Friday, October 11

(#2) அப்பாவின் இன்றைய ஒருநாள்


(#2) அப்பாவின் இன்றைய ஒருநாள்
--------------------------------------------------------------
மதியம் இரண்டு..
கடையைப் பூட்டுவதே
இப்போதெல்லாம்
கடினமாகி விட்டது..
உயரப் படிகளில் நின்று
பெரிய கதவை இழுத்து மூடி
இரண்டு பூட்டுகள்
போடுவதற்குள்...

இனி
வீட்டிற்கு சென்றதும்
கைகால் முகம் கழுவி
இருக்கும் அத்தனை வாளிகளிலும்
தரையோடு இருக்கும்
தொட்டியிலிருந்து
சிறுவாளியை வைத்து
நீர் நிரப்பியாகி விட்டது.
துணி துவைக்கும் எந்திரத்தில்
ஊற வைத்து விட்டு
மறந்து விட்ட மனைவியிடம்
ஒன்றும் கேட்காமலேயே
அலசி, பிழிந்து காயப்போட்டாகி
விட்டது.

இனி
தொலைக்காட்சியில்
இரண்டறை மணி நாடகம்
பார்த்தபடி
மதிய உணவு.
4 மணிவரை கண்ணயரலாம்
என்று எண்ணும் போதே
அடடா..
என்று விட்டுப் போன
சில வேலைகள்
ஞாபகம் வரும்.
இல்லையெனில்
சரியாக 4 மணிவரை
ஓய்வு..

இனி
எழுந்தவுடன்
மீண்டும் பண்ணைவரை சென்று
பால் வாங்கி காபி போட்டு
குடித்து விட்டு
கதவை உள்பககமாய் பூட்டிவிட்டு
கடை திறக்கக் கிளம்பியாகி விட்டது.
4.30க்கு கடை திறக்கவில்லை என்றால்
"அண்ணாச்சி கடை இன்னும் தொறக்கலையா.. கடவாசல்ல நிக்கேன்"
எனறு மூன்று நான்கு
தொலைபேசி அழைப்புகள்....

இனி..
இரவு 9மணிவரை கடைதான்.
முன்பு பத்து மணிவரை
கடை மூடலாம்..
இப்போது ஒன்பதுக்கே ..
வீட்டுக்கு கிளம்பும் போதே
நாள் தவறாது ஒரு அழைப்பு
மனைவிக்கு..
கடைத்தெருவில் ஏதும்
வேணுமா என்று..
எல்லாம் வாங்கி வீட்டுக்கு வர
ஒன்பதரை ஆகிவிடும்.
அப்புறம் இரவு உணவு முடித்து
பத்து மணிவரை நாடகம்..
பத்தரைக்கு மேல்
வாசலில் சிறிது நேரம்
உட்கார்நது வருபவர்கள்
பொருத்து பேச்சு செல்லும்..
பதினொரு மணிக்கு
பாயை விரித்துப்
படுத்தவுடன்
பத்தே
நொடிகள்தாம்
தூக்கம் வந்து விடும்

இது ஒரு சாதாரண
நாள் கழிதல்.
இது தவிர..
பண்டிகை நாட்கள்
திருவிழா நாட்கள்
பழகியவர் வீட்டு
நிகழ்ச்சிகள்
ஊரில் சொந்தஙகளின்
நிகழ்ச்சிகள்..

"நினைக்கும் போது
கண்ணைக்
கட்டுகிறதா?
ஆனா என் பொண்ணுக்கோ
நான் இலக்கியவாதியா
இல்லையேன்னு வருத்தம் வேற!!
அவ ஒரு சரியான முட்டாக்கழுதை"

உழைப்பின் கதை தொடரும் (#2)

No comments:

Post a Comment