எல்லோரும் கடலில் முத்து எடுக்கும் போது நான் இப்போதுதான் கால் நனைக்கிறேன், முத்து எடுக்கும் நாளை எதிர் நோக்கி!
Thursday, April 29
குலதெய்வ வேண்டுதல்
குலதெய்வம் கோயிலுக்குகுட்டியா ஒரு மணி
வாங்கியாந்து கட்டணும்.
நேர்த்திக்கடன் நேர்ந்து
நேத்தோடு முழுசா
அது ஆச்சு ஆண்டு ஒன்று
நம்மசாமிதான் கோவிச்சிக்காது
ஆனாலும் மனசு அடிச்சுக்குது
ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து
ஒன்பது செலவு ஒரு மாசத்துல
குட்டியாடு கிடாவாகிறதுகுள்ள
மணி வாங்கி கட்டிடணும்
குட்டிப்பையன் எட்டி எட்டி
அடிக்கிறதை ஆசைதீர
பார்த்துடணும்
அம்மா தாயே..
கொஞ்சம் பொறுத்துக்கோ
கொரானா முடியட்டும்
கோயில் திறக்கட்டும்
குட்டிமணியொன்னு
உன் கோயிலில கட்டிடுறேன்.
Friday, April 16
புலம்பல்
Friday, April 9
வண்ணமுகம்...
பாதிமுகம் வண்ணமாய்
மீதிமுகம் உண்மையாய்
பாதிமுகம் காட்டாது என்னை.கண்மூடி இருப்பவளிடம் காதல் கேட்கிறாய் .
கண்திறப்பின் உண்மை சுடுமே!
வண்ணக்கோலம் கொண்டு
முகம் மறைப்பேன்..
எதைக் கொண்டு என் எண்ணம் மறைப்பேன்?
எனக்கான காதல் நீதானா?
இன்னும் புரியாமல்தான்
கண்மூடி வண்ணம் மூடி....
காத்திருக்கிறேன்
உன் தொடுகை
எனக்குணர்த்தும் என..
Thursday, March 25
நான் என்னும் நான்.*
இனிதே வாழ்பவள் இவள்.
நாளைக்காய் வாழாது
நாளும் வாழ்பவள் இவள்.
கூட்டுப்புழு வாழ்க்கை
கோடி கொடுப்பினும்
மீண்டு வாரா..என
மூடிக் கிடப்பவள் இவள்.
வண்ணத்துப்பூச்சி வாழ்வு
வரும்போது வாழ்வோம் என
வாழ்ந்து கடப்பவள் இவள்.
என்ன எழுத என
எண்ணியபடி
நேற்றைத் தொலைத்தவள் இவள்.
இன்றுதித்த எண்ணத்தை
இன்றே
எழுதி பகிர்ந்தனள் இவள்.
Thursday, March 18
அது அந்தக் காலம்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
கொங்கைமார் மங்கைகள் கொஞ்சிடும் மாந்தர்
சங்குகழல் வளையல் சலங்கைக் கால்கள்
குறிஞ்சிப்பூ காடுகள் புன்னைவனச் சோலைகள்
அது அந்தக் காலம்.
தேனாறும் தமிழாறும் தெவிட்டாது பருகிட
பொன்னாறும் மணியாறும் பொங்கியே ஓடிட
யானைகட்டி போரடித்து யாரிடத்தும் கையேந்தா
மனிதர் வாழ்ந்து மறைந்த மாநிலம்.
அது அந்தக் காலம்.
அன்பும் பண்பும் அருளும் அறிவும்
ஞானமும் பக்தியும் ஞானியும் சாதுவும்
தானமும் மோனமும் தர்மமும் ஈகையும்
எங்கும் நிறைந்து எங்கும் அமைதி
அது அந்தக் காலம்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கிறது மறுபுறம்
வாள்சிலம்பு கத்திகளரி வேல்கம்பு வெட்டரிவாள்
வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல்
போர் போர் போர் போர்
பிரிவாற்றல் பசலைநோய் பாலைத்திணை
அது அந்தக் காலம்.
சக்கரம் சுழன்று காலம் மாறுது ஆனாலும் அது அந்தக் காலம்
சேரன் சோழன் பாண்டிய பல்லவன்
ஒருசேர அடித்துக் கொண்டாலும்
ஒருசேர அடித்துக் கொன்றாலும்
கலை வளர்ந்தது கோயில் எழுந்தது
அது அந்தக் காலம்..
புயலாய் உள்நுழைந்து பார்த்தது கைப்பற்றி
புகையாய் மறைந்தனர் பகைவர் பலர்.
அலையாய் உள்வந்து அரசுகள் அடக்கி
சிலையாய் அமர்ந்தனர் சிவப்பாய் சிலர்
அது அந்தக் காலம்.
நானூறு ஆண்டுகளில் நாடே அடங்கி
நான்திசையும் எழுந்தது நெஞ்சுர புரட்சி
செத்தவர் ஊன்வழி செங்குருதி பாய்ந்து
செம்மை நிலம் செம்மை நிலமாவே ஆச்சு
அது அந்தக் காலம்.
விடுதலையுற்று குடியரசுபெற்று தேர்தல்நடந்து தலைவர்கள் வந்தாச்சு.
ஆண்டுகளும் கடந்தன எழுபத்துக்கு மேலே ..
அப்பத்தாவும் தாத்தனும் பேசுகையில் வந்துவந்து
போகிறது இடையிடையே பெருமூச்சுடன் அது அந்தக் காலம்
சக்கரம் சுழன்று காலம் மாறுது.
கணிப்பொறியியல் பாடம் போய்
கணிப்பொறியில்தான் பாடமே.
கணிப்பொறி கண்ணுக்குக் கெடுதல் என்றால்
என்மகன் உரைக்கின்றான்
"அம்மா அது அந்தக் காலம்." என்று .



