Tuesday, March 24

அம்மாவாகிய நான்...

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்..."
மறைந்து கொண்டது.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க..."
தலையிலடித்துக் கொண்டது.

"இனிய உளவாக இன்னாத  கூறல்..."
வாய் மூடிக் கொண்டது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல்..."
தன்னையே ஒறுத்துக் கொண்டது.

#குழந்தைகளிடம் கத்திய கத்தலில் கற்ற
குறள்கள் எல்லாம் தெறித்தோடின...

ஆனால் எப்போதும் போல்
"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி.." மட்டும்
வாரியணைத்துக் கொண்டது.

கற்கத் தொடங்கினேன் மீண்டும்
"கடவுள் வாழ்த்திலிருந்து..."

Sunday, March 22

எண்ணங்கள்

பகலில் தூங்கா
துறுதுறு குழந்தைகள் 
பகல்தூக்கம் கொள்ளும் போதும்
ஆடி ஓடிக் களைத்து
இயல்பாய் தும்மும் போதும்
பதறும் பெற்றோரின்
உள்ளம் அறிவீரா?

உயிரினங்களை நிம்மதியாக
வாழ விடாது 
எத்தனை கிருமிகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்.

மனிதத்தை மறக்கடிக்க
எத்தனை வழிமுறைகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்..

அனைத்தையும் மனிதனின்
எதிர்ப்பாற்றல் எதிர்த்து நிற்கும்..

இல்லையெனில் என்றோ
அதிகாரம் வென்றிருக்குமே
இன்றுவரை வரலாற்றில்
மனிதன்தானே வென்றிருக்கிறான்.

*"அரசியல் பிழைத்தோருக்கு
*அறமே கூற்றாகும்."*
அறியாது செய்தவனுக்கு இக்கதி..
அறிந்து செய்தவர் கதியறிந்தும்
தொடர்ந்து செய்யும்
நீவிரும் மனிதன்தானே!

இறைமை தந்த அறிவை
அப்படியே வைத்திருக்கும்
அறிவிலி பரவாயில்லை..
இப்படி பயன்படுத்தி
மக்களைக் கொல்லும்
அறிவாளிகளை விட..

பூவுலகில் வாழும்
நல்உள்ளங்களைப் பொருட்டே
இயற்கை உம்மை மன்னிக்கிறது..
மறந்து விடாதீர்...

Saturday, March 21

உண்மை வெளிப்படட்டும்..

கலிலியோவை கல்லால்
அடித்த உலகம் இது.

அறிவியல் மட்டுமே உலகம்
என்று அடம்பிடிப்போர்
உலகம் இது.

இறைமை என்றால்
என்னவென்று புரியாதோர்
உலகம் இது.

எப்போதும் நடிப்போரைக்
கொண்டாடும் உலகம் இது.

உண்மையாளர்களை
அடைத்து வைக்கும் உலகம் இது

உண்மை தெரிந்த பின்பு
உச் கொட்டும் உலகம் இது

பொறுத்திருப்போம்....
உண்மை தெரியும் வரை
ஊரார் தெளியும் வரை

எது கிருமி எவர் கிருமி என்று...