Monday, September 7

தாத்தாவிற்கு...


 நீங்கள் காகமாக வந்தீர்களாமே.

நேற்று பாட்டி சொன்னார்கள்.

எனக்குத் தான் தெரியவில்லை.

எப்படிக் கண்டு பிடிப்பதென்று!!

எத்தனை காகங்கள் வந்தாலும்

எழுந்து எழுந்து கவளமிடும்

பாட்டிக்கு நீங்கள் மட்டும்

பளிச்சென்று தெரிவதெப்படி!!


உங்களுக்கு பிடித்த உளுந்தவடை

உங்களுக்குப் பிடித்த ஊத்தப்பம்

பார்த்து பார்த்து செய்கிறாள்

பார்த்து பார்த்து வைக்கிறாள்

இருக்கும் போதும் அவள்சமையல்

இறந்த பின்பும் அவள்சமையல்

அடுப்படி உலகத்தை இன்னும்

அடுத்தவருக்கு தர மறுக்கிறாள் 


இப்போதும் இந்தக் கூட்டத்தில்

உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குனிந்தபடி கொத்திக் கொண்டிருக்கும்

குறுகிய கழுத்திருக்கும் காகமா

நிலைத்த பார்வையுடன் வடைக்காக

நிமிர்ந்தபடி இருக்கும் காகமா

கண்டேன் தாத்தனை எனக்

களிப்பினில் கத்தத் தொடங்கும்போது


பின்மாடியில் ஓர் கூப்பாடு

"பாட்டி தாத்தா வந்துட்டாரு" என..

அப்போதுதான் புரிந்தது

பாட்டி பேரன் இருக்கும்

வீடுகளில் எல்லாம் இதுவொரு

வேறுபாடில்லா காட்சியென..

நீங்களும் தேடுங்கள் காக்கைக்

கூட்டங்களில் உங்கள் தாத்தனை!!!


இரா.கோகிலவாணி கார்த்திகேயன் 


No comments:

Post a Comment