Friday, January 15

தைப்பொங்கல்.....





அமேசானில் ஆர்டர் செய்து வாங்கிய
அம்சமான சுடிதாரில்
ஃபளிக்கர் ஆஃபரில் கிடைத்த
புது குக்கர், கேஸ் அடுப்பில்
பாலிஷ் செய்யப்பட்ட
பச்சரிசி இட்டு
இனிப்பு நீக்கிய வெல்லமிட்டு
கொழுப்பு நீக்கிய பாலிட்டு
ஒரு ஸ்பூன் நெய் இட்டு
அரை முந்திரியிட்டு
செய்து இறக்கிய பொங்கலை

ஆதவன் வந்து அரைநாள் ஆன பின்பு

அவனுக்கும் கண்ணில் காட்டி
மீதி அரைநாளை
தொலைக்காட்சியில் தொலைத்து.....
நாகரீக நவநாகரீக பொங்கல் ஐயா
எம் வீட்டில்.....

மஞ்சு விரட்டு,
வாடிவாசல் மாடுவிரட்டு
இரண்டாம் வருடமாய்
இல்லையென்ற போதும்
என் சகோதரிகளின் கண்ணீர்
சூட்டில் வேகும் பொங்கல்
நிஜ பொங்கல் ஐயா.....

பொங்கலுக்கு வாழ்த்துவதா....
போராட்டத்துக்கு வாழ்த்துவதா.....
பழக்கதோஷம்....
பொங்கல்நல் வாழ்த்துகள் தோழியரே....


 

Sunday, January 3

சுட்டும் விழி



மான் விழி என்றாய் - உன்னைக் கண்டு மருளும் விழி என்றாய்
மீன்விழி என்றாய் – உன்னிலிருந்து மீளா விழி என்றாய்
அன்பு விழி என்றாய் - உன்மேல் பாயும் அம்பு விழி என்றாய்
மோக விழி என்றாய் - உன்மேல் தீரா தாக விழி என்றாய்
கருணைவிழி என்றாய் – உன்னைக்காணும் காதல் விழி என்றாய்.
சாந்த விழி என்றாய் - உன்னைக் கவர்ந்த காந்த விழி என்றாய்.

என் விழிகளை ஏதேதோ புகழ்ந்தாய் என்னென்னவோ பாடினாய்
பாடினவற்றுள் பிடித்தது எது எனக்கேட்டாய்....
என்னை நீ கேக்க எனை முந்தி பதில் உரைத்தது என் விழி...
என்புற அழகைப் புகழ்ந்த  என் தலைவா  -  நீ அறிவாயா?
அழகென்பது புறம் அல்ல, அகம்..
என்விழிகளின் அக அழகு - இதோ
விரிக்கிறேன் பார்..விவரிக்கிறேன் கேள்...

மூடிய விழிகளால் மெய்யுரைக்க முடியாதென்று
திறந்தே உறங்கும் சுட்டும் விழி நான்!!

சிறுமை கண்டு – உலகின் சிறுமை கண்டு சீற்றம் கொள்ளும் சுட்டும் விழி நான்!!

பேயும் இரங்கும் பெண்மைக்கு பங்கமென்றால்
தீயாய் சுடும் சுட்டும் விழி நான்!!

 உலகைக் காக்கும் உத்தமர்களின்
 உன்னத‍த்திற்கோர் கேடென்றால்
உழன்று கொதித்திடும் சுட்டும் விழி நான்!!

இன்றுவரை போராடி தன்னைக் காக்க
இனியும் போராடும் இயற்கைக்கோர் இன்னலென்றால்
இரைந்தொலிக்கும் சுட்டும் விழி நான்!!

 பூவாய் போற்றிடும் பிஞ்சுமனதில் நஞ்சு விதைக்கும்
வஞ்சகனாம் அரக்கர்தம்மை
வெந்திடச் செய்யும் சுட்டும் விழி நான்!!

களவும் கற்று மறக்கச் சொன்ன
எம் தமிழன்னைக்கு ஓர் இழுக்கென்றால்
எரிதழலாகும் சுட்டும் விழி நான்!!

Thursday, December 24

வெல்லற்கரியோர் என்று எவரும் இல்லை


வெல்லற்கரியோர் என்று எவரும் இல்லை


புவிதனில் நான் இறுமாந்திருந்தேன்..
பின்னால் வந்தவனும் அப்படியே - என்
முன்னால் நின்றவனும் அப்படியே...
இன்னும் எத்தனைபேர் வந்தாலும்
இருப்பை அகற்றும் எண்ணம் இல்லாமல்...

எத்தனை காதலர்கள் எத்தனை தம்பதியினர்.. என் மடியில்
எத்தனை சண்டை எத்தனை சமாதானம் என் கையில்
வார்த்தைகள் மட்டும் வேறு வேறாய்
உருவங்கள் மட்டும் புதிது புதிதாய்...

சிறிதாய் பெரிதாய் புல்லும் பூண்டுமாய்
சுற்றிலும் உயிர் நிறைந்ததாய்  நானிருந்தேன் பூரிப்புடன் வெல்லுதற்கரியதாய்....

என்னில் ஒர் துண்டு, இரும்புக்கரம் கொண்டு
என்னையே வீழ்த்த வந்தான்...
இறுமாந்திருந்தேன் நான்...
வெல்லுதற்கரியதாய்...

முதல்அடி விழுந்ததும் பதறின பறந்தன
முட்டையிட்டு குஞ்சு பொறித்த புள்ளினங்கள்..
இரண்டாம் அடிக்கு ஓடி ஒளிந்தன பொந்துவாழ் விலங்குகள் ...
மூன்றாம் அடியில் என் பச்சை நரம்பு
பார்த்தவுடன்தான் பொறி கலங்கியது எனக்கு..

வெல்லுதற்கரியவன் என்று எவரும் இங்கில்லை
எவரிருந்தாலும் வெல்வோன் ஒருவன் உண்டு..

புரிந்தேன் தத்துவமதை...
ஆனாலும் என்னை வென்று
என்னைப்போல் பலர் வென்று
இம்மானுடன் சாதித்தது என்ன?
வெல்லுதற்கரியவன் அவன் என்ற எண்ணமா?
அவனியே அவனுக்குத்தான் என்ற இறுமாப்பா?

என்னுடன் வெட்டப்பட்ட இயற்கையே
அவனை வெல்லும்  வலியவன்..
உணர்ந்தால் வாழ்வான்.
வாழும்போது உணர்வான்...
வெல்லற்கரியோர் என்று எவரும் இங்கில்லை...

Tuesday, September 22

எழுதப்படா கவிதை

வார்த்தைகள் வந்து விழுவதில்லை
எண்ணத்தைச் சொல்ல;
எண்ணங்கள் தோன்றுவதில்லை
எழுதலாம் எனும்போது;
எண்ணங்களும் வாரத்தைகளும்
கைகோர்க்கும் போது
காலம் கைவசம் இல்லை;
காலம் கனியும் நேரம்
எழுத நினைத்த கவிதையைத் தவிர
ஏதேதோ எழுதிச் செல்கிறேன்..




 

Wednesday, April 29

கவிஞனுக்கு ஒரு அஞ்சலி.



தமிழ்த்தாய்க்கு  தலைதாழ்ந்த முதல் வணக்கம்
அவையோருக்கு அன்பார்ந்த அடுத்த வணக்கம்
கவிச்சக்ரவர்த்திக்கு இதோ என் கவி வணக்கம்..

முத்தாய் வந்து  உதித்ததினாலா இல்லை
முத்தாய்ப்பாய் வந்து பிறந்ததினாலா
முத்து முத்தாய் படைப்பாய் என்பதினாலா
முத்தையா என்றழைத்தார் உன் அன்னை -நீயும்
மொத்தமாய் தந்துவிட்டாய் தமிழுக்கு உன்னை

கண்ணனுக்கு தாசன் நீ – அதனால்
கண்ணதாசன் ஆனாயோ
என எண்ணியிருந்தேன் – இல்லை
கண்களை வர்ணிப்பதில்
ஆசை கொண்டவன்
ஆதலால் கண்ணதாசன் ஆனாயாம்.

உன்னைப் பற்றி எழுதுவதாக எண்ணி எழுதினேன்
எழுதிய பின்பு பார்த்தேன் – முழுதும்
தமிழைப் பற்றி இருந்தது
தமிழைப் பற்றிய படியே இருந்தது.

கடவுள் இல்லை என்றாய் - பின்னம்
கடவுள் உண்டென்றாய்
நீ இல்லை என்ற போது
இயலாமையில் தவித்தான் இறைவன் - பின்பு
இன்பத்தில் திளைத்தான் அவனே
நீ இயற்றிய கவி கண்டு...

காதல் பாடினாய்
தத்துவம் பாடினாய்
தெய்வீகம் பாடினாய்
நகைச்சுவை பாடினாய் - நீ
மற்ற கவிகளை விட
மாறுபட்டது எங்ஙனம் தெரியுமா?
காதலிலே தெய்வீகம் சொன்னாய்
தெய்வீகத்திலே தத்துவம் தந்தாய்.
தத்துவத்தில் காதல் புதைத்தாய்
நகைச்சுவையில் சோகம் இழைத்தாய்
எல்லாவற்றிலும் தமிழையே நிறைத்தாய்.

ஆடு மேய்க்கும் கண்ணனோ
மாட்டுக் கொட்டில் ஜனித்த மன்னனோ
யேசுகாவியம் படைத்தாய்
இந்து மதத்தின் அர்த்தம் உரைத்தாய்
தனித்தனியே காவியம் படைத்து
இருவரும் ஒன்றென்றாய்... அதிலே
இறைத்தத்துவம் ஒளித்தாய்

வனவாசம் என்றாய்
மனவாசம் என்றாய்
சுயசரிதமும் தந்தாய்
கவிதைக்கு இலக்கணம் நீ என்பார் -அறியார்
இலக்கணம் மீறியவன் நீயென்று
உன் வாழ்க்கைக் கவிதையில்
உனக்கில்லா பழக்கமும் இல்லை
உனக்கு இல்லையென்ற வழக்கமும் இல்லை அது
தமிழோ இல்லை தர்மமோ ...

உன் வரவால்
திரையிசைப் பாடல்கள் காவியமாகின
காவியங்கள் பாடல்வரிகளாகின
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது என்பது வல்லவன் வகுத்த்தடா..
கேட்கும் போதெல்லாம் இன்னும்
கண்களில் நீர் கசிகின்றது

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்


ஆண்டவன் கட்டளை ஆறென நீ
உணர்ந்த ஆறினை
காதலிலே தோல்வியுற்ற காளை
பாடும் பாட்டிலே வைத்தாயே..
ஐயா தமிழ் மட்டுமல்ல தமிழகமே
உன்னிடம் கடன்பட்டது

உன் கோபமும் தாபமும்
ஊரறிந்ததே..
அரசியல் எதிரிகளைக் கடிந்தாலும்
தமிழ்பாடிக் கடிவாயாம்..
உன் தமிழுக்காய்
உன்னைப் புகழ்வாராம்
உன்னிடம் கடுஞ்சொல் பெற்றோரெல்லாம்..

எதையும் தாங்கும் இதயம் படைத்தோரும்
உன்னை இகழ்வதும் தமிழை இகழ்வதும்
ஒன்றெண்ணி வாய்மூடி நிற்பாராம்

தாளாத வெறுப்பு உன்மீது வந்தாலும்
தலையான தமிழ் கொண்டு – அவர்க்குநீ
நிலையான ஓர்பதில் அளித்து – உன்கவிக்கு
வளமான வாழ்த்தைப் பெற்றிடுவாய்..

இதோ இன்னும்.
நீ இறைவனடி சேர்ந்து
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்
உன் பாடலே எமக்கு தாலாட்டு
உன் பாடலே எமக்கு காதல் தூது
உன் பாடலே எமக்கு ஆறுதல்
உன் பாடலே எமக்கு ஆனந்தம்
உன் பாடலே எமக்கு சோககீதம்
ஐயா முத்தையா
தேவன் கோயிலில் மட்டுமா
எங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும்,
எண்ணங்களிலும் நீயே கவியோசை!!!.