எல்லோரும் கடலில் முத்து எடுக்கும் போது நான் இப்போதுதான் கால் நனைக்கிறேன், முத்து எடுக்கும் நாளை எதிர் நோக்கி!
Saturday, August 8
வண்ண வண்ண சொப்புகள்
வண்ண வண்ண சொப்புகள்வரிசையாய் கண்டவுடன்
எனபெண்ணே என்முன்
வந்து நின்றாள் ..
பொம்மைகளோ
சொப்புகளோ
அடுக்கி வைத்தல்
அவளுக்கு கைவந்த கலை.
ஈயம், மரம், நெகிழியென
வகைவகையாய் சொப்புகள்
உண்டு அவளிடம்..
உணவுப் பொருட்களும்
உடனிருக்கும்.
முதலில் சொப்புகளை அடுக்குவாள்.
அடுத்து உணவகத்திற்கு
பெயர்சூட்டும் படலம்.
முடிந்தவுடன்
உணவுப்பட்டியல் தயாரிப்பு.
அதற்கான விலைப்பட்டியலும்..
மஸ்கட் உணவகத்தில்
விலை மாத்திரம்
இந்திய மதிப்பில்..
இப்போது நுகர்வோரின்
தேவை அறியப்படும்.
நீங்கள் என்ன அருந்த கேட்டாலும்
தேநீர் கோப்பைகளில்தான் வரும்.
உணவு அதற்கான தட்டுகளில்..
நிறைவில் உணவுக்கான
கட்டணம் வரும்.
நாம் பணம் தர வேண்டும்.
அதையும் அவளே
தாள்களில் எழுதியிருப்பாள்.
இப்படி நான் அவளிடம்
உணவு உண்டுதான்
எனது எடை கூடியது
என்றால் நம்பவா போகிறீர்கள்?
அவளிடம்
கொடுத்த பணத்திற்கு
உண்மை மதிப்பிருந்தால்
ஊரையே வாங்கியிருக்கலாம்.
குடித்த தேநீருக்கோ
தேயிலைத் தோட்டமும் சேர்த்து..
ஒவ்வொரு
பத்து மணித்துள்களுக்கு
ஒரு உணவுவட்ட விளையாட்டு..
சில நாள்களுக்குப் பிறகு
பார்பி பொம்மைகள்
அவளிடம் பேச
ஆரம்பித்த பின்புதான்
அம்மாவிடம் ஆர்டர்
கேட்பது குறைந்தது..
*ஆனாலும் ஓர் ஐயம்.*
அத்தனை தேநீர் குடித்தும்
*பார்பிகள் மாத்திரம் எப்படி அப்படியே இருக்கின்றன???*
No comments:
Post a Comment