Thursday, January 31

மனமும் மதமும்


மனம் கொடுத்தான் இறைவன்
மதம் படைத்தான் மனிதன்

மனம் கொடுத்த இறைவன்
அன்பும் சேர்த்தே  கொடுத்தான்.
மதம் படைத்த மனிதன்
அன்பை மனதைவிட்டே நீக்கினான்.

மதமா மனமா எனும்போது
மனதின்வழி சென்றோர்
கடவுளின் குழந்தைகள்.
மதத்தின்வழி சென்றோர்
மனிதனின் கழிவுகள்.

மனம் அழித்து மதம் பேண
சிவனும் சொல்லவில்லை.
எவரும் சொல்லவில்லை.

அன்பே கடவுள்.
அறிவாயா மனமே?
அறிவாயா மதமே?

Monday, January 14

பொங்கலோ பொங்கல்

எம்மிடம் ஒருபோதும்
வயல் இருந்ததில்லை..
வாய்க்காவரப்பில் நடந்ததில்லை.
மாடு இருந்ததில்லை.
பால் கறந்து பழக்கமில்லை..
தோட்டம் இருந்ததில்லை.
பழம் பறித்து உண்டதில்லை.

ஆனாலும்
பொங்கல் மட்டும் வைத்திடுவோம்.
புத்தாடைகளும் அணிந்திடுவோம்.
 மாவிலைத் தோரணம் கட்டிடுவோம்.
இஞ்சிமஞ்சள் கரும்புடனும்
பனங்கிழங்கும் படைத்திடுவோம்.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
அடுப்பில் பொங்கும் பொங்கலுக்கு
பின்னணி இசையும் சேர்த்திடுவோம்.

இதுமட்டிலுமாவது செய்தோமே
என்றெண்ணத் தோன்றுகிறது...
பொங்கலன்று ஒளிபரப்பாகும்
படங்களைப் பொருத்து
பள்ளிக்கு விடுப்பு எடுக்கும்
எம்வீட்டுக் குழந்தைகளின்
பொங்கல் கொண்டாட்டத்தைக் காண்கையில்.

பொங்கலோ பொங்கல்.