள்...

நீ நல்லவன் என்று பெயர் வாங்க
எப்போதும் நான் கெட்டவளாகிப் போனேன்...

உன்னில் பாதி என்றிருந்தேன்.. - இல்லை
மூன்றாம் மனுசிதான் என்பதை நீ உணர்த்தும்வரை....
உணர்ந்த பின்பு இன்னும் என்னைக்
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...
எப்படி இருக்கிறாய் என் மனமே என்று??

உண்மைகள் சில விளங்கும் போது
அடிமனதில் ஒர் வலி வருகிறதே அதென்ன
உயிர்களுக்கிடையே உள்ள ஒட்டுத் தையல்...
பிரியும் வலியா....

நெஞ்சு நிறைய காதலோடு இருந்த போது
இதயம் இத்தனை கனக்கவில்லை...
காதல் என்பதே இல்லை என்னும் போது
கல்போலக் கனத்து இருக்கிறது....

என் கனவுகளில் நீ வராத அன்று
என்னை சந்தேகித்தபடியே திரிந்தேன்....
உன் கனவுகளில் நான் இல்லவே இல்லை
என்பதை உணரும் வரை...

காதல் இல்லா வாழ்வு சாத்தியமா?
என்ற சந்தேகம் இப்போது இல்லை..
காதல் இல்லா நானே இதோ இருக்கிறேனே....
எல்லாம் சாத்தியம்தான்
உடல் வாழ ஒன்றும் வேண்டாம்
உயிர் வாழத்தான் எல்லாம் வேண்டும்...

அப்படி என்ன பெரிதாய் கேட்டு விட்டேன்???
உன் மனதில் ஓரிடமும்
உன் கனவுகளில் என் இருப்பும் தானே

Wednesday, January 20

புதுமைப் பெண்ணின் பேனாவும் புதுக்கவிதையும்.....


எழுதலாம் என்ற எண்ணமே இல்லாமல்
எடுக்கும் பேனாவும் டைரியும்
என்னைப் பார்த்து

என்ன எழுதப் போகிறாய்?
என்ன வேண்டுமென்றாலும் எழுது...
எண்ணத்தை மட்டும் எழுதாதே...
எண்ணிய எண்ணங்கள் எல்லாம்
எழுத நீ ஒண்ணும்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணல்ல வெறும்
பாத்திரம் துலக்கப் பிறந்தவள்தான்..

வேண்டுமானால்
பாத்திரம் துலக்குவதிலும்
துணி துவைப்பதிலும்
பண்ணிக்கொள் புதுமை..
இன்னும் வேண்டுமானால்
பிள்ளை வளர்ப்பதையும்
பாயாசம் வைப்பதையும்
சேர்த்துக்கொள்..
மீறி ஏதும்
புதுமைகள் செய்துவிடாதே....

இனி எழுது உன்
புதுக்கவிதையை
கவனமாக!!
என எச்சரித்தது..

Friday, January 15

தைப்பொங்கல்.....

அமேசானில் ஆர்டர் செய்து வாங்கிய
அம்சமான சுடிதாரில்
ஃபளிக்கர் ஆஃபரில் கிடைத்த
புது குக்கர், கேஸ் அடுப்பில்
பாலிஷ் செய்யப்பட்ட
பச்சரிசி இட்டு
இனிப்பு நீக்கிய வெல்லமிட்டு
கொழுப்பு நீக்கிய பாலிட்டு
ஒரு ஸ்பூன் நெய் இட்டு
அரை முந்திரியிட்டு
செய்து இறக்கிய பொங்கலை

ஆதவன் வந்து அரைநாள் ஆன பின்பு

அவனுக்கும் கண்ணில் காட்டி
மீதி அரைநாளை
தொலைக்காட்சியில் தொலைத்து.....
நாகரீக நவநாகரீக பொங்கல் ஐயா
எம் வீட்டில்.....

மஞ்சு விரட்டு,
வாடிவாசல் மாடுவிரட்டு
இரண்டாம் வருடமாய்
இல்லையென்ற போதும்
என் சகோதரிகளின் கண்ணீர்
சூட்டில் வேகும் பொங்கல்
நிஜ பொங்கல் ஐயா.....

பொங்கலுக்கு வாழ்த்துவதா....
போராட்டத்துக்கு வாழ்த்துவதா.....
பழக்கதோஷம்....
பொங்கல்நல் வாழ்த்துகள் தோழியரே....


 

Sunday, January 3

சுட்டும் விழிமான் விழி என்றாய் - உன்னைக் கண்டு மருளும் விழி என்றாய்
மீன்விழி என்றாய் – உன்னிலிருந்து மீளா விழி என்றாய்
அன்பு விழி என்றாய் - உன்மேல் பாயும் அம்பு விழி என்றாய்
மோக விழி என்றாய் - உன்மேல் தீரா தாக விழி என்றாய்
கருணைவிழி என்றாய் – உன்னைக்காணும் காதல் விழி என்றாய்.
சாந்த விழி என்றாய் - உன்னைக் கவர்ந்த காந்த விழி என்றாய்.

என் விழிகளை ஏதேதோ புகழ்ந்தாய் என்னென்னவோ பாடினாய்
பாடினவற்றுள் பிடித்தது எது எனக்கேட்டாய்....
என்னை நீ கேக்க எனை முந்தி பதில் உரைத்தது என் விழி...
என்புற அழகைப் புகழ்ந்த  என் தலைவா  -  நீ அறிவாயா?
அழகென்பது புறம் அல்ல, அகம்..
என்விழிகளின் அக அழகு - இதோ
விரிக்கிறேன் பார்..விவரிக்கிறேன் கேள்...

மூடிய விழிகளால் மெய்யுரைக்க முடியாதென்று
திறந்தே உறங்கும் சுட்டும் விழி நான்!!

சிறுமை கண்டு – உலகின் சிறுமை கண்டு சீற்றம் கொள்ளும் சுட்டும் விழி நான்!!

பேயும் இரங்கும் பெண்மைக்கு பங்கமென்றால்
தீயாய் சுடும் சுட்டும் விழி நான்!!

 உலகைக் காக்கும் உத்தமர்களின்
 உன்னத‍த்திற்கோர் கேடென்றால்
உழன்று கொதித்திடும் சுட்டும் விழி நான்!!

இன்றுவரை போராடி தன்னைக் காக்க
இனியும் போராடும் இயற்கைக்கோர் இன்னலென்றால்
இரைந்தொலிக்கும் சுட்டும் விழி நான்!!

 பூவாய் போற்றிடும் பிஞ்சுமனதில் நஞ்சு விதைக்கும்
வஞ்சகனாம் அரக்கர்தம்மை
வெந்திடச் செய்யும் சுட்டும் விழி நான்!!

களவும் கற்று மறக்கச் சொன்ன
எம் தமிழன்னைக்கு ஓர் இழுக்கென்றால்
எரிதழலாகும் சுட்டும் விழி நான்!!