Thursday, February 24

அப்பாவின் சைக்கிள் 

பெற்ற ஐந்தில் 

 பெண்ணிரண்டும் கடைசியாய். 

பெருமையும் பெருமிதமும்

 பொங்கியது மனதில். 


 புகழ்பெற்ற பள்ளியில் 

என்னைச் சேர்த்தாச்சு. 

பேருந்தும் சரியல்ல. 

ஆட்டோவும் அப்போதில்லை.


 பள்ளியோ பதினெண் கிமீ தள்ளி

மிதிவண்டிதான் ஒரேவழி. 

காலை மாலை இருநேரமும்

தனியொரு ஆளாய் மிதித்தபடி.


 மூன்று வருடங்கழித்து 

என் தங்கையும் 

 அதே பள்ளியில். 

மூவரையும் சுமந்தபடி ஒருவருடம்.


 இப்போது நினைத்தாலும் 

மலைத்துப் போகிறேன். 

எப்படியென்று.


 லொடலொடவென்று சத்தமிட்டாலும் 

பிள்ளைகள் வளர்ந்து

 ஆளுக்கொரு வண்டி 

 வாங்கிய பின்னும். 


 இன்னும் மிதிவண்டி

 மிதித்தபடிதான் 

அப்பாவின் வாழ்க்கை. 


எனக்கும் மிதிவண்டியெனில்

அப்பாவின் வண்டி மட்டுமே 

நினைவிலுண்டு. 

Monday, February 21

மனம் போனபடி...

 மனம் தான் குழப்புகிறது. 

தெளிவும் படுத்துகிறது. 

கோபப்படச் செய்கிறது. 

ஆறுதலும் தருகிறது. 


 புலம்ப வைக்கிறது.

 மகிழவும் வைக்கிறது. 

செருக்கு கொள்கிறது. 

கூனி குறுகவும் வைக்கிறது.


 கூத்தும் கும்மாளமுமாய்

 குத்தாட்டம் போட வைக்கிறது.

 எதுவும் வேண்டாம் 

என தள்ளியும் விடுகிறது.


 அறிவின் பாலும் செல்கிறது.

விருப்பின் பின்னும் விரைகிறது.

 

 இன்றுவரை 

நல்லதோ கெட்டதோ 

 மனம் போன படியே போகிறேன்.


 குட்டும் திட்டும் விழுந்தால் கூட 

அப்படியே தான் இருக்கிறேன்.

 பாராட்டு வரும்போதும் 

அப்படியே.


.மனம்படி வாழ்தலில், 

நல்லபெயரை விட 

 கெட்டபெயர் எளிதில் வரும். 

ஆனால் மனம்

இன்பமாக இருக்கும். 


 நம்பிக்கை இல்லையா? 

வாழ்ந்து பாருங்களேன்.