Friday, August 28

என் மௌனத்தை உடைத்தால்...

என் மௌனத்தை 
யார் உடைப்பது 
என்னைத் தவிர.. 
எனக்கு உடைக்கும் எண்ணம்
 இப்போதைக்கு இல்லை. 
உடைத்தால் 
உன் இதயம் உடையுமே. 

 எந்தன் மௌனம் 
 எழுப்பும் ஆரவாரத்தில் 
உந்தன் சொற்களின் 
 சப்தங்கள் எடுபடுமா?

 என் மௌனம் உடைந்து
 உன்னிடம் கேள்விகளாகும் போது
 என்ன பதில் உரைப்பாய்? 
என் மௌனம் எனக்குப் பழக்கம். 
உன் அமைதி உனக்குப் பழக்கமா?
 விட்டு விடு .. 

மௌனம் உடைக்கும் எண்ணம் 
இப்போதைக்கு இல்லை எனக்கு. 

Thursday, August 27

பொருள் தேடி....


 

என்கையிலுள்ள கோலுக்கும்
பொருள் இல்லை.
உன்கழுத்திலுள்ள சங்கிலிக்கும்
பொருள் இல்லை.
நம்வாழ்வு நல்வாழ்வாகவும்
பொருள் இல்லை.

பொருள் தேடியே போகிறது
ஒவ்வொரு நாளும்..
என்றோ ஒருநாள்
குட்டிக் குழந்தை
கைக்கொட்டி சிரிக்கும்..
அந்நாள்தவிர
எல்லாநாளும்
பொருளற்றதாகவே ஆகிறது.

குழந்தை அறியுமோ
வாழ்விற்கு பொருள் தேவை என்பதை.!
நாம் அறிவோமா
வாழ்விற்கு பொருள் மட்டும்
தேவையில்லை எனபதை.!!

எனக்கானது என்றிருந்தேன்

கருவறையில் குடியிருந்தேன். 

இவ்வறை எனக்கானது என்று. 

முன்னும் பின்னும் குழவிகள் 

வந்து போனது அறியாமல்.. 

 பத்து மாதத்தில் தள்ளிவிட்டனர் 

வெளியே தாயென்றாலும் 

வாயும் வயிறும் வேறுதானே.


 பள்ளிமுழுதும் 

 எனக்கானது என்றிருந்தேன். 

அகவை பதினெட்டானதும் 

தள்ளி விட்டனர் வெளியே.


 இப்போது விழுந்த இடம் கல்லூரி.. 

வெறும் மூன்று ஆண்டுகள். 

தள்ளி விட்டனர் வெளியே.


 அப்பாடா இது எனக்கானதுதான் 

என்று என்வீட்டில் அமர.. 

அங்கிருந்து கூட 

தள்ளிவிட்டனர் வெளியே


இப்போது புகுந்ததோ 

புகுந்த வீடு..புது வீடு.. 

 ஒருவழியாக இதுதான்

 எனக்கானது என்றிருந்தேன். 

பத்தே வருடங்கள் தான்.... 

கிளம்பு காற்று வரட்டும் 

என்று தள்ளி விட்டனர் வெளியே..


 இம்முறை என்னால் தனியே 

பயணப்பட முடியவில்லை. 

நால்வர் உடன்வர. 

பயணம் இனிதே தொடங்குகிறது..

 சென்ற பின்புதான் தெரியும்

 அவ்விடமாவது 

எனக்கானதுதானா என்று..


Wednesday, August 26

நிரபராதிகளின் நரகம்

 நிரபராதிகளுக்கென்றும் 

குற்றவாளிகளுக்கென்றும் 

தனியே நரகம் உண்டா? 


அத்துணை நல்லவர்களா நாம்?

 எவரோ செய்த தவறுக்கு 

எவர் மாட்டுவார் எனக் 

காத்திருக்கும் கூட்டமல்லவா நாம்?


 பிறர் பற்றிய பொய்ச்செய்தியை

 தீயாய் பரப்பி வாயால் 

வடைசுடுபவர் தாமே நாம்?


 ஆனாலும்.... 'தேரா மன்னா' 

என்று விளித்து

 உண்மை உரைத்தவுடன் 

உயிர்நீத்த மரபு நம்மரபு.


 நிரபராதிகளுக்கு நரகம் 

என்றொன்று தனியே வேண்டா. 

பிறரின் இழிபார்வையே நரகம்..

பிறரின் இழிசொல்லே நரகம்..


Tuesday, August 25

கடவுளுக்கு ஒரு கடிதம்

 

முறையான முகவரி இல்லையென

 அஞ்சல் செய்யாத கடிதமாய் 

திரும்பி வருகின்றன - உனக்கென

 நானெழுதும் ஒவ்வொரு கடிதமும்.. 


 அண்டமெல்லாம் நிறைந்த

 ஆண்டவனுக்கு முறையான 

முகவரி இல்லையா? 

முறையிடவும் கண்ணில்

 தெரிவதில்லை நீயெனக்கு....


 கண்மூடி வேண்டியவளுக்குப் 

புரிந்தது கடவுள் என்பார் 

அண்டத்தில் இல்லை

 இக்கண்டத்திலும் இல்லை.. 

இம்மனம் *கட*ந்து *உள்*

 இருக்கிறானென்று... 

 இனி எழுதுகிறேன் 

எழுத்தில்லா சொல்லில்லா 

எழுதுகோல் இல்லா 

எண்ணங்களால் ஒரு கடிதம் - நல்

 எண்ணங்களால் ஒரு கடிதம் 

*கடவுளுக்கு ஒரு கடிதம்*

நம்பிக்கைதானே எல்லாம்

வீழ்ந்தவர்க்கு நீளும் கரமும்
எழுந்தவர்க்கு இழுக்கும் கரமும்
*நம்பிக்கை தானே எல்லாம் ...*

துவண்டவர்க்கு ஆற்று மொழியும்
உவந்தோர்க்கு வாழ்த் தொலியும்
*நம்பிக்கை தானே எல்லாம் ...*

ஒருதுளி நஞ்சால் போகும் உயிரை
ஒருசொல் நிறுத்தி வைக்குமே
*நம்பிக்கை தானே எல்லாம்..*

நம்பியவர் கைவிட
நயனங்கள் கண்ணீர்விட
வாழ்வில்லை என்பார்க்கு
வாய்ச்சொல்கூட வேண்டாம்
நம் புன்னகை போதும்
*நம்பிக்கை தானே எல்லாம்..*.

நாளை நமதாவது இருக்கட்டும்
இன்றை நமதாக்குவோம் முதலில்
பறந்து செல்லும் புறாக்கள் சொல்லட்டும்
இன்று புதிதாய் பிறந்தோம் என்று.
*நம்பிக்கை தானே எல்லாம்..*

Monday, August 24

நான் விற்பனைக்கு அல்ல


 பொருள் கொடுத்து 

பொருள் வாங்கும் 

பூவுலகில் 

 நான் விற்பனைக்கல்ல. 

என் பெயர் *அறம்* 


 புன்னகையும் பொன்னகையும்

 பொட்டலமாய் தந்தாலும் 

 நான் விற்பனைக்கல்ல. 

என் பெயர் *அறம்* 


 உறவும் நட்பும் 

சுற்றி சுற்றி வந்தாலும் 

 நான் விற்பனைக்கல்ல. 

என் பெயர் *அறம்* 


 பலநேரம் பள்ளத்தில் இருப்பது

 போல தெரிந்தாலும் 

நான் விற்பனைக்கல்ல. 

என் பெயர் *அறம்* 


 சூது கவ்வினும் 

 சூத்திரம் வென்றிடினும் 

நான் விற்பனைக்கல்ல.

 என் பெயர் *அறம்*


Thursday, August 20

வானவில்லிடம் கோரிக்கை


வானில் தோன்றும் உன்னை

விணணவர் எவரும் வியப்பதில்லை.

மண்ணவர்தான் கண்ணகன்று...

 

வாய்பிளந்து காண்பதில்

வயதொன்றும் தெரிவதில்லை.

குழந்தை முதல் கிழவிவரை..

 

ஓரிரு மணித்துளிகள்தான்

உன்காட்சி - ஆனால்

ஓராறு மணிநேரம்

உன்னைப் பற்றியே பேச்சு.

 

வடிவம் வட்டம் என்பார்கள்.

வில்லென்று பேர்வாங்கி

விண்ணிற்கு அழகானாய்.

 

உன்னழகைக் காணச் சொன்னால்

உயிருள்ளவரை காணலாம்.

எழுதச் சொன்னால் அத்தனை

எழுத்திற்கு எங்கு போவேன் நான்??

 

எப்போதும்

நீ தோன்றும் நேரத்தில்

நீ மட்டுமே நாயகி

நீ மட்டுமே அரசி.

 

இப்போதும்

முன்னிற்கும் பட்டமரம் தாண்டி

ஈர்க்கிறாய் .

பச்சை மரங்கள் தாண்டி

கவர்கிறாய்.

 

மீண்டும் தோன்றும் போது

முன்னரே சொல்லியனுப்பு..

வாயில் திறப்பதற்குள்

முடிந்து விடுகிறாய்.

 

காணாத ஏக்கம் என்னுள் வைத்து

கண்டவர்கள்மேல் அழுக்காறு கொண்டு.

தேவைதானா நமக்கு!

 

இனி

மீண்டும் தோன்றும் போது

முன்னரே சொல்லியனுப்பு!!


Monday, August 17

தனிமை தேடி


குடும்பம் என்னும் கைவிலங்கு

கைககளை இறுக்கியபடியிருக்க

மகளாய்,
சகோதரியாய்,
மனைவியாய்,
மருமகளாய்,
தாயாய் ...

தனியொருவளாக
கைவிலங்குகள் அறுபட
தனிமை தேடி பயணப்பட
நானென்ன
சித்தார்த்தனா?
யசோதை அல்லவா!!!

சாலைகூட யாருமற்று
நீண்டு கிடக்க...
செவ்வானமும்
என் தனி வருகைக்குக்
காத்திருப்பதாக சொல்லி
கண்சிமிட்டியது.

அவ்வப்போது
கைவிலங்கோடு
கண்மூடி தனிமை கொள்கிறேன்.
செவ்வானமும்
நீள்பாதையும்
இன்னும் எனக்காக
காத்திருக்கின்றன
தனிமையில்!!!

Saturday, August 8

வண்ண வண்ண சொப்புகள்


 வண்ண வண்ண சொப்புகள்

வரிசையாய் கண்டவுடன்
எனபெண்ணே என்முன்
வந்து நின்றாள் ..

பொம்மைகளோ
சொப்புகளோ
அடுக்கி வைத்தல்
அவளுக்கு கைவந்த கலை.

ஈயம், மரம், நெகிழியென
வகைவகையாய் சொப்புகள்
உண்டு அவளிடம்..
உணவுப் பொருட்களும்
உடனிருக்கும்.

முதலில் சொப்புகளை அடுக்குவாள்.
அடுத்து உணவகத்திற்கு
பெயர்சூட்டும் படலம்.
முடிந்தவுடன்
உணவுப்பட்டியல் தயாரிப்பு.
அதற்கான விலைப்பட்டியலும்..
மஸ்கட் உணவகத்தில்
விலை மாத்திரம்
இந்திய மதிப்பில்..

இப்போது நுகர்வோரின்
தேவை அறியப்படும்.
நீங்கள் என்ன அருந்த கேட்டாலும்
தேநீர் கோப்பைகளில்தான் வரும்.
உணவு அதற்கான தட்டுகளில்..

நிறைவில் உணவுக்கான
கட்டணம் வரும்.
நாம் பணம் தர வேண்டும்.
அதையும் அவளே
தாள்களில் எழுதியிருப்பாள்.

இப்படி நான் அவளிடம்
உணவு உண்டுதான்
எனது எடை கூடியது
என்றால் நம்பவா போகிறீர்கள்?
அவளிடம்
கொடுத்த பணத்திற்கு
உண்மை மதிப்பிருந்தால்
ஊரையே வாங்கியிருக்கலாம்.
குடித்த தேநீருக்கோ
தேயிலைத் தோட்டமும் சேர்த்து..

ஒவ்வொரு
பத்து மணித்துள்களுக்கு
ஒரு உணவுவட்ட விளையாட்டு..

சில நாள்களுக்குப் பிறகு
பார்பி பொம்மைகள்
அவளிடம் பேச
ஆரம்பித்த பின்புதான்
அம்மாவிடம் ஆர்டர்
கேட்பது குறைந்தது..

*ஆனாலும் ஓர் ஐயம்.*
அத்தனை தேநீர் குடித்தும்
*பார்பிகள் மாத்திரம் எப்படி அப்படியே இருக்கின்றன???*

Thursday, August 6

முகமூடிகளின் புலம்பல்கள்


 எத்தனை முறை மாற்றுவாய்

ஒருநாளைக்கு

எத்தனை முறை மாற்றுவாய்

முகமறந்து போகுமளவு

சொந்த முகமறந்து போகுமளவு

எத்தனை முறை மாற்றுவாய்

 

எங்களுக்கே சலித்து விட்டது..

முகமூடிகள் நாங்கள்

எங்களுக்கே சலித்து விட்டது.

உன்னில் எதனை மறைக்க

எங்களை மாற்றிக் கொண்டேயிருக்கிறாய்?

 

நீ அணிந்து வீசிய நாங்கள்

மண்மூடாமலும்

கண் மூடாமலும்

வீதி முழுதும்.

 

எல்லாம் சரி...

வீசப்பட்ட நாங்கள்

மீண்டும் தேவைப்படின்

எப்படி கண்டுபிடிப்பாய்?

இந்த பொய்முகத்திற்கு

இந்த முகமூடிதான் என்று..

 

ஒன்று சொல்கிறேன் கேள்.

வீசப்பட்ட நாங்கள்

வீசப்பட்டவையாகவே

இருந்து கொள்கிறோம்.

இனியாவது

உன் உண்மை முகங்காட்டு.

 

எங்களுக்காக இல்லை..

உனக்காக..

முகமூடியின்றி

மூச்சு விட்டுப்பார் - இனி

ஒருபோதும் தொடமாட்டாய்

எங்களை..

நாங்களும் இனி சுதந்திரமாய்!!!