Wednesday, April 29

கவிஞனுக்கு ஒரு அஞ்சலி.



தமிழ்த்தாய்க்கு  தலைதாழ்ந்த முதல் வணக்கம்
அவையோருக்கு அன்பார்ந்த அடுத்த வணக்கம்
கவிச்சக்ரவர்த்திக்கு இதோ என் கவி வணக்கம்..

முத்தாய் வந்து  உதித்ததினாலா இல்லை
முத்தாய்ப்பாய் வந்து பிறந்ததினாலா
முத்து முத்தாய் படைப்பாய் என்பதினாலா
முத்தையா என்றழைத்தார் உன் அன்னை -நீயும்
மொத்தமாய் தந்துவிட்டாய் தமிழுக்கு உன்னை

கண்ணனுக்கு தாசன் நீ – அதனால்
கண்ணதாசன் ஆனாயோ
என எண்ணியிருந்தேன் – இல்லை
கண்களை வர்ணிப்பதில்
ஆசை கொண்டவன்
ஆதலால் கண்ணதாசன் ஆனாயாம்.

உன்னைப் பற்றி எழுதுவதாக எண்ணி எழுதினேன்
எழுதிய பின்பு பார்த்தேன் – முழுதும்
தமிழைப் பற்றி இருந்தது
தமிழைப் பற்றிய படியே இருந்தது.

கடவுள் இல்லை என்றாய் - பின்னம்
கடவுள் உண்டென்றாய்
நீ இல்லை என்ற போது
இயலாமையில் தவித்தான் இறைவன் - பின்பு
இன்பத்தில் திளைத்தான் அவனே
நீ இயற்றிய கவி கண்டு...

காதல் பாடினாய்
தத்துவம் பாடினாய்
தெய்வீகம் பாடினாய்
நகைச்சுவை பாடினாய் - நீ
மற்ற கவிகளை விட
மாறுபட்டது எங்ஙனம் தெரியுமா?
காதலிலே தெய்வீகம் சொன்னாய்
தெய்வீகத்திலே தத்துவம் தந்தாய்.
தத்துவத்தில் காதல் புதைத்தாய்
நகைச்சுவையில் சோகம் இழைத்தாய்
எல்லாவற்றிலும் தமிழையே நிறைத்தாய்.

ஆடு மேய்க்கும் கண்ணனோ
மாட்டுக் கொட்டில் ஜனித்த மன்னனோ
யேசுகாவியம் படைத்தாய்
இந்து மதத்தின் அர்த்தம் உரைத்தாய்
தனித்தனியே காவியம் படைத்து
இருவரும் ஒன்றென்றாய்... அதிலே
இறைத்தத்துவம் ஒளித்தாய்

வனவாசம் என்றாய்
மனவாசம் என்றாய்
சுயசரிதமும் தந்தாய்
கவிதைக்கு இலக்கணம் நீ என்பார் -அறியார்
இலக்கணம் மீறியவன் நீயென்று
உன் வாழ்க்கைக் கவிதையில்
உனக்கில்லா பழக்கமும் இல்லை
உனக்கு இல்லையென்ற வழக்கமும் இல்லை அது
தமிழோ இல்லை தர்மமோ ...

உன் வரவால்
திரையிசைப் பாடல்கள் காவியமாகின
காவியங்கள் பாடல்வரிகளாகின
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது என்பது வல்லவன் வகுத்த்தடா..
கேட்கும் போதெல்லாம் இன்னும்
கண்களில் நீர் கசிகின்றது

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்


ஆண்டவன் கட்டளை ஆறென நீ
உணர்ந்த ஆறினை
காதலிலே தோல்வியுற்ற காளை
பாடும் பாட்டிலே வைத்தாயே..
ஐயா தமிழ் மட்டுமல்ல தமிழகமே
உன்னிடம் கடன்பட்டது

உன் கோபமும் தாபமும்
ஊரறிந்ததே..
அரசியல் எதிரிகளைக் கடிந்தாலும்
தமிழ்பாடிக் கடிவாயாம்..
உன் தமிழுக்காய்
உன்னைப் புகழ்வாராம்
உன்னிடம் கடுஞ்சொல் பெற்றோரெல்லாம்..

எதையும் தாங்கும் இதயம் படைத்தோரும்
உன்னை இகழ்வதும் தமிழை இகழ்வதும்
ஒன்றெண்ணி வாய்மூடி நிற்பாராம்

தாளாத வெறுப்பு உன்மீது வந்தாலும்
தலையான தமிழ் கொண்டு – அவர்க்குநீ
நிலையான ஓர்பதில் அளித்து – உன்கவிக்கு
வளமான வாழ்த்தைப் பெற்றிடுவாய்..

இதோ இன்னும்.
நீ இறைவனடி சேர்ந்து
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்
உன் பாடலே எமக்கு தாலாட்டு
உன் பாடலே எமக்கு காதல் தூது
உன் பாடலே எமக்கு ஆறுதல்
உன் பாடலே எமக்கு ஆனந்தம்
உன் பாடலே எமக்கு சோககீதம்
ஐயா முத்தையா
தேவன் கோயிலில் மட்டுமா
எங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும்,
எண்ணங்களிலும் நீயே கவியோசை!!!.