Sunday, June 1

நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி டவுணில் மிகப் பிரதானமாக அமைந்திருப்பது நெல்லையப்பர் கோயிலும் அதனைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளும் தான். இந்தக் கோயில் பரப்பளவில் மிகப் பெரியது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பரந்த 5 கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மூன்று வாசல்கள் அதாவது மூன்று கோபுரங்கள் உண்டு. கிழக்கு வாசல் பிரதானமான வாசல். மேலும் வடக்கு வாசலும் மேற்கு வாசலும் உண்டு.

இங்கு மூலவருக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள். அவற்றை “அம்மா மண்டபம்” என்ற மண்டபம் இணைக்கின்றது. “காந்திமதி அன்னை” என்பது இங்கேயுள்ள அம்மனின் திருப்பெயராகும். “காந்திமதி, காந்திமதி நாதன், நெல்லையப்பன்” ஆகிய பெயர் கொண்டவர்கள் இங்கு அதிகம்.

இந்தக் கோயிலின் தல விருட்க்ஷம் “மூங்கில்” ஆகும். பஞ்சரத்தின சபைகளில் ஒன்றான “தாமிர சபை” இங்கு தான் உள்ளது. கோயிலை நீங்கள் எவ்வளவு வேகமாகச் சுற்றி வந்தாலும் சரியாக ஒரு மணி நேரம் ஆகும். நிதானமாக சுற்றி வந்தால் இரண்டு, மூன்று மணி நேரம் வேண்டும். எவ்வளவு கூட்டம் கோயிலில் இருந்தாலும் நாம் உணர முடியாத அளவிற்கு மிகப் பெரியது. வருடத்தில் 365 நாட்களும் ஏதாவது ஒரு சிறப்பு வழிபாடு இருந்து கொண்டேயிருக்கும். இதில் பாதி என்னைப் போன்ற அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட தெரியாது. மிக முக்கியமானது ஆனித்தேர்த்திருவிழா.

"வடக்கு ரத வீதி"யில் பாருங்களேன்.

கோயிலின் மூலக்கதை:-
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது. பாண்டிய மன்னர்களால் சுமார் பதினான்காம் நூற்றாண்டில்(சரிதானா?) உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கில் விநாயகர் சிலைகளும், சிவலிங்கங்களும் உள்ளன.

பெயர்க்காரணம்:-
கோயில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் தினமும் நைவேத்தியம் செய்து வந்தார் அர்ச்சகர் ஒருவர். ஒரு சமயம் நைவேத்தியத்திற்காக நெல்லைக் காய வைத்து விட்டு தூங்கச் சென்றாராம். திடீரெனக் கொட்டிய மழையைக் கண்டு, நெல் நனைந்து விடுமே என்று முற்றத்திற்கு ஓடினாராம். அங்கே அதிசயம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. நெல் இருந்த இடத்தைச் சுற்றி மழை கொட்டிக் கொண்டிருக்க நெல்லுக்கு மட்டும் சூரிய வெளிச்சம் பட்டு நெல் காய்ந்து கொண்டிருந்ததாம்.

நெல்லுக்கு வேலியிட்டதால் நெல்வேலி ஆனது. புண்ணிய தலம் என்பதால் திருநெல்வேலி ஆயிற்று. மூலவரும் நெல்லையப்பர் என அழைக்கப்பட்டார். நெல்லையப்பர் கோயிலின் அமைப்பும் இங்குள்ள சிலைகளும் புகழ் பெற்றவை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மனதைப் பறி கொடுப்பது நிச்சயம்.

கோயிலின் அமைப்பு:-
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். நந்நியின் கொம்பு வளர்ந்து அந்தத் திரையைத் தொட்டு விட்டால் உலகம் அழிந்து விடும் என்று ரொம்ப நாள் நம்பிக் கொண்டிருந்தோம்.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்திருக்கும். கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இந்த மண்டபம், அதனைச் சுற்றியுள்ள தோப்பு ஆகிய இடம் மட்டும் சென்னையில் இருந்திருந்தால், 4 கோயில்கள் கட்டியிருப்பார்கள். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. (நம்ம பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இங்குதான் உருவேற்றிக் கொண்டிருப்பார்கள்.) வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் “தங்கப்பாவாடை” சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

அம்மனுக்கு சேலை, நம்மைப் போல் சாதாரணமான சேலைக்கட்டாக இல்லாமல் பிராமணப்பெண்களைப் போல மடிசார்கட்டாக உடுத்துவதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியிலிலிருந்து அப்படியே வெளியேறலாம். மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும்.

அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும். முன்பு “ஆறுமுக நயினார்” என்ற ஆண்யானை இருந்தது. இப்போது ஒரு பெண்யானை என்று நினைக்கிறேன்.

அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும். (இவ்விடங்களைத்தவிர பொதுமக்களுக்கு அனுமதியில்லா இடங்களும் உண்டு.)

அவ்வளவுதான், நவக்கிரகத்தைச் சுற்றி விட்டு அப்பாடா என்று உட்கார வேண்டியது தான்! இதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதன்பின் வெளியே வந்து கோயில்வாசல் கடைகளிலும், ஹோட்டல்களிலும், அல்வாக்கடைகளிலும், பூக்கடைகளிலும் இன்னும் இரண்டு மணி நேரம் செலவிடலாம்.

ஒருமுறை வந்துதான் பாருங்களேன்!

(பி.கு): நெல்லையில் கட்டிய பூக்கள் நெருக்கமாக பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இங்கு கட்டிய பூக்களை வாங்கி விட்டு, சென்னையில் பூ வாங்கும் போது நம்மை அறியாமல் கண்ணில் நீர் வரும்.

6 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல விவரணை! கொஞ்சம் படங்களும்
போடுங்க!

சிநேகிதன்.. said...

அப்படியே கொஞ்சம் இங்கவந்து பாருங்க
http://vincyclicks.blogspot.com/2007/06/blog-post_29.html

ஜீவி said...

விவரமான பதிவு நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

உங்கள் ஊர் தி.தா.இ. கல்லூரிப் பள்ளியில் அந்தக்காலத்தில் படித்ததும் கூட நினைவுக்கு வந்தது.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி இ.கொ! படங்கள் ஏதும் கைவசம் இல்லை. தேரோட்டம் பற்றிய படங்கள் "http://vincyclicks.blogspot.com/2007/06/blog-post_29.html" இங்கே உள்ளன.



ரொம்ப நன்றி சிநேகிதன்!!!



நன்றி ஜீவி! நாங்கள் அந்தப்பள்ளி,கல்லூரியை ம.தி.தா என்று சொல்வதுதான் வழக்கம்.

திருநெல்வேலி கார்த்திக் said...

தரணி போற்றும் பரணி பாயும் நெல்லை சீமையின் காரணப் பெயர் காரனத்தை தங்கள் பதிவின் அழகு நடையில் படிக்கும் போது காட்சிப் படப் பதிவு போல் இருந்தது. பாராட்டுக்கள்.

உண்மையிலே தமிழகத்திலே வேனுவனநாதரின் கோவில் தான் பெரிய கோவில். மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் ஆலயத்தை விட பரப்பளவில் பெரியது.

கோவிலுக்கு செல்லும் புதியவர்களுக்கு தாங்கள் சொல்லிய அனைத்து செய்திகளையும் வெங்கலக் குரலில் ஒரு பெரியவர் சொல்லி கொண்டிருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா?

நெல்லைக்கே சென்று வந்த ஆன்மீக அனுபவத்திற்கு தந்தற்கு நெஞ்சு நிரை நன்றிகள் சகோதரி.

ராமலக்ஷ்மி said...

அழகிய வர்ணனைகளுடன் நம் நெல்லையப்பரை வலையுலகோர் தரிசிக்க வழி செய்திருக்கிறீர்கள் கோகிலவாணி. வாழ்த்துக்கள்!

Post a Comment