Sunday, November 17

இறைமையின் உண்மை.. எனக்குப் புரிந்தது

      இறைமை நினைத்தபடி நாமும் நினைத்து விட்டால் அருமை. வாழ்க்கை இனிமை...

இறைமை நினைத்தபடி நடக்காது, நாம் ஒன்று நினைத்து அதன்படி நடந்தால் வாழ்க்கை கடினம்.

இறைவன் நினைத்ததை புரிந்து கொள்வதுதான்  வாழ்க்கை. அதற்குத்தான் இத்துணை போராட்டங்கள்.

எப்படி புரிந்து கொள்வது? உள்ளம் இறைவன் வாழும் இடம் என்று தெளிந்து அதனை மாசற்று வைக்க முயல்வோம்..

ஆனால் இந்த நிலவுலகில் பிறந்து விட்டதனால், நம் உள்ளம் சில நேரம் தடுமாறவே செய்யும்.. அது பெரிய தவறு அல்ல. அதனைப் புரிந்து கொண்டு மீண்டும் அத்தவறினைத் தொடராது நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
இதுதான் ஊழ். துன்பம் வரும் போது மேலும் தவறு செய்யாது அதனைப் பொறுத்துக் கொளல் வேண்டும்..

இறைவனை நிந்திக்காது அவனிடமே அடிபணிந்து ஆறுதல் பெறலாம்.

இப்பூமியில் பிறந்து விட்டாலே, இன்பமும் துன்பமும் மாறி மாறி நம் வாழ்வில்  வந்து கொண்டேதான் இருக்கும்.
நம் மனதும் அதற்கேற்ப ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

எல்லாம் நாம் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தால் நாம் ஞானியாகி விடுவோம்.

ஞானியாகி விட்டபின் எதன்மேலும் பற்றற்று போய்விடும். பற்றற்ற ஞானியர்க்கு நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணமில்லாது போய்விடும்.
சித்தன்போக்கு சிவன்போக்கு என்று அமைதியாகி விடுவர்.  மக்கள் நலனே மகேசன் நலன் என்று உலக நன்மைக்கு பாடுபடுபவர்.

*இறுதியாக ஊழைப் பற்றியோ, விதியைப் பற்றியோ கவலைப்படாது அச்சப்படாது செயல்களோ, வினைகளோ ஆற்றுவோம்.. வரும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அழுகை வந்தால் அழுவோம். மகிழ்ச்சி வந்தால் மகிழ்வோம். தீய குணங்கள் நெருங்கும் போது அறிந்து கொள்ள முயல்வோம். போற்றலும் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று வாழ்வோம்.*

    எடுத்துக்காட்டாக...
நம் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாத போது, ice cream, pizzaபோன்ற உணவுகள் கேட்டு அழுதால் நாம் வாங்கித் தருவோமா?

அதுபோல நம் உள்ளம் சரியில்லாத போது,  நாம் குழந்தைத்தனமாக ஏதேனும் கேட்டால்,  இறைவன் தர மறுக்கிறான்..

ஆனால் நாமோ குழந்தைகள் போன்று அவனிடம் அழுது புரண்டு அவனைத் திட்டி, அடம் வைத்து நினைத்ததை நடத்தி விடுகிறோம்.
இறுதியில் மேலும் துன்பங்கள்.

எனவே நமக்கு வேண்டியதை விரும்புவோம். அது நமக்கு உகந்தது எனில் இறைவனே நம்மிடம் வந்து சேர்ப்பான்.

தேவையற்றது எனில் நமக்கு புரிய வைப்பான்.  எனவே ஆழ்ந்த விருப்பம் வைப்போம்.. கிடைத்தால் நிம்மதிய டைவோம். கிடைக்கவில்லையெனில் மிகுந்த நிம்மதியடைவோம்.

எனக்கு கிடைக்காமல் போன, நான் தவறவிட்ட எததனையோ வாய்ப்புகளினால் அப்போதைக்கு நான் வருத்தமுற்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களிலேயே உண்மை புரிந்து பெரும் நிம்மதியும் மகிழ்வும் அடைந்திருக்கிறேன்.

அதே வசனத்துடன் முடிக்கிறேன்.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது.

குறிப்பு:
---------------
     மேலே சொன்ன இவையனைத்தும் எனனுள் உதித்த சிந்தனைகள் அல்ல. நான் கற்ற பல நூல்களிலிந்தும், நான் கேட்ட பல ஆசான்களின் பேச்சிலிருந்தும் இப்போதைய எனது புரிதல். இவை மாறலாம்.

நன்றி..
🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment