Saturday, February 20

தனிமை


 நிலவும் கதிரும் மாறிமாறி

காற்றும் நீரும் சுற்றிசுற்றி
தனியனாக இருப்பினும்
தனிமையில் இல்லை நான்.

என் தனிமை போக்க
வரவேண்டாம் நண்பா .
உன் தனிமை போக்க
வா என்னிடம்..

இருந்து கொள் என்மேல்.
விரும்பினால் நீபேசு..
இல்லையெனில் நான் உரைப்பேன்..
ஈராயிரம் கதை.

இங்கு வந்து சென்றவர்
என்னிடம் பகிர்ந்த கதை.
ஆனாலும் நம்பு
பகிர மாட்டேன் எவரிடமும்..

*நீ பகிர்ந்த உன்கதையை*

Friday, February 12

நானும் ராதையும்


 நானும் ராதையும்

காதல் தழுவலில்.
இமைகள் மூடியிருக்க
இன்பத் தழுவலில்.

கிருஷ்ணா கிருஷ்ணா எனும்
கிறங்கும் ஒரு குரல் - அது
உருக்கமாய் காதில் விழுந்த
ருக்மணியின் குரல்..

கைகள் எடுத்தாலோ
கண்கள் திறந்தாலோ
கண்மணியிவள் இன்பங்கெடும்

மாயவன் நான் அல்லவா
மாயங்களும் செய்பவன் அல்லவா
இன்னோர் உருவம் எடுத்தேன்
ருக்மணியின் கணவனாக.

அவள்முன் சென்று
ஆயிழையைத் தழுவும்முன்
பாடி அழைத்தாள் பாமா.
பாவமாய் நிற்கிறேன் நான்.

என் செய்வது?
அன்பு செய்யும் மனம் இருப்பின்
அன்பின் தொல்லைகளும் நேரும்தானே.

Thursday, February 4

புத்தரைப்போல அமரவே விருப்பம்


 உம்மைப்போல அமரவே விருப்பம்*


யாருமற்ற தனிமையில்
ஏதுமற்ற சூழலில்
எதுபற்றியும் சிந்திக்காது
அமைதியாய் அமர வேண்டும்.

மகள் சகோதரி மனைவி
அம்மா அத்தை அண்ணி
என பொறுப்புகள் ஏதுமின்றி
அலைந்து திரியும்
உயிர்களில் நானும் ஒருத்தியாய்
திரியவே விருப்பம்.

உடலால் பயணிக்காது
சிந்தனையால் பயணித்து
கண்மூடி அமர்ந்து
எத்தனை தொலைவு சென்றாலும்
"அம்மா இன்னைக்கு பிரியாணி" 
என்னும் குரல் என்னை
இங்கு இழுத்து வந்து விடுகிறது.

என்ன செய்வது?