கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
கொங்கைமார் மங்கைகள் கொஞ்சிடும் மாந்தர்
சங்குகழல் வளையல் சலங்கைக் கால்கள்
குறிஞ்சிப்பூ காடுகள் புன்னைவனச் சோலைகள்
அது அந்தக் காலம்.
தேனாறும் தமிழாறும் தெவிட்டாது பருகிட
பொன்னாறும் மணியாறும் பொங்கியே ஓடிட
யானைகட்டி போரடித்து யாரிடத்தும் கையேந்தா
மனிதர் வாழ்ந்து மறைந்த மாநிலம்.
அது அந்தக் காலம்.
அன்பும் பண்பும் அருளும் அறிவும்
ஞானமும் பக்தியும் ஞானியும் சாதுவும்
தானமும் மோனமும் தர்மமும் ஈகையும்
எங்கும் நிறைந்து எங்கும் அமைதி
அது அந்தக் காலம்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கிறது மறுபுறம்
வாள்சிலம்பு கத்திகளரி வேல்கம்பு வெட்டரிவாள்
வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல்
போர் போர் போர் போர்
பிரிவாற்றல் பசலைநோய் பாலைத்திணை
அது அந்தக் காலம்.
சக்கரம் சுழன்று காலம் மாறுது ஆனாலும் அது அந்தக் காலம்
சேரன் சோழன் பாண்டிய பல்லவன்
ஒருசேர அடித்துக் கொண்டாலும்
ஒருசேர அடித்துக் கொன்றாலும்
கலை வளர்ந்தது கோயில் எழுந்தது
அது அந்தக் காலம்..
புயலாய் உள்நுழைந்து பார்த்தது கைப்பற்றி
புகையாய் மறைந்தனர் பகைவர் பலர்.
அலையாய் உள்வந்து அரசுகள் அடக்கி
சிலையாய் அமர்ந்தனர் சிவப்பாய் சிலர்
அது அந்தக் காலம்.
நானூறு ஆண்டுகளில் நாடே அடங்கி
நான்திசையும் எழுந்தது நெஞ்சுர புரட்சி
செத்தவர் ஊன்வழி செங்குருதி பாய்ந்து
செம்மை நிலம் செம்மை நிலமாவே ஆச்சு
அது அந்தக் காலம்.
விடுதலையுற்று குடியரசுபெற்று தேர்தல்நடந்து தலைவர்கள் வந்தாச்சு.
ஆண்டுகளும் கடந்தன எழுபத்துக்கு மேலே ..
அப்பத்தாவும் தாத்தனும் பேசுகையில் வந்துவந்து
போகிறது இடையிடையே பெருமூச்சுடன் அது அந்தக் காலம்
சக்கரம் சுழன்று காலம் மாறுது.
கணிப்பொறியியல் பாடம் போய்
கணிப்பொறியில்தான் பாடமே.
கணிப்பொறி கண்ணுக்குக் கெடுதல் என்றால்
என்மகன் உரைக்கின்றான்
"அம்மா அது அந்தக் காலம்." என்று .
No comments:
Post a Comment