Thursday, May 13

படமும் பாடமும்

.

செங்கல் முட்டுக் கொடுக்கும் கருங்காலி கட்டிலும் 

 சேவல் கொத்தித் திரியும் செம்மைத் தரையும் 

 இருவர் படுத்திடும் மெத்தையில் உறங்கிடும் எண்மரும் 

 இன்னும் இருவருமாய் உருளும் பூனையும் நாயும் 

 கருமையாய் இராது பழுப்பாய் பொழிந்திடும் மேகமும்

 கூரைபோல இருக்கும் மழைநீர் ஒழுகும் கூரையும் 

 குடைக்குள் ஒழுகாது வெளியே ஒழுகிடும் தண்ணீரும் 

 வேறுவேறு கனவு என்றாலும் புன்னகைக்கும் இதழ்களும்

 இதுதான் வாழ்வென்று சொல்லாமல் சொல்கின்றன.

 அன்புள்ள அனைவரையும் புன்னகைக்க வைக்கின்றன.



Wednesday, May 12

வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்

 தமிழ் பிடிக்கும்

 திராவிடம் பிடிக்கும்

 பெண்ணுரிமை பிடிக்கும் 

 முருகன் பிடிக்கும் 

சிவன் பிடிக்கும் 

அல்லாஹ் பிடிக்கும் 

 கிறித்து பிடிக்கும் 

வள்ளுவர் பிடிக்கும் 

பெரியார் பிடிக்கும் 

பாரதியார் பிடிக்கும் 

 இளையராஜா பிடிக்கும்

 பாலகுமாரன் பிடிக்கும்

 கண்ணதாசன் பிடிக்கும் 

ரஜினிகாந்த் பிடிக்கும் 

 தோனி பிடிக்கும் 

 குடும்பம் பிடிக்கும் 

 சில உறவுகள் பிடிக்கும் 

சில நட்புகள் பிடிக்கும் 

கடல் பிடிக்கும் 

மலை பிடிக்கும் 

 அருவி பிடிக்கும் 

காஃபி பிடிக்கும் 

 நூல்கள் பிடிக்கும் 

ஊர்சுற்றல் பிடிக்கும் 


 பிடிப்பதற்கு இத்தனையும்; 

இதற்கு மேலும் இருக்கும் போது 

வாழ்வதற்கு வாழ்நாள் 

மட்டும் போதுமே...


Thursday, May 6

தோழிவிடு தூது



ஒற்றைக்கால் கொக்கின் தவம
ஒண்டொடி நழுவும் முன்கை நங்கை
ஒண்மையிழந்த கண்கள் பரவும் பசலை
ஒறுத்தது போதும் தலைவா வாஅவள்முன்!

குளமும் தென்றலும் அவள்துயர் ஆற்றா
குலமகள் கவலை குவளை ஆற்றுமோ
களத்தில் நின்கதி இவள்மனம் அறியுமோ
வெள்ளைப்புறா ஒன்றை விரைந்து அனுப்பிவை!

தோழியர்  எம்மிடமும் ஒன்றும் சொல்வதில்லை
நாழிகை கழிந்தும் நகராது நிற்கிறாள்
பாவியவள் பண்ணிய பாவமென்ன பகர்வாய்
தாவிவந்தே அவள்தாகம் தணித்திடுவாய்  இன்றே!

அன்னையவள் சேதி அறிந்திடும் முன்னே
கன்னியவள் நிலை குலைந்திடும் முன்னே
மீன்கிட்டி வெண்கொக்கு பறந்திடும் முன்னே
வான்வழியாய் விரைந்து வண்ணமாய் வந்திடு!

பிரிவாற்றாமை


 எனக்கென்னவோ இவள்

காதலனுக்காய்
காத்திருப்பதாய் தெரியவில்லை. 

கொக்கு பிடிக்கும் மீனுக்காய் காத்திருக்கிறாளோ..

சனி ஞாயிறு
கடைகள் விடுமுறையாம்.
வெள்ளியன்றும் பன்னிரண்டு மணிக்கே கடைகள் மூடப்பட்டுவிடுமாம்.


நாட்டு நிலைமையில்
காதலன் வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?

சாப்பாடுதானே முக்கியம்..