Sunday, March 13

டைரிகளால் நிரம்பிய அலமாரி

               டைரி எழுதுவது என்பதே ஒரு அழகான விஷயம். எல்லோர்க்கும் டைரி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது கை வந்த கலையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் யாருக்கும் டைரி எழுதும் பழக்கமே கிடையாது. சினிமாவின் மூலமும் புத்தகங்களின் மூலமும் எனக்கும் டைரி எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் டைரி எழுத ஆரம்பித்த பிறகு ‘நேத்தைக்கு வீட்டில லைட் எரிஞ்சுட்டே இருந்திச்சே?’ என்று கேட்கும் பெண்களிடம் ‘அதுவா டைரி எழுதாம என் பொண்ணுக்குத் தூக்கமே வராது’ என்று பெருமையடித்துக் கொள்ள எங்கம்மாவிற்கு இன்னொரு காரணம் கிடைத்திருந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு இனாமாக டைரி கிடைத்தது இல்லை. நான் முதன்முதலில் டைரி வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது. ஈகிள் புக் ஷாப், சியாமளா புத்தகக்கடை, அருணா புக் ஷாப் என ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி விலை கம்மியாக எங்கு கிடைக்கும் என தேடி அலைந்து கடைசியில் ஈகிள் புக் ஷாப்பிலேயே வாங்கினேன்.
அடுத்த வருடம் என்னவென்றால் புது டைரி வாங்கும் பொறுப்பை எனது இரண்டாவது அண்ணனிடம் கொடுத்திருந்தேன். அவன் எப்படி என்றால், என் தோழிக்கு அனுப்பச் சொல்லி நான் கொடுத்த கடிதத்தை, அவள் ஒரு வாரம் இல்லை பத்து நாட்கள் கழித்து என்னைப் பார்க்க வரும் போது, அவளிடம் நேரிலேயே ‘இந்தாம்மா போஸ்ட் பண்ணச் சொன்னா, மறந்துட்டேன்’ என்று கொடுக்கும் அளவு ஞாபகத்தில் புலி. புது வருடம் பிறந்து பத்தாம் தேதி வரை டைரி வந்த பாடில்லை. சரி அவனிடம் வேறு சொல்லிவிட்டேனே என்று நானாக வாங்கவும் இல்லை. தினமும் வீட்டில் ஒரே களேபரம் தான். ஒரு பெரிய சண்டைக்கு அப்புறமாக டைரி வந்து சேர்ந்தது.
என்னதான் இருந்தாலும் நாமாக பார்த்து வாங்கும் டைரி கொடுத்த சந்தோஷம் அன்பளிப்பாக வாங்கப்படும் டைரிகளில் இல்லை. பளபள அட்டைகளோடு பெரிது பெரிதாக வரும் டைரிகளைப் பார்த்தாலே டைரி எழுதவே தோணாது. (பின்னே, காசு கொடுத்து வாங்க வேண்டியது தானே என்கிறீர்களா? 5,6 என்று வரும் டைரிகளை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதாம்?)
இனி முதன்முதலாக வாங்கிய டைரி கதைக்கு வருவோம். புது டைரியில் முதற் பக்க தகவல்கள் எல்லாம் நிரப்பியாகி விட்டது, ஜனவரி முதல் நாள் அன்று ‘புத்தாண்டு வாழ்த்துகள் கோகிலா’ என்றும் எழுதியாகி விட்டது. அவ்வளவுதான், வேறு ஒன்றுமே தோன்றவில்லை. புத்தாண்டு அன்று விடுமுறை என்பதால் வீட்டை விட்டு வெளியேவும் செல்லவில்லை. எழுத ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. யோசித்து யோசித்து, சரி புது வருட ஆசைகளையாவது எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்; யாரிடமும் கோப்ப்படக்கூடாது என்பதில் ஆரம்பித்து பெரிய மாற்றம் ஏதுமின்றி அதே ஆசைகள் தான், என்ன பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லே, அதற்கு பதிலாக இப்போதெல்லாம் வெயிட் குறைய வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறேன். அதன் பின் வந்த நாட்களிலும் அம்மா என்னைத் திட்டினார்கள்; எனக்கும் என் தங்கைக்கும் பயங்கர சண்டை என முதலாம் பானிபட் போர் அளவுக்கு எழுதியிருப்பேன்.  எல்லாம் இப்போ படித்தாலும் சிரிப்புதான் வருகிறது.
அப்புறம் ஒருவழியாக எனக்கும் டைரி எழுத வந்தது. என்ன கொடுமை என்றால், யாரும் நம்ம டைரியை படித்து விடுவார்களோ? என்ற பயத்தோடே நிறைய நாட்கள் எழுதினேன். பள்ளியில் மிஸ்கிட்ட திட்டு வாங்கின விஷயத்தை எல்லாம் எழுதிவிட்டு உடனே யாருக்கும் தெரியாத மாதிரி அழித்து விடுவேன். பஸ்ஸில் நடக்கும் கலாட்டாவை எல்லாம் நான் டைரியில் எழுதினதே இல்லையே! அதன்பின் டைரி எழுதுவதே அடுத்தவர் படிப்பதற்காக எழுதுவதுதான் என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? எல்லாப் படங்களிலும், கதைகளிலும் யாருக்காவது டைரி எழுதும் பழக்கம் இருந்தால் ஒன்று அவர்கள் சாக வேண்டும் இல்லை யாருக்காவாவது தியாகம் செய்து விட்டு யாருக்காக தியாகம் செய்கிறார்களோ அவர்கள் கையில் கிடைக்குமாறு டைரியை மறந்து!!! வைத்து விட்டு எங்காவது கண்காணா இடத்துக்கு ஓடி விட வேண்டும். அதாவது ஒன்று விமான நிலையத்துக்கு இல்லை, ரயில் நிலையத்துக்கு.
ஒரு சமயம் என் தம்பி (சித்தி மகன்) என் டைரியைப் படித்து விட்டு இது எதற்கு இப்படி எழுதியிருக்கிறாய்? அது ஏன் அப்படி எழுதியிருக்கிறாய் என்று குடைந்து எடுத்து விட்டான். அதன்பின் நிறைய நாட்கள் எழுதுவதையே விட்டு விட்டேன். இனியாவது அடுத்தவர் டைரியைப் படிப்பவர்கள் ரகசியமாகப் படிக்கவும், அப்போது தான் உங்களுக்கு நிறைய உண்மைகள் தெரிய வரும். கல்லூரி படிக்கும் போது விடுதி வாழ்க்கை என்பதால் நிறைய அனுபவங்கள் என் டைரியில் பொறிக்கப் பட்டிருக்கும். ஒரு வருட டைரியைப் படித்தாலே திரும்பவும் கல்லூரி வாழ்க்கைக்கே சென்று வந்த உணர்வு வரும். முன்பெல்லாம் டைரி நிரம்பியிருக்கும், மனது காலியாக இருக்கும், இப்போது டைரி காலியாக இருக்கிறது, மனது நிரம்பி வழிகிறது. (அட அட அட!!!)
            கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நானும் டைரி எழுதுகிறேன் என்ற பேர். முதற்பக்கத் தகவல்கள் எழுதி ‘புத்தாண்டு வாழ்த்துகள் கோகிலா’ என்று எழுதுவதோடு சரி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் பற்றி அதுவும் சிறு குறிப்புகள் வரைந்து இருப்பேன். அதோடு சரி. எழுதவும் தோன்றாமல், ‘டைரி எழுதாமல் இருக்கலாம்’ என்றும் தோன்றாமல் எனது டைரிகளால்  நிறைந்து இருக்கிறது அலமாரி.