Monday, September 21

என் விருப்பமாய் நான்


 கல்லாய் இருத்தலும்

பாறையாய் இருத்தலும்

சிலையாய் மாறுதலும்

சிற்பமாய் உருப்பெறுதலும்

உன் விருப்பமன்றோ?

பார்ப்பவரின் கண்ணில்தான்

நீ கல்

நீ பாறை

நீ சிலை

நீ சிற்பம் எல்லாம்.

உன்னிலிருக்கும் உனக்கு

மட்டும் தெரியும்

நீ யாரென

நீ மதி உன்னை.

நீ வியந்துபார் உன்னை

 

அடுத்தவர் சொல்லுக்கு

உளி எடுக்காதே

உன் நிறைவுக்கு உளியெடு.

 

பிறருக்காய் உளியெடுத்தால்

பிறர் விரும்பும் சிலையாவோம்

நமக்காய் உளியெடுத்தால்

நாம் விரும்பும் சிலையாவோம்.

Thursday, September 17

புறாக்களே புறாக்களே


புறாக்களே புறாக்களே

எங்கே போறீங்க?

பறந்துகூட போகாம எங்கே போறீங்க?

நடந்துநடந்து போனாக்கா அடைய முடியுமா?

நடக்கஇது நேரமில்லை பறந்து செல்லுங்க!!

 

நிழலுபார்க்க உயரமிறங்கி இங்க வந்தீங்க

நிழலுபார்த்த மகிழ்ச்சியில

எங்கே போவீங்க?

எனக்குமட்டும் எங்கேன்னு சொல்லிச் செல்லுங்க

மெனக்கெட்டு காத்திருக்கேன் பதில் சொல்லுங்க

 

மருண்ட கண்ணு மானுக் குன்னா

உருண்ட கண்ணு உங்க ளுக்கு

கரண்டு கம்பி காக்கா குன்னா

இருண்ட மாடம் உங்க ளுக்கு

 

பார்த்து பார்த்து வியந்துடுவோம்

பார்வை பார்த்து மயங்கிடுவோம்

கல்லெ டுத்து வீசிடுவோம்

கவிதை கூட எழுதிடுவோம்.

 

மானங்கெட்ட மனுசங்கதான்

தோணுறதை செஞ்சிடுவோம்

கொரானாக்கு நல்லதுன்னு

குறுஞ்செய்தி வந்த்துன்னா

புறாக்கறியும் தின்னுடுவோம்.

மானங்கெட்ட மனுசங்கதான்

தோணுறதை செஞ்சிடுவோம்..

Monday, September 14

கரகாட்டக்காரி


 

சிவப்புவண்ணச் சேலைக்காரி

சலங்கை கட்டிய பாதக்காரி

பச்சைவண்ண வளவிக்காரி

பாதந்தூக்கும் கரகக்காரி

 

சுத்திசுத்தி ஆடுவாள்.

சுழன்றுசுழன்று ஆடுவாள்.

கச்சிதமாய் தாளையே

கண்ணிலெடுத்து ஆட்டுவாள்.

 

சேலைகட்டிக் காட்டுவாள்

ஏணிஏறிக் காட்டுவாள்

தலையிலுள்ள கரகமும்

தரைவிழாது ஆடுவாள்

 

எத்தனைதான் வித்தைகள்

அத்தனையும் காட்டியும்

கூட்டமது மயங்காது

கொட்டியும் கொடுக்காது

 

உடல்காட்டி ஆடிடும்

உச்சகட்ட நடிகைக்கு

கோடிதரும் மக்களே

கொஞ்சம்நின்னு கேளுங்க

 

முடிகிடி வெட்டவும்

முட்டைஒண்ணு வாங்கவும்

படியரிசி வாங்கவும்

படிப்புச்செலவு பார்க்கவும்

 

கூட்டுக்கறி வைக்கவும்

வீட்டுவாடகை கொடுக்கவும்

கைதொழுது நிற்கிறாள்

காசுதந்து போங்களேன்!!

Thursday, September 10

எலிக்காதல்


 மனிதனுக்கு மண்டியிட்டே பழக்கம்.

எலிகளுக்கு இல்லை அவ்வழக்கம்.

 

பெற்றவள் பிடித்திழுக்கவில்லை.

மற்றவள் இழுக்கிறாள்.

 

மாதவிக்கு மலர் கொடுக்க

விடுவதற்கு

கண்ணகியா  நானென்றவாறு

கைபிடித்தே இழுக்கிறாள்.

 

இதயம் கொடுக்கும்போது

சும்மா இருந்துவிட்டு

மலர் கொடுக்கும் போது

மறித்தால் என்செய்வது?

 

தொங்கிபடியே கொடுக்கும் வண்ணமலர்

உதிர்வதற்குள்

பெற்றுக் கொள்ளடி..

Monday, September 7

தாத்தாவிற்கு...


 நீங்கள் காகமாக வந்தீர்களாமே.

நேற்று பாட்டி சொன்னார்கள்.

எனக்குத் தான் தெரியவில்லை.

எப்படிக் கண்டு பிடிப்பதென்று!!

எத்தனை காகங்கள் வந்தாலும்

எழுந்து எழுந்து கவளமிடும்

பாட்டிக்கு நீங்கள் மட்டும்

பளிச்சென்று தெரிவதெப்படி!!


உங்களுக்கு பிடித்த உளுந்தவடை

உங்களுக்குப் பிடித்த ஊத்தப்பம்

பார்த்து பார்த்து செய்கிறாள்

பார்த்து பார்த்து வைக்கிறாள்

இருக்கும் போதும் அவள்சமையல்

இறந்த பின்பும் அவள்சமையல்

அடுப்படி உலகத்தை இன்னும்

அடுத்தவருக்கு தர மறுக்கிறாள் 


இப்போதும் இந்தக் கூட்டத்தில்

உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குனிந்தபடி கொத்திக் கொண்டிருக்கும்

குறுகிய கழுத்திருக்கும் காகமா

நிலைத்த பார்வையுடன் வடைக்காக

நிமிர்ந்தபடி இருக்கும் காகமா

கண்டேன் தாத்தனை எனக்

களிப்பினில் கத்தத் தொடங்கும்போது


பின்மாடியில் ஓர் கூப்பாடு

"பாட்டி தாத்தா வந்துட்டாரு" என..

அப்போதுதான் புரிந்தது

பாட்டி பேரன் இருக்கும்

வீடுகளில் எல்லாம் இதுவொரு

வேறுபாடில்லா காட்சியென..

நீங்களும் தேடுங்கள் காக்கைக்

கூட்டங்களில் உங்கள் தாத்தனை!!!


இரா.கோகிலவாணி கார்த்திகேயன் 


Thursday, September 3

தொடர்வண்டி..



புகைவண்டி
இரயில் வண்டி..

என்னை எப்போதும் ஈர்க்கும் வண்டி
முன்னை முப்பொழுதும் செல்லும் வண்டி
என்னை என்னிடம் சேர்க்கும் வண்டி
சென்னை சென்றிட உதவும் வண்டி

பனியால் பாதை மூடும் வண்டி
தனியான தனிமை தரும் வண்டி
இனிதாய் இயல்பாய் போகும் வண்டி
மனிதன் மனத்தை மாற்றும் வண்டி

கனிதரும் மரங்கள் கடக்கும் வண்டி
பனிமூடிய புற்கள் கடக்கும் வண்டி
குனியவும் படுக்கவும் முடியும் வண்டி
நனிமிகு நன்மைகள் செய்யும் வண்டி

தொடரி பயணங்கள்


 

என்னை நானாக உணரச்செய்யும்

தருணங்களில் ரயில்பயணமும் ஒன்று.

நீலக்கடல்சூழ் கூப்ரா கடற்கரையும் ஒன்று.

நீண்டு நெளிந்தோடும் ஆறு போல்

இரைச்சலோடு ஓடும் தொடரி.

 

இரவு வெக்கையில் சென்னையிலிருந்து  கிளம்பி

இனிய வைகறையில் மதுரையைக் கடக்கும்போது

இதுவல்லவோ இன்பம் என்று மெய்மறப்பேன்

இன்னும் கயத்தாறு வரும்போது காற்றலைகள்...

 

கண்மூடி மயங்கி இருக்கும் போது

வடைகாபி, பூரிக்கிழங்கு போளியின் குரல்.

வாழ்வே இதற்குத்தானே என்று

வருவதை எல்லாம் வாங்கி வைப்பேன்.

 

நெல்லை வந்தாச்சு என்பதை நிலம்

சொல்லும் போது வரும் ஆனந்தம்..

இனிய தொடரியின் பயணத்திற்கு

இனிதே காத்திருக்கிறேன் .