Friday, May 30

வடக்கு ரத வீதி


நேற்று வடக்கு ரத வீதி போத்தீஸ் விளம்பரம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் வந்த ஞாபகங்கள். வடக்கு ரத வீதி என்பது நெல்லை டவுணில் மிக முக்கியமான இடம். லாலா சத்திர முக்கிலிருந்து கோயில் வாசல் வரை உள்ள கடைகளுக்குச் சென்றால் ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி விட முடியும். பேருந்து நிறுத்தத்திலிருந்து எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழி என்பதால் ஓராயிரம் தடவை என்ன ஒன்பதாயிரம் தடவை அந்த வீதியில் நடந்திருப்பேன். இன்னும் சலிப்பு வரவில்லை.

கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளில் இந்த வீதி மட்டும் இந்தளவு புகழ் பெற முழு முக்கியக் காரணம் ஆரெம்கேவி மற்றும் ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகள் தான். ஆரெம்கேவி க்கு இப்போது வயது 75க்கு மேல். ஆண்டி நாடார் குடும்ப பாத்திரக் கடைகளுக்கு எப்படியும் 50 இருக்கலாம். புதிதாக(?) வந்த பெரிய கடைகளில் மிக விரைவாகப் பெயர் வாங்கியவர்கள் என்று சொன்னால் போத்தீஸ் தான் (சுமார் 20, 22 வருடங்கள்). ஆனால் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரொம்ப பழைய ஆட்கள்.

இருட்டுக்கடை அல்வாவும் அங்கே இருப்பதால் கூட்டத்திற்கு எப்போதும் குறைவே இருக்காது. தினந்தோறும் நடையாய் நடந்தாலும் எனக்கு சலிக்காத தெரு. அங்கேயிருந்த ஸ்ரீராயல் தியேட்டரும் மிக முக்கியமானது. 1992 வரை அந்தத் தியேட்டரில் வந்த எல்லாப் படங்களையும் கண்டிப்பாக இரண்டு தடவை பார்த்து விடுவோம். அதன்பின் வாழ்க்கையே ஹாஸ்டலாகிப் போனதால் தியேட்டர் பக்கம் போவது குறைந்துவிட்டது. இப்போது ஸ்ரீராயல் தியேட்டரை போத்தீஸ் வாங்கி விட்டார்கள். இடிக்க ஆரம்பித்து விட்டார்களா என்று தெரியவில்லை.

ஆரெம்கேவி கடைகளை இப்போது நெல்லை வண்ணாரப்பேட்டை பக்கம் மாற்றிவிட்டார்களாம். (இன்னும் முழுதாக மாற்றவில்லையாம்!) ஆரெம்கேவி இல்லாத வடக்கு ரத வீதி எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியவில்லை. ஊருக்குச் சென்றால் தான் தெரியும். எங்கள் குடும்பம் வழக்கமாக ஆரெம்கேவி மட்டுமே செல்வதால் எங்கள் அம்மா சொல்லுவது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது, தெருவில் கூட்டமே இல்லையாம். அங்குள்ள மற்ற சிறு கடைகளில் (ஸ்னாக்ஸ் கடைகள், ஹோட்டல்கள், செருப்புக்கடைகள்... ) எல்லாம் வியாபாரம் குறைந்து விட்டதாம். தெருவோரக் கடைகள் (ப்ளாட்பார்ம்) குறைந்து விட்டனவாம். போத்தீஸ் கடையும் இதனால் பாதிக்கப்பட்டதாக்க் கேள்வி, உண்மையா பொய்யா, தெரியவில்லை.

இப்போது போத்தீஸ் வடக்கு ரத வீதியை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்வது போத்தீஸ் கடைகளுக்காகவா இல்லை வடக்கு ரத வீதிக்காகவா?

ஒரு ஆறுதலான விஷயம், அடுத்த மாதம் (ஜூன் 18) எங்கள் நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர்த்திருவிழா. கொடியேற்றியதிலிருந்து 9 நாட்களும் நான்கு ரத வீதிகளும் அல்லோலப்படும். திருநெல்வேலி தேரோட்டம் மிகப் புகழ் பெற்றது. 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர் எங்களுடையது. (திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர்). ஜே ஜே என்ற கூட்டமும், அசைந்து அசைந்து வரும் தேரின் அழகும், முரசு அடித்து மக்களை உற்சாகப்படுத்துவதும்...எப்போதடா ஊருக்குச் செல்வோம் என்றுள்ளது. இப்போதெல்லாம் காலையில் இழுக்க ஆரம்பித்தால் மாலைக்குள் நான்கு ரத வீதிகளையும் சுற்றி தேர் நிலையம் சேர்ந்து விடுகிறது. (எல்லாம் பல இந்துமதக் கழகங்களின் ஆதரவு!) ஆனால் முன்பெல்லாம் இரண்டு, மூன்று நாட்களாவது ஆகும். பள்ளியிலிருந்து வரும் போது மிக அருகில் தேரைப் பார்ப்பது; (அதன் சக்கரம் மாத்திரம் 6 அடி உயரம்(தோராயமாக)) மாலை வேளைகளில் தினந்தோறும் ரத வீதிகளைச் சுற்றிவிட்டு வருவது சுகம். அந்த சுகத்தை இப்போது என் மகளுக்கு அனுபவிக்கச் சொல்லித் தர ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்கள் நாத்திகராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் ஊர் ஆனித்தேர்த்திருவிழாவிற்கு வாங்க!!!

அடுத்த பதிவு கண்டிப்பாக நெல்லையப்பர் கோயில் பற்றித்தான்.!

22 comments:

நானானி said...

ஆஹா!!!எங்க ஊரைப் பத்தி இவ்ளோ
விலாவாரியாக சொல்லுதீகளே! நீங்களும் தின்னவேலிதானா?
ஊர்ப் பாசம் எப்டி இழுக்குது
பாத்தீகளா?
நாலு ரத வீதிகளையும் நல்லாவே சுத்தி
காட்டிபுடீக!!தேர்த்திருவிழா சமயத்தில் நடக்கும் பொருக்காச்சி பத்தி சொல்லலையே.சின்ன வயதில் பொருக்காச்சிக்குப் போய் நாங்க அள்ளி வரும் பொருக்களையெல்லாம்
இப்போ நினைத்தாலும் சிரிப்பாணியா வரும்.நல்லாருந்தது உங்க பதிவு கோகிலவாணி கார்த்திகேயன்!!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ரொம்ப நன்றி நானானி! பொருட்காட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லையாம். எப்படியும் பாத்துடுவோம்ல்ல!

Thamiz Priyan said...

அந்த இருட்டுக் கடை அல்வாவைத் தேடி ஜங்ஷன் ஏரியா பூராவும் அலைந்தோம். கடைசி வரை கிடைக்கலை.... :( அடுத்த தடவையாவது வெற்றி கிடைக்குதான்னு பார்க்கிறோம்..... ;))

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

/////அந்த இருட்டுக் கடை அல்வாவைத் தேடி ஜங்ஷன் ஏரியா பூராவும் அலைந்தோம். கடைசி வரை கிடைக்கலை.... :( அடுத்த தடவையாவது வெற்றி கிடைக்குதான்னு பார்க்கிறோம்..... ;))/////

இருட்டுக் கடை அல்வா ஜங்ஷனில் இல்லை. டவுணில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரில் உள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள்!

இலவசக்கொத்தனார் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....

நல்லாக் கொசுவர்த்தி சுத்த விட்டுட்டீங்க!! :))

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

வருகைக்கு நன்றி இ.கொத்தனார்!

பிரேம்ஜி said...

பலதடவை வந்துள்ளேன் உங்கள் ஊருக்கு.எனக்கு மிகவும் பிடித்தமான ஊர்.

ராமலக்ஷ்மி said...

இஞ்ஞாசியார் இழுத்து வந்தார் வடக்கு ரத வீதிக்கு! தேரோடும் வீதியிலே எமை இழுத்துச் சென்றது உம் பதிவு. [நேற்றே பின்னூட்டமிட்டிருந்தேனே, கிடைக்கவில்லையா கோகிலவாணி!:(]

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி ராமலஷ்மி! ஆனால் மறுமொழியை தவறுதலாக கதையில் இட்டு விட்டீர்கள்!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி பிரேம்ஜி!

ராமலக்ஷ்மி said...

ஓ! தவறுக்கு மன்னிக்கவும்:-(!

சதங்கா (Sathanga) said...

ஒரே கொசுவத்தி வாசனையா இருக்கு !!! அதான் தமிழ்மண ஸ்டாரில இருந்து எல்லாரும் சுத்தறீங்களே. ஆனா இந்த வாசனை இன்பம். அனுபவம் தரும் ஆனந்தம். அற்புதம். நான் நெல்லைக்கெல்லாம் வந்ததில்லை. ஆனால் எங்கள் ஊரிலும் தேர்த்திருவிழா கோலாகலம் தான். அதைப் பற்றின ஒரு கவிதை படித்து பாருங்கள் நேரம் இருக்கும்போது.

ஆ.கோகுலன் said...

//நீங்கள் நாத்திகராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் ஊர் ஆனித்தேர்த்திருவிழாவிற்கு வாங்க!!!//

அடேங்கப்பா! அவ்வளவு ஊர்ப்பற்றா?

யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி என்று ஊர் இருக்கிறது. இதற்கு அடுத்த ஊர் நல்லூர். நல்லூர் முருகனாலய தேர்த்திருவிழாதான் யாழில் பிரசித்தம். வரும் ஆவணிமாதம் வருகிறது விழா. அந்நேரம் யாழ் இருக்கும் நிலையை பொறுத்துதான் விழா நடத்துவதா இல்லையா என்று முடிவு செய்வார்கள்!
நினைக்க வைத்ததற்கு நன்றிகள்.

ஆ.கோகுலன் said...

இன்னாங்க இது. ஆ.. ஊன்னா உடனே கொசுவத்திங்கிறாங்க பதிவர்கள். புரியவேயில்லியே..?!

Unknown said...

திருனவேலிக்கு ஒரு தடவைதான் வந்திருக்கேன் (வந்திருக்கேன் என்ன, அந்த வழியா போயிருக்கேன்!). ஆனித் தேர்த்திருவிழா பத்தி தங்கமணிக்கு சொன்னா போதும், சீக்கிரம் வந்து பாத்திடலாம் :)

ஊருக்குப் புதுசா வறவுங்க, எங்க இருந்து தேர் பாக்கணும், என்ன செய்யனும்/செய்யக் கூடாதுன்னு கொஞ்சம் அடுத்த பதிவுல சொன்னீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

சதங்கா, உங்கள் கவிதை அழகாயிருந்தது. கொசுவத்தி சுற்றணும் என்று எழுதவில்லை. அதுவாக சுற்ற வைத்து விட்டது. நன்றி!


கோகுலன், கொசுவத்தி என்றால் பழைய நினைவலைகளில் மூழ்கிப் போவது! யாழ்ப்பாண திருநெல்வேலியில் எங்களூர் அல்வா உண்டா?



தஞ்சாவூரான், நான்கு ரத வீதிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தேரைப் பார்க்கலாம். நீங்கள் பெரிய தேரைப் பார்க்காதவர்கள் என்றால், கண்டிப்பாக வாருங்கள். நடக்க சலிக்கக் கூடாது. மிகவும் அருகில் பார்க்க வேண்டுமானால் தேரை இழுக்காத சமயமாகச் சென்றுப் பார்த்துக் கொள்ளலாம். பொதுமக்களும் சென்று வடம் பிடித்துத் தேர் இழுக்கலாம். கொஞ்சம் இடிபட வேண்டும்.

வடுவூர் குமார் said...

6 அடி ஆரம் உள்ள வட்டமாக இருக்கும், தேரின் சக்கரம்.
தோராயமாக சொன்னாலும் படிக்கு பாதியா?? :-)
இன்னும் மதுரை பக்கம் போகவில்லை,பார்ப்போம் எப்போது சமயம் கிடைக்கிறது என்று.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

மதுரை இல்லீங்க, நெல்லைங்க!
எங்க தேர் ரொம்ப பெரிசு அவ்வளவுதான், அளவெல்லாம் தெரியலைங்க! இங்கு படங்கள் பாருங்களேன்! http://vincyclicks.blogspot.com/2007/06/blog-post_29.html

ஆ.கோகுலன் said...

//யாழ்ப்பாண திருநெல்வேலியில் எங்களூர் அல்வா உண்டா?//

இங்கு அல்வா இல்லை. இங்கு அல்வா எனப்படுவது கச்சான் (நிலக்கடலை:வேர்க்கடலை) பருப்பினுள் சர்க்கரைப்பாணி ஊற்றி செய்யப்படுவது. உங்கு அல்வா எனப்படுவது 'தொதல்'(கோதுமையில் செய்வது மஸ்கட்) என்று நினைக்கிறேன்.

ஆ.கோகுலன் said...

தேர்ப்படம் பார்த்தேன். பெரியதுதான். மன்னர்காலத்ததா?

திருநெல்வேலி கார்த்திக் said...

உங்களின் அம்மா அவர்களின் கூற்று முற்றிலும் சரி.
நான் போன வாரம் நெல்லைக்கு சொன்றிருந்தேன்.
அதுசமயம் எதையோ பறி கொடுத்துபோல் வழமாய் வாளிப்புடன் கலகலப்பாய் இருந்த வடக்குரத வீதி
" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டனே" என வைகைபுயல் நடிகர் வடிவேலு பாணியில் சொல்வது போல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

லாலாசத்திர முக்கில் உள்ள சைவ ஹோட்டல்(விசாகம் கபே) ஒன்றுக்கு 5000 மதியச் சப்பாடு கட்டாம் (நஷ்டம் சுமார் 10,000/per day).சிறு கடைகளுக்கும் வியாபாரம் டல் தான்

ஆனால் வண்ணார் பேடை பை பாஸ் களைகட்டியுள்ளது.
ராம் பிரசாத்,காயத்திரி உணவங்களுக்கு சுக்கிர திசை தான்.
BSNL (TELECOM department-GM office)
எதிர்புரம் பரந்த மிக வசதியான வாகன நிறுத்துமிடம் ஒரு வரப் பிரசாதம்.

RMKV ன் முன்னால் மைசூர் பிருந்தாவன் போல் செயற்கை நிரூற்று ஒரு added attraction.

RMKV நெல்லைக்கு ஒரு landmark

கொசுறு செய்தி:
போத்தீசும் எதிர்ல் இடம் வாங்கி விட்டார்களாம்.


சபாஸ் சரியான போட்டி

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

அப்படியா? உண்மையில் கஷ்டமாகத்தான் உள்ளது. இதுவே அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டிடம், பேருநெது நிலையம் என்றால் போராட்டமாவது நடத்தலாம், இங்கே அதுவும் முடியாது.

Post a Comment