Wednesday, May 9

சிங்க ராஜாவும் சின்னப்பொண்ணும்

இது ஒரு சின்னப்பொண்ணுக்கும் சிங்கராஜாவுக்கும் இடையில் நடக்கும் விவாதம். சிங்க ராஜாவை ஊருக்குள்ளே அழைக்கிறா சின்னப்பொண்ணு. சிங்கம் என்ன பதில் சொல்லிய து? இதோ !

பல்லவி

(சின்னப்பொண்ணு பாடியது)

சிங்க ராஜா சிங்க ராஜா
வணக்கமுங்க சிங்க ராஜா !
சின்னப் பொண்ணு நானும் தான்
ஊரு விட்டு காடு வந்தேன்!



(சிங்க ராஜா பாடியது)

சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
வணக்கமடி சின்னப் பொண்ணு !
ஊரு விட்டு காடு வந்த
காரணத்தை சொல்லு கண்ணு!



(சின்னப்பொண்ணு பாடியது)

சரணம் 1

ஆத்தோரம் காட்டுக்குள்ளே
அரசாளும் சிங்க ராஜா !
காத்தாட காட்டுக்குள்ளே
நடைபோடும் சிங்க ராஜா!
பட்டணந்தான் வாரிரோ
பகட்டான சிங்க ராஜா !
ஏசியிலே தூங்கலாமே
ஏலேலோ சிங்க ராஜா !


சரணம் 2

மோட்டாரில போகலாமே
வாரீரோ சிங்க ராஜா !
டிவிப்பொட்டி பார்ககலாமே
வாரீரோ சிங்க ராஜா !
காட்டுக்குள்ளே ஒண்ணுமில்லை
வாரீரோ சிங்க ராஜா !
பட்டணத்தில் எல்லாமுண்டு
வாரீரோ சிங்க ராஜா!



(சிங்க ராஜா பாடியது)

சரணம் 3

அழகாக பூச்சூடி
அசைந்தாடும் சின்னப்பொண்ணு!
பாங்காக மையெழுதி
வாயாடும் சின்னப்பொண்ணு !
பட்டணந்தான் வேணாமடி
நரகமது சின்னப்பொண்ணு!
இயற்கையே போதுமடி
இனிமையான சின்னப்பொண்ணு!

சரணம் 4


பட்டணத்தில் எல்லாமுண்டு
தெரியுமடி சின்னப்பொண்ணு!
பட்டணத்தில் நோய்க்கெல்லாம்
குறைவுமில்லை சின்னப்பொண்ணு!
காட்டுக்குள்ளே ஒண்ணுமில்லை
புரிஞ்சுக்கோடி சின்னப்பொண்ணு!
காட்டுக்குள்ளே நோயுமில்லை
பயமுமில்லை சின்னப்பொண்ணு!

சரணம் 5


நரிபுலி சிறுத்தையுமே
காட்டுக்குள்ளே இருந்தாலும்
காட்டழிச்சு பொழைச்சதில்லை
கேட்டுக்கோடி சின்னப்பொண்ணு!
ஓசோனை ஓட்டையாக்கும்
மனுசருண்டு ஊருக்குள்ளே!
மரங்களை அழிக்கச் செய்யும்
மாந்தருண்டு பாருக்குள்ளே!

சரணம் 6


ஊருக்குள்ளே நான் வந்தா
சர்க்கஸில போட்டிடுவே!
காட்டை விட்டு நான் வந்தா
கரணம் போட்டு பிழைக்கணுமே!
என்முன்னே நடுநடுங்கும்
மனுசருங்க நீங்களெல்லாம்
சவுக்கை வைச்சு சீண்டுவீங்க
தெரியாதா சின்னப்பொண்ணு!

சரணம் 7
காட்டுக்குள்ளே எனக்கு தானே
ராஜவாழ்க்கை சின்னப்பொண்ணு!
காட்டை விட்டு வரமாட்டேன்
கேட்டுக்கோடி சின்னப்பொண்ணு!
கொஞ்சம் நேரம் நீயிருந்தா
வயித்துக்குள்ளே போயிடுவே
காட்டை விட்டு ஓடிக்கோயேன்
களையான சின்னப்பொண்ணு!

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப அழகா இருக்கு இந்தப்பாட்டு.. அடிக்கடி எழுதுங்க.. பெரிய இடைவெளி விட்டுட்டீங்க போலிருக்கே... :)

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி பூர்ணா!
இது தமிழ்ச்சங்கத்துல நாட்டுப்புற பாடல் - குழந்தைகளுக்கான போட்டி நடந்தது. என் பெண்ணிற்காக நான் எழுதியது. ஆனா! மேடம் நான் பாடமாட்டேன் சொல்லிட்டாங்க!

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு வாணி.

இன்னும் எழுதுங்க. படிக்க ஆவல்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி வல்லிசிம்ஹன்!

Post a Comment