Sunday, February 19

உ வே சா பிறந்த தினமான இன்று, அன்பு சீமான் அண்ணனுக்கு ஒரு தமிழச்சியல்லாத சகோதரியின் அன்புக் கடிதம்

உ வே சா பிறந்த தினமான இன்று
அன்பு சீமான் அண்ணனுக்கு ஒரு தமிழச்சியல்லாத சகோதரியின் அன்புக்கடிதம்..

 உங்கள் கருத்துப்படி நான் தமிழச்சி இல்லை..

என் முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு முப்பாட்டன்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு, இந்த தமிழக மண்ணுக்கு வந்து ஆயிருக்கும் பல நூற்றாண்டுகள்..
ஆனாலும் உங்கள் கருத்துப்படி நான் தமிழச்சி இல்லை..

பாரதிக்குத் தெரிந்த என் தாய்மொழி எனக்குத் தெரியவே தெரியாது...
தமிழ் மட்டுமே கேட்டு, வளர்ந்து, வாழ்ந்து வரும், இன்னமும் வள்ளுவன், கம்பன் இளங்கோ, பாரதி என பேசி வாழும் நான்...உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

தமிழச்சியாய் பிறந்தாலும், 'தமிள்' என்று எழுதி வரும் என் சகோதரிகளுக்கு மத்தியில் 'ற்' என்ற ஒற்றுக்கு அருகில் வேறு ஒற்று வராது என்று தமிழ் இலக்கணத்தைக் காதலித்துக் கொண்டிருக்கும் நான் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

சேலை கூடக் கட்டத் தெரியாத எத்தனையோ செந்தமிழச்சிகளுக்கு மத்தியில் சுடிதார் அணிவதைக் கூட இயல்பாய் வழக்கப்படுத்த முடியாமல் இன்னும்  சேலை ஒன்றே தமிழர் மாண்பு என அணிந்து வரும் நான் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

தெலுங்கர் என்று சிலரையும், சேரநாட்டவர் என்று சிலரையும், ஆரியர் என்றும் சிலரையும் ஒதுக்க விரும்பும் நீங்கள் உவேசா, பெரியார், எம்ஜிஆர்  இவர்களை தமிழர் அல்ல என்றும் ஒதுக்கி விடுவீர்களா?? இவர்களில் ஒருவர் இல்லை என்றாலும் இன்றைய தமிழ் இல்லை, தமிழ்நாடு இல்லை, தமிழக அரசியல் இல்லை. இவர்கள் தமிழர்கள் இல்லை என்றால் நானும் உங்கள் கருத்துப்படி  தமிழச்சி இல்லை.

 நாம் தமிழர் என்பதற்கு.. தமிழச்சியாய் பிறந்தே ஆக வேண்டும்  என்னும் எண்ணத்தை இனியாவது மாற்றிக் கொள்வீர்களா??  தமிழச்சியாய் வாழ
தமிழர் என்னும் உணர்வு மட்டுமே போதும்...

நீங்கள்  'தமிழர் அல்லாதவர் வெளியேறுங்கள்' என்று கூறும் போதெல்லாம்  இத்துணை நூற்றாண்டுகளுக்கு அப்புறம் நான் எங்கே போவது என்ற எண்ணம் வரும் போதும்
'நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்' என்ற அப்பர் வாக்கும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லயே
இச்சகத்தள்ளோரெல்லாம் எதிர்த்து
நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லயே
என்ற பாரதியும் தான் எம்முடன் இருக்கிறார்கள்.......
                       வாழ்க தமிழ்....




No comments:

Post a Comment