Monday, November 30

துணை



 தன்முயற்சி தோற்றநிலையில்

தவித்திருந்தேன் நானும்தான்
நீட்டிய நம்பிக்கையாய்
நீண்டது தும்பிக்கையொன்று.

கரைசேர்த்து விடுவான்
கார்த்திகேயன் என்று.

பற்றிக்கொண்டேன் விடாது
பற்றும் கொண்டேன் அவன்பால்

காலன் வரும்வரை அவன்துணை
காலன் வந்தபின்  எவர்துணை.

ஆனாலும் படம்போல் அல்லாது
உருவம் மட்டும் மாற்றி.

யானை போல நானும்
ஆடு போல அவரும்

Thursday, November 26

இறையென்னும் ஆசிரியர்


அன்புக்கு தாயைச் சொல்வர்.

அருளுக்கு இறையைச் சொல்வர்.
ஆசிரியர் இரண்டுமானவர்.

அன்பும் அருளுமாய் வேண்டியவர்
பற்றின்பின் செல்லுதல் ஏற்பதற்கல்ல.

ஒரு மாணவர் நன்மைக்காய்
பிற மாணவர்நயன் கெடுத்தல்
அறமல்ல என்பேன் யான்.

பற்று வைத்தவர் அருமையென்பார்.
பற்றப்பட்டவர் மகிழ்வாவார்.
புறந்தள்ளப்பட்டவரோ மடமை ஆவார்.

ஆசிரியர் அன்னையென்றால்
அன்பாய் இருத்தலும்
எழுத்தறிவித்தவர் இறையென்றால்
அருளாய் இருந்தலுமே
அறமாகும் கல்விப்பணிக்கு..

இதுவே எம் கருத்து.

Monday, November 23

எறும்புகளை ஏனோ எனக்கு பிடிப்பதில்லை


யானை சுமக்கும் சுமை

எறும்பு சுமப்பதில்லை;
யானை தன்னில் பாதி
எடை கூட சுமக்காது;
எறும்போ தன்னின்
இருமடங்கு சுமக்கும்;
ஆனாலும்
எறும்புகளை ஏனோ
எனக்கு பிடிப்பதில்லை...

படுத்து உறங்கும்
விலங்குகளுக்கு இடையே
குதிரைகள் படுத்து
தூங்குவது இல்லையாம்,
நின்றபடியே தானாம்;
எறும்புகளோ ஒருகணம்
நிற்பது கூட இல்லை.
ஆனாலும்
எறும்புகளை ஏனோ
எனக்கு பிடிப்பதில்லை...

காரணமதை சிந்தித்தேன்
ஒரே ஒரு காரணம்தான்
தன்வேலை தன்முயற்சி
என்றிருக்கும் எறும்புகள்தான்
தன்வழியில் குறுக்கிடும்
தன்மையான மனிதரோ
பொன்போல் பட்டுபோல்
கன்னங்கொண்ட குழந்தையோ
கண்ணோட்டம் காணாது
கடித்து வைக்கும் எறும்புகள்

எவரும் தெரிந்து
உன்னை மிதிப்பதில்லை.
எவரும் தெரிந்து
உன்வழி வந்ததில்லை
இருந்தும் கடித்து வைக்கிறாய்
இறந்தும் அரிக்க வைக்கிறாய்.
இதனாலே எனக்கேனோ
எறும்புகளை பிடிப்பதில்லை.

இப்படிக்கு
*எறும்பிடம் கடிபட்டு*
*அரித்துக் கொண்டிருப்போர் சங்கம்.*
😁😁😁

(சும்மா நகைச்சுவைக்கு த்தான்..
எந்த எறும்பிடமும் சொல்லிவிடாதீர்கள்..😟😟😟)

Thursday, November 19

மனம் என்னும் மந்திர ஆற்றல்




இமயமலையின் இயற்கையா
பொதிகையின் பொலிவா
ஆழ்கடல் அழகா
எரிமலை சீற்றமா
நினைத்த மாத்திரத்தில்
நினைத்த இடம் காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்..

ஐந்தாம் வகுப்பில் வாங்கிய அடிகள்.
பத்தாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்.
கல்லூரிக் கால கலகல வாழ்க்கை.
திருமணத்தன்று செய்த ஒப்பனை.
நினைத்த மாத்திரத்தில்
நினைத்த கணம் காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்..

இன்பத்துள் இன்பம் விழையாமல்
துன்பத்துள் துன்பம் அடையாமல்
இக்கணத்தில் வாழும் நெறியினை மட்டும்
இன்னமும் தாராது
வேடிக்கை காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்

Monday, November 16

நத்தைகளின் காதல்


 சிலந்திவலையை

வெண்கொற்றமாய் பிடித்தவனே!

என் மனதும்
உன் மனதும் பொருந்தியென்ன?
ஓடுகள் பொருந்தவில்லையே!

செம்புலப்பெயல்நீர் போல கலந்தென்ன?
என்னை விட
அடர்வண்ணமாகி விட்டாயே!

எந்தையும் நுந்தையும்
ஒத்துக் கொள்வரோ?

ஊர்ந்துபோய்த் திருமணம்??
வேண்டவே வேண்டாம்..

காத்திருப்போம்
காலம் கனியும்வரை.

பொறுத்திருப்போம்
பெற்றோர்மனம் மாறும்வரை.

Thursday, November 12

கன்னங் கருத்த மச்சான்


 கன்னங் கருத்த மச்சான்

கட்டாக இருக்கும் மச்சான்
ஏதுமில்லா வண்டியில
ஏத்திப் போனா ஆகாதோ?

கன்னங் கருத்த பொண்ணு
கட்டான அழகுப் பொண்ணு
வண்டியில ஏத்திக் கிட்டா
பண்டம் ஏதும் தருவியாநீ?

பக்கத்துல நானிருக்க
பண்டம் கேட்கும் என்மச்சான்
தண்டத்துக் (கு)உன்னத்தான்
என்அத்தை பெத்தாளோ?

அவலு கிடைச்சா
மெல்லும் வாய்
நெல் கிடைச்சா
என்ன சொல்லும்?
ஆக்கப் பொறுத்த அத்தமவளே
ஆறப் பொறுக்க மாட்டீயா?
கண்ணாலம் முடியட்டும்
கட்டாக தூக்கிக் கிறேன்

ஊருபாக்க பின்னே வாரேன்
தாருரோடு கால் கொதிக்குது
பரிசம் போட்டும் நாளாச்சு
ஏத்திக்கிட்டு போ மாமா
கூட சமஞ்சவ ளெல்லாம்
குத்திக் காட்டு றாளுக
முத்தமாவது தந்துபோ
குத்துக்கல் மச்சானே..

Thursday, November 5

பாக்கெட் ஐஸ்


 பாக்கெட் ஐஸ்

சுவைத்ததுண்டா?

சதுர வடிவில்
சிறுநெகிழி பையில்
வண்ண வண்ணமாய்
ஐஸ்கட்டிகள்.
ஆரஞ்சு மஞ்சள் பசசையில்.

பாக்கெட்டுகளை கட்டைவைத்(து) உடைப்பார்.
ஐஸ்  வண்டித்தாத்தா.

அதைச் சுருட்டி
கீழ்ப்பக்கம் ஓட்டையிட்டு
வாயில் வைத்து
உறிஞ்சியபடி..
.....
......
......

எதில் விட்டேன்?
ஐஸ் சுவைத்ததில்
எழுதுவதை விட்டேன்.

சிலநேரம் அந்தப்பையில்
வாழைப்பழமிட்டு
அதையும் கட்டை வைத்து
அடித்துத் தருவார்.

என் தோழிகள் அத்தனை பேரும்
என்னை ஜந்துவாய் பார்க்க
நான் மட்டும் வேறுலகில்..

இன்னமும்
Alkhuwair tropical இல்
Banana split தான்
என்னுடைய பெருவிருப்ப பனிக்கூழ்.

என்னைக் குளிர்விக்க
என் கோபந்தணிக்க
Banana split parcel...

Monday, November 2

பரிணாம‍ம்



குரங்காய் தோன்றி

 குரங்காய் வளர்ந்து

மனிதனாய் மாற
யுகங்கள் ஆனது.

மனிதனிலிருந்து மீண்டும்
குரங்காய் மாற
கொரானா காலமே
மிகுதியாய் போனது.

ஆயுதங்கள் புதிது புதிதாய்
ஆக்கத்திற்காய் கண்டான்.
குரங்கிலிருந்து மனிதனாய்
பரிணாமம் பெற்றான்.

ஆயுதங்கள் புதிது புதிதாய்
அழிவிற்காய் கண்டான்.
விலங்கை விட இழிவாய்
உருமாறி நின்றான்.

குரங்கின் இயல்புமின்றி
மனிதனின் இயல்புமின்றி
உடலும் மனமும் மாறி மாறி
அங்குமிங்கும் தாவித்தாவி..

இன்னும் என்னென்ன
செய்வானோ
அத்தனையும்
தன்னையழித்திட
என்பதறியாதவனாய்..