Friday, December 9

சுகமான சுமைகள்



சுமந்து சுமந்து அழுந்திய தோளிடம்
என்னைக் கொஞ்சம் கீழே இறக்கிவிடேன்
என்றது சுமை;

எனக்கும் இறக்கி விடத்தான் ஆசை - ஆனால்
ஆடிய காலும் பாடிய வாயும் போல
சுமந்து பழகிய என்னால்
உன்னை விட்டு இருத்தல் இயலுமா?
நீ தரும் சுகம் மறத்தல் முடியுமா?’
என்றது தோள்;

நான் என்ன அவ்வளவு சுகமா?
இறக்கி வைக்கக் கூட மனமில்லா அளவு!
வெட்கத்துடன் கேட்டது சுமை;

இது என்ன கேள்வி?
நான் என்ன அவ்வளவு அழகாஎன்று
அடிக்கடி கேட்கும் புதுமனைவி போல்;
நான் புதுக்கணவன் அல்ல
உண்மை சொல்லும் பழகிய கணவன்!
நீ பாரம் தான் ,
என்னைப் படுத்தும் பாரம் தான்;

என்னில் தானாக ஏறிய சுமைகள்
தானாகவே விழுந்து விடுகின்றன
நீயோ, நானாக விரும்பி ஏற்ற சுமை
என்னில் ஒரு அங்கமாகி விட்ட சுமை
உன்னைச் சுமப்பது துன்பம் அல்ல
உன்னை நீங்குவது தான்
என்னால் இயலாத பாரம்;

நான் மட்டுமே என்றும், சுமைதூக்கியா என்ன?
என்னைச் சுமந்துத் திரிந்தவர் உண்டு
சுமந்து கொண்டிருப்பவர்களும் உண்டுஇனி
சுமக்கப் போகிறவர்களும் உண்டு;

சுமையாகவே இருந்து விட்டால்
சுமைதாங்கியாவது எப்போது? -  அந்த
சுமக்கும் சுகம் புரிவது எப்போது?

எல்லா சுமைகளும்
கனப்பது இல்லை,
கொழுக் மொழுக் குழந்தை
கொஞ்சம் கனப்பது போல
சில சுமைகள் மனம் கனக்கும்
கொஞ்சி விட்டாலோ கனம் மறக்கும்;

நம்மில் சிலர்
கடமைகளுக்கு காசு வாங்கிப் பழகியதால்
கடமைகள் சுமையாய் போய்விட்டன;
கடமையே சுமையானால்
தானாய் விரும்பி ஏற்கும்
சுமையின் சுகம் புரியுமா என்ன?

சுமைகள் சுகமானதா
நினைவுச்சுமைகள் நிச்சயம் சுகமானது
பழைய காதலியை புது மனைவியிடம்
தொலைப்பது போல்
அந்நினைவுகளின் சுகத்தில்,
சுமப்பதன் பாரம்
தொலைந்து விடுகிறது;


பத்துமாத முடிவில் முடியும்
வயிற்று பாரம் மாறிடுமே
தாயின் நெஞ்சு பாரமாக
ஆயுளுக்கும் சுகமானதாக!

குழவி சுமக்கும் தாயையும்
சேர்த்து சுமக்கும் தந்தைகளின்
சுமைகள் என்றுமே
சுகமான சுமைகள்!

சுமைகள் என் வாழ்வில் என்றுமே
முற்றுப் புள்ளியாய் இருந்தது இல்லை
எப்போதும் அவை கமாக்கள் தான்;’
என்றபடி மௌனமாகிப் போனது தோள்.

தோளில் தன்னை இன்னும்
அழுத்தியபடி சுகம் தந்தது சுமை!

சுமைகளின் பாரம் தாங்காமல்
எப்போதும் புலம்பியபடி இருக்கும்
மனது வாயடைத்துப் போனது
வாழ்வின் தத்துவம்
புரிந்ததனால்.!

ஆகையினால் மாநிலத்தோரே
சுமைகளை சுகமாக்கி
சுமைதாங்கி ஆவீர்.

Sunday, November 27

மழையும் நீயே வெயிலும் நீயே - தமிழ்ப்பட பாடல்வரிகள்

படம் : அழகன்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

சரணம் – 1
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுதே
பார்க்காமல் எனைப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காம தேவனின் யாகசாலையா
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

சரணம் – 2
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கருநீளக் கண்கள் இரண்டும் பவழம் பவழம்
எரியும் விரதம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யார் அறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யார் அறிவார்?
முதலா முடிவா இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

Wednesday, April 13

வாழ்த்துக்களுடன் ஒரு விஷயம்

சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்.
சில பதிவர்களின் எழுத்து நெடுநேரம் நம்மை யோசிக்க வைப்பதுண்டு. சிலரின் நடை நம்மையும் அறியாமல் வாய் விட்டுச் சிரிக்க வைப்பதுண்டு. சிலரின் எழுத்துகள் எதுவும் செய்யாமல்  போவதும்  உண்டு. ஆனாலும்  ஒரு  சிலரின் எழுத்துகள் நம்மை முகம் சுளிக்க வைப்பதுண்டு.
பிளாக்கரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும் சில பல விஷயங்களைப் படிக்கும் போது,மக்கள் மொழி நாகரிகம் என்பதையே மறந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
இந்தக் குறள் யாருக்குத் தெரியாது என்றாலும் தமிழில் எழுதும்  அனைத்து  பதிவர்களுக்கும்  தெரிந்தே  இருக்கும். நம்முடைய  எழுத்தும்  கொஞ்சம்  இனிமையாக இருக்கலாமே!
அப்புறம் ஒரே ஒரு சின்ன விஷயம், 'ற்' என்ற ஒற்றெழுத்து வரும் போது இதன் பக்கத்தில் வேறெந்த ஒற்றெழுத்தும் வரக்கூடாது என்பது தமிழின் இலக்கண விதி. அதாவது ஏற்பாடு என்பது சரி. ஏற்ப்பாடு - தவறு.
an apple என்றுதான் எழுத வேண்டும். an ball, an cat, an dog என்று எழுதினால் உங்களுக்கு ஒரு நெருடல்  தோன்றுவதைப்  போல  நீங்கள் ஏற்ப்பாடு என்று எழுதும் போது எங்களைப் போல தமிழ் ப(பி)டித்தவர்களுக்கு  ஒரு  நெருடல்.  ஆதலினால்  மாநிலத்தோரே   தமிழின் இலக்கணத்தையும் கடைப்பிடிப்போமே! 

Sunday, March 13

டைரிகளால் நிரம்பிய அலமாரி

               டைரி எழுதுவது என்பதே ஒரு அழகான விஷயம். எல்லோர்க்கும் டைரி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது கை வந்த கலையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் யாருக்கும் டைரி எழுதும் பழக்கமே கிடையாது. சினிமாவின் மூலமும் புத்தகங்களின் மூலமும் எனக்கும் டைரி எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் டைரி எழுத ஆரம்பித்த பிறகு ‘நேத்தைக்கு வீட்டில லைட் எரிஞ்சுட்டே இருந்திச்சே?’ என்று கேட்கும் பெண்களிடம் ‘அதுவா டைரி எழுதாம என் பொண்ணுக்குத் தூக்கமே வராது’ என்று பெருமையடித்துக் கொள்ள எங்கம்மாவிற்கு இன்னொரு காரணம் கிடைத்திருந்தது. அப்போதெல்லாம் எங்களுக்கு இனாமாக டைரி கிடைத்தது இல்லை. நான் முதன்முதலில் டைரி வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது. ஈகிள் புக் ஷாப், சியாமளா புத்தகக்கடை, அருணா புக் ஷாப் என ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி விலை கம்மியாக எங்கு கிடைக்கும் என தேடி அலைந்து கடைசியில் ஈகிள் புக் ஷாப்பிலேயே வாங்கினேன்.
அடுத்த வருடம் என்னவென்றால் புது டைரி வாங்கும் பொறுப்பை எனது இரண்டாவது அண்ணனிடம் கொடுத்திருந்தேன். அவன் எப்படி என்றால், என் தோழிக்கு அனுப்பச் சொல்லி நான் கொடுத்த கடிதத்தை, அவள் ஒரு வாரம் இல்லை பத்து நாட்கள் கழித்து என்னைப் பார்க்க வரும் போது, அவளிடம் நேரிலேயே ‘இந்தாம்மா போஸ்ட் பண்ணச் சொன்னா, மறந்துட்டேன்’ என்று கொடுக்கும் அளவு ஞாபகத்தில் புலி. புது வருடம் பிறந்து பத்தாம் தேதி வரை டைரி வந்த பாடில்லை. சரி அவனிடம் வேறு சொல்லிவிட்டேனே என்று நானாக வாங்கவும் இல்லை. தினமும் வீட்டில் ஒரே களேபரம் தான். ஒரு பெரிய சண்டைக்கு அப்புறமாக டைரி வந்து சேர்ந்தது.
என்னதான் இருந்தாலும் நாமாக பார்த்து வாங்கும் டைரி கொடுத்த சந்தோஷம் அன்பளிப்பாக வாங்கப்படும் டைரிகளில் இல்லை. பளபள அட்டைகளோடு பெரிது பெரிதாக வரும் டைரிகளைப் பார்த்தாலே டைரி எழுதவே தோணாது. (பின்னே, காசு கொடுத்து வாங்க வேண்டியது தானே என்கிறீர்களா? 5,6 என்று வரும் டைரிகளை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதாம்?)
இனி முதன்முதலாக வாங்கிய டைரி கதைக்கு வருவோம். புது டைரியில் முதற் பக்க தகவல்கள் எல்லாம் நிரப்பியாகி விட்டது, ஜனவரி முதல் நாள் அன்று ‘புத்தாண்டு வாழ்த்துகள் கோகிலா’ என்றும் எழுதியாகி விட்டது. அவ்வளவுதான், வேறு ஒன்றுமே தோன்றவில்லை. புத்தாண்டு அன்று விடுமுறை என்பதால் வீட்டை விட்டு வெளியேவும் செல்லவில்லை. எழுத ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. யோசித்து யோசித்து, சரி புது வருட ஆசைகளையாவது எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்; யாரிடமும் கோப்ப்படக்கூடாது என்பதில் ஆரம்பித்து பெரிய மாற்றம் ஏதுமின்றி அதே ஆசைகள் தான், என்ன பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லே, அதற்கு பதிலாக இப்போதெல்லாம் வெயிட் குறைய வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறேன். அதன் பின் வந்த நாட்களிலும் அம்மா என்னைத் திட்டினார்கள்; எனக்கும் என் தங்கைக்கும் பயங்கர சண்டை என முதலாம் பானிபட் போர் அளவுக்கு எழுதியிருப்பேன்.  எல்லாம் இப்போ படித்தாலும் சிரிப்புதான் வருகிறது.
அப்புறம் ஒருவழியாக எனக்கும் டைரி எழுத வந்தது. என்ன கொடுமை என்றால், யாரும் நம்ம டைரியை படித்து விடுவார்களோ? என்ற பயத்தோடே நிறைய நாட்கள் எழுதினேன். பள்ளியில் மிஸ்கிட்ட திட்டு வாங்கின விஷயத்தை எல்லாம் எழுதிவிட்டு உடனே யாருக்கும் தெரியாத மாதிரி அழித்து விடுவேன். பஸ்ஸில் நடக்கும் கலாட்டாவை எல்லாம் நான் டைரியில் எழுதினதே இல்லையே! அதன்பின் டைரி எழுதுவதே அடுத்தவர் படிப்பதற்காக எழுதுவதுதான் என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? எல்லாப் படங்களிலும், கதைகளிலும் யாருக்காவது டைரி எழுதும் பழக்கம் இருந்தால் ஒன்று அவர்கள் சாக வேண்டும் இல்லை யாருக்காவாவது தியாகம் செய்து விட்டு யாருக்காக தியாகம் செய்கிறார்களோ அவர்கள் கையில் கிடைக்குமாறு டைரியை மறந்து!!! வைத்து விட்டு எங்காவது கண்காணா இடத்துக்கு ஓடி விட வேண்டும். அதாவது ஒன்று விமான நிலையத்துக்கு இல்லை, ரயில் நிலையத்துக்கு.
ஒரு சமயம் என் தம்பி (சித்தி மகன்) என் டைரியைப் படித்து விட்டு இது எதற்கு இப்படி எழுதியிருக்கிறாய்? அது ஏன் அப்படி எழுதியிருக்கிறாய் என்று குடைந்து எடுத்து விட்டான். அதன்பின் நிறைய நாட்கள் எழுதுவதையே விட்டு விட்டேன். இனியாவது அடுத்தவர் டைரியைப் படிப்பவர்கள் ரகசியமாகப் படிக்கவும், அப்போது தான் உங்களுக்கு நிறைய உண்மைகள் தெரிய வரும். கல்லூரி படிக்கும் போது விடுதி வாழ்க்கை என்பதால் நிறைய அனுபவங்கள் என் டைரியில் பொறிக்கப் பட்டிருக்கும். ஒரு வருட டைரியைப் படித்தாலே திரும்பவும் கல்லூரி வாழ்க்கைக்கே சென்று வந்த உணர்வு வரும். முன்பெல்லாம் டைரி நிரம்பியிருக்கும், மனது காலியாக இருக்கும், இப்போது டைரி காலியாக இருக்கிறது, மனது நிரம்பி வழிகிறது. (அட அட அட!!!)
            கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நானும் டைரி எழுதுகிறேன் என்ற பேர். முதற்பக்கத் தகவல்கள் எழுதி ‘புத்தாண்டு வாழ்த்துகள் கோகிலா’ என்று எழுதுவதோடு சரி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் பற்றி அதுவும் சிறு குறிப்புகள் வரைந்து இருப்பேன். அதோடு சரி. எழுதவும் தோன்றாமல், ‘டைரி எழுதாமல் இருக்கலாம்’ என்றும் தோன்றாமல் எனது டைரிகளால்  நிறைந்து இருக்கிறது அலமாரி.           

Monday, January 3

புது விடியல்

ஒவ்வொரு வருடமும் புதிதாய் பிறக்கிறது
ஒவ்வொருவருக்கும் ஏதேதோ
ஆசைகள், எண்ணங்கள், கனவுகள்;

வருட முடிவில்
சிலரின் ஆசைகள் நிறைவேறுகின்றது;
பலரின் ஆசைகள் நிராசையாகின்றது;
சிலரின் எண்ணங்கள் பலிக்கின்றது;
பலரின் எண்ணங்கள் பலி கொடுக்கப்படுகின்றது;
சிலரின் கனவுகள் நனவாகின்றது;
பலரின் கனவுகள் காணாமலே போகின்றது;

மீண்டும் ஒரு புது வருடம்;
புதுப்புது ஆசைகள்;
புதுப்புது எண்ணங்கள்;
புதுப்புது கனவுகள்;
அதே மனிதர்கள்!

நமது வாழ்வு வானில்
நம்பிக்கைதானே
சூரிய நட்சத்திரம்!!!



இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!