Friday, December 9

சுகமான சுமைகள்



சுமந்து சுமந்து அழுந்திய தோளிடம்
என்னைக் கொஞ்சம் கீழே இறக்கிவிடேன்
என்றது சுமை;

எனக்கும் இறக்கி விடத்தான் ஆசை - ஆனால்
ஆடிய காலும் பாடிய வாயும் போல
சுமந்து பழகிய என்னால்
உன்னை விட்டு இருத்தல் இயலுமா?
நீ தரும் சுகம் மறத்தல் முடியுமா?’
என்றது தோள்;

நான் என்ன அவ்வளவு சுகமா?
இறக்கி வைக்கக் கூட மனமில்லா அளவு!
வெட்கத்துடன் கேட்டது சுமை;

இது என்ன கேள்வி?
நான் என்ன அவ்வளவு அழகாஎன்று
அடிக்கடி கேட்கும் புதுமனைவி போல்;
நான் புதுக்கணவன் அல்ல
உண்மை சொல்லும் பழகிய கணவன்!
நீ பாரம் தான் ,
என்னைப் படுத்தும் பாரம் தான்;

என்னில் தானாக ஏறிய சுமைகள்
தானாகவே விழுந்து விடுகின்றன
நீயோ, நானாக விரும்பி ஏற்ற சுமை
என்னில் ஒரு அங்கமாகி விட்ட சுமை
உன்னைச் சுமப்பது துன்பம் அல்ல
உன்னை நீங்குவது தான்
என்னால் இயலாத பாரம்;

நான் மட்டுமே என்றும், சுமைதூக்கியா என்ன?
என்னைச் சுமந்துத் திரிந்தவர் உண்டு
சுமந்து கொண்டிருப்பவர்களும் உண்டுஇனி
சுமக்கப் போகிறவர்களும் உண்டு;

சுமையாகவே இருந்து விட்டால்
சுமைதாங்கியாவது எப்போது? -  அந்த
சுமக்கும் சுகம் புரிவது எப்போது?

எல்லா சுமைகளும்
கனப்பது இல்லை,
கொழுக் மொழுக் குழந்தை
கொஞ்சம் கனப்பது போல
சில சுமைகள் மனம் கனக்கும்
கொஞ்சி விட்டாலோ கனம் மறக்கும்;

நம்மில் சிலர்
கடமைகளுக்கு காசு வாங்கிப் பழகியதால்
கடமைகள் சுமையாய் போய்விட்டன;
கடமையே சுமையானால்
தானாய் விரும்பி ஏற்கும்
சுமையின் சுகம் புரியுமா என்ன?

சுமைகள் சுகமானதா
நினைவுச்சுமைகள் நிச்சயம் சுகமானது
பழைய காதலியை புது மனைவியிடம்
தொலைப்பது போல்
அந்நினைவுகளின் சுகத்தில்,
சுமப்பதன் பாரம்
தொலைந்து விடுகிறது;


பத்துமாத முடிவில் முடியும்
வயிற்று பாரம் மாறிடுமே
தாயின் நெஞ்சு பாரமாக
ஆயுளுக்கும் சுகமானதாக!

குழவி சுமக்கும் தாயையும்
சேர்த்து சுமக்கும் தந்தைகளின்
சுமைகள் என்றுமே
சுகமான சுமைகள்!

சுமைகள் என் வாழ்வில் என்றுமே
முற்றுப் புள்ளியாய் இருந்தது இல்லை
எப்போதும் அவை கமாக்கள் தான்;’
என்றபடி மௌனமாகிப் போனது தோள்.

தோளில் தன்னை இன்னும்
அழுத்தியபடி சுகம் தந்தது சுமை!

சுமைகளின் பாரம் தாங்காமல்
எப்போதும் புலம்பியபடி இருக்கும்
மனது வாயடைத்துப் போனது
வாழ்வின் தத்துவம்
புரிந்ததனால்.!

ஆகையினால் மாநிலத்தோரே
சுமைகளை சுகமாக்கி
சுமைதாங்கி ஆவீர்.

6 comments:

துரைடேனியல் said...

Aha...arumai Sago. Vaalthukkal. Thodaravum.

துரைடேனியல் said...

Tamilmanam Vote 2.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கு நன்றி!

விச்சு said...

பழைய காதலியை புது மனைவியிடம் தொலைப்பதுபோல் - எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. விருப்பமான எதுவும் சுமையல்ல. இதுவும் சுகம்தான்.

Yaathoramani.blogspot.com said...

சுமப்பதின் சுகத்தை மிக நேர்த்தியாக
விளக்கிப் போகும் தங்கள் படைப்பு
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

என்றைக்கோ ஓர்நாள் எழுதும் எனது பதிவைக் கூட மதித்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு(துரைடேனியல், விச்சு, ரமணி) மனமார்ந்த நன்றி!

Post a Comment