Saturday, December 30

பாடல்  - காந்திமதி அம்மன் மேல்


இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே..


சரணம் 1
பதம் வைத்தாடும் பஞ்சலோக நாயகி நீ..
நிதம் உனைப்பாட அருள்தரும் சக்தீ நீ
பூத்திடும் பூவெல்லாம் உன் திருவடிதனில்
பாடிடும் பாவெல்லாம் உன் அகக்கோயிலில் -நான்
பாடிடும் பாவெல்லாம் உன் அகக்கோயிலில்

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே..

சரணம் 2
வில்லேந்தும் திருக்கரம் எனையேந்தும் பொற்கரம்
சொல்வண்ணம் நிறையுடை சொக்கனின்
அகமுடை
ஆயிரங் கண்ணுடை  அன்னையின்
அருந்துணை
பா ஆயிரம் பாடிடும் அடியவர் வழித்துணை

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே

Thursday, September 28

பாடல் - திருச்செந்தூரான் முருகன் மேல்

நின் பொற்பாதமே அல்லால்
வேறொன்றும் எனைக் காத்தருளுமோ - இறைவா

பிறவி சாகரத்தில் மூழ்கும் என்னை
உன் பூங்கரங்கள் மட்டும் தாங்கிப் பிடித்தருளும்.

என் எண்ணங்கள் எவர்வழி சென்றாலும் எதன்வழி சென்றாலும்
உன்வழி தொடரந்தே வந்திடும் எப்போதும்..

ஆனந்தமாய் உனைப் பாடவெண்ணி அமர்ந்திட்டேன் - இருந்தும்
உனை நினைக்கின் உள்ளம் உருகி  கண்ணில் நீர் பெருகுதப்பா.

பகுத்தறிவாளனாய் மாறவும் முயன்ற எனை பிடித்திழுக்கிறாய்..
இன்னமும் தெரியவில்லை -  நீயெனைக் கட்டியிழுக்கும் மாய வித்தைதனை!

நீ போடும் மாயமந்திரமே எனைக் காக்கிறதேயன்றி
நான் தினமும் உச்சரிக்கும் மந்திரங்கள் அல்ல!

பாடவும் தெரிவதில்லை.. மந்திரங்களும் புரிவதில்லை..
முருகா என்றும் கந்தா என்றும் 
உனையழைத்தலின் பொருட்டும் - 
உனை நினைத்தலின் பொருட்டுமே
இன்னமும் நான் எனும் நானானவள் நீந்துகிறேன்..
இப்பிறவிப்   பெருங்கடலை!!!
Wednesday, August 16

புரிந்ததும் புரியாததும்


அன்பினும் சிறந்ததும் ஏதுமில்லை
அறத்தினும் சிறந்ததும் ஏதுமில்லை
குணத்தினும் சிறந்ததும் ஏதுமில்லை
பொறுத்தலினும் சிறந்ததும் ஏதுமில்லை
இன்சொல்லினும் சிறந்ததும் ஏதுமில்லை
உறவினும் சிறந்தது ஏதுமில்லை
நட்பினும் சிறந்தது ஏதுமில்லை

இதனையெல்லாம் போற்றுதலில்
இதனையெல்லாம் கடைப்பிடித்ததில்
தொலைத்து விட்டேன் நான் என்னும் என்னை....

நான் என்னும் என்னை மீட்டு வருதலின்
வழி  ஏதும் தெரியவில்லை..
தெரிந்த வழிகளிலெல்லாம்
ஓங்கியோ ஓரமாகவோ தெரிவது
அன்பும் அறனும் குணமும்
இன்சொலும் பொறுத்தலும் உறவுமே....
இவற்றை மீறி எனைக் கண்டடைதலின்
வழி உரைப்பீர்!
தம்மைக் கண்டடைந்த பெரியோரே...

Wednesday, July 26

பாடல் - ஓம் நம சிவாய போற்றி

ஓம் நம சிவாய போற்றி

பிறைசூடும் திருநீறணியும்
மறைபொருளாம் சிவனே போற்றி!

வேதம்நான்கும் வேண்டிநிற்கும்
பாதந்தூக்கிய சிவனே போற்றி!

யாரென்று பாரா தீயென சுட்டிடும்
நீரென குளிர்ந்திடும் நீலகண்டா போற்றி!

நித்தமும் அபிஷேகம் நித்தமும் அலங்காரம்
தினமும் வேண்டா ஆதிலிங்கமே போற்றி!

நந்திதான் தடைச்சுவராய் நடுவே நின்றிடினும்
சிந்தையுள் தோன்றிடும் சிவனே போற்றி!

துன்பமே எனையாட்ட துவண்டிடும் என்மனதை
பன்முகம் காட்டி பிணிநீக்கும் பித்தனே போற்றி!

ஆதியந்தம் இல்லாத அருள்நிறை உமையவளை
பாதிமெய் கொண்டிடும் பரமனே போற்றி!

சுந்தரனே ஆனாலும் பிச்சையன் ஆனாலும்
மந்திரமாம் ஐந்தெழுத்தின் உரியவனே போற்றி!

உன்கழல் தொழுது உன்நிழல் பணிந்த
எண்ணிறை பித்தரின் பித்தனே போற்றி!

மூலதெய்வம் ஆனையையும் ஞானதெய்வம் குமரனையும்
மூவுலகில் தந்த மூலவனே போற்றி!

சிவலிங்கம் காணாது
சிந்தையினுள் நினைத்திடும்
அடியேன் எனக்கும்
அருள்மழை பொழிந்திடும்
நெல்லையப்பனே போற்றி போற்றி!

திருச் சிற்றம்பலம்.....

Saturday, June 3

கலைஞருக்கு வாழ்த்து


சத்தியமாக கவிதை இல்லை...
வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் மட்டுமே.....

வாயார வாழ்த்தி
வாழ்த்துரை வழங்க
வயது தேவையில்லை
என்று சொல்லி விட்டார் கமல்..

எழுதினாலும் எழுத விட்டாலும்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
நீ அறிய போவதில்லை என்பது நிதர்சனம்.

என்னுடைய அறியா வயதிலே
அரசியல் அறிவு திணிக்கப்பட்டது
உன் மூலமே..
புரிந்ததோ புரியாமலோ

நான் தீவிர ஆத்திகம்
இருந்தும் நாத்திகனான
உன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டேன்..

எனக்கு ஓட்டு போடும் தகுதி வரும்போது
என் ஓட்டு கலைஞருக்கே என்று சொல்லித் திரிந்தேன்..
காரணம் கேட்பவர்களிடம்
பதில் சொல்லத் தெரியாமல்...

இன்றுவரை உன்னுடைய
எந்த மேடைப்பேச்சையும்
நேரில் கேட்டதில்லை...
தொலைக்காட்சியில் கண்டதுண்டு...
எழுத்துகளைப் படித்திருக்கிறேன்.

குடும்ப அரசியலுக்கு
உதாரணமாய் நீ
கிண்டலடிக்கப் பட்டாலும்,
அம்மாவின் மறைவிற்குப் பின்னும்
இன்றைய உன் 94ம் பிறந்தாநாள கொண்டாட்டம் கண்டும்
மீண்டும் நான் அழுத்தமாக
என்னுள் சொல்லிக் கொண்டேன்
குடும்பம் முக்கியம் பெண்ணே!!!.

உன்னைப்போல் பன்முகம் கொண்ட
தலைவர்
இனி தமிழகம் காணுமா?
காத்திருக்கிறோம்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா....

Saturday, April 15

நான் ஒரு காட்டு மரம்

மரத்தைச் சுற்றிப் படரும்
மல்லிகைக் கொடிகளுள் ஒன்று என்றே இருந்தேன்...
வளர வளர வெட்டு விழுந்தது.

வெட்டு விழ விழ
வீறு கொண்டு எழாமல்
வீழ்ந்தே கிடந்தேன்.
வீழத்திய கொடிகள்
கள்ளச்சிரிப்புடன் மரத்தைப் படரத் தொடங்கின...

வீழ்ந்து கிடந்தவளை
பிரபஞ்சம் ஸ்பரிசித்தது..
கண் விழிக்குமுன்னே
விழித்தது என்னுள்ளோர் உணர்வு!
நான் மல்லிகைக் கொடி அல்ல...
கொடிகள் படரும் காட்டுமரம் என்று!!

எழுந்து நின்றேன்..
காட்டுமரமாய் வளரத் தொடங்கினேன்..
எவரின் கோடரியும் என்னை
ஒன்றும் செய்யாது என உணரத் தொடங்கினேன்..
எனை வீழ்த்த நினைத்த கொடிகளுக்கு
படரும் கொம்பாய் போனேன்.
படர்ந்த கொடிகள் என்னை நெருக்கிவிடலாம் என
இறுக்கத் தொடங்கின..
அவைகள் இன்னும் உணரவில்லை
தாம் படரும் கொடி என்றும்....
நான் காட்டுமரம் என்றும்...

கொடிகள் பூத்துக் குலுங்கும்..
கொடிகள் மணம் வீசும்..
காட்டுமரம் பூக்காது.
காட்டுமரம் மணம் வீசாது.
காட்டு மரம் வண்டுகளை வசீகரிக்காது..
இருந்தும்
காட்டு மரம் வெட்டுப் பட்டாலும்
எவர்மேலும் படர்ந்து தன்நிலை உயர்த்தாது...

 

Friday, March 10

மகளிர் தினம்

பெண்ணியம் பெண்ணியம் பெண்ணியம்
        என்று பெண்ணினம் கூத்தாட -மலர்க்
கண்கள் கொண்டவள் மாண்பினை
        உடையவளென மகிழ்ந்து புகழ்ந்தாட - இப்
பெண்கள் தினத்தில் ஆடவரும்
       வந்து வாழ்த்துரை தாமுரைக்க
திருநங்கை யாமிவள் வாழ்த்தினை
        வேண்டி காத்து நின்றனளே...

     மகளிர் தின வாழ்த்துகள்

Sunday, February 19

உ வே சா பிறந்த தினமான இன்று, அன்பு சீமான் அண்ணனுக்கு ஒரு தமிழச்சியல்லாத சகோதரியின் அன்புக் கடிதம்

உ வே சா பிறந்த தினமான இன்று
அன்பு சீமான் அண்ணனுக்கு ஒரு தமிழச்சியல்லாத சகோதரியின் அன்புக்கடிதம்..

 உங்கள் கருத்துப்படி நான் தமிழச்சி இல்லை..

என் முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு முப்பாட்டன்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு, இந்த தமிழக மண்ணுக்கு வந்து ஆயிருக்கும் பல நூற்றாண்டுகள்..
ஆனாலும் உங்கள் கருத்துப்படி நான் தமிழச்சி இல்லை..

பாரதிக்குத் தெரிந்த என் தாய்மொழி எனக்குத் தெரியவே தெரியாது...
தமிழ் மட்டுமே கேட்டு, வளர்ந்து, வாழ்ந்து வரும், இன்னமும் வள்ளுவன், கம்பன் இளங்கோ, பாரதி என பேசி வாழும் நான்...உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

தமிழச்சியாய் பிறந்தாலும், 'தமிள்' என்று எழுதி வரும் என் சகோதரிகளுக்கு மத்தியில் 'ற்' என்ற ஒற்றுக்கு அருகில் வேறு ஒற்று வராது என்று தமிழ் இலக்கணத்தைக் காதலித்துக் கொண்டிருக்கும் நான் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

சேலை கூடக் கட்டத் தெரியாத எத்தனையோ செந்தமிழச்சிகளுக்கு மத்தியில் சுடிதார் அணிவதைக் கூட இயல்பாய் வழக்கப்படுத்த முடியாமல் இன்னும்  சேலை ஒன்றே தமிழர் மாண்பு என அணிந்து வரும் நான் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

தெலுங்கர் என்று சிலரையும், சேரநாட்டவர் என்று சிலரையும், ஆரியர் என்றும் சிலரையும் ஒதுக்க விரும்பும் நீங்கள் உவேசா, பெரியார், எம்ஜிஆர்  இவர்களை தமிழர் அல்ல என்றும் ஒதுக்கி விடுவீர்களா?? இவர்களில் ஒருவர் இல்லை என்றாலும் இன்றைய தமிழ் இல்லை, தமிழ்நாடு இல்லை, தமிழக அரசியல் இல்லை. இவர்கள் தமிழர்கள் இல்லை என்றால் நானும் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

 நாம் தமிழர் என்பதற்கு.. தமிழச்சியாய் பிறந்தே ஆக வேண்டும்  என்னும் எண்ணத்தை இனியாவது மாற்றிக் கொள்வீர்களா??  தமிழச்சியாய் வாழ
தமிழர் என்னும் உணர்வு மட்டுமே போதும்...

நீங்கள்  'தமிழர் அல்லாதவர் வெளியேறுங்கள்' என்று கூறும் போதெல்லாம்  இத்துணை நூற்றாண்டுகளுக்கு அப்புறம் நான் எங்கே போவது என்ற எண்ணம் வரும் போதும்
'நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்' என்ற அப்பர் வாக்கும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லயே
இச்சகத்தள்ளோரெல்லாம் எதிர்த்து
நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லயே
என்ற பாரதியும் தான் எம்முடன் இருக்கிறார்கள்.......
                       வாழ்க தமிழ்....
Thursday, January 26

தாய்மை

தாய்மை என்னும் தலைப்பு கேட்டு
தோன்றிய எண்ணம் வேறு
படைத்த கருத்து வேறு..
சத்தியமாய் இது
சொந்தக்கதை பாதி என் அன்னை
நொந்தக்கதை பாதி...


தாய்மை என்பதை ஓர் பதவியாய்
எண்ணி இறுமாந்திருந்தாள்
தாய்மை என்பதை ஓர் பதவியாய்
இறுமாந்திருந்தாள்.
அது கணக்காளர் வேலையாய் போகுமென தெரியாமல்..

மாத விலக்கு கணக்கெல்லாம் முடிந்ததப்பா என்றிருந்த வேளை,
முடியவில்லை இதோ என்று
அடுத்த கணக்காய் தொடங்கிற்று
ஐயிரண்டு திங்கள் கணக்கு..

பத்து மாதம் முடிந்ததய்யா...
பச்சிளந்தளிர் ஒண்ணு
பார்க்க பார்க்க
பரவசம் மூட்டிற்று..

 தாய்மை என்பதை ஓர் பதவியாய்
எண்ணி இறுமாந்திருந்தாள்..

வருடங்கள் ஓடி மீண்டும்
கணக்கு வழக்குகள் முடிந்து
ஆச்சு இன்னுமொண்ணு..

பதவியாய் எண்ணி
பகுமானமாய் இருந்தவள்
பதவிக்கனம் தாங்காமல்
இறக்கி வைக்க முடியாமல்
தவித்தாள்..

இன்னும் பத்து வருடம் போனால்
பதவி இருக்கும்.
பதவிச்சுமை இருக்காது
என மனக்கணக்கு போட்டாள்

பத்தென்ன இன்னும் கூட
இரண்டு வருடம் ஆச்சு
தலைச்சுமை கூடியபடியே..
குறையக் காணோம்...

அவள் கணக்கே முடியவில்லை
மூச்சு விட நேரமின்றி..
தொடங்கிற்று மற்றுமொரு கணக்கு..
நல்லவேளை இது
பழைய கணக்கல்ல
புது கணக்கு..
பெண்ணுக்கும் சேர்த்து கணக்கு
போடத் துவங்கியருந்தாள்...

பள்ளியிறுதி கணக்கை
பல்லைக் கடித்து முடித்தவளுக்கு மதிப்பெண் பல பெற்றவளுக்கு
இரண்டே கணக்குகள்
தனக்கும் மகளுக்குமாய்
தவித்தே போனாள்....

மாதக்கணக்கில் மூழ்கியவளுக்கு
வருடக் கணக்கு போனது
தெரியவில்லை

இன்னும் போச்சு  வருடம் மூணு
அடுத்த பெண்ணின் கணக்கும்
சேர்ந்ததய்யா அக்கௌண்டில்..

நல்லவேளை இரண்டோடு
நிறுத்தியதற்கு நன்றி சொன்னாள்
இறைவனுக்கு..
இப்போது....

மூன்று கணக்குகள் முட்டி மோதி
சமாளித்தவள்
கொஞ்சம் மூச்சு விட
கால தேவன் நிப்பானா
அவன் கணக்கை அவன் பார்க்க
இன்னும் ஆச்சு வருடங்கள்...

கணக்கிலடங்கா வரன் தேடி
எண்ணிலடங்கா இடந்தேடி
முதல்கடமை முடித்தாளய்யா..

கணக்கு வேலை முடியும் என்று
கணக்கு போட்டவள் நெஞ்சம்
இப்போதுதான் கவனமாய் போட்டது
பெண்ணின் மாதக்கணக்கை

மகளுக்கு நாள் தள்ளியதில்
அப்பாடா என்றவளின் நெஞ்சத்தில்
இருந்தது என்னவோ
யாமறியோம் பராபரமே

ஐயிரண்டு மாதம் கணக்கு முடிய
பிறந்தது பேரன் என்றவுடன்
பேரானந்தம் அடைந்தாள்...
எண்ணிக்கை நான்காகா
ஆனந்தம்..

தாய்மை என்பதை ஓர் பதவியாய்
இறுமாந்திருந்தாள்.
அது கணக்காளர் வேலையாய் போகுமென தெரியாமல்..

இருந்தும்...
கணக்கு போட்டு வாழ்ந்தாலும்
கணக்காளர் வேலை பார்த்தாலும்.
பெண்ணாய் பிறந்த ஜீவன்
மட்டும் அறியும்
தாய்மை பதவி அல்ல
உணர்வென்பதை...

இந்தக்கணக்கு மட்டும்
இல்லையெனில்
இல்லை தாய்மை என்னும் உணர்வு

தாய்மையை உணர
பெண்ணாய் தோன்றிட வேண்டும்
தாய்மையை  உணர
தென்னாடுடையவன் கூட
தாயுமானவானாய் ஆக
பெண்ணாய் மாறிடல் வேண்டும்..

தாய்மை மட்டுமே
தன்னலம் பார்க்காது

தாய்மை மட்டுமே
தன்பசி நோக்காது..

தாய்மை மட்டுமே
தன்கணக்கு பார்க்காது