Saturday, April 15

நான் ஒரு காட்டு மரம்

மரத்தைச் சுற்றிப் படரும்
மல்லிகைக் கொடிகளுள் ஒன்று என்றே இருந்தேன்...
வளர வளர வெட்டு விழுந்தது.

வெட்டு விழ விழ
வீறு கொண்டு எழாமல்
வீழ்ந்தே கிடந்தேன்.
வீழத்திய கொடிகள்
கள்ளச்சிரிப்புடன் மரத்தைப் படரத் தொடங்கின...

வீழ்ந்து கிடந்தவளை
பிரபஞ்சம் ஸ்பரிசித்தது..
கண் விழிக்குமுன்னே
விழித்தது என்னுள்ளோர் உணர்வு!
நான் மல்லிகைக் கொடி அல்ல...
கொடிகள் படரும் காட்டுமரம் என்று!!

எழுந்து நின்றேன்..
காட்டுமரமாய் வளரத் தொடங்கினேன்..
எவரின் கோடரியும் என்னை
ஒன்றும் செய்யாது என உணரத் தொடங்கினேன்..
எனை வீழ்த்த நினைத்த கொடிகளுக்கு
படரும் கொம்பாய் போனேன்.
படர்ந்த கொடிகள் என்னை நெருக்கிவிடலாம் என
இறுக்கத் தொடங்கின..
அவைகள் இன்னும் உணரவில்லை
தாம் படரும் கொடி என்றும்....
நான் காட்டுமரம் என்றும்...

கொடிகள் பூத்துக் குலுங்கும்..
கொடிகள் மணம் வீசும்..
காட்டுமரம் பூக்காது.
காட்டுமரம் மணம் வீசாது.
காட்டு மரம் வண்டுகளை வசீகரிக்காது..
இருந்தும்
காட்டு மரம் வெட்டுப் பட்டாலும்
எவர்மேலும் படர்ந்து தன்நிலை உயர்த்தாது...