Thursday, July 16

கரையறியா கடல்




பொன்னை யொத்த பொலிவுடன்
மின்னும் தங்கக் கடலே - இது
பொன்னந்தி நேரமா இல்லை
மென்காலைப் பொழுதா?

என்னை எப்போதும்
தன்னிலை மறக்கச் செய்யும்
அலைகடல் இங்ஙனம்
அமைதியாய் இருப்பதும் ஓரழகே!

அன்பான மனைவிமக்கள்
பேரன்பு பெற்றோர்
ஆருயிர் உறவுகள்
அருமைத் தோழர்கள்

தவித்தபடி தரையில் இருக்க
கரையறியா கடல்தன்னில்
கயல்களுக்காய் வலைவிரித்து
காத்திருக்கும் மீனவரே

அழகான கடலிது எமக்கு
வாழ்வுதரும் கடலிது உமக்கு
கரையறியா கடலிது எமக்கு
பொருள்தரும் கடலிது உமக்கு.

எல்லை தெரியாது சென்றுவிடாதீர்
தொல்லை வரக்கூடும் மீனவரே!
வெறுங்கையோடு திரும்புதல்
பழக்கம் தானே!

மீன்கள் இல்லையெனில்
மீண்டும் ஓர்நாள் செல்லலாம் - இன்று
மீண்டு வரவில்லை எனில்
மீண்டும் ஓர்நாள் வருமோ?


No comments:

Post a Comment