Tuesday, June 30

தொட்டில் சேலை

அம்மா சேலையிலதான்
அவவாசம் வீசும்
அத்தை சேலையில
அத்தர்வாசம் மணக்கும்.
அப்பத்தா சேலையில
அவளோட மருந்துவாசனை.

கொலுசொலி கொஞ்சங் கேட்டாலே பாலூட்ட ஓடி வர்றவ
கால்வெளியே தொங்க விட்டு
கால்மணி நேரம் ஆயாச்சு
காணலையே இன்னும் அவளை காத்திருக்கவா குரலெழுப்பவா?

சிணுங்கிக் கூப்பிடவா? வேண்டாம் சீரியல் பார்ப்பாளோ என்னவோ
அழுது கூப்பிடவா? வேண்டாம்
அமுது உண்பாளோ என்னவோ
தொட்டிலை நனைச்சா? வேண்டாம் தொட்டில்ஈரம் பிடிக்காது எனக்கு..

பாலூட்ட நேரமாச்சுன்னு அவ
முலை இன்னும் கனக்கலையா
ஏன் இன்னும் வரலை
என்பசிக்கு அழுகிறேனா
அவவலிக்கு அழுகிறேனா
அழாம இருக்க முடியலையே

 யாரோ வந்து தூக்க
ஆரீரா ரோ பாட
அம்மா வாசம் மட்டும்
வரவே இல்லை இன்னும்
வயிறு என்னவோ பண்ண
பயமா அதுக்கு பெயரு?

அம்மா இருக்கிறவரை  உணர்ந்ததில்லை இப்படி
கண்கலங்க வயிறுகலங்க
கத்தி அழுதேன் அம்மா.....

எங்கிருந்தோ பாய்ஞ்சு வந்தா.. என்னைப் பிடுங்கித் தூக்கி
'என்பிள்ளை என்னை
அம்மான்னு கூப்பிடுச்சுன்னு'
கட்டிப்பிடிச்சு கொஞ்சிட்டு கன்னமெல்லாம் முத்தந் தந்தா

அவளகண்ட மகிழ்ச்சியில
 அழுகை இன்னுங்கூட
கத்தி கத்தி அழுதேன்
அம்மா அம்மா அம்மா!!!