Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts

Thursday, August 4

சதுரங்கம்

எண்ணம் #1

அரசனுக்கு அதிகாரம் இல்லை என்பர்.

அரசிக்கு நிகர் அவளே என்பர்.

அவர்கள் அறிவது இல்லை ஒருபோதும்..

அரசி வெட்டுண்டாலும்

ஆட்டம் தொடரும்.

அரசன் சூழப்பட்டாலே ஆட்டம் முடிந்துவிடும் என்பதை.


எண்ணம் #2

களம் நின்று விளையாட

கணவனை விடுவது இல்லை.

களம் விட்டுச் சென்றாலும் 

மீண்டு வருவாள் அவன்தன்னைக் காத்திடவே!!!


எண்ணம் #3

வெட்டுண்டு களம் நீங்கினும்

மீண்டு வருவாள்

தலைவன் உயிர்காக்க...

செங்களத்தின் அரசி.


Monday, February 21

மனம் போனபடி...

 மனம் தான் குழப்புகிறது. 

தெளிவும் படுத்துகிறது. 

கோபப்படச் செய்கிறது. 

ஆறுதலும் தருகிறது. 


 புலம்ப வைக்கிறது.

 மகிழவும் வைக்கிறது. 

செருக்கு கொள்கிறது. 

கூனி குறுகவும் வைக்கிறது.


 கூத்தும் கும்மாளமுமாய்

 குத்தாட்டம் போட வைக்கிறது.

 எதுவும் வேண்டாம் 

என தள்ளியும் விடுகிறது.


 அறிவின் பாலும் செல்கிறது.

விருப்பின் பின்னும் விரைகிறது.

 

 இன்றுவரை 

நல்லதோ கெட்டதோ 

 மனம் போன படியே போகிறேன்.


 குட்டும் திட்டும் விழுந்தால் கூட 

அப்படியே தான் இருக்கிறேன்.

 பாராட்டு வரும்போதும் 

அப்படியே.


.மனம்படி வாழ்தலில், 

நல்லபெயரை விட 

 கெட்டபெயர் எளிதில் வரும். 

ஆனால் மனம்

இன்பமாக இருக்கும். 


 நம்பிக்கை இல்லையா? 

வாழ்ந்து பாருங்களேன். 

Friday, April 16

புலம்பல்



மூளையைக் கழட்டி
கழுவி கழுவி வைத்தலில்
மனதைக் கழுவ மறந்த
மதிகெட்டோர் 
மலிந்த உலகமிது...

 புகழென்னும் இச்சைக்காய்
 புல்லராய் வாழ்ந்திடும் 
பிறர் மனம் பாராத 
எடுப்புகள் நிறைந்த 
எழில்மிகு உலகமிது...

 முகமூடிக்குள் வாழ்ந்தே 
வாழ்வை முடித்திடலாமென
 மெய்யறிவு பெறாத 
பொய்யர்கள் வாழும் 
பொய்யா உலகமிது... 

 பிறர்வாழ பொறுக்காது 
புறம் பேசி புறம் பேசி 
தானும் வாழாத 
தண்டங்கள் வாழ்ந்திடும்
தண்ணீர்சூழ் உலகமிது...

 அடுத்தவர் செய்வதை 
அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
 தன்நிலை உயர்த்தா 
பேதைமை நிறைந்த 
பேரழகு உலகமிது... 

 தன்திறன் ஏதுமின்றி
பிறர்திறனில் வாழ்ந்து
 எவரும் அறியாரென 
ஏய்ப்பவர் நிறைந்த 
ஏறுகொண்ட உலகமிது...

 நல்லவர்போல் நடிப்பதற்கும்
 நல்லவராய் வாழ்வதற்கும்
 வேறுபாடு தெரியாத
 விந்தைமாந்தர் 
 நிறைந்த உலகமிது... 

 இத்தனைக்குப் பிறகும்
 இன்னமும் இழிசெயல்கள்
 நிறுத்தாது தொடர்ந்திடும்
 மடையோர்கள் கொண்ட 
மடமை உலகமிது... 

 எத்தனைதான் கற்றாலும்
 எத்தனைதான் பெற்றாலும்
 திருந்திட மனமில்லா
 திமிர்கொண்டோர் கூட்டம்
 திரண்டிடும் உலகமிது. 

 நல்லோர் ஒருவருக்காய் 
பெய்யும் மழையிருக்க 
நாமேன் திருந்தணுமென
 நயவஞ்சகர் நிறைந்த 
நல்ல உலகமிது...

 அசைத்து அசைத்துப் பார்த்து
 அசையாத சிவமாய்
அறத்தெய்வம் இருப்பை 
உணராத உயிர்நிறைந்த
உயர்வான உலகமிது... 

 வாழ்வின் இறுதியில் 
வாட்டும் உயிர்த்துன்பம் 
வந்து வந்து போகையில் 
இறைவனைத் தூற்றும்
 இறைநிறை உலகமிது...

 யார் குத்தினால் என்ன 
யார் மொத்தினால் என்ன
என்வேலை 
 படம் பார். கவிதை எழுது.. என
என்போன்றோரும் வாழும்
 ஏற்றமிகு உலகமிது....

Monday, May 11

வாழ்க வையகம்

பத்து  தேனீக்கள் படையெடுத்து வந்தால்
பதுங்க முடியாது.
நான்கு நாய்கள் தெருவில் துரத்தினால்
நழுவ முடியாது.
ஒற்றை பாம்பு - ஒற்றை யானை துரத்த
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

ஆனாலும் அகந்தை..
நான் மனிதன் என்ற மமதை.
என் நாடுதான் பெரியது;
என் மொழிதான் சிறந்தது;
என் இனம்தான்..
என் மதம்தான்..
என் சாதிதான் ...

அகந்தை பிடித்தலையும் மனிதனை
அஞ்சி நடுங்கும் அற்பனை
அச்சுறுத்த விலங்குகள் எதற்கு?
வெறும் பசி போதாதா?
வெறும் பயம் போதாதா?

இருப்பினும்
இன்னமும்
உலகம் உயிரோடு இயங்குவது
நல்லோர் ஒருவர் பொருட்டுதான்..

நல்லோராய் இருப்போம்.
நானிலம் தழைக்கச் செய்வோம்.
வாழ்க வையகம்..

Wednesday, April 15

இன்றைய கையறுநிலை...

இதுநாள்வரை அறிந்தவற்றுள்
உண்மைகள் சில
உண்மையானவையாகவே
தொடர்கின்றன..
பொய்கள் சில
பொய்யானவையாகவே தொடர்கின்றன. 

உண்மைகளில் பல
பொய்யாக இருப்பதும்...
பொய்களில் பல
உண்மைகளாக இருப்பதும்....
விதி என்பதா?
சதி என்பதா?

எது உண்மை எது பொய்
என அறிந்தவர்
உரைக்காத வரை...
இங்கிருப்போர்
உண்மை அறிவதில்லை.
உண்மை அறிவோர்
இங்கிருப்பதில்லை

பொய்நிறை உலகம் செய்ய ஓயாஉழைக்கும் உத்தமரே
அறிவீரா?..
மெய்நிறை உலகம் ஆக்க
செய்யவேண்டியவை
ஏதுமில்லை என்று.

ஆடும்வரை ஆடுங்கள்..
காலம மாறும்வரை..
காத்திருப்போம் நாங்கள்.

Sunday, March 22

எண்ணங்கள்

பகலில் தூங்கா
துறுதுறு குழந்தைகள் 
பகல்தூக்கம் கொள்ளும் போதும்
ஆடி ஓடிக் களைத்து
இயல்பாய் தும்மும் போதும்
பதறும் பெற்றோரின்
உள்ளம் அறிவீரா?

உயிரினங்களை நிம்மதியாக
வாழ விடாது 
எத்தனை கிருமிகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்.

மனிதத்தை மறக்கடிக்க
எத்தனை வழிமுறைகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்..

அனைத்தையும் மனிதனின்
எதிர்ப்பாற்றல் எதிர்த்து நிற்கும்..

இல்லையெனில் என்றோ
அதிகாரம் வென்றிருக்குமே
இன்றுவரை வரலாற்றில்
மனிதன்தானே வென்றிருக்கிறான்.

*"அரசியல் பிழைத்தோருக்கு
*அறமே கூற்றாகும்."*
அறியாது செய்தவனுக்கு இக்கதி..
அறிந்து செய்தவர் கதியறிந்தும்
தொடர்ந்து செய்யும்
நீவிரும் மனிதன்தானே!

இறைமை தந்த அறிவை
அப்படியே வைத்திருக்கும்
அறிவிலி பரவாயில்லை..
இப்படி பயன்படுத்தி
மக்களைக் கொல்லும்
அறிவாளிகளை விட..

பூவுலகில் வாழும்
நல்உள்ளங்களைப் பொருட்டே
இயற்கை உம்மை மன்னிக்கிறது..
மறந்து விடாதீர்...

Saturday, March 21

உண்மை வெளிப்படட்டும்..

கலிலியோவை கல்லால்
அடித்த உலகம் இது.

அறிவியல் மட்டுமே உலகம்
என்று அடம்பிடிப்போர்
உலகம் இது.

இறைமை என்றால்
என்னவென்று புரியாதோர்
உலகம் இது.

எப்போதும் நடிப்போரைக்
கொண்டாடும் உலகம் இது.

உண்மையாளர்களை
அடைத்து வைக்கும் உலகம் இது

உண்மை தெரிந்த பின்பு
உச் கொட்டும் உலகம் இது

பொறுத்திருப்போம்....
உண்மை தெரியும் வரை
ஊரார் தெளியும் வரை

எது கிருமி எவர் கிருமி என்று...

Thursday, December 12

மனம்

ஏதும் வேண்டாம் என்று
ஒதுங்கி நிற்கும்..
எல்லாம் வேண்டும் என்று
ஆடி எழும்.

விட்டுத் தள்ளு என்று
பற்று அறுக்கும்.
விடவே முடியாது என்று
பிடித்து இழுக்கும்.

அமைதியாய் இருப்பவரை
ஆட வைக்கும்.
ஆடிக் கொண்டிருப்பவரை
அரற்ற வைக்கும்.

சிரித்தால் சிரிக்காதே
அழுதால் அழாதே.
கோபமுற்றால்
கோபம் கொள்ளாதே.
வருத்தம் கொண்டால்
வருந்தாதே.
பகை கொண்டால்
பகைக்காதே.
பணிந்து போனால் பணியாதே.

ஏதும் வேண்டாம் என்றால்
ஏதாவது செய்.
ஏதாவது செய்தால்
ஒன்றும் செய்யாதே.

அப்பப்பா...
இந்த மனதின்படி
வாழக்கூடாது என்றெண்ணும் போது
'மனம்போல் வாழ்வு',
'மனதின்கண் மாசிலன் ஆதல்'
எனச் சொல்லி நகைக்கும்.

Sunday, November 17

இறைமையின் உண்மை.. எனக்குப் புரிந்தது

      இறைமை நினைத்தபடி நாமும் நினைத்து விட்டால் அருமை. வாழ்க்கை இனிமை...

இறைமை நினைத்தபடி நடக்காது, நாம் ஒன்று நினைத்து அதன்படி நடந்தால் வாழ்க்கை கடினம்.

இறைவன் நினைத்ததை புரிந்து கொள்வதுதான்  வாழ்க்கை. அதற்குத்தான் இத்துணை போராட்டங்கள்.

எப்படி புரிந்து கொள்வது? உள்ளம் இறைவன் வாழும் இடம் என்று தெளிந்து அதனை மாசற்று வைக்க முயல்வோம்..

ஆனால் இந்த நிலவுலகில் பிறந்து விட்டதனால், நம் உள்ளம் சில நேரம் தடுமாறவே செய்யும்.. அது பெரிய தவறு அல்ல. அதனைப் புரிந்து கொண்டு மீண்டும் அத்தவறினைத் தொடராது நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
இதுதான் ஊழ். துன்பம் வரும் போது மேலும் தவறு செய்யாது அதனைப் பொறுத்துக் கொளல் வேண்டும்..

இறைவனை நிந்திக்காது அவனிடமே அடிபணிந்து ஆறுதல் பெறலாம்.

இப்பூமியில் பிறந்து விட்டாலே, இன்பமும் துன்பமும் மாறி மாறி நம் வாழ்வில்  வந்து கொண்டேதான் இருக்கும்.
நம் மனதும் அதற்கேற்ப ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

எல்லாம் நாம் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தால் நாம் ஞானியாகி விடுவோம்.

ஞானியாகி விட்டபின் எதன்மேலும் பற்றற்று போய்விடும். பற்றற்ற ஞானியர்க்கு நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணமில்லாது போய்விடும்.
சித்தன்போக்கு சிவன்போக்கு என்று அமைதியாகி விடுவர்.  மக்கள் நலனே மகேசன் நலன் என்று உலக நன்மைக்கு பாடுபடுபவர்.

*இறுதியாக ஊழைப் பற்றியோ, விதியைப் பற்றியோ கவலைப்படாது அச்சப்படாது செயல்களோ, வினைகளோ ஆற்றுவோம்.. வரும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அழுகை வந்தால் அழுவோம். மகிழ்ச்சி வந்தால் மகிழ்வோம். தீய குணங்கள் நெருங்கும் போது அறிந்து கொள்ள முயல்வோம். போற்றலும் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று வாழ்வோம்.*

    எடுத்துக்காட்டாக...
நம் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாத போது, ice cream, pizzaபோன்ற உணவுகள் கேட்டு அழுதால் நாம் வாங்கித் தருவோமா?

அதுபோல நம் உள்ளம் சரியில்லாத போது,  நாம் குழந்தைத்தனமாக ஏதேனும் கேட்டால்,  இறைவன் தர மறுக்கிறான்..

ஆனால் நாமோ குழந்தைகள் போன்று அவனிடம் அழுது புரண்டு அவனைத் திட்டி, அடம் வைத்து நினைத்ததை நடத்தி விடுகிறோம்.
இறுதியில் மேலும் துன்பங்கள்.

எனவே நமக்கு வேண்டியதை விரும்புவோம். அது நமக்கு உகந்தது எனில் இறைவனே நம்மிடம் வந்து சேர்ப்பான்.

தேவையற்றது எனில் நமக்கு புரிய வைப்பான்.  எனவே ஆழ்ந்த விருப்பம் வைப்போம்.. கிடைத்தால் நிம்மதிய டைவோம். கிடைக்கவில்லையெனில் மிகுந்த நிம்மதியடைவோம்.

எனக்கு கிடைக்காமல் போன, நான் தவறவிட்ட எததனையோ வாய்ப்புகளினால் அப்போதைக்கு நான் வருத்தமுற்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களிலேயே உண்மை புரிந்து பெரும் நிம்மதியும் மகிழ்வும் அடைந்திருக்கிறேன்.

அதே வசனத்துடன் முடிக்கிறேன்.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது.

குறிப்பு:
---------------
     மேலே சொன்ன இவையனைத்தும் எனனுள் உதித்த சிந்தனைகள் அல்ல. நான் கற்ற பல நூல்களிலிந்தும், நான் கேட்ட பல ஆசான்களின் பேச்சிலிருந்தும் இப்போதைய எனது புரிதல். இவை மாறலாம்.

நன்றி..
🙏🏼🙏🏼🙏🏼

Wednesday, November 13

வேண்டும் தனிமை...

அறுபதில் தொடங்கி
ஆயுள் முழுதும் தொடரும்
தனிமை வேண்டாம்..

இளமையாய் உணரும்
இத்தருணத்தில்
வேண்டும் தனிமை.

ஒரு மண்டலமோ 21 நாட்களோ அல்ல.
வெறும் இரண்டே நாட்கள்.
வெறுமை உணர
வேண்டும் தனிமை.

மணி ஆறாச்சே என
மனம் பதறாது ..
இன்னும் சிறிது நேரம்
கண்மூடி உறங்க
வேண்டும் தனிமை.

பள்ளியில் படித்தவற்றையெல்லாம்
மறந்து விட்ட காலத்தில்
பெண்ணிற்காய் ஒருமுறை
பையனுக்காய் ஒரு முறை என
மீண்டும் மீண்டும் படிப்பதிலிருந்து
மீள்வதற்காய்
வேண்டும் தனிமை.

பிடித்த நூல்
நூறுபக்கம் இருந்தால் என்ன
ஐந்நூறு பக்கம் இருந்தால் என்ன
எடுத்த நூலைக் கீழே வைக்காது
முடித்துவிட
வேண்டும் தனிமை

ஆடல், பாடல் என
அக்கம்பக்கம் காணாது
நினைத்தவற்றை
நினைத்த பொழுதில்
 செய்து மகிழ
வேண்டும் தனிமை.

கொழுநன் பசியாற்ற
குழந்தை பசியாற்ற என
பார்த்து பார்த்து சமைத்திடாது
என் பசிக்கு மட்டும்
கொஞ்சம் கொறித்திட
வேண்டும் தனிமை.

கோழி பிரியாணியா
இல்லை அவியல் சாம்பாரா
அப்பப்பா எதுவுமே வேண்டாம்
கொஞ்சம் காஃபி மட்டும்
என்று ரசித்திட
வேண்டும் தனிமை.

குமந்தைகளுக்கும் கணவனுக்கும் இருநாட்கள் மட்டும்
என்னிடமிருந்து
விடுமுறையளித்து
விருப்பம் போல இருங்கள் என
வாழ்த்தி
என் விருப்பமாய் வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க அல்ல.
பொறுப்புகளை இன்னும்
சிறப்பான தாக்க
இருநாள் மட்டும்
வேண்டும் தனிமை.

ஒன்றும் செய்யாது
மூச்சு விடுதல் மட்டுமே
இன்றைய வேலை
என்று வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

---கோகிலவாணி கார்த்திகேயன்---
12-11-2019

Tuesday, April 2

முக்காலம்..


முன்பு 
அனைவரிடமும்
பாசம் உண்டு பற்று உண்டு.
அன்புண்டு அக்கறையுண்டு .
உரிமையுடன் உதவ மனமும் உண்டு.

அன்புகொண்டு நான் செய்ததை
அனுபவித்த பின் 
'யாரு கேட்டா?'  எனப் பகிர்வோரும்,
என் அன்புணரா மனங்களும்,
வாழ்க வளமுடன்...



இப்போது...
பாசம் இல்லை பற்று இல்லை
பொறாமை இல்லை பகையும் இல்லை.
அன்பு மட்டும் உண்டு.

கேட்பவர்களுக்கு
முடிந்த வரையில்  செய்வதுண்டு.
எவருக்காய்
எம் பண்புகள் மாறாதே.

ஆனால்
அக்கறையின் பொருட்டு
முன்னின்று
ஏதும் கேட்பதும் இல்லை;
ஏதும் பேசுவதும் இல்லை;
ஏதும் செய்வதும் இல்லை;



இனி..
என் கல்வி. தகுதி, செல்வம் பாராது
என்னை எனக்காய் மதிக்கும்
உறவுகளைத் தேடும் பயணத்தில்
சிவன் மாத்திரமே
உறவாய் உள்ளான்.
அவன் மாத்திரமே
நிறைவாயும் உள்ளான்.
ஓம் நமசிவாய...

Wednesday, March 20

என் பெண்ணிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…


எதிர்பார்ப்பு ஏதுமின்றிதான்
ஈன்றெடுத்தோம் உன்னை.
இருந்தும்
எங்களையும் மீறி உன்மேல்
ஏற்றிய எதிர்பார்ப்புகள்
எத்தனையோ?

போட்டிகளா?
தேர்வுகளா?
நிகழ்ச்சிகளா?
எல்லாவற்றிலும்
பங்கெடு..  பரிசுபெறு..

இதற்காய் பொம்மைகளும் சாக்லேட்களும், ஐஸ்கிரீம்களும்
வேறு லஞ்சமாய்..

பயந்து செய்தாயா?
பணிந்து செய்தாயா?
தெரியவில்லை...
உன் விருப்பம் இதுவென்று
உனக்கும் தெரியவில்லை..
எனக்கும் புரியவில்லை.

இதோ இன்றோடு அகவை
பதினேழு முடிந்து
பதினெட்டில் அடிவைக்கிறாய்...
இன்னமும் இருக்கின்றது
இலட்சம் எதிர்ப்பார்ப்புகள் ..
உன் மேல் ..

எனினும் புத்திதெளிந்த நான்
உன் மேல் எதையும்
இப்போது ஏற்றவில்லை.
உன் வாழ்க்கை உன் கையில்..

வாழ வந்த பூமியில்
வருத்தமின்றி
வாழ்ந்து மட்டும் செல்வோம்.
சாதனைகளில் இல்லை வாழ்வு..

இன்பம் தொலைத்து
இனிமை மறந்து
இன்னல்பட்டு..
சாதிக்கிறேன் என்று
உடனிருப்பவரை எல்லாம்
அழவைத்தல் இல்லை வாழ்க்கை...

நீயும் இன்பமாய் இருந்து
பிறரையும் இன்புறச் செய்.
இதுவே வாழ்க்கை..

வாழ்க வளமுடன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…
 

Thursday, February 28

மரக்கிளையில் தொங்கும் கூண்டு

பறவை பறந்து விட்டால்
கூண்டிற்கும் பொருள் இல்லை.-
கூண்டினைத் தாங்குவதாய் எண்ணியிருக்கும்
இதயத்திற்கும் பொருள் இல்லை.

பற்றற்ற பறவையாய்....
கூண்டு கீழே விழுவதற்குக்
காத்திருக்கும் பறவை காண்.
விழுந்தவுடன் பறப்பதற்குக்
காத்திருக்கும் பறவை காண்..
ஆனாலும்..
பற்றிருக்கும் பறவையாய்...
கூண்டு விழாமலிருக்க
வேண்டிநிற்கும் பறவை காண்.

பற்றுக்கும் பற்றறு நிலைக்கும்
இடையில் மரக்கிளையில்
ஊசலாடும் கூண்டாய்..
பெண்கள் நிலை இதுவென்று
பறைசாற்றும் பறவை காண்..
வாழ்க பெண்மை.

 

Saturday, February 9

இன்றைய சேதி...

கிளம்பும் போதே 'எங்கே செல்கிறாய்?'
என்னும் கேள்வியுடன்..
ஆசான் வள்ளுவனும்
அன்னை தமிழும்

நான் முறைத்தபடியே
'தங்களைக் காணத்தான்' என்றேன்.

அவர்களோ பலமாக நகைத்து விட்டு
"விரைவில் வந்து விடு " என்றனர்.

---------------------------------------
---------------------------------------
சென்ற இடத்தில்
வள்ளுவனையும் காணாது
தமிழன்னையையும் காணாது
வீடு திரும்ப...

வழிமேல் விழிவைத்து
இருவரும் வாசலில் அமர்ந்திருந்தனர்

Thursday, January 31

மனமும் மதமும்


மனம் கொடுத்தான் இறைவன்
மதம் படைத்தான் மனிதன்

மனம் கொடுத்த இறைவன்
அன்பும் சேர்த்தே  கொடுத்தான்.
மதம் படைத்த மனிதன்
அன்பை மனதைவிட்டே நீக்கினான்.

மதமா மனமா எனும்போது
மனதின்வழி சென்றோர்
கடவுளின் குழந்தைகள்.
மதத்தின்வழி சென்றோர்
மனிதனின் கழிவுகள்.

மனம் அழித்து மதம் பேண
சிவனும் சொல்லவில்லை.
எவரும் சொல்லவில்லை.

அன்பே கடவுள்.
அறிவாயா மனமே?
அறிவாயா மதமே?

Monday, December 17

என்னைப் பொறுத்தருள்வாய் சிவனே...


ஆதியும் அவனே
அந்தமும் அவனே
ஒளியும் அவனே
இருளும் அவனே

புகழும் அவனே
இகழ்வும் அவனே
மலையும் அவனே
மடுவும் அவனே

புன்னகையும் அவனே
கண்ணீரும் அவனே
சொல்லும் அவனே
செயலும் அவனே

பாசமும் அவனே
பந்தமும் அவனே
விருப்பும் அவனே
வெறுப்பும் அவனே

கல்லும் அவனே
புல்லும் அவனே
தீதும் அவனே
நன்றும் அவனே

புயலும் அவனே
தென்றலும் அவனே
தாயும் அவனே
தந்தையும் அவனே

ஈசனும் அவனே
ஈஸ்வரியும் அவனே
நானும் அவனே
நீயும் அவனே
எல்லாம் அவன்தான் எனில்..

இன்னும் எனக்கு
ஊனக்கண் எதற்கு?
ஆசைகள் எதற்கு?
எதிர்பார்ப்பு எதற்கு?
ஏமாற்றம் எதற்கு?

வெற்றிகள் எதற்கு?
தோல்விகள் எதற்கு?
உறவுகள் எதற்கு?
பகைகள் எதற்கு?

உறக்கம் எதற்கு?
விழிப்பு எதற்கு?
ஆட்சி எதற்கு?
அதிகாரம் எதற்கு?

யோகமும் தெரியாது
வேதமும் தெரியாது
கண்மூடி அமர்ந்து செய்யும்
தவமும் தெரியாது
ஏதும் தெரியாத நான்
எல்லாம் அறிந்த அவன்

எப்போதும் என்னைப் பொறுத்தருள்கிறான்..
இப்போதும் பொறுத்தருள்வாய்
என் சிவனே!!!
ஓம் நமசிவாய....
----கோகிலவாணி கார்த்திகேயன்---

Wednesday, October 24

முதுகாய் இருக்க முயற்சிப்போம்


மலைமேல் ஓர் குடில்..
மலையின் முதல் படியோ
சற்றே உயரமாய்..
மற்ற படிக்கட்டுக்கள்
ஏறுவதற்கு இலகுவாய்..

முதல் படி ஏற
முயற்சித்த மக்கள் ..
கீழே விழுந்த வண்ணம்.....

காட்சியைக் கவனித்தபடி இருந்த
ஒரு முதுகு
எவரையும்  கேட்காமல்
தானே  குனிந்தது.

முதுகில்  முதல் அடியும்
மலையின் படியில்
அடுத்த அடியும் வைத்தபடி
மக்கள் மலையேறினர்.
மலையேறும் போது
ஒருவருக்கொருவர் உதவியபடி.

குனிந்த முதுகுக்கு
குடிலுக்கு போக விருப்பம்..
இருந்தும்
குனிந்தபடி இருந்தது.

இடும்பை தாங்காது
இடுப்பை நிமிர்த்தலாம்
என்னும் போது
ஒரு கை மட்டும்
ஆதரவாய் அவ்வப்போது
நீவி விடும்.

நெடுநாள் ஆனது..
முதுகுக்கு ஓர் எண்ணம் உதித்தது.
குனிந்தே இருத்தலின்
குட்டியாய் படியொன்று
இருந்திட்டால்..
நீவ வந்த கையிடம்
வைத்தது இந்த வேண்டுகோள்.
குனிந்தபடியே படியும்
தயாரானது.

மக்களும் படிக்கு பழகிவிட
முதுகு நிமிர்நதது.
குனிந்தபடி இருந்ததால்
சிறிது ஓய்வெடுக்க

மேலேறிய மக்களோ
கீழ் இருந்த முதுகை
கீழ்மையாய் கண்டனர்.
நீவிய கையும் கூட சேர
தவித்த முதுகு
தாழ்ந்தது இன்னும்.

அப்போது நிகழ்ந்தது
அற்புதம்.
அன்புக்கரமொன்று
குடிலிலிருந்து நீண்டது.
குனிந்து முதுகை நிமிரச் சொன்னது.
நிமிர்ந்ததுதான் தெரியும் அடுத்த
நொடி குடிலில்..

மலையுயரம் கண்டு
மலைத்தபடி மக்கள்
இன்னும் ஏறியபடி.
குனிந்து முதுகு கீழிருப்பதாய்
இன்னும் எண்ணியபடி

மக்கள் குடிலடைய
மாற்றுவழி சிந்தித்தபடி
குடிலின் குளுமையில்
அருள்கரத்தின் ஆதரவில்
அமைதியாய் முதுகு....

 


Wednesday, October 17

#Me too - #என்னையும் தான்

இரு வார்த்தை தான் - ஆனால்
இந்தியாவையே அசைத்தபடி!!
சில ஆண்களின் சபலம்
அவர் புகழை
சிலுவையில் அறைந்தபடி!!
இருக்கட்டும்....

பெண்ணொருவர் சொன்னபடி ..
'மன உறுதி பெண்களிடம்
கண்ணீர்க் கதைகள் இல்லை.
மாறாய் அவனை(ரை)
அடித்து விரட்டிய
குறுஞ்செய்தி மாத்திரமே...'

எனக்கும் இதுவே கருத்து.
தொட்ட ஆணின் சட்டை இறுக்கும்
உறுதியான கைகள் இல்லைதான்
தொட்ட ஆண் தொட முடியா
உயரத்தில் உள்ளபோது..
அவன்(ர்) உயரத்திற்கு
ஏறிய பின் சட்டை பிடிக்கலாம்
என்பது முறைமையோ?

பெண்ணைச் சிறுமைப்படுத்தும்
ஆண்கள் எவரும் முத்துக்கள் அல்லர்.
அவர்புகழ்பாட வரவில்லை
எவரும் இங்கே..

கரடிகளைக் கண்டதும்
சிவபூசையையே
நிறுத்தும் போது,

புலிகளைக் கை காட்ட மட்டும்
காலநேரம் வேண்டுமா?

ஒவ்வோர் துறையாய்
உயர ஏறியபின்
கைகாட்டுதல் முறையா?

பலியாடாய் இருந்தும்
பழிவாங்கப்படுதல் பெண் மாத்திரமே...
முதல்முறை வாய்மூடினால்
முப்பது முறையும் வாய்மூட வேண்டுமே?
இனியாவது...

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்."

வள்ளுவன் சொன்னதுதான்.
செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாதவைகளால் நாமும் கெடுவோம்..
நம் புகழும் கெடும்..
 

Wednesday, May 2

வாழ்க்கைப் பாதை


பிரபஞ்சத்திடம் கேள்; கிடைக்கும் என்னும் த‍த்துவமே மிக தாமதமாகத்தான் எனக்கு தெரிந்து புரிபட்டது. கேட்டால் கிடைக்கும் என்பது மெய்தானா? சில கிடைத்த‍து. இருந்தும் சில சந்தேகங்கள். நமக்கு வேண்டியவற்றைத்தான் நாம் கேட்கிறோமா? இல்லை நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோமா? எந்தக் குழந்தையும் நல்ல உணவைக் கேட்பதை விட உடலுக்குத் தீது விளைவிக்கும் பிடித்த உணவைத்தானே கேட்கும். இப்படி நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் முன்பு குழந்தைகள்தானே... வேண்டியது கேளாமல் , பிடித்ததைக் கேட்கும் குழந்தைகள்தானே. பிரபஞ்சம் என்பதை உணரமுடியா குழந்தைகள்.

மாற்றி யோசித்தேன். நமக்காக நாம் யோசித்து, பிரபஞ்சத்திடம் கேட்டு, சில சமயம் நடந்து, பல சமயம் நடவாமல், அதற்கு ஊழினையும் விதியையும் காரணஞ் சொல்லி... ஏதோ ஒரு குழப்பம் என்னுள்.. அதற்குப் பதிலாக நமக்காக இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒன்றை நமக்காக ஏற்கனவே திட்டமிட்டு வைத்துவிட்டது. எப்போதும் போல நமது ஊன அறிவு அதனை நம்ப மறுக்கிறது. ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதன்படி நடக்கவும் மறுக்கிறது.

இங்கு பிரச்னை என்னவென்றால், அப்படி ஒரு பாதை இருப்பதை உணர ஞானம் வேண்டும். அந்த ஞானம் எல்லாருக்கும் இயல்பிலேயே வருவதில்லை. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பதினாறு பதினேழு வயதுகளில் ஒரு புள்ளியோ கோடோ நமக்கு எப்படியோ உணர்த்தப்படுகிறது. அதைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையின் பாதையைப் பற்றி அவர்கள் பயணத்தைத் தொடருகிறார்கள். இடை இடையே வரும் தடைகள் கூட இறைமையால் அனுப்பப்படும் யாரோ ஒருவர் மூலம் அதுவாக நீங்கும். நிரம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம். அந்தப் பிறவியை அன்பாக, அழகாக, ஆத்ம சாந்தியுடன் கடக்கின்றனர்.

ஒருவேளை நமக்கான பாதை உணர்த்தப்பட்ட பின்பும், குழந்தைகள் போல முரண்டு பிடித்து, நமக்கு பிடித்த வேறு ஒரு பாதையை நாமே தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பாதை விலகிய நம்மை,, மிகவும் கடினப்பட்டு போராடி, மீண்டும் நமக்காய் உணர்த்தப்பட்ட பாதையில் நம்மைக் கொண்டும் சேர்க்கும் பெரும் பொறுப்பை பிரபஞ்சம் எடுத்துக் கொள்கிறது. இப்போது, நாமாய் தேர்ந்தெடுத்த பாதையில், இடையூறுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கும். நாம்தான் நமக்கான, இறைவன் அனுப்பும் தூதரைக் கண்டறிய வேண்டும். அவர் நம்மைத் தேடி வர மாட்டார். தேடல் மிகுந்து மிகுந்து, இடையூறுகள் தாண்டி ஒரு வழியாக நம் பாதையை நாம் அடைவதற்குள், அனுபவங்கள் நிறைந்து வயதாகி விடுகிறோம். ஆனால் நமது சரியான பாதையை அடையும் போது பதின்களில் வழிமாறிய இடத்திலேயே காலமும் பிரபஞ்சமும் நம்மைச் சேர்க்கிறது. கிட்டத்தட்ட மீண்டு, வாழும் ஓர் அனுபவம். இங்கிருந்து சரியாக வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த அனுபவம் கூட அனைவருக்கும் வாய்ப்பதில்லை. கடைசி வரை தனக்கான பாதையைக் கண்டுபிடிக்காமலே வாழ்ந்து மடிந்தவர்களும் உண்டு. இப்போதைய என்னுடைய புரிதல் வாழ்வைப் பற்றி.

Thursday, March 29

பரீட்சை முடிந்தவுடன்......(?)

பெற்றோர் தொல்லையில் இருந்து
பெறுவதாய் இருந்த சுதந்திரம் இன்னும் 
பலநாள் கழித்தே வரும் என்ற
கவலைதான் முதலிடத்தில்.
 
தொலைக்காட்சி, கைப்பேசி எல்லாம்
கனவில் வந்து கைக்காட்டி செல்கின்றன,
 
தோழியருடன் ஊர் சுற்ற போட்ட
திட்டங்கள் எல்லாம் கிடப்பில்.
 
பாட்டி தாத்தாவைப் பார்க்க எடுத்த பயணச்சீட்டு
பல்லை இளிக்கின்றது என்னைக் கண்டு!!
 
இரண்டு தினம் முன் இந்தப் பரீட்சைக்காய்
இரவு முழுதும் கண்விழித்த
என்னை நேர்கொண்டு காண இயலா..
குற்ற உணர்வுடன்
அம்மாவும் அப்பாவும் ..
 
"விடம்மா.. கணிதம்தானே,
மீண்டும் எழுதலாம்"
ஆறுதல் நான் சொல்ல
ம்மா
அமைதியாய் நகர்ந்து செல்லும் தருணம்
இனி எப்போது கிடைக்கும்?
 
பத்தாம் வகுப்பு முடிந்தவுடன்
உலகமே நம் காலடியில்
விழுந்தது எண்ணத்தில் அடி.
 
என்ன புலம்பி என்ன புண்ணியம்?
எடு மீண்டும் கணிதப் புத்தகத்தை.
 
"இடுக்கண் வருங்கால் நகுக".
குறள் சொல்லிப் புன்னகைக்கிறார் வள்ளுவர் தாத்தா.
ஆம் தாத்தா..
சத்தமாக நகைக்கிறோம்..
மௌனமாகவே புலம்புகிறோம்.
நல்லவேளை
ஐந்தில் இல்லாமல் ஒன்றில் மட்டுமே
மீண்டும் சோதனை.