தண்ணீரில் வளர்பவளாநீ - அல்லவே
தரையில் பூப்பவள்தானே நீ
தானாய் நீட்டி வளர்ந்து
தண்ணீர் பக்கம் வந்ததேன?
உன்னழகைக் காண
ஊரே திரண்டிருக்க
உன்னழகைக் காண
உனக்கும் தோன்றியதா?
ஊருக்குப் பயந்து புனல்
அருகில் சென்று விட்டாயா
இருக்கும் இடத்தில் இருத்தல்
யாருக்கும் நன்மை அன்றோ
கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி
உவப்புதான் எவருக்கும்..
கவிழ்ந்தது சரிதான் எவரையும்
கவிழ்த்து விடாதவரை.
உன்னழகு சிலநாள் என
உணர்நதவர் கோடியுண்டு
நொடியில் மறையும் அழகால்
நொடிந்தவரும் கோடியுண்டு
உன்னழகைப் பாராட்டாது
உன்னிறத்தைப் புகழாது
எச்சரித்தே பாடும் என்மேல்
ஏனிந்த வெறுப்பு கண்ணே?
எப்போதும் தோழியாய் இருக்க
என்னால் முடிவது இல்லையே
தாயாய் மாறிநிற்கும் என்
தாயுள்ளம் புரிந்துகொள்ளடி
தண்ணீர் துன்பமா
தரை துன்பமா எனில்
தண்ணீரும் அல்ல
தரையும் அல்ல
ஆசையே துன்பம்
அகந்தையே துன்பம்
அழகே துன்பம்
அனுபவமே பாடம்.
மலர்களின் அரசிதான் நீ
மறுப்பதற்கு அல்ல...
No comments:
Post a Comment