Tuesday, June 5

பெற்ற கடன்

‘என்னங்க?’ என்ற காந்திமதியின் குரல் கேட்டதும் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவர் மெதுவாகத் திரும்பினார் சுந்தரம். அவர் கண்களில் இருந்த என்ன என்ற கேள்வியைப் பாரத்ததும் காந்திமதி கொஞ்சம் தயங்கினார்.

‘உங்க அண்ணனுக்குச் சொல்லி அனுப்ப வேண்டாமா?’

‘என்ன சொல்லணும?’

‘என்னங்க இப்படி கேட்கிறீங்க? மாமா உடம்பு இவ்வளவு மோசமாக இருக்குது. இப்பவே சொல்லிவிட்டால் அப்புறம் அவர் வந்து கேள்வி கேட்கிற மாதிரி இருக்காதில்ல?’

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், அப்பறமாப் பார்த்துக்கலாம். உன் வேலையை மட்டும் பாரு!’ என்று சொல்லி விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

பெருமூச்சோடு மாமனாரின் அருகில் அமர்ந்திருந்த மாமியார் ராமாயிப் பாட்டியைப் பார்த்தாள். இதை எதிர்பார்த்தவள் போல பாட்டியும் கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.

மூத்தவன் மாணிக்கத்துக்கு திருமணமான புதிதில் ஏற்பட்ட சிறு சலசலப்பு இப்போது அண்ணன் தம்பி விரிசலில் வந்து நிற்கிறது.

சின்னவன் சுந்தரத்துக்கே இப்போது வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அண்ணன் மாணிக்கம் செய்த்து போல தானும் பெண்டாட்டி பேச்சு கேட்டு நடக்கக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருந்தார். பெற்வர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து கவனமாகச் செய்து வந்தார். ஆனால் அவர் செய்த தவறு, நாம் மட்டும் தான் பெற்றவர்களைக் கவனிக்கிறோம் என்ற எண்ணத்தை ஆழமாக வளர்த்துக் கொண்டதுதான்.

அவர் சொல்ப டிதான் பெற்றவர்கள் கேட்க வேண்டும். பேசவேண்டும், நடக்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்.

ஒருதடவை மாணிக்கத்தின் மகனுக்கு காரில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்த போது ராமாயியும் அவள் கணவர் சுப்பையாவும் போகத் துடித்தனர். அவர்களுடையப் பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்களிடம் கோபப்பட்டு வாயில் வந்த வார்த்தைகளால் இருவரையும் வதக்கி விட்டார்.

அதிலிருந்து சுப்பையாவுக்கும் சுந்தரத்துக்குமான உறவில் விரிசல் விழத்தொடங்கி விட்டது, இது நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது அவர் படுத்த படுக்கையாகி இருக்கும் போது கூட யாருக்கும் சொல்லக்கூட மனமில்லாமல் இருக்கிறார் சுந்தரம்.

சரியாக ஒரே வாரத்தில் போய்ச்சேர்ந்து விட்டார் சுப்பையா. அதன் பிறகே மாணிக்கத்திற்கு சொல்லி விட சம்மதித்தார். எல்லாக் காரியமும் முடிந்து 2 வாரங்களுக்குப் பின் மாணிக்கம் ஊருக்குத் திரும்பத் தயாரானார். கூடவே ராமாயிப் பாட்டியும் கிளம்ப சுந்தரத்துக்கு ஒண்ணும் விளங்கவில்லை.

‘நீ எங்கம்மா கிளம்புற?’ - என்று கேட்டார் சுந்தரம்.

‘நான் மாணிக்கத்தோடேயே இருந்துக்கிறேன்டா’.

‘ஏன் என்னாச்சு திடீர்ன்னு?, நான் கவனிக்க மாதிரி அவன் உங்களக் கவனிச்சிருவானா?’ என்று சீறினார் சுந்தரம்.

‘இல்லப்பா, நிச்சயம் உன் வசதி அவன்கிட்ட இல்லை. ஆனால் கொஞ்சமாவது சுதந்திரமா இருக்கலாமுன்னு நம்புறேன். எப்போ அந்த மனுசன் மகனைப், பேரப்பிள்ளைகளைப் பார்க்காம உயிரை விட்டாரோ, அப்பவே நினைச்சுட்டேன், என் கடைசி காலம் உன் கூட கிடையாதுன்னு! நாங்களும் மனுசனுங்க தானே, உன் இஷ்டப்படி யே எல்லாம் பண்ணணும் நீ நினைக்கிறது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்குப் புரியும் போது நான் வர்றேன்.
மாணிக்கம் வீட்டில் இருந்தா எப்ப வேணா உங்க எல்லாரையும் வந்து பார்த்துப்பேன். ஆனா உன் கூட இருந்தா நான் உன் அடிமையாத்தான் வாழணும். வேண்டாப்பா! நான் கிளம்புறேன்.’
என்றபடி கிளம்பி விட்டார் ராமாயி.

தன்னைப் பெற்றவளிடமிருந்து இவ்வளவு வேகத்தை எதிர்பார்க்காத சுந்தரம் விக்கித்து நின்றார்.


பின் குறிப்பு : ‘இந்தக் கதையில் வரும் சம்பவம் கற்பனையே’ என்று எழுதத் தான் ஆசை. ஆனால்.. .?

1 comment:

பாலராஜன்கீதா said...

// பேரப்பிள்ளைகளைப் பார்க்காம உயிரை விட்டாரோ, //
வருத்தமாக உள்ளது.
:-(

Post a Comment