Thursday, May 13

படமும் பாடமும்

.

செங்கல் முட்டுக் கொடுக்கும் கருங்காலி கட்டிலும் 

 சேவல் கொத்தித் திரியும் செம்மைத் தரையும் 

 இருவர் படுத்திடும் மெத்தையில் உறங்கிடும் எண்மரும் 

 இன்னும் இருவருமாய் உருளும் பூனையும் நாயும் 

 கருமையாய் இராது பழுப்பாய் பொழிந்திடும் மேகமும்

 கூரைபோல இருக்கும் மழைநீர் ஒழுகும் கூரையும் 

 குடைக்குள் ஒழுகாது வெளியே ஒழுகிடும் தண்ணீரும் 

 வேறுவேறு கனவு என்றாலும் புன்னகைக்கும் இதழ்களும்

 இதுதான் வாழ்வென்று சொல்லாமல் சொல்கின்றன.

 அன்புள்ள அனைவரையும் புன்னகைக்க வைக்கின்றன.



Wednesday, May 12

வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்

 தமிழ் பிடிக்கும்

 திராவிடம் பிடிக்கும்

 பெண்ணுரிமை பிடிக்கும் 

 முருகன் பிடிக்கும் 

சிவன் பிடிக்கும் 

அல்லாஹ் பிடிக்கும் 

 கிறித்து பிடிக்கும் 

வள்ளுவர் பிடிக்கும் 

பெரியார் பிடிக்கும் 

பாரதியார் பிடிக்கும் 

 இளையராஜா பிடிக்கும்

 பாலகுமாரன் பிடிக்கும்

 கண்ணதாசன் பிடிக்கும் 

ரஜினிகாந்த் பிடிக்கும் 

 தோனி பிடிக்கும் 

 குடும்பம் பிடிக்கும் 

 சில உறவுகள் பிடிக்கும் 

சில நட்புகள் பிடிக்கும் 

கடல் பிடிக்கும் 

மலை பிடிக்கும் 

 அருவி பிடிக்கும் 

காஃபி பிடிக்கும் 

 நூல்கள் பிடிக்கும் 

ஊர்சுற்றல் பிடிக்கும் 


 பிடிப்பதற்கு இத்தனையும்; 

இதற்கு மேலும் இருக்கும் போது 

வாழ்வதற்கு வாழ்நாள் 

மட்டும் போதுமே...


Thursday, May 6

தோழிவிடு தூது



ஒற்றைக்கால் கொக்கின் தவம
ஒண்டொடி நழுவும் முன்கை நங்கை
ஒண்மையிழந்த கண்கள் பரவும் பசலை
ஒறுத்தது போதும் தலைவா வாஅவள்முன்!

குளமும் தென்றலும் அவள்துயர் ஆற்றா
குலமகள் கவலை குவளை ஆற்றுமோ
களத்தில் நின்கதி இவள்மனம் அறியுமோ
வெள்ளைப்புறா ஒன்றை விரைந்து அனுப்பிவை!

தோழியர்  எம்மிடமும் ஒன்றும் சொல்வதில்லை
நாழிகை கழிந்தும் நகராது நிற்கிறாள்
பாவியவள் பண்ணிய பாவமென்ன பகர்வாய்
தாவிவந்தே அவள்தாகம் தணித்திடுவாய்  இன்றே!

அன்னையவள் சேதி அறிந்திடும் முன்னே
கன்னியவள் நிலை குலைந்திடும் முன்னே
மீன்கிட்டி வெண்கொக்கு பறந்திடும் முன்னே
வான்வழியாய் விரைந்து வண்ணமாய் வந்திடு!

பிரிவாற்றாமை


 எனக்கென்னவோ இவள்

காதலனுக்காய்
காத்திருப்பதாய் தெரியவில்லை. 

கொக்கு பிடிக்கும் மீனுக்காய் காத்திருக்கிறாளோ..

சனி ஞாயிறு
கடைகள் விடுமுறையாம்.
வெள்ளியன்றும் பன்னிரண்டு மணிக்கே கடைகள் மூடப்பட்டுவிடுமாம்.


நாட்டு நிலைமையில்
காதலன் வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?

சாப்பாடுதானே முக்கியம்..

Thursday, April 29

குலதெய்வ வேண்டுதல்


 குலதெய்வம் கோயிலுக்கு

குட்டியா ஒரு மணி
வாங்கியாந்து கட்டணும்.
நேர்த்திக்கடன் நேர்ந்து
நேத்தோடு முழுசா
அது ஆச்சு ஆண்டு ஒன்று

நம்மசாமிதான் கோவிச்சிக்காது
ஆனாலும் மனசு அடிச்சுக்குது
ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து
ஒன்பது செலவு ஒரு மாசத்துல

குட்டியாடு கிடாவாகிறதுகுள்ள
மணி வாங்கி கட்டிடணும்
குட்டிப்பையன் எட்டி எட்டி
அடிக்கிறதை ஆசைதீர
பார்த்துடணும்

அம்மா தாயே..
கொஞ்சம் பொறுத்துக்கோ
கொரானா முடியட்டும்
கோயில் திறக்கட்டும்
குட்டிமணியொன்னு
உன் கோயிலில கட்டிடுறேன்.

Friday, April 16

புலம்பல்



மூளையைக் கழட்டி
கழுவி கழுவி வைத்தலில்
மனதைக் கழுவ மறந்த
மதிகெட்டோர் 
மலிந்த உலகமிது...

 புகழென்னும் இச்சைக்காய்
 புல்லராய் வாழ்ந்திடும் 
பிறர் மனம் பாராத 
எடுப்புகள் நிறைந்த 
எழில்மிகு உலகமிது...

 முகமூடிக்குள் வாழ்ந்தே 
வாழ்வை முடித்திடலாமென
 மெய்யறிவு பெறாத 
பொய்யர்கள் வாழும் 
பொய்யா உலகமிது... 

 பிறர்வாழ பொறுக்காது 
புறம் பேசி புறம் பேசி 
தானும் வாழாத 
தண்டங்கள் வாழ்ந்திடும்
தண்ணீர்சூழ் உலகமிது...

 அடுத்தவர் செய்வதை 
அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
 தன்நிலை உயர்த்தா 
பேதைமை நிறைந்த 
பேரழகு உலகமிது... 

 தன்திறன் ஏதுமின்றி
பிறர்திறனில் வாழ்ந்து
 எவரும் அறியாரென 
ஏய்ப்பவர் நிறைந்த 
ஏறுகொண்ட உலகமிது...

 நல்லவர்போல் நடிப்பதற்கும்
 நல்லவராய் வாழ்வதற்கும்
 வேறுபாடு தெரியாத
 விந்தைமாந்தர் 
 நிறைந்த உலகமிது... 

 இத்தனைக்குப் பிறகும்
 இன்னமும் இழிசெயல்கள்
 நிறுத்தாது தொடர்ந்திடும்
 மடையோர்கள் கொண்ட 
மடமை உலகமிது... 

 எத்தனைதான் கற்றாலும்
 எத்தனைதான் பெற்றாலும்
 திருந்திட மனமில்லா
 திமிர்கொண்டோர் கூட்டம்
 திரண்டிடும் உலகமிது. 

 நல்லோர் ஒருவருக்காய் 
பெய்யும் மழையிருக்க 
நாமேன் திருந்தணுமென
 நயவஞ்சகர் நிறைந்த 
நல்ல உலகமிது...

 அசைத்து அசைத்துப் பார்த்து
 அசையாத சிவமாய்
அறத்தெய்வம் இருப்பை 
உணராத உயிர்நிறைந்த
உயர்வான உலகமிது... 

 வாழ்வின் இறுதியில் 
வாட்டும் உயிர்த்துன்பம் 
வந்து வந்து போகையில் 
இறைவனைத் தூற்றும்
 இறைநிறை உலகமிது...

 யார் குத்தினால் என்ன 
யார் மொத்தினால் என்ன
என்வேலை 
 படம் பார். கவிதை எழுது.. என
என்போன்றோரும் வாழும்
 ஏற்றமிகு உலகமிது....

Friday, April 9

வண்ணமுகம்...


 பாதிமுகம் வண்ணமாய் 

மீதிமுகம் உண்மையாய்

பாதிமுகம் காட்டாது என்னை.

கண்மூடி இருப்பவளிடம் காதல் கேட்கிறாய் .
கண்திறப்பின் உண்மை சுடுமே!

வண்ணக்கோலம் கொண்டு
முகம் மறைப்பேன்..
எதைக் கொண்டு என் எண்ணம் மறைப்பேன்?

எனக்கான காதல் நீதானா?
இன்னும் புரியாமல்தான்
கண்மூடி வண்ணம் மூடி....

காத்திருக்கிறேன்
உன் தொடுகை
எனக்குணர்த்தும் என..

Thursday, March 25

நான் என்னும் நான்.*



இன்று கிடைப்பன கொண்டு
இனிதே வாழ்பவள் இவள்.

நாளைக்காய் வாழாது
நாளும் வாழ்பவள் இவள்.

கூட்டுப்புழு வாழ்க்கை
கோடி கொடுப்பினும்
மீண்டு வாரா..என
மூடிக் கிடப்பவள் இவள்.

வண்ணத்துப்பூச்சி வாழ்வு
வரும்போது வாழ்வோம் என
வாழ்ந்து கடப்பவள் இவள்.

என்ன எழுத என
எண்ணியபடி
நேற்றைத் தொலைத்தவள் இவள்.

இன்றுதித்த எண்ணத்தை
இன்றே
எழுதி பகிர்ந்தனள் இவள்.

Thursday, March 18

அது அந்தக் காலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 

கொங்கைமார் மங்கைகள் கொஞ்சிடும் மாந்தர் 

சங்குகழல் வளையல் சலங்கைக் கால்கள் 

குறிஞ்சிப்பூ காடுகள் புன்னைவனச் சோலைகள் 

அது அந்தக் காலம். 


 தேனாறும் தமிழாறும் தெவிட்டாது பருகிட 

பொன்னாறும் மணியாறும் பொங்கியே ஓடிட 

யானைகட்டி போரடித்து யாரிடத்தும் கையேந்தா 

மனிதர் வாழ்ந்து மறைந்த மாநிலம். 

அது அந்தக் காலம். 


 அன்பும் பண்பும் அருளும் அறிவும் 

ஞானமும் பக்தியும் ஞானியும் சாதுவும் 

தானமும் மோனமும் தர்மமும் ஈகையும் 

 எங்கும் நிறைந்து எங்கும் அமைதி

 அது அந்தக் காலம். 


 இதெல்லாம் ஒருபுறம் இருக்கிறது மறுபுறம் 

வாள்சிலம்பு கத்திகளரி வேல்கம்பு வெட்டரிவாள் 

வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் 

போர் போர் போர் போர் 

 பிரிவாற்றல் பசலைநோய் பாலைத்திணை 

 அது அந்தக் காலம். 


 சக்கரம் சுழன்று காலம் மாறுது ஆனாலும் அது அந்தக் காலம்

 சேரன் சோழன் பாண்டிய பல்லவன் 

 ஒருசேர அடித்துக் கொண்டாலும்

 ஒருசேர அடித்துக் கொன்றாலும்

 கலை வளர்ந்தது கோயில் எழுந்தது 

அது அந்தக் காலம்.. 


 புயலாய் உள்நுழைந்து பார்த்தது கைப்பற்றி 

புகையாய் மறைந்தனர் பகைவர் பலர். 

 அலையாய் உள்வந்து அரசுகள் அடக்கி 

சிலையாய் அமர்ந்தனர் சிவப்பாய் சிலர் 

அது அந்தக் காலம். 


 நானூறு ஆண்டுகளில் நாடே அடங்கி 

நான்திசையும் எழுந்தது நெஞ்சுர புரட்சி 

செத்தவர் ஊன்வழி செங்குருதி பாய்ந்து 

 செம்மை நிலம் செம்மை நிலமாவே ஆச்சு

 அது அந்தக் காலம்.


 விடுதலையுற்று குடியரசுபெற்று தேர்தல்நடந்து தலைவர்கள் வந்தாச்சு. 

ஆண்டுகளும் கடந்தன எழுபத்துக்கு மேலே .. 

அப்பத்தாவும் தாத்தனும் பேசுகையில் வந்துவந்து 

போகிறது இடையிடையே பெருமூச்சுடன் அது அந்தக் காலம்


 சக்கரம் சுழன்று காலம் மாறுது. 

கணிப்பொறியியல் பாடம் போய்

 கணிப்பொறியில்தான் பாடமே. 

கணிப்பொறி கண்ணுக்குக் கெடுதல் என்றால் 

என்மகன் உரைக்கின்றான்

 "அம்மா அது அந்தக் காலம்." என்று .

Friday, March 12

நூல்கள்


பக்கமாய் பக்கமாய் நூற்று

புத்தகமாய் என்னில் வருவாய்.

கண்மூடி கண்ணீர் விட்டபடி ...
விழிகள் திறந்து வியந்துபடி...
வாய்விட்டுச் சிரித்து வாசித்தபடி...
உதடுமடித்து வெட்கத்துடன் புன்னகைத்தபடி..

இல்லாத மன்னன்மேல் பகைகொண்டபடி...
மன்னனின் தோழனிடம் நட்புகொண்டபடி...
இன்னும் வந்தியத்தேவனைத் தேடியபடி...

பாலகுமாரன் நாயகனிடம்
மனந்தொலைத்தபடி...
அனுராதா நாயகியிடம்
அழுத்தமாய் பேசியபடி...

இராஜேஷ்குமார் கதைகளில் இரத்தம் துடைத்தபடி...
கணேஷ்-வசந்தை உண்மை என்று நம்பியபடி...

லண்டன் தெருக்களில்
ஹார்பாட்டரை நினைத்தபடி...
சேட்டன்பகத் கதைகளை
சீச்சீ சொன்னபடி...

காந்தியடிகளின் சுயசரிதையில் கரைந்தபடி...
கலாமின் அக்கினிச்சிறகுகளில் தீப்பொறியாய் திரிந்தபடி...

கட்டுரைப்புத்தகங்களில்
உண்மைகளின் சூட்டினை உணர்ந்தபடி....

திருக்குறள்  கற்று
அறம் அறம் என அனத்தியபடி...
சங்கநூல் கற்றும் உலகளவு உள்ளதே என்று புலம்பியபடி...

எப்போதும் ஏதேனும் வாசிப்பா என
வீட்டில் திட்டுக்கள் வாங்கியபடி....

இன்னமும் நான் வாழ்வது
உன்னினம் மொத்தமும்
என்னில் புதைக்கவே..
நீயில்லா உலகெனில்
உயிர்ப்பில்லா உடல்நான்..

Monday, March 8

மகளிர் நாள் வாழ்த்துகள்

 பெண் இல்லாத ஊரிலே

கொடிதான் பூ பூப்பதில்லை.
அவ்வளவுதான் உலகம்.
அவள்தான் உலகம்.

ஆணுக்குக் கீழ்தான்
என்றடக்கி வைப்பினும்
அமைதியாய் இருப்பவள்
அடங்கியே இருப்பவள்

நிமிர்ந்து நின்று அவள்
நேர்கொண்ட பார்வை பார்ப்பின்
திமிரானவள் என
திட்டுவாங்கித் திரிபவள்.

பொறியியல் என்ன
மருத்துவம் என்ன
கணிப்பொறி என்ன
கணிதவியல் என்ன

ஆய்ந்தறிந்து கற்றாலும்
அறிவுரை கூறவும்
கருத்தேதும் சொல்லவும்
உரிமையொன்று இல்லாதவள்.

உற்ற தோழி துன்புறினும்
உதவிட இயலாது
உடனிருப்போர் உத்தரவை
உற்றுப் பார்த்தபடி நிற்பவள்.

அழுகையில் சிரிக்கவும்
சிரிக்கையில் சினக்கவும்
சினக்கையில் சிணுங்கவும்
சிணுங்கையில் அழுகவும்

எல்லாம் தெரிந்தும் ஏதுமறியாதவள்
எல்லாம் இருந்தும் ஏதுமற்றவள்.
உணர்ச்சிகளில் கூட
முரண்ப்ட்டவளாய்..

Big boss பாலா போல
வைச்ச்ங்கோங்க..
*உலக மகளிர் நாள் வாழ்த்துகள்*.

Saturday, March 6

இதயமும் மூளையும், மனமும் அறிவும்



 

 இதயமும் மூளையும்

உடல் உறுப்புகள்.
மனமும் அறிவும்
உடல் உறுப்புகளா?

மனம் என்றால் இதயம் என்றும்
அறிவு என்றால் மூளை என்றும்
கற்பிதம் செய்து கொண்டீர்
கற்றறிந்த மானிடரே..

இருவரில் ஒருவர்
செயலிழப்பின
நீங்கள் நீங்களாக
இருத்தல் இயலாது.

மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.
மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.

மனம் மாசற இருப்பின்
அறிவு அமைதியாய் இருக்கும்.
அறிவு அமைதியாய் இருப்பின்
மனம் மொழியற்று இருக்கும்.

அகந்தையில் அறிவு துள்ள
மனம் புலம்பித் தள்ளும்.
புலன்போன போக்கில் மனம் மயங்க
அறிவு ஆர்ப்பாட்டம் செய்யும்.

மனம் போன போக்கில்
வாழ்வார் சித்தர்.
அறிவின்படி மட்டும்
வாழ்வார் அறிவுடையோர்.

இரண்டுடனும் வாழ்வார்
இடைப்பட்ட மனிதர்.
இருந்தும் இரண்டும்
இணையக் காணார்.

இரண்டும் இணைவது
இறையருள் என்பார்.
இறையருள் உணர்ந்தார்.
இணையக் காண்பார்.

அறிவற்று வாழ்வாரை
ஏசும் உலகம்
மனமற்று வாழ்வாரை
மதிப்பதுகூட இல்லை.

முட்டாளாய் என்னை
ஏசினாலும் ஏற்பேன்.
கல்மனம் என்றாலோ
கரைந்தே விடுவேன் காற்றில் நானே..

Saturday, February 20

தனிமை


 நிலவும் கதிரும் மாறிமாறி

காற்றும் நீரும் சுற்றிசுற்றி
தனியனாக இருப்பினும்
தனிமையில் இல்லை நான்.

என் தனிமை போக்க
வரவேண்டாம் நண்பா .
உன் தனிமை போக்க
வா என்னிடம்..

இருந்து கொள் என்மேல்.
விரும்பினால் நீபேசு..
இல்லையெனில் நான் உரைப்பேன்..
ஈராயிரம் கதை.

இங்கு வந்து சென்றவர்
என்னிடம் பகிர்ந்த கதை.
ஆனாலும் நம்பு
பகிர மாட்டேன் எவரிடமும்..

*நீ பகிர்ந்த உன்கதையை*

Friday, February 12

நானும் ராதையும்


 நானும் ராதையும்

காதல் தழுவலில்.
இமைகள் மூடியிருக்க
இன்பத் தழுவலில்.

கிருஷ்ணா கிருஷ்ணா எனும்
கிறங்கும் ஒரு குரல் - அது
உருக்கமாய் காதில் விழுந்த
ருக்மணியின் குரல்..

கைகள் எடுத்தாலோ
கண்கள் திறந்தாலோ
கண்மணியிவள் இன்பங்கெடும்

மாயவன் நான் அல்லவா
மாயங்களும் செய்பவன் அல்லவா
இன்னோர் உருவம் எடுத்தேன்
ருக்மணியின் கணவனாக.

அவள்முன் சென்று
ஆயிழையைத் தழுவும்முன்
பாடி அழைத்தாள் பாமா.
பாவமாய் நிற்கிறேன் நான்.

என் செய்வது?
அன்பு செய்யும் மனம் இருப்பின்
அன்பின் தொல்லைகளும் நேரும்தானே.

Thursday, February 4

புத்தரைப்போல அமரவே விருப்பம்


 உம்மைப்போல அமரவே விருப்பம்*


யாருமற்ற தனிமையில்
ஏதுமற்ற சூழலில்
எதுபற்றியும் சிந்திக்காது
அமைதியாய் அமர வேண்டும்.

மகள் சகோதரி மனைவி
அம்மா அத்தை அண்ணி
என பொறுப்புகள் ஏதுமின்றி
அலைந்து திரியும்
உயிர்களில் நானும் ஒருத்தியாய்
திரியவே விருப்பம்.

உடலால் பயணிக்காது
சிந்தனையால் பயணித்து
கண்மூடி அமர்ந்து
எத்தனை தொலைவு சென்றாலும்
"அம்மா இன்னைக்கு பிரியாணி" 
என்னும் குரல் என்னை
இங்கு இழுத்து வந்து விடுகிறது.

என்ன செய்வது?