Thursday, March 25

நான் என்னும் நான்.*



இன்று கிடைப்பன கொண்டு
இனிதே வாழ்பவள் இவள்.

நாளைக்காய் வாழாது
நாளும் வாழ்பவள் இவள்.

கூட்டுப்புழு வாழ்க்கை
கோடி கொடுப்பினும்
மீண்டு வாரா..என
மூடிக் கிடப்பவள் இவள்.

வண்ணத்துப்பூச்சி வாழ்வு
வரும்போது வாழ்வோம் என
வாழ்ந்து கடப்பவள் இவள்.

என்ன எழுத என
எண்ணியபடி
நேற்றைத் தொலைத்தவள் இவள்.

இன்றுதித்த எண்ணத்தை
இன்றே
எழுதி பகிர்ந்தனள் இவள்.

Thursday, March 18

அது அந்தக் காலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 

கொங்கைமார் மங்கைகள் கொஞ்சிடும் மாந்தர் 

சங்குகழல் வளையல் சலங்கைக் கால்கள் 

குறிஞ்சிப்பூ காடுகள் புன்னைவனச் சோலைகள் 

அது அந்தக் காலம். 


 தேனாறும் தமிழாறும் தெவிட்டாது பருகிட 

பொன்னாறும் மணியாறும் பொங்கியே ஓடிட 

யானைகட்டி போரடித்து யாரிடத்தும் கையேந்தா 

மனிதர் வாழ்ந்து மறைந்த மாநிலம். 

அது அந்தக் காலம். 


 அன்பும் பண்பும் அருளும் அறிவும் 

ஞானமும் பக்தியும் ஞானியும் சாதுவும் 

தானமும் மோனமும் தர்மமும் ஈகையும் 

 எங்கும் நிறைந்து எங்கும் அமைதி

 அது அந்தக் காலம். 


 இதெல்லாம் ஒருபுறம் இருக்கிறது மறுபுறம் 

வாள்சிலம்பு கத்திகளரி வேல்கம்பு வெட்டரிவாள் 

வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் 

போர் போர் போர் போர் 

 பிரிவாற்றல் பசலைநோய் பாலைத்திணை 

 அது அந்தக் காலம். 


 சக்கரம் சுழன்று காலம் மாறுது ஆனாலும் அது அந்தக் காலம்

 சேரன் சோழன் பாண்டிய பல்லவன் 

 ஒருசேர அடித்துக் கொண்டாலும்

 ஒருசேர அடித்துக் கொன்றாலும்

 கலை வளர்ந்தது கோயில் எழுந்தது 

அது அந்தக் காலம்.. 


 புயலாய் உள்நுழைந்து பார்த்தது கைப்பற்றி 

புகையாய் மறைந்தனர் பகைவர் பலர். 

 அலையாய் உள்வந்து அரசுகள் அடக்கி 

சிலையாய் அமர்ந்தனர் சிவப்பாய் சிலர் 

அது அந்தக் காலம். 


 நானூறு ஆண்டுகளில் நாடே அடங்கி 

நான்திசையும் எழுந்தது நெஞ்சுர புரட்சி 

செத்தவர் ஊன்வழி செங்குருதி பாய்ந்து 

 செம்மை நிலம் செம்மை நிலமாவே ஆச்சு

 அது அந்தக் காலம்.


 விடுதலையுற்று குடியரசுபெற்று தேர்தல்நடந்து தலைவர்கள் வந்தாச்சு. 

ஆண்டுகளும் கடந்தன எழுபத்துக்கு மேலே .. 

அப்பத்தாவும் தாத்தனும் பேசுகையில் வந்துவந்து 

போகிறது இடையிடையே பெருமூச்சுடன் அது அந்தக் காலம்


 சக்கரம் சுழன்று காலம் மாறுது. 

கணிப்பொறியியல் பாடம் போய்

 கணிப்பொறியில்தான் பாடமே. 

கணிப்பொறி கண்ணுக்குக் கெடுதல் என்றால் 

என்மகன் உரைக்கின்றான்

 "அம்மா அது அந்தக் காலம்." என்று .

Friday, March 12

நூல்கள்


பக்கமாய் பக்கமாய் நூற்று

புத்தகமாய் என்னில் வருவாய்.

கண்மூடி கண்ணீர் விட்டபடி ...
விழிகள் திறந்து வியந்துபடி...
வாய்விட்டுச் சிரித்து வாசித்தபடி...
உதடுமடித்து வெட்கத்துடன் புன்னகைத்தபடி..

இல்லாத மன்னன்மேல் பகைகொண்டபடி...
மன்னனின் தோழனிடம் நட்புகொண்டபடி...
இன்னும் வந்தியத்தேவனைத் தேடியபடி...

பாலகுமாரன் நாயகனிடம்
மனந்தொலைத்தபடி...
அனுராதா நாயகியிடம்
அழுத்தமாய் பேசியபடி...

இராஜேஷ்குமார் கதைகளில் இரத்தம் துடைத்தபடி...
கணேஷ்-வசந்தை உண்மை என்று நம்பியபடி...

லண்டன் தெருக்களில்
ஹார்பாட்டரை நினைத்தபடி...
சேட்டன்பகத் கதைகளை
சீச்சீ சொன்னபடி...

காந்தியடிகளின் சுயசரிதையில் கரைந்தபடி...
கலாமின் அக்கினிச்சிறகுகளில் தீப்பொறியாய் திரிந்தபடி...

கட்டுரைப்புத்தகங்களில்
உண்மைகளின் சூட்டினை உணர்ந்தபடி....

திருக்குறள்  கற்று
அறம் அறம் என அனத்தியபடி...
சங்கநூல் கற்றும் உலகளவு உள்ளதே என்று புலம்பியபடி...

எப்போதும் ஏதேனும் வாசிப்பா என
வீட்டில் திட்டுக்கள் வாங்கியபடி....

இன்னமும் நான் வாழ்வது
உன்னினம் மொத்தமும்
என்னில் புதைக்கவே..
நீயில்லா உலகெனில்
உயிர்ப்பில்லா உடல்நான்..

Monday, March 8

மகளிர் நாள் வாழ்த்துகள்

 பெண் இல்லாத ஊரிலே

கொடிதான் பூ பூப்பதில்லை.
அவ்வளவுதான் உலகம்.
அவள்தான் உலகம்.

ஆணுக்குக் கீழ்தான்
என்றடக்கி வைப்பினும்
அமைதியாய் இருப்பவள்
அடங்கியே இருப்பவள்

நிமிர்ந்து நின்று அவள்
நேர்கொண்ட பார்வை பார்ப்பின்
திமிரானவள் என
திட்டுவாங்கித் திரிபவள்.

பொறியியல் என்ன
மருத்துவம் என்ன
கணிப்பொறி என்ன
கணிதவியல் என்ன

ஆய்ந்தறிந்து கற்றாலும்
அறிவுரை கூறவும்
கருத்தேதும் சொல்லவும்
உரிமையொன்று இல்லாதவள்.

உற்ற தோழி துன்புறினும்
உதவிட இயலாது
உடனிருப்போர் உத்தரவை
உற்றுப் பார்த்தபடி நிற்பவள்.

அழுகையில் சிரிக்கவும்
சிரிக்கையில் சினக்கவும்
சினக்கையில் சிணுங்கவும்
சிணுங்கையில் அழுகவும்

எல்லாம் தெரிந்தும் ஏதுமறியாதவள்
எல்லாம் இருந்தும் ஏதுமற்றவள்.
உணர்ச்சிகளில் கூட
முரண்ப்ட்டவளாய்..

Big boss பாலா போல
வைச்ச்ங்கோங்க..
*உலக மகளிர் நாள் வாழ்த்துகள்*.

Saturday, March 6

இதயமும் மூளையும், மனமும் அறிவும்



 

 இதயமும் மூளையும்

உடல் உறுப்புகள்.
மனமும் அறிவும்
உடல் உறுப்புகளா?

மனம் என்றால் இதயம் என்றும்
அறிவு என்றால் மூளை என்றும்
கற்பிதம் செய்து கொண்டீர்
கற்றறிந்த மானிடரே..

இருவரில் ஒருவர்
செயலிழப்பின
நீங்கள் நீங்களாக
இருத்தல் இயலாது.

மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.
மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.

மனம் மாசற இருப்பின்
அறிவு அமைதியாய் இருக்கும்.
அறிவு அமைதியாய் இருப்பின்
மனம் மொழியற்று இருக்கும்.

அகந்தையில் அறிவு துள்ள
மனம் புலம்பித் தள்ளும்.
புலன்போன போக்கில் மனம் மயங்க
அறிவு ஆர்ப்பாட்டம் செய்யும்.

மனம் போன போக்கில்
வாழ்வார் சித்தர்.
அறிவின்படி மட்டும்
வாழ்வார் அறிவுடையோர்.

இரண்டுடனும் வாழ்வார்
இடைப்பட்ட மனிதர்.
இருந்தும் இரண்டும்
இணையக் காணார்.

இரண்டும் இணைவது
இறையருள் என்பார்.
இறையருள் உணர்ந்தார்.
இணையக் காண்பார்.

அறிவற்று வாழ்வாரை
ஏசும் உலகம்
மனமற்று வாழ்வாரை
மதிப்பதுகூட இல்லை.

முட்டாளாய் என்னை
ஏசினாலும் ஏற்பேன்.
கல்மனம் என்றாலோ
கரைந்தே விடுவேன் காற்றில் நானே..