Wednesday, October 24

முதுகாய் இருக்க முயற்சிப்போம்


மலைமேல் ஓர் குடில்..
மலையின் முதல் படியோ
சற்றே உயரமாய்..
மற்ற படிக்கட்டுக்கள்
ஏறுவதற்கு இலகுவாய்..

முதல் படி ஏற
முயற்சித்த மக்கள் ..
கீழே விழுந்த வண்ணம்.....

காட்சியைக் கவனித்தபடி இருந்த
ஒரு முதுகு
எவரையும்  கேட்காமல்
தானே  குனிந்தது.

முதுகில்  முதல் அடியும்
மலையின் படியில்
அடுத்த அடியும் வைத்தபடி
மக்கள் மலையேறினர்.
மலையேறும் போது
ஒருவருக்கொருவர் உதவியபடி.

குனிந்த முதுகுக்கு
குடிலுக்கு போக விருப்பம்..
இருந்தும்
குனிந்தபடி இருந்தது.

இடும்பை தாங்காது
இடுப்பை நிமிர்த்தலாம்
என்னும் போது
ஒரு கை மட்டும்
ஆதரவாய் அவ்வப்போது
நீவி விடும்.

நெடுநாள் ஆனது..
முதுகுக்கு ஓர் எண்ணம் உதித்தது.
குனிந்தே இருத்தலின்
குட்டியாய் படியொன்று
இருந்திட்டால்..
நீவ வந்த கையிடம்
வைத்தது இந்த வேண்டுகோள்.
குனிந்தபடியே படியும்
தயாரானது.

மக்களும் படிக்கு பழகிவிட
முதுகு நிமிர்நதது.
குனிந்தபடி இருந்ததால்
சிறிது ஓய்வெடுக்க

மேலேறிய மக்களோ
கீழ் இருந்த முதுகை
கீழ்மையாய் கண்டனர்.
நீவிய கையும் கூட சேர
தவித்த முதுகு
தாழ்ந்தது இன்னும்.

அப்போது நிகழ்ந்தது
அற்புதம்.
அன்புக்கரமொன்று
குடிலிலிருந்து நீண்டது.
குனிந்து முதுகை நிமிரச் சொன்னது.
நிமிர்ந்ததுதான் தெரியும் அடுத்த
நொடி குடிலில்..

மலையுயரம் கண்டு
மலைத்தபடி மக்கள்
இன்னும் ஏறியபடி.
குனிந்து முதுகு கீழிருப்பதாய்
இன்னும் எண்ணியபடி

மக்கள் குடிலடைய
மாற்றுவழி சிந்தித்தபடி
குடிலின் குளுமையில்
அருள்கரத்தின் ஆதரவில்
அமைதியாய் முதுகு....

 


Wednesday, October 17

#Me too - #என்னையும் தான்

இரு வார்த்தை தான் - ஆனால்
இந்தியாவையே அசைத்தபடி!!
சில ஆண்களின் சபலம்
அவர் புகழை
சிலுவையில் அறைந்தபடி!!
இருக்கட்டும்....

பெண்ணொருவர் சொன்னபடி ..
'மன உறுதி பெண்களிடம்
கண்ணீர்க் கதைகள் இல்லை.
மாறாய் அவனை(ரை)
அடித்து விரட்டிய
குறுஞ்செய்தி மாத்திரமே...'

எனக்கும் இதுவே கருத்து.
தொட்ட ஆணின் சட்டை இறுக்கும்
உறுதியான கைகள் இல்லைதான்
தொட்ட ஆண் தொட முடியா
உயரத்தில் உள்ளபோது..
அவன்(ர்) உயரத்திற்கு
ஏறிய பின் சட்டை பிடிக்கலாம்
என்பது முறைமையோ?

பெண்ணைச் சிறுமைப்படுத்தும்
ஆண்கள் எவரும் முத்துக்கள் அல்லர்.
அவர்புகழ்பாட வரவில்லை
எவரும் இங்கே..

கரடிகளைக் கண்டதும்
சிவபூசையையே
நிறுத்தும் போது,

புலிகளைக் கை காட்ட மட்டும்
காலநேரம் வேண்டுமா?

ஒவ்வோர் துறையாய்
உயர ஏறியபின்
கைகாட்டுதல் முறையா?

பலியாடாய் இருந்தும்
பழிவாங்கப்படுதல் பெண் மாத்திரமே...
முதல்முறை வாய்மூடினால்
முப்பது முறையும் வாய்மூட வேண்டுமே?
இனியாவது...

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்."

வள்ளுவன் சொன்னதுதான்.
செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாதவைகளால் நாமும் கெடுவோம்..
நம் புகழும் கெடும்..