Thursday, December 12

மனம்

ஏதும் வேண்டாம் என்று
ஒதுங்கி நிற்கும்..
எல்லாம் வேண்டும் என்று
ஆடி எழும்.

விட்டுத் தள்ளு என்று
பற்று அறுக்கும்.
விடவே முடியாது என்று
பிடித்து இழுக்கும்.

அமைதியாய் இருப்பவரை
ஆட வைக்கும்.
ஆடிக் கொண்டிருப்பவரை
அரற்ற வைக்கும்.

சிரித்தால் சிரிக்காதே
அழுதால் அழாதே.
கோபமுற்றால்
கோபம் கொள்ளாதே.
வருத்தம் கொண்டால்
வருந்தாதே.
பகை கொண்டால்
பகைக்காதே.
பணிந்து போனால் பணியாதே.

ஏதும் வேண்டாம் என்றால்
ஏதாவது செய்.
ஏதாவது செய்தால்
ஒன்றும் செய்யாதே.

அப்பப்பா...
இந்த மனதின்படி
வாழக்கூடாது என்றெண்ணும் போது
'மனம்போல் வாழ்வு',
'மனதின்கண் மாசிலன் ஆதல்'
எனச் சொல்லி நகைக்கும்.

No comments:

Post a Comment