Friday, October 11

(#1) அப்பாவின் இன்றைய ஒரு நாள்


(#1) அப்பாவின் இன்றைய ஒரு நாள்
----------------------------------------------------------
காலை 5 மணிக்கு எழுந்தவுடன்
கடன்கள் முடித்து
வாசல் பெருக்கித் தொளிக்க
ஒரு குடமும்
ஒரு பெருவாளியும்
நிறைய நிறைய நீர் வைத்தாகிவிட்டது.
ஒரு குடம் இரண்டு தவலைப்பானைகள்
தேய்த்து தேய்த்துக் கழுவி
குடிக்க நீர் பிடித்தாகி விட்டது.

இனி
பால் பண்ணையில் சென்று
பால் வாங்கி வரவேண்டும்.
வீட்டு முன்பு வரும் பால்காரர்
பாலில் தண்ணீர் சேர்க்காமல்
தண்ணீரில் பால் சேர்க்கிறார்கள்
என்று அவரிடம் பால் வாங்குவதில்லை.
மிதிவண்டியில் ஒரு கிமீ சென்று
பால் வாங்கி வந்தாகி விட்டது.

இனி
இப்போதெல்லாம் மெதுவாக
எழுந்திருக்கும் மனைவிக்கு
பக்கத்துக் கடையிலிருந்து
அவளுக்கு பிடித்த புட்டும் டீயும்
வாங்கிக் கொடுத்தாகி விட்டது.

இனி
குளித்து பாலைக் காய்ச்சி
காபி போட்டுக் குடித்துவிட்டு
நாளிதழைக் கையில் எடுத்தால்
ஒருமணி நேரம் போய் விடும்..

இனி
கடைக்குச் சென்று காய்கறிகள்
வாங்கிக் கொடுத்து விட்டு
சிறிது நேரம் தொலைக்காட்சி செய்திகள்.
பார்க்கும் போதே கண்கள் சொருகும்.
உட்கார்ந்தபடியே தூக்கம்
பத்து நிமிடங்களுக்கு..

இனி
கடை திறக்க வேண்டும்..
முன்பு
9.30க்கு திறந்த கடை
இப்போது
10.30 ஆகி விடுகிறது.
என்ன செய்வது?
பெரும் நகைக்கடைகள்
திறந்த பிறகு
வேலை குறைந்து போன
பட்டறைக்காரர்கள்
பட்டறை வைத்த பின்புதான்
கடையில் வியாபாரம் ஆகும்.
காலையுணவு முடிந்து
கடை திறந்தாகி விட்டது.

இனி
மதியம் இரணடு மணி வரை கடையில்தான்.
பெயரும் பெரிது.
கடையும் கொஞ்சம் பெரிதுதான்.
கடையிலும் அவ்வப்போது
கண்ணசத்தும்.
அகவை எழுபத்து நான்காகி
விட்டதல்லவா..

அப்படியென்றால்
கிட்டத்தட்ட கடையில்
பணிக்கு வந்து
அறுபது வருடங்கள்..
அப்பாவின் கடை தான் எனினும்
ஒரு பணியாள்வேலைதான்
முதலில்.
திருமணமாகி இரண்டு குழந்தைகள்
வரும்வரை
அண்ணாதான் முதலாளி.
பின்னர்
பங்கின்போது இந்தக் கடை
வந்து விட்டது.

எத்தனை எத்தனை
வரவு செலவுகள்..
சென்ற மாதம் கீழே விழுந்த
மனைவியின் மருத்துவ செலவு உட்பட
குழந்தைகள் தந்தாலும்
நான் ஈட்டுவது போல வருமா? முடிந்தமட்டும் உழைப்போம்.

இது மதியம் இரண்டு மணிவரை மட்டும்..

மீதி உழைப்பின் கதை
தொடரும். (#1)