Thursday, February 7

எந்த சாமி நல்ல சாமி

இன்னைக்கு மல்லிக்குக் கணக்கு பரீட்சை. போன தடவை போல் இல்லாமல் இந்த தடவை எப்படியும் பாஸாகிடணும் என்ற படியே சர்ச்சுக்குள் போனவள் சிலுவையைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள். “ஐயையோ! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று ஓட ஆரம்பித்தவள் முக்கினிலிருந்த நாயக்கரம்மா வீட்டு பிள்ளையாருக்கு 3 தோப்புக்கரணம் போட்டாள். “பாஸாகிட்டே, 108 போடுறேன்” என்று டீல் முடித்துக் கொண்டு திரும்ப ஓட ஆரம்பித்தாள்.

அவளுக்கு இந்த தடவ நம்பிக்கை இருக்கு. நாலு மாசத்துக்கு முன்னாடி இருவத்தியஞ்சு வந்தாலே பெரிய விஷயம். ஒருநா பக்கத்தில இருந்த சர்ச்சுக்குப் போனா. அதுவும் இந்த துரைப்பய தான் கூட்டிட்டு போனான். அங்கே எல்லாரும் சத்தமா சேர்ந்து பாடறதைப் பார்த்து இவளுக்கு ஆச்சரியமா இருந்தது. துரையைப் பாரத்து அவன் பண்றாப்பலே பண்ணினா. அந்த தடவ கணக்குல நுப்பது வந்துச்சு..

அதுக்கப்பறம் இயேசு போட்டோ ஒண்ணை துரை கையைகாலைப் புடிச்சு வாங்கிட்டா. இயேசுவை மட்டும் கும்பிட்டா எப்படி? “வீட்டுலே இருக்குற என்னைக் கும்பிடாம, வேற சாமியக் கும்புடுறியா?”ன்னு பிள்ளையார் வந்து கனவுல கேட்க பிள்ளையாருக்கும் மூணு மூணு தோப்புக்கரணம் போட்டுட்டு இருக்கா.

அப்படியும் ரெண்டு மாசமா நுப்பதைத் தாண்டலை. ஆனா அவளும் விடாம சர்ச்சுக்கும் கோயிலுக்கும் ஓடிட்டுதான் இருக்கா.

அப்பத்தான் அவளுக்கு ஒண்ணு உறைச்சது. அவ கிளாஸ் நசீமா மட்டும் கணக்குல ஃபெயில் ஆனதே இல்லை. ஆனா அவளுக்கு சயின்ஸ்ல சரியா நுப்பத்தியஞ்சு தான் எடுப்பா. அதைப் பத்தி நமக்கென்ன, அப்படின்னுட்டு அவகிட்ட “நீ என்ன சாமி கும்புடுவே ?” ன்னு மெதுவா கேட்டா.

அவுக மசூதிக்கெல்லாம் போவ மாட்டாங்களாம். வீட்டுலே தான் தொழுவாங்களாம். அவங்க அம்மாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி அவங்க தொழும் போது கூட இருக்க சம்மதம் வாங்கிட்டா. இந்த மாசம் முழுசும் அல்லா கிட்டேயும் தொழுதாச்சு. இடையில நாலஞ்சு நாள் மட்டும் போக முடியலை. அவங்க வாப்பா இருந்தாரு. அவரு எப்பவும் முறைச்சுட்டே இருக்கிறதுனாலே இவ போகல.

என்ன இருந்தாலும் இயேசுவையும், பிள்ளையாரையும் மறக்கக்கூடாதில்லே, அதான் சர்ச்சுக்கும், கோயிலுக்குமா ஓடிட்டு பரீட்சை எழுதப் போனா.


பின்குறிப்பு: அந்த பரீட்சையிலே நுப்பத்தி நாலுதான் வந்துச்சாம். அந்த நாலு நாளும் தொழாம விட்டதுதான் தப்புன்னு புலம்பிட்டு இருந்தா. இப்பல்லாம் நானு அவ கூட பேசுறதே இல்ல.

4 comments:

Unknown said...

அட நுப்பத்தி நாலு வந்திருச்சில்ல. இனி காலையில் அல்லாசாமி, மதியம் சர்ச், ராத்திரி பிள்ளையாருன்னு அல்லது இதுமாதிரி மாத்தி முறை வச்சுகிட்டா அடுத்த பரிச்ச நூறுதான். ஆனா புக்க மட்டும் தொடப்படாது.:)))

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

சுல்தான் மறுமொழிக்கு நன்றி! புக்க எடுத்தாலும் சாமி கும்புடாம போனா படிக்காத கேள்வியால்ல வரும்!

((மஸ்கட் தமிழ்ச்சங்கம் பொங்கல்விழா நடந்தது 'Qantab' அல்ல. மற்ற மத்திய கிழக்கு நாடுகள் போல் அல்லாமல் மஸ்கட்டில் கடற்கரைகள் அதிகம்.))

தென்றல்sankar said...

yaar yeannavo naan yeappoothum saamyyai kumbittapadithaan yiruppeean.

ராமலக்ஷ்மி said...

மல்லியின் பார்வையில்.. சாமியிடம் பிரார்த்தனை மட்டும் பண்ணிட்டுப் படுத்துத் தூங்கும்..எல்லோரையும் எழுப்பி விட்டிருக்கீங்க கோகிலவாணி.

நல்லா எழுதுறீங்க!
//எல்லோரும் கடலில் முத்து எடுக்கும் போது நான் இப்போதுதான் கால் நனைக்கிறேன், முத்து எடுக்கும் நாளை எதிர் நோக்கி!//

இல்லை, நீங்களும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் முத்துக்களை! வாழ்த்துக்கள்!

Post a Comment