Monday, September 24

புறம் வேண்டாம்

'சும்மா இரு' என்றது மனம்

'சும்மாயிருத்தலின்
தொலைக்காட்சி காணலாம்'
என்றது அறிவு.

தொலைக்காட்சியில் பெரிய முதலாளி இல்லம்  காணின்
இணையம் மேல் என்றது.

இணையத்தின் கைகளிடம்
கைதியாதலின் 
தோழியரிடம் கதைக்கலாம் என்றது.

முடித்தவுடன் தோன்றியது...
புறம் பேசுதலின்
சும்மா இருந்திருக்கலாம் என்று.. .

இதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன்;
சும்மா இரு என்றது மனம் ..

Monday, September 3

அறம்


நம்மிடம் கையேந்துபவர்களிடம்

கொடுக்க ஒன்றுமில்லா நிலையிலும்

கனிவுடனும் இனிமையுடனும் புன்னகையுடனும்

கனிந்த பார்வையை ஈதல் ஓர் அறச் செயல்.

 

இல்லாளை நோகாது

இயல்பாய் அன்பு செய்தலும் ஓர் அறச்செயல்.

கல்வி கேள்வி பொருள் என பெற்ற செல்வங்கள் இருந்தும்

கால் நிலத்தில் இருத்தல் ஓர் அறச்செயல்.

 

தேர்வெழுதும் சமயத்தில் தெரியாத கேள்விகளை

தெரிந்தவரைக் கேட்டு எழுதாது வருவதும்

ஒர் அறச்செயல்.

 

பொய் சொல்லும் இடத்தும்

 பொய் சொல்லாதிருத்தல் ஓர் அறச்செயல்.

இங்கொன்றும் அங்கொன்றும் பேசி

இல்லாததை உண்டு என்றும்

இருப்பதை இல்லை என்றும் பேசாதிருத்தல் ஓர் அறச்செயல்.

 

எதிராளியை அடக்கும் கணத்திலும்

‘இன்று போய் நாளை வா’ என்பது ஓர் அறச்செயல்.

பாற்கடல் கடைய பொங்கிய நீலத்தை

கண்டத்திலே அடக்கியதும் ஓர் அறச்செயல்.

 

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகள்

நம்மை அவமதிப்பதற்காகவோ - இல்லை

உண்மையில் உண்மையைத் தெரிந்து கொள்ளவோ?

ஐயமின்றி பயமின்றி பதிலளித்தலும் ஓர் அறச்செயல்.

அடுத்தவர்க்கு தொல்லை எனும் போது

ஆரவாரம் செய்யாது அடங்குதலும்

ஓர் அறச் செயலே.

 

இன்னும் எத்தனையோ..

இந்த அறச்செயல்களை செய்ய நமக்கு

கால நேரம் வேண்டுமா?

எப்போதும் மாசற்ற மனமிருக்க

மனதில் அறம் இருக்க

செய்யும் செயல் யாவும் அறச்செயலே!
 

Wednesday, May 2

வாழ்க்கைப் பாதை


‘பிரபஞ்சத்திடம் கேள்; கிடைக்கும்’ என்னும் த‍த்துவமே மிக தாமதமாகத்தான் எனக்கு தெரிந்து புரிபட்டது. கேட்டால் கிடைக்கும் என்பது மெய்தானா? சில கிடைத்த‍து. இருந்தும் சில சந்தேகங்கள். நமக்கு வேண்டியவற்றைத்தான் நாம் கேட்கிறோமா? இல்லை நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோமா? எந்தக் குழந்தையும் நல்ல உணவைக் கேட்பதை விட உடலுக்குத் தீது விளைவிக்கும் பிடித்த உணவைத்தானே கேட்கும். இப்படி நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் முன்பு குழந்தைகள்தானே... வேண்டியது கேளாமல் , பிடித்ததைக் கேட்கும் குழந்தைகள்தானே. பிரபஞ்சம் என்பதை உணரமுடியா குழந்தைகள்.

மாற்றி யோசித்தேன். நமக்காக நாம் யோசித்து, பிரபஞ்சத்திடம் கேட்டு, சில சமயம் நடந்து, பல சமயம் நடவாமல், அதற்கு ஊழினையும் விதியையும் காரணஞ் சொல்லி... ஏதோ ஒரு குழப்பம் என்னுள்.. அதற்குப் பதிலாக நமக்காக இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒன்றை நமக்காக ஏற்கனவே திட்டமிட்டு வைத்துவிட்டது. எப்போதும் போல நமது ஊன அறிவு அதனை நம்ப மறுக்கிறது. ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதன்படி நடக்கவும் மறுக்கிறது.

இங்கு பிரச்னை என்னவென்றால், அப்படி ஒரு பாதை இருப்பதை உணர ஞானம் வேண்டும். அந்த ஞானம் எல்லாருக்கும் இயல்பிலேயே வருவதில்லை. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பதினாறு பதினேழு வயதுகளில் ஒரு புள்ளியோ கோடோ நமக்கு எப்படியோ உணர்த்தப்படுகிறது. அதைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையின் பாதையைப் பற்றி அவர்கள் பயணத்தைத் தொடருகிறார்கள். இடை இடையே வரும் தடைகள் கூட இறைமையால் அனுப்பப்படும் யாரோ ஒருவர் மூலம் அதுவாக நீங்கும். நிரம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம். அந்தப் பிறவியை அன்பாக, அழகாக, ஆத்ம சாந்தியுடன் கடக்கின்றனர்.

ஒருவேளை நமக்கான பாதை உணர்த்தப்பட்ட பின்பும், குழந்தைகள் போல முரண்டு பிடித்து, நமக்கு பிடித்த வேறு ஒரு பாதையை நாமே தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பாதை விலகிய நம்மை,, மிகவும் கடினப்பட்டு போராடி, மீண்டும் நமக்காய் உணர்த்தப்பட்ட பாதையில் நம்மைக் கொண்டும் சேர்க்கும் பெரும் பொறுப்பை பிரபஞ்சம் எடுத்துக் கொள்கிறது. இப்போது, நாமாய் தேர்ந்தெடுத்த பாதையில், இடையூறுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கும். நாம்தான் நமக்கான, இறைவன் அனுப்பும் தூதரைக் கண்டறிய வேண்டும். அவர் நம்மைத் தேடி வர மாட்டார். தேடல் மிகுந்து மிகுந்து, இடையூறுகள் தாண்டி ஒரு வழியாக நம் பாதையை நாம் அடைவதற்குள், அனுபவங்கள் நிறைந்து வயதாகி விடுகிறோம். ஆனால் நமது சரியான பாதையை அடையும் போது பதின்களில் வழிமாறிய இடத்திலேயே காலமும் பிரபஞ்சமும் நம்மைச் சேர்க்கிறது. கிட்டத்தட்ட மீண்டு, வாழும் ஓர் அனுபவம். இங்கிருந்து சரியாக வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த அனுபவம் கூட அனைவருக்கும் வாய்ப்பதில்லை. கடைசி வரை தனக்கான பாதையைக் கண்டுபிடிக்காமலே வாழ்ந்து மடிந்தவர்களும் உண்டு. இப்போதைய என்னுடைய புரிதல் வாழ்வைப் பற்றி.

Thursday, March 29

பரீட்சை முடிந்தவுடன்......(?)

பெற்றோர் தொல்லையில் இருந்து
பெறுவதாய் இருந்த சுதந்திரம் இன்னும் 
பலநாள் கழித்தே வரும் என்ற
கவலைதான் முதலிடத்தில்.
 
தொலைக்காட்சி, கைப்பேசி எல்லாம்
கனவில் வந்து கைக்காட்டி செல்கின்றன,
 
தோழியருடன் ஊர் சுற்ற போட்ட
திட்டங்கள் எல்லாம் கிடப்பில்.
 
பாட்டி தாத்தாவைப் பார்க்க எடுத்த பயணச்சீட்டு
பல்லை இளிக்கின்றது என்னைக் கண்டு!!
 
இரண்டு தினம் முன் இந்தப் பரீட்சைக்காய்
இரவு முழுதும் கண்விழித்த
என்னை நேர்கொண்டு காண இயலா..
குற்ற உணர்வுடன்
அம்மாவும் அப்பாவும் ..
 
"விடம்மா.. கணிதம்தானே,
மீண்டும் எழுதலாம்"
ஆறுதல் நான் சொல்ல
அம்மா
அமைதியாய் நகர்ந்து செல்லும் தருணம்
இனி எப்போது கிடைக்கும்?
 
பத்தாம் வகுப்பு முடிந்தவுடன்
உலகமே நம் காலடியில்
விழுந்தது எண்ணத்தில் அடி.
 
என்ன புலம்பி என்ன புண்ணியம்?
எடு மீண்டும் கணிதப் புத்தகத்தை.
 
"இடுக்கண் வருங்கால் நகுக".
குறள் சொல்லிப் புன்னகைக்கிறார் வள்ளுவர் தாத்தா.
ஆம் தாத்தா..
சத்தமாக நகைக்கிறோம்..
மௌனமாகவே புலம்புகிறோம்.
நல்லவேளை
ஐந்தில் இல்லாமல் ஒன்றில் மட்டுமே
மீண்டும் சோதனை.
 
 

Saturday, March 3

என் பெண்ணிற்கு.....

"பத்தாம் வகுப்புத் தானே படிக்கிறாய்
பயம் எதற்கு உனக்கு?

மதிப்பெண் ஒன்றிரண்டு குறைந்தால் என்ன
மதிப்பிழக்க மாட்டாய் நீ.

வராத படிப்பை வாவாவெனஅழைத்து
வாழ மறந்து விடாதே..

பத்தில்  விட்டதை அடுத் தடுத்த
வகுப்பில் பிடித்து விடு.

எட்டாக் கனியல்ல வெற்றி எம்பினால்
எட்டிவிடும் உயரம் தான்.

பத்தோடு முடிவ தில்லை வாழ்க்கை."

என்றெல்லாம் உன்னிடம் சொல்லவே ஆசை..

என்னை விட அதிகம் உன்னைப் பற்றி
கவலை கொள்ளும் ஊருக்கு
என்ன கூறி தேற்றுவேன்?

உனக்காக இல்லாவிடினும்
எனக்காக இல்லாவிடினும்
உலகிற்காக எடுத்துவிடு
கௌரவமாய் மதிப்பெண்களை...

தேர்வு எழுதும் மாணவமணிகளின் பெற்றோர் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள்...