May 2008:-
அன்புள்ள சம்பத்துக்கு,
நான் பிறந்தவுடன் நீதான் என்னைக் கையிலெடுத்தாய். “வினோத்” என்று என் பெயரையும் நீதான் தேர்வு செய்தாய். உன் முகம் பார்த்தால் மட்டுமே என் பொக்கை வாய் முழுதும் திறந்து சிரிப்பேனாம். நீ பள்ளியிலிருந்து திரும்பி வரும் வரை வீட்டை இரண்டு பண்ணும் நான், உன்னைக் கண்டவுடன் வாலாட்டிக் கொண்டு வரும் நாய் போல உன் பின்னே அலைவேனாம். நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.
‘நீ படிக்கும் பள்ளியில் தான் நானும் படிப்பேன்’ என்று அழுது அடம் வைத்து மழலைப்பள்ளியில் சேராமல் நேராக முதல் வகுப்பில் சேர்ந்தேனாம். உன் கை பிடித்து பள்ளி செல்லும் போதும், திரும்பி வரும் போதும் நீ சொன்ன கதைகள் எத்தனை? நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.
நீ கல்லூரியில் சேர்ந்த நாளில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று நான் அழுத அழுகையை நினைத்து இன்றும் மெதுவாகச் சிரித்துக் கொள்கிறேன். எனக்கு புதுமைப்பித்தனிலிருந்து எழில்வரதன் வரை அறிமுகப்படுத்தினாய். ஆங்கிலம் எழுதத் தடுமாறிய நான் இன்று ‘ஹிண்டுவில்’ கட்டுரைகள் எழுதுவது உன்னால் தான். நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.
நான் பத்தாம் வகுப்பு எழுதும் போது, எனக்காய் கண் விழித்தாய்; பன்னிரண்டாம் வகுப்பில் என் பரீட்சை அறைக்கே வந்து காத்து நின்றாய்; இதோ ஒரு மனிதனாய் இந்தச் சமூகத்தின் முன்பு நான் நிற்பதற்கு நீ தான் முழு முதற் காரணம் என்பதை நான் இன்னும் மறக்கவில்லை; நீ மறந்து விட்டாய்.
உன் திருமணத்தன்று கூட ‘நான் சாப்பிட்டேனா, நான் தூங்கினேனா’ என்று எனக்காய் கவலைப்பட்டவன் நீ! உனக்கென்று குடும்பம் வந்தபின்பு கூட என் மேல் கொண்ட அக்கறையைக் குறைத்துக் கொள்ளாதவன் நீ! அம்மாவும், அப்பாவும் தவறிய போதும், யாருமில்லாதவன் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததில்லை. என் திருமணம் முடிந்து என்னைத் தனியே சென்று இருக்கச் சொன்ன போதுதான் சற்றே கலங்கினேன்.
நாம் வாழ்ந்த வீட்டைப் பற்றி, என் மனைவி சொன்ன போதெல்லாம் புரிந்து கொள்ளாத நான், வீட்டை அப்பா உன் பேரிலும், ஊரிலிருக்கும் வீட்டை என் பெயரிலிலும் எழுதி வைத்திருந்ததை வக்கீல் வந்து சொன்ன பின்புதான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நான் பிறந்து வளர்ந்த வீடு என்னிடம் இருந்தால் என்ன, என் அண்ணனிடம் இருந்தால் என்ன? உன் பிள்ளைகள் நம் வீட்டில் வளரட்டும், வேறு வீடாக இருந்தால் என் பிள்ளைகள் வளராதா என்ன?
வீடு உன் பெயரிலேயே இருக்கட்டும், நான் வரும் போது வாசல் கதவை மட்டும் மூடி விடாதே!
அன்புடன்
வினோத்குமார்.
(கையெழுத்து கூட நீ கற்றுத் தந்ததுதான்!)
June 2008:-
அன்புள்ள லலிதாவிற்கு,
வினோத் எழுதுவது, நீ சொன்னபடி நான் அண்ணனுக்கு எழுதிய கடிதத்திற்கு இவ்வளவு வலிமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணன் வீட்டை என் பெயரில் எழுதி வைத்து விட்டாராம். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவதற்குள் நீ உன் அம்மா வீட்டிலிருந்து கிளம்பி மதுரை வந்து சேர். அண்ணன் எப்படியும் இரண்டு மூன்று மாதங்களில் வீட்டைக் காலி செய்து விடுவார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
வினோத்குமார்.
5 comments:
;( அடப்பாவமே!
அடப்பாவிகளா!!! யாரையுமே நம்ப முடியலையே!!!
வருகைக்கு நன்றி கயல்விழி, ச்சின்னப்பையன்.
நம்மால யாரையும் நம்பமுடியாது, ஆனா நாம எல்லாருக்கும் நம்பிக்கைக்கு உரியவங்களா நடக்க வேண்டியதுதான்!
கோகிலவாணி கார்த்திகேயன்,
கதை நன்றாக இருக்கிறது..நல்ல சஸ்பென்ஸ்.
ஆனால் கிழ் உள்ள வரி குழப்புகிறது.
// வீட்டை அப்பா உன் பேரிலும், ஊரிலிருக்கும் வீட்டை என் பெயரிலிலும் எழுதி வைத்திருந்ததை வக்கீல் வந்து சொன்ன பின்புதான் நன்றாகப் புரிந்து கொண்டேன்.//
"வீட்டை அப்பா உன் பேரிலும்" என்ன ரெண்டு வீடு வருகிறது? புரியவில்லை.
உண்மையிலேயே மிக அருமையான கதை.
என் இந்தப் பதிவை உங்கள் கதை நினைவூட்டுகிறது
.
ரொம்ப நாளாச்சு போல இருக்கு பதிவெழுதி. மீண்டும் எழுதவும்.
Post a Comment