மண் புழு வாழ்க்கை
கொடி பிடித்து கோஷம் போட்டு
தெரு இறங்கி போராடியதில்லை;
சின்னப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும்
ஈனப்புத்திகாரனின் சட்டை பிடித்ததில்லை;
தூங்கிக் கொண்டிருக்கும் நாயைக் கல்
கொண்டு எழுப்பும் சிறார்களைக் கடிந்ததில்லை;
மயங்கிய முதியவரை சுற்றிக் கூடியக் கூட்டத்தை
விலக்கி முதலுதவி செய்ததில்லை;
சினையை வயிறு நிறைந்து வரும்
பூனைக்கு ஒரு வேளை பால் வைத்ததில்லை;
கண் சிவந்து முகம் வீங்கி அழுதபடி வேலைக்கு வரும்
கண்ணம்மாவிடம் காரணம் கேட்டதில்லை;
எதையும் செய்யாமல் எதுவும் கேட்காமல்
எப்படியோ போகிறது
முதுகெலும்பில்லாத என்
மண் புழு வாழ்க்கை!
4 comments:
நல்லாவே இருக்குங்க கவிதை... மனிதன் மண்புழுவாகிவிட்ட நிலையை குத்திக்காட்டவும் செய்கிறது...
இவனுங்க போராடக்கூட வரத் தேவை இல்லைங்க .. போராடுரவன பார்த்து முகஞ்சுழிப்பானுங்க .. அதக் காணும்போது தான் கடுப்பா வரும் ..
கவிதை நல்லாயிருக்கு கோகிலவாணி.
வாழ்க்கையின் ஓட்டத்தில், மனிதாபிமானத்தைத் தொலைத்துவிடுகிறோம் பல இடங்களில்.
ரொம்ப நாள் கழித்து எழுதி இருக்கின்றீர்கள்... அதில் ஏன் ஒரு சோகம்?
Post a Comment