Wednesday, July 26

பாடல் - ஓம் நம சிவாய போற்றி

ஓம் நம சிவாய போற்றி

பிறைசூடும் திருநீறணியும்
மறைபொருளாம் சிவனே போற்றி!

வேதம்நான்கும் வேண்டிநிற்கும்
பாதந்தூக்கிய சிவனே போற்றி!

யாரென்று பாரா தீயென சுட்டிடும்
நீரென குளிர்ந்திடும் நீலகண்டா போற்றி!

நித்தமும் அபிஷேகம் நித்தமும் அலங்காரம்
தினமும் வேண்டா ஆதிலிங்கமே போற்றி!

நந்திதான் தடைச்சுவராய் நடுவே நின்றிடினும்
சிந்தையுள் தோன்றிடும் சிவனே போற்றி!

துன்பமே எனையாட்ட துவண்டிடும் என்மனதை
பன்முகம் காட்டி பிணிநீக்கும் பித்தனே போற்றி!

ஆதியந்தம் இல்லாத அருள்நிறை உமையவளை
பாதிமெய் கொண்டிடும் பரமனே போற்றி!

சுந்தரனே ஆனாலும் பிச்சையன் ஆனாலும்
மந்திரமாம் ஐந்தெழுத்தின் உரியவனே போற்றி!

உன்கழல் தொழுது உன்நிழல் பணிந்த
எண்ணிறை பித்தரின் பித்தனே போற்றி!

மூலதெய்வம் ஆனையையும் ஞானதெய்வம் குமரனையும்
மூவுலகில் தந்த மூலவனே போற்றி!

சிவலிங்கம் காணாது
சிந்தையினுள் நினைத்திடும்
அடியேன் எனக்கும்
அருள்மழை பொழிந்திடும்
நெல்லையப்பனே போற்றி போற்றி!

திருச் சிற்றம்பலம்.....