Thursday, December 12

மனம்

ஏதும் வேண்டாம் என்று
ஒதுங்கி நிற்கும்..
எல்லாம் வேண்டும் என்று
ஆடி எழும்.

விட்டுத் தள்ளு என்று
பற்று அறுக்கும்.
விடவே முடியாது என்று
பிடித்து இழுக்கும்.

அமைதியாய் இருப்பவரை
ஆட வைக்கும்.
ஆடிக் கொண்டிருப்பவரை
அரற்ற வைக்கும்.

சிரித்தால் சிரிக்காதே
அழுதால் அழாதே.
கோபமுற்றால்
கோபம் கொள்ளாதே.
வருத்தம் கொண்டால்
வருந்தாதே.
பகை கொண்டால்
பகைக்காதே.
பணிந்து போனால் பணியாதே.

ஏதும் வேண்டாம் என்றால்
ஏதாவது செய்.
ஏதாவது செய்தால்
ஒன்றும் செய்யாதே.

அப்பப்பா...
இந்த மனதின்படி
வாழக்கூடாது என்றெண்ணும் போது
'மனம்போல் வாழ்வு',
'மனதின்கண் மாசிலன் ஆதல்'
எனச் சொல்லி நகைக்கும்.

Sunday, November 17

இறைமையின் உண்மை.. எனக்குப் புரிந்தது

      இறைமை நினைத்தபடி நாமும் நினைத்து விட்டால் அருமை. வாழ்க்கை இனிமை...

இறைமை நினைத்தபடி நடக்காது, நாம் ஒன்று நினைத்து அதன்படி நடந்தால் வாழ்க்கை கடினம்.

இறைவன் நினைத்ததை புரிந்து கொள்வதுதான்  வாழ்க்கை. அதற்குத்தான் இத்துணை போராட்டங்கள்.

எப்படி புரிந்து கொள்வது? உள்ளம் இறைவன் வாழும் இடம் என்று தெளிந்து அதனை மாசற்று வைக்க முயல்வோம்..

ஆனால் இந்த நிலவுலகில் பிறந்து விட்டதனால், நம் உள்ளம் சில நேரம் தடுமாறவே செய்யும்.. அது பெரிய தவறு அல்ல. அதனைப் புரிந்து கொண்டு மீண்டும் அத்தவறினைத் தொடராது நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
இதுதான் ஊழ். துன்பம் வரும் போது மேலும் தவறு செய்யாது அதனைப் பொறுத்துக் கொளல் வேண்டும்..

இறைவனை நிந்திக்காது அவனிடமே அடிபணிந்து ஆறுதல் பெறலாம்.

இப்பூமியில் பிறந்து விட்டாலே, இன்பமும் துன்பமும் மாறி மாறி நம் வாழ்வில்  வந்து கொண்டேதான் இருக்கும்.
நம் மனதும் அதற்கேற்ப ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

எல்லாம் நாம் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தால் நாம் ஞானியாகி விடுவோம்.

ஞானியாகி விட்டபின் எதன்மேலும் பற்றற்று போய்விடும். பற்றற்ற ஞானியர்க்கு நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணமில்லாது போய்விடும்.
சித்தன்போக்கு சிவன்போக்கு என்று அமைதியாகி விடுவர்.  மக்கள் நலனே மகேசன் நலன் என்று உலக நன்மைக்கு பாடுபடுபவர்.

*இறுதியாக ஊழைப் பற்றியோ, விதியைப் பற்றியோ கவலைப்படாது அச்சப்படாது செயல்களோ, வினைகளோ ஆற்றுவோம்.. வரும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அழுகை வந்தால் அழுவோம். மகிழ்ச்சி வந்தால் மகிழ்வோம். தீய குணங்கள் நெருங்கும் போது அறிந்து கொள்ள முயல்வோம். போற்றலும் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று வாழ்வோம்.*

    எடுத்துக்காட்டாக...
நம் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாத போது, ice cream, pizzaபோன்ற உணவுகள் கேட்டு அழுதால் நாம் வாங்கித் தருவோமா?

அதுபோல நம் உள்ளம் சரியில்லாத போது,  நாம் குழந்தைத்தனமாக ஏதேனும் கேட்டால்,  இறைவன் தர மறுக்கிறான்..

ஆனால் நாமோ குழந்தைகள் போன்று அவனிடம் அழுது புரண்டு அவனைத் திட்டி, அடம் வைத்து நினைத்ததை நடத்தி விடுகிறோம்.
இறுதியில் மேலும் துன்பங்கள்.

எனவே நமக்கு வேண்டியதை விரும்புவோம். அது நமக்கு உகந்தது எனில் இறைவனே நம்மிடம் வந்து சேர்ப்பான்.

தேவையற்றது எனில் நமக்கு புரிய வைப்பான்.  எனவே ஆழ்ந்த விருப்பம் வைப்போம்.. கிடைத்தால் நிம்மதிய டைவோம். கிடைக்கவில்லையெனில் மிகுந்த நிம்மதியடைவோம்.

எனக்கு கிடைக்காமல் போன, நான் தவறவிட்ட எததனையோ வாய்ப்புகளினால் அப்போதைக்கு நான் வருத்தமுற்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களிலேயே உண்மை புரிந்து பெரும் நிம்மதியும் மகிழ்வும் அடைந்திருக்கிறேன்.

அதே வசனத்துடன் முடிக்கிறேன்.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது.

குறிப்பு:
---------------
     மேலே சொன்ன இவையனைத்தும் எனனுள் உதித்த சிந்தனைகள் அல்ல. நான் கற்ற பல நூல்களிலிந்தும், நான் கேட்ட பல ஆசான்களின் பேச்சிலிருந்தும் இப்போதைய எனது புரிதல். இவை மாறலாம்.

நன்றி..
🙏🏼🙏🏼🙏🏼

Wednesday, November 13

வேண்டும் தனிமை...

அறுபதில் தொடங்கி
ஆயுள் முழுதும் தொடரும்
தனிமை வேண்டாம்..

இளமையாய் உணரும்
இத்தருணத்தில்
வேண்டும் தனிமை.

ஒரு மண்டலமோ 21 நாட்களோ அல்ல.
வெறும் இரண்டே நாட்கள்.
வெறுமை உணர
வேண்டும் தனிமை.

மணி ஆறாச்சே என
மனம் பதறாது ..
இன்னும் சிறிது நேரம்
கண்மூடி உறங்க
வேண்டும் தனிமை.

பள்ளியில் படித்தவற்றையெல்லாம்
மறந்து விட்ட காலத்தில்
பெண்ணிற்காய் ஒருமுறை
பையனுக்காய் ஒரு முறை என
மீண்டும் மீண்டும் படிப்பதிலிருந்து
மீள்வதற்காய்
வேண்டும் தனிமை.

பிடித்த நூல்
நூறுபக்கம் இருந்தால் என்ன
ஐந்நூறு பக்கம் இருந்தால் என்ன
எடுத்த நூலைக் கீழே வைக்காது
முடித்துவிட
வேண்டும் தனிமை

ஆடல், பாடல் என
அக்கம்பக்கம் காணாது
நினைத்தவற்றை
நினைத்த பொழுதில்
 செய்து மகிழ
வேண்டும் தனிமை.

கொழுநன் பசியாற்ற
குழந்தை பசியாற்ற என
பார்த்து பார்த்து சமைத்திடாது
என் பசிக்கு மட்டும்
கொஞ்சம் கொறித்திட
வேண்டும் தனிமை.

கோழி பிரியாணியா
இல்லை அவியல் சாம்பாரா
அப்பப்பா எதுவுமே வேண்டாம்
கொஞ்சம் காஃபி மட்டும்
என்று ரசித்திட
வேண்டும் தனிமை.

குமந்தைகளுக்கும் கணவனுக்கும் இருநாட்கள் மட்டும்
என்னிடமிருந்து
விடுமுறையளித்து
விருப்பம் போல இருங்கள் என
வாழ்த்தி
என் விருப்பமாய் வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க அல்ல.
பொறுப்புகளை இன்னும்
சிறப்பான தாக்க
இருநாள் மட்டும்
வேண்டும் தனிமை.

ஒன்றும் செய்யாது
மூச்சு விடுதல் மட்டுமே
இன்றைய வேலை
என்று வாழ்ந்திட
வேண்டும் தனிமை.

---கோகிலவாணி கார்த்திகேயன்---
12-11-2019

Friday, October 11

(#2) அப்பாவின் இன்றைய ஒருநாள்


(#2) அப்பாவின் இன்றைய ஒருநாள்
--------------------------------------------------------------
மதியம் இரண்டு..
கடையைப் பூட்டுவதே
இப்போதெல்லாம்
கடினமாகி விட்டது..
உயரப் படிகளில் நின்று
பெரிய கதவை இழுத்து மூடி
இரண்டு பூட்டுகள்
போடுவதற்குள்...

இனி
வீட்டிற்கு சென்றதும்
கைகால் முகம் கழுவி
இருக்கும் அத்தனை வாளிகளிலும்
தரையோடு இருக்கும்
தொட்டியிலிருந்து
சிறுவாளியை வைத்து
நீர் நிரப்பியாகி விட்டது.
துணி துவைக்கும் எந்திரத்தில்
ஊற வைத்து விட்டு
மறந்து விட்ட மனைவியிடம்
ஒன்றும் கேட்காமலேயே
அலசி, பிழிந்து காயப்போட்டாகி
விட்டது.

இனி
தொலைக்காட்சியில்
இரண்டறை மணி நாடகம்
பார்த்தபடி
மதிய உணவு.
4 மணிவரை கண்ணயரலாம்
என்று எண்ணும் போதே
அடடா..
என்று விட்டுப் போன
சில வேலைகள்
ஞாபகம் வரும்.
இல்லையெனில்
சரியாக 4 மணிவரை
ஓய்வு..

இனி
எழுந்தவுடன்
மீண்டும் பண்ணைவரை சென்று
பால் வாங்கி காபி போட்டு
குடித்து விட்டு
கதவை உள்பககமாய் பூட்டிவிட்டு
கடை திறக்கக் கிளம்பியாகி விட்டது.
4.30க்கு கடை திறக்கவில்லை என்றால்
"அண்ணாச்சி கடை இன்னும் தொறக்கலையா.. கடவாசல்ல நிக்கேன்"
எனறு மூன்று நான்கு
தொலைபேசி அழைப்புகள்....

இனி..
இரவு 9மணிவரை கடைதான்.
முன்பு பத்து மணிவரை
கடை மூடலாம்..
இப்போது ஒன்பதுக்கே ..
வீட்டுக்கு கிளம்பும் போதே
நாள் தவறாது ஒரு அழைப்பு
மனைவிக்கு..
கடைத்தெருவில் ஏதும்
வேணுமா என்று..
எல்லாம் வாங்கி வீட்டுக்கு வர
ஒன்பதரை ஆகிவிடும்.
அப்புறம் இரவு உணவு முடித்து
பத்து மணிவரை நாடகம்..
பத்தரைக்கு மேல்
வாசலில் சிறிது நேரம்
உட்கார்நது வருபவர்கள்
பொருத்து பேச்சு செல்லும்..
பதினொரு மணிக்கு
பாயை விரித்துப்
படுத்தவுடன்
பத்தே
நொடிகள்தாம்
தூக்கம் வந்து விடும்

இது ஒரு சாதாரண
நாள் கழிதல்.
இது தவிர..
பண்டிகை நாட்கள்
திருவிழா நாட்கள்
பழகியவர் வீட்டு
நிகழ்ச்சிகள்
ஊரில் சொந்தஙகளின்
நிகழ்ச்சிகள்..

"நினைக்கும் போது
கண்ணைக்
கட்டுகிறதா?
ஆனா என் பொண்ணுக்கோ
நான் இலக்கியவாதியா
இல்லையேன்னு வருத்தம் வேற!!
அவ ஒரு சரியான முட்டாக்கழுதை"

உழைப்பின் கதை தொடரும் (#2)

(#1) அப்பாவின் இன்றைய ஒரு நாள்


(#1) அப்பாவின் இன்றைய ஒரு நாள்
----------------------------------------------------------
காலை 5 மணிக்கு எழுந்தவுடன்
கடன்கள் முடித்து
வாசல் பெருக்கித் தொளிக்க
ஒரு குடமும்
ஒரு பெருவாளியும்
நிறைய நிறைய நீர் வைத்தாகிவிட்டது.
ஒரு குடம் இரண்டு தவலைப்பானைகள்
தேய்த்து தேய்த்துக் கழுவி
குடிக்க நீர் பிடித்தாகி விட்டது.

இனி
பால் பண்ணையில் சென்று
பால் வாங்கி வரவேண்டும்.
வீட்டு முன்பு வரும் பால்காரர்
பாலில் தண்ணீர் சேர்க்காமல்
தண்ணீரில் பால் சேர்க்கிறார்கள்
என்று அவரிடம் பால் வாங்குவதில்லை.
மிதிவண்டியில் ஒரு கிமீ சென்று
பால் வாங்கி வந்தாகி விட்டது.

இனி
இப்போதெல்லாம் மெதுவாக
எழுந்திருக்கும் மனைவிக்கு
பக்கத்துக் கடையிலிருந்து
அவளுக்கு பிடித்த புட்டும் டீயும்
வாங்கிக் கொடுத்தாகி விட்டது.

இனி
குளித்து பாலைக் காய்ச்சி
காபி போட்டுக் குடித்துவிட்டு
நாளிதழைக் கையில் எடுத்தால்
ஒருமணி நேரம் போய் விடும்..

இனி
கடைக்குச் சென்று காய்கறிகள்
வாங்கிக் கொடுத்து விட்டு
சிறிது நேரம் தொலைக்காட்சி செய்திகள்.
பார்க்கும் போதே கண்கள் சொருகும்.
உட்கார்ந்தபடியே தூக்கம்
பத்து நிமிடங்களுக்கு..

இனி
கடை திறக்க வேண்டும்..
முன்பு
9.30க்கு திறந்த கடை
இப்போது
10.30 ஆகி விடுகிறது.
என்ன செய்வது?
பெரும் நகைக்கடைகள்
திறந்த பிறகு
வேலை குறைந்து போன
பட்டறைக்காரர்கள்
பட்டறை வைத்த பின்புதான்
கடையில் வியாபாரம் ஆகும்.
காலையுணவு முடிந்து
கடை திறந்தாகி விட்டது.

இனி
மதியம் இரணடு மணி வரை கடையில்தான்.
பெயரும் பெரிது.
கடையும் கொஞ்சம் பெரிதுதான்.
கடையிலும் அவ்வப்போது
கண்ணசத்தும்.
அகவை எழுபத்து நான்காகி
விட்டதல்லவா..

அப்படியென்றால்
கிட்டத்தட்ட கடையில்
பணிக்கு வந்து
அறுபது வருடங்கள்..
அப்பாவின் கடை தான் எனினும்
ஒரு பணியாள்வேலைதான்
முதலில்.
திருமணமாகி இரண்டு குழந்தைகள்
வரும்வரை
அண்ணாதான் முதலாளி.
பின்னர்
பங்கின்போது இந்தக் கடை
வந்து விட்டது.

எத்தனை எத்தனை
வரவு செலவுகள்..
சென்ற மாதம் கீழே விழுந்த
மனைவியின் மருத்துவ செலவு உட்பட
குழந்தைகள் தந்தாலும்
நான் ஈட்டுவது போல வருமா? முடிந்தமட்டும் உழைப்போம்.

இது மதியம் இரண்டு மணிவரை மட்டும்..

மீதி உழைப்பின் கதை
தொடரும். (#1)

Monday, May 20

வாழ்க்கை

 கூடைநிறைய பூக்கள்

எடுக்க எடுக்க 

மகிழ்ச்சிப்பூக்களாய்

மல்லிகைப் பூக்கள்

சரம் தொடுத்துக் கொண்டே வந்தேன்.


சில கண்ணிகள் தொடுத்த பின்

கூடையில் கைவிட

எதிர்பாரா விதமாய் 

இம்முறை

கனகாம்பரப் பூ.

என்ன செய்வதென்று திகைத்துப் பின்

அதையும் தொடுக்கத் தொடங்கினேன்.


பத்த்க் கண்ணிகள் முடிந்த பின்னே 

மீண்டும் மல்லிகை.

முகம் மலர

தொடர்ந்தேன் தொடுத்தலை.


இப்படியே பூக்கூடை காலியாக

முழுதுமாய் பார்க்கிறேன்.

வண்ணமயமான கண்ணிகளால்

தொடுக்கப்பட்ட

என்வாழ்க்கை இருந்தது

என் கையில்.


நல்லவேளை!

பிடிக்காத கனகாம்பரத்துக்காய்

பூத்தொடுத்தலை நிறுத்தாது 

போனேனே இறைவனே!!


Tuesday, April 2

முக்காலம்..


முன்பு 
அனைவரிடமும்
பாசம் உண்டு பற்று உண்டு.
அன்புண்டு அக்கறையுண்டு .
உரிமையுடன் உதவ மனமும் உண்டு.

அன்புகொண்டு நான் செய்ததை
அனுபவித்த பின் 
'யாரு கேட்டா?'  எனப் பகிர்வோரும்,
என் அன்புணரா மனங்களும்,
வாழ்க வளமுடன்...



இப்போது...
பாசம் இல்லை பற்று இல்லை
பொறாமை இல்லை பகையும் இல்லை.
அன்பு மட்டும் உண்டு.

கேட்பவர்களுக்கு
முடிந்த வரையில்  செய்வதுண்டு.
எவருக்காய்
எம் பண்புகள் மாறாதே.

ஆனால்
அக்கறையின் பொருட்டு
முன்னின்று
ஏதும் கேட்பதும் இல்லை;
ஏதும் பேசுவதும் இல்லை;
ஏதும் செய்வதும் இல்லை;



இனி..
என் கல்வி. தகுதி, செல்வம் பாராது
என்னை எனக்காய் மதிக்கும்
உறவுகளைத் தேடும் பயணத்தில்
சிவன் மாத்திரமே
உறவாய் உள்ளான்.
அவன் மாத்திரமே
நிறைவாயும் உள்ளான்.
ஓம் நமசிவாய...

Wednesday, March 20

என் பெண்ணிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்…


எதிர்பார்ப்பு ஏதுமின்றிதான்
ஈன்றெடுத்தோம் உன்னை.
இருந்தும்
எங்களையும் மீறி உன்மேல்
ஏற்றிய எதிர்பார்ப்புகள்
எத்தனையோ?

போட்டிகளா?
தேர்வுகளா?
நிகழ்ச்சிகளா?
எல்லாவற்றிலும்
பங்கெடு..  பரிசுபெறு..

இதற்காய் பொம்மைகளும் சாக்லேட்களும், ஐஸ்கிரீம்களும்
வேறு லஞ்சமாய்..

பயந்து செய்தாயா?
பணிந்து செய்தாயா?
தெரியவில்லை...
உன் விருப்பம் இதுவென்று
உனக்கும் தெரியவில்லை..
எனக்கும் புரியவில்லை.

இதோ இன்றோடு அகவை
பதினேழு முடிந்து
பதினெட்டில் அடிவைக்கிறாய்...
இன்னமும் இருக்கின்றது
இலட்சம் எதிர்ப்பார்ப்புகள் ..
உன் மேல் ..

எனினும் புத்திதெளிந்த நான்
உன் மேல் எதையும்
இப்போது ஏற்றவில்லை.
உன் வாழ்க்கை உன் கையில்..

வாழ வந்த பூமியில்
வருத்தமின்றி
வாழ்ந்து மட்டும் செல்வோம்.
சாதனைகளில் இல்லை வாழ்வு..

இன்பம் தொலைத்து
இனிமை மறந்து
இன்னல்பட்டு..
சாதிக்கிறேன் என்று
உடனிருப்பவரை எல்லாம்
அழவைத்தல் இல்லை வாழ்க்கை...

நீயும் இன்பமாய் இருந்து
பிறரையும் இன்புறச் செய்.
இதுவே வாழ்க்கை..

வாழ்க வளமுடன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…
 

Thursday, February 28

மரக்கிளையில் தொங்கும் கூண்டு

பறவை பறந்து விட்டால்
கூண்டிற்கும் பொருள் இல்லை.-
கூண்டினைத் தாங்குவதாய் எண்ணியிருக்கும்
இதயத்திற்கும் பொருள் இல்லை.

பற்றற்ற பறவையாய்....
கூண்டு கீழே விழுவதற்குக்
காத்திருக்கும் பறவை காண்.
விழுந்தவுடன் பறப்பதற்குக்
காத்திருக்கும் பறவை காண்..
ஆனாலும்..
பற்றிருக்கும் பறவையாய்...
கூண்டு விழாமலிருக்க
வேண்டிநிற்கும் பறவை காண்.

பற்றுக்கும் பற்றறு நிலைக்கும்
இடையில் மரக்கிளையில்
ஊசலாடும் கூண்டாய்..
பெண்கள் நிலை இதுவென்று
பறைசாற்றும் பறவை காண்..
வாழ்க பெண்மை.

 

Thursday, February 14

நானும் உன் தாய்தான்.

♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான்
பத்து மாதம் சுமக்கவில்லை -  ஆனால்
அது ஒன்று மட்டும் தான் செய்யவில்லை.

என் அன்புக்குரியவனிடம்
வேறென்ன சொல்ல??
♥♥♥♥♥♥♥♥♥

Saturday, February 9

இன்றைய சேதி...

கிளம்பும் போதே 'எங்கே செல்கிறாய்?'
என்னும் கேள்வியுடன்..
ஆசான் வள்ளுவனும்
அன்னை தமிழும்

நான் முறைத்தபடியே
'தங்களைக் காணத்தான்' என்றேன்.

அவர்களோ பலமாக நகைத்து விட்டு
"விரைவில் வந்து விடு " என்றனர்.

---------------------------------------
---------------------------------------
சென்ற இடத்தில்
வள்ளுவனையும் காணாது
தமிழன்னையையும் காணாது
வீடு திரும்ப...

வழிமேல் விழிவைத்து
இருவரும் வாசலில் அமர்ந்திருந்தனர்

Thursday, January 31

மனமும் மதமும்


மனம் கொடுத்தான் இறைவன்
மதம் படைத்தான் மனிதன்

மனம் கொடுத்த இறைவன்
அன்பும் சேர்த்தே  கொடுத்தான்.
மதம் படைத்த மனிதன்
அன்பை மனதைவிட்டே நீக்கினான்.

மதமா மனமா எனும்போது
மனதின்வழி சென்றோர்
கடவுளின் குழந்தைகள்.
மதத்தின்வழி சென்றோர்
மனிதனின் கழிவுகள்.

மனம் அழித்து மதம் பேண
சிவனும் சொல்லவில்லை.
எவரும் சொல்லவில்லை.

அன்பே கடவுள்.
அறிவாயா மனமே?
அறிவாயா மதமே?

Monday, January 14

பொங்கலோ பொங்கல்

எம்மிடம் ஒருபோதும்
வயல் இருந்ததில்லை..
வாய்க்காவரப்பில் நடந்ததில்லை.
மாடு இருந்ததில்லை.
பால் கறந்து பழக்கமில்லை..
தோட்டம் இருந்ததில்லை.
பழம் பறித்து உண்டதில்லை.

ஆனாலும்
பொங்கல் மட்டும் வைத்திடுவோம்.
புத்தாடைகளும் அணிந்திடுவோம்.
 மாவிலைத் தோரணம் கட்டிடுவோம்.
இஞ்சிமஞ்சள் கரும்புடனும்
பனங்கிழங்கும் படைத்திடுவோம்.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
அடுப்பில் பொங்கும் பொங்கலுக்கு
பின்னணி இசையும் சேர்த்திடுவோம்.

இதுமட்டிலுமாவது செய்தோமே
என்றெண்ணத் தோன்றுகிறது...
பொங்கலன்று ஒளிபரப்பாகும்
படங்களைப் பொருத்து
பள்ளிக்கு விடுப்பு எடுக்கும்
எம்வீட்டுக் குழந்தைகளின்
பொங்கல் கொண்டாட்டத்தைக் காண்கையில்.

பொங்கலோ பொங்கல்.