Thursday, May 26

விழியுடனான ஓர் உரையாடல் -இப்படிக்கு வண்ணத்துப்பூச்சி

மையுண்ட நீயும்

தேனுண்ட நானும் 

மயங்குவோம்..

மயக்குவோம்.


இன்று ஏனோ

உன் பார்வையில் 

ஒளியில்லை..

உயிரில்லை..


வருவேன் என்றவர்

வரவில்லையா?

வரவியலா இடம்

சென்று விட்டாரா?


பசலை பூத்த நீ

படபடக்க மறந்தாயா?

உன் நாண படபடப்பே

நமக்கான ஒப்புமை.


அதனைத் தொலைத்து

எதனைப் பெறுவாய்?

சென்றதினி மீளாது

சென்றவரும் மீளார்..


படபடப்பை மீட்டெடு

பசலை போக்கு

உயிர்கொள்

உணர்வு பெறு


எவரும் இல்லை

என எண்ணும் போது

நான் மீண்டும் வருவேன்.

உனை மீட்டுத் தருவேன்.

Tuesday, April 19

என்னுடைய பெரிய அண்ணன்.


ஆறே ஆண்டுகள் மூத்தவன்.
ஆனாலும் அப்பன்போல்
அறிவு தந்தவன்.

வாசித்தலையும் எழுதுதலையும்
மூச்சாகக் கொண்டவன்.
எனக்கும் மூச்சாக்கியவன்.

மனந்தளரும் போதெல்லாம்
என்னை உயரச் செய்யும்
இறைமையோடு உடன்நிற்பாள்.
என் தமிழன்னை.

அத்தமிழை என்னுள்ளும்
என்னை அத்தமிழிலும்
மூழ்கச் செய்தது
அவன்தந்த அறிவு.

இன்னமும் எனக்கு அவன்
அள்ளி அள்ளித் தருவது
அறிவைத்தான்.

ஒருபோதும் பிறர்நோக பேசாதவன்.
ஆனாலும் அவன் சொல்தாண்டி
எவரும் ஏதும் செய்ததில்லை.

ஏனோ பணம்ஈட்ட
விரும்பாதவன்.
அதனாலேயே பலரால்
விரும்பப்படாதவன்.

பணமிருந்தால் தலையில்..
இல்லையெனில் தரையினில்...
என்னும் உலகில்
அவனுடைய கூட்டத்தோடு
தனித்திருப்பவன்.

அண்ணனானால் என்ன
"வாழ்த்த வயதில்லை"
என்று சொல்லி வாழ்த்துவமே!
வாழிய பல்லாண்டு!!!

Monday, April 11

பின்னர் நான் யார்?

கண்கவர் ஆடையும் 

கையில் கோலும்

கொண்டவள்தான் தேவதையெனில்

பின்னர் நான்  யார்?


நைட்டியும் சேலையும்

அணிந்துகொண்டு

அழும் குழந்தையை

அமர்த்துவதில் தொடங்கி

அறுசுவை உணவை

ஆக்குவது வரை

மாயங்கள்பல செய்யும்

நான் யார்?


படிக்கும் குழந்தை முதல்

பேறுகால குழந்தை வரை

அழைக்கும் ஒரே தேவதை

நான் அல்லவா?


என்னை விட்டு இவர்கள்

பாடும் பெண் எவரோ?


ஓஓஓ அதுவும் நான்தான்!!!

குழந்தைகளின் பார்வையில் ....


அம்மா என்னும் தேவதை

Wednesday, March 23

மெய்வரிசை

வரிசையில்தான் 

நிற்பதுபோல் தோன்றும்.

வரிசையும் மாறிடக் கூடும்.


முன்னிற்பவர் பின்னேயும்

பின்னிற்பவர்

முன்னேயும்

மறைந்திடக்கூடும்.


வரிசை எண் தரப்படாத

வரிசையும் இதுதான்.

எவரும் முந்திச்செல்ல விரும்பா

வரிசையும் இதுதான்.


நமக்கான நேரம் 

வந்து விட்டது எனும்போது வராது.

வரவே வராது என்றாடும்போது

வந்து விடும்.


அடங்கவும் மாட்டோம்;

அறிந்திடவும் மாட்டோம்;

நேரம் வரும்போது

அழுதே புலம்புவோம்;


எத்தனை பிறவியெடுத்தென்ன

எதனையும் கற்காது

ஆட்டத்தைத் தொடருவோம். 

Thursday, February 24

அப்பாவின் சைக்கிள் 

பெற்ற ஐந்தில் 

 பெண்ணிரண்டும் கடைசியாய். 

பெருமையும் பெருமிதமும்

 பொங்கியது மனதில். 


 புகழ்பெற்ற பள்ளியில் 

என்னைச் சேர்த்தாச்சு. 

பேருந்தும் சரியல்ல. 

ஆட்டோவும் அப்போதில்லை.


 பள்ளியோ பதினெண் கிமீ தள்ளி

மிதிவண்டிதான் ஒரேவழி. 

காலை மாலை இருநேரமும்

தனியொரு ஆளாய் மிதித்தபடி.


 மூன்று வருடங்கழித்து 

என் தங்கையும் 

 அதே பள்ளியில். 

மூவரையும் சுமந்தபடி ஒருவருடம்.


 இப்போது நினைத்தாலும் 

மலைத்துப் போகிறேன். 

எப்படியென்று.


 லொடலொடவென்று சத்தமிட்டாலும் 

பிள்ளைகள் வளர்ந்து

 ஆளுக்கொரு வண்டி 

 வாங்கிய பின்னும். 


 இன்னும் மிதிவண்டி

 மிதித்தபடிதான் 

அப்பாவின் வாழ்க்கை. 


எனக்கும் மிதிவண்டியெனில்

அப்பாவின் வண்டி மட்டுமே 

நினைவிலுண்டு.