Tuesday, February 12

உறவாகிப் போகும் நட்புகள்

தலைப்பைப் பார்த்ததும் நட்புக்காக வக்காலத்து வாங்கும் பதிவு என்றெண்ணி வந்திருந்தீர்களேயானால் மன்னிக்கவும்! இது உறவுகளுக்காகப் பேசப் போகும் பதிவு.. அதற்காக நட்பே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நட்பு போதும், உறவே வேண்டாம் என்று சொல்லி வருபவர்களுக்காக சில வார்த்தைகள்.

நமக்கு பள்ளி, கல்லூரிகளில் தான் நட்பு என்பது அறிமுகம். அதற்கு முன்பு உறவுகள் தான் நமக்கெல்லாமே. அந்த உறவுகள் தான் நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. அந்த உறவுகளை வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியத்தையும் அவைதான் தருகின்றன.

நமது அப்பா அல்லது அம்மா வின் நெடுங்கால நண்பர்கள் நமது வீட்டுக்கு முதன்முதலாக வரும்போது “யாரோ வந்திருக்காங்க” என்று சொல்லும் வாய் அவர்களே இரண்டாம் முறை, மூன்றாம் முறை வரும் போது, ‘மாமா/அத்தை’ என்றோ ‘அங்கிள்/ஆன்ட்டி’ என்றோ அழைத்து விடுகிறது. அப்படி நாம் அழைக்கவில்லை என்றால் அவர்கள் நமக்கு அந்நியப்பட்டு விடுகிறார்கள்.

அவ்வளவு ஏன்?, நமது நண்பர்களை நம் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் போது கூட ‘அங்கிள்/ஆன்ட்டி’ அல்லது ‘மாமா/அத்தை’ என்று தான் சொல்லுகிறோம். “ஹலோ Mr.------” என்று பெரியவர்களை அழைக்கும் கலாச்சாரம் இன்னும் நமது நாட்டை எட்டிப் பார்க்கவில்லை என்பது நல்ல விஷயமாகத் தான் எனக்குப் படுகிறது.

எல்லாரும் அவரவர் தோழி/தோழன் வீட்டில் பழகும் போது அவர்களுடைய அம்மாவை அம்மா என்று அழைப்போம். அப்படி அழைக்காதவர்கள் 30% தான் இருக்கும். அவர்கள் ‘ஆன்ட்டி’ என்று அழைப்பார்கள். நண்பனின் தங்கையைத் தனது தங்கையாகவோ இல்லை சிலர் காதலியாகவோ நினைப்பார்கள். இன்னும் ஏன், அவர்களின் சொந்தக்காரர்களைக் கூட அதே உறவுமுறைகளைக் கொண்டு நாம் அழைக்கிறோம்.

இப்படி எல்லாரையும் நமது உறவாகவே எண்ணுவதால் தான் அவர்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இன்னும் எங்கள் தெருவில் எனது அம்மாவை ‘அக்கா’, ‘மதினி’, ‘அத்தை’, ‘பாட்டி’, ‘அம்மா’ என்று அவரவர்க்குத் தகுந்தாற்போல் உறவுமுறை சொல்லித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கல்லூரிகளில் ஆயிரம் பேர் இருந்தாலும் நமது நண்பர்கள் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதற்காக மற்றவர்களை நாம் வெறுப்பதில்லை. அதே போல உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நெருக்கமானவர்கள் ஒரு சிலர் தான். அதற்காக ‘மற்றவர்களை நாம் வெறுப்பதில் என்ன நியாயம்’ என்பது தான் என் கேள்வி.

ஒரு தோழி/தோழன் நமக்கு ஏதாவது உதவி செய்தால் எவ்வளவு நன்றியுணர்வோடு இருக்கிறோம்? அதே உதவிகளை நமது உறவுகள் செய்தால், ‘அவர்களின் கடமை’ என்று எவ்வளவு எளிதாகத் தள்ளிவிடுகிறோம்.
பொதுவாக உறவுகளைப் பற்றி ‘என்னைப் பார்த்து பொறாமைப் படுறான், சார்!’ என்று சொல்வது வழக்கம். அவர்களை விட நீங்கள் மேம்பட்ட நிலையில் இருந்தால் இயல்பாகவே ஒரு பொறாமை எட்டிப் பார்க்கத் தான் செய்யும். ‘நண்பர்களுக்குள் பொறாமை இல்லை’ என்று தயவு செய்து சொல்லாதீர்கள். ஒரு ஏழை தோழி/தோழன் ‘எங்க வீட்டில் ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லும் போது இயல்பாகவே அவர்கள் மேல் பரிதாபப்பட்டு உதவுவோம். அதே சமயம் பணக்கார நண்பன் ‘எங்கள் வியாபாரம் ரொம்ப நஷ்டத்தில் நடக்கிறது’ என்று சொன்னால் அதற்காக உதவுபவர்கள் எத்தனை பேர்? உதவவில்லை என்றாலும் பரிதாபமாவது படுவோமா?
“நல்லா விடுறான் கதை” என்று எளிதில் சொல்லிவிடுவோம்.

எல்லா உறவுகளுமே சிக்கல் நிறைந்தது தான். நட்பு மட்டும் விதிவிலக்கல்ல. முதன்முதலாக நம்மைப் பார்க்கும் ஒருவர் “என்னங்க இவ்வளவு அசிங்கமாக டிரஸ் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்கிறார். இன்னொருவரோ “உங்க டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்கிறார். உண்மை எதுவாகவோ இருக்கட்டும், அடுத்த நாள் நாம் யாரைப் பார்த்து சிரிப்போம்? நமக்கு யார் ஒத்து வருகிறார்களோ அவர்களிடம் நமக்கு நட்பு பாராட்டத் தோன்றுகிறது. மற்றவர்களை ஒதுக்குகிறோம். இப்படி தேர்ந்தெடுக்கும் வசதி உறவுகளில் இல்லை என்பதால் அவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறோமோ?

நீங்கள் சொல்லும் “நண்பர்கள் மட்டுமே நம்மால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்” என்ற வாக்கியம் முற்றிலும் உண்மை. நண்பர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என்றுள்ள உறவுகள் இப்போது விட்டால், பின்பு அமைய வாய்ப்புகள் குறைவு.
இப்போது அம்மா/அப்பா/அண்ணன்/அக்கா/தம்பி/தங்கை என்றிருப்பவர்கள் தான் பின்னாளில் நமது குழந்தைகளுக்கு பாட்டி/தாத்தா/மாமா/அத்தை/சித்தி/சித்தப்பா என்ற உறவுகள் ஆகின்றன என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம்???

நட்புகளையே உறவுகளாக ஆக்கிக் கொள்ளும் நம்மால் ஏன் நமக்கென்றுள்ள உறவுகளைக் கொண்டாடத் தெரியவில்லை?

12 comments:

Anonymous said...

//அண்ணன்/அக்கா/தம்பி/தங்கை//

இந்த உறவுகளால் பிரச்சனைகள் வரமாட்டாது. ஆனால் இவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படும் "பொருதமற்ற"துணைகளின் உறவுகளால் தான் பிரச்சனையே.

நண்பர்களைப் போல் உறவுகளையும் அவதானமாக தேர்ந்தெடுத்து
விட்டால்.................:-)

கருப்பன் (A) Sundar said...

டெம்ப்ளேட்டை மாற்றுங்கள் கோகிலா Firefox உலாவியில் படிக்க முடியவில்லை.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

////// நண்பர்களைப் போல் உறவுகளையும் அவதானமாக தேர்ந்தெடுத்து
விட்டால்.................:-)///////

அவதானம் என்றால் என்னவென்று தெரியவில்லை.


///// டெம்ப்ளேட்டை மாற்றுங்கள் கோகிலா Firefox உலாவியில் படிக்க முடியவில்லை ////////

டெம்ப்ளேட்டை மாற்றுவதா? கருப்பன்!! இப்பத்தான் ஏதோ எந்த பிரச்னையும் இல்லாமல் வண்டி ஓடுகிறது, டெம்ப்ளேட்டை மாற்றாமல் சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள்!

Unknown said...

//டெம்ப்ளேட்டை மாற்றாமல் சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள்!//

line-height: 1.4em; என்ற வரியை உங்க டெம்லெட்டுலேர்ந்து நீக்கினால் சரி ஆகிவிடும். மாற்றும் முன் டெம்லெட்டை ஒரு பேக்கப் எடுத்து வச்சிக்கிட்டே மாற்றுங்க. இல்லைன்னா இந்த ராசா சொன்னதாலே உள்ளதும் போச்சேன்னு புலம்புற மாதிரி ஆகிடக்கூடாது.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ரொம்ப நன்றி KVR!! நான் அந்த லைனை எடுத்துவிட்டேன். இனியாவது பிரச்னை வராமல் இருக்கட்டும்.

Unknown said...

இல்லைங்களே, இன்னமும் அந்த வரி உங்களுடைய stylesheetல இருக்கு. அதனாலே இன்னமும் நெருப்புநரியிலே (firefox) பூச்சி பறக்குது. டெம்லெட்டுல எங்கேல்லாம் line-height: 1.4em; இருக்கோ அதை எல்லாம் ஒரு Search & Replace போட்டுத் தூக்கிடுங்க.

தென்றல்sankar said...

i just see your page that's nice

திருநெல்வேலி கார்த்திக் said...

உறவுகளில் பிரிவு வருவதற்கு காரணம் ஒரு சில மனிதர்களின் கெட்ட குணமான அங்கே கேட்டதை இங்கேயும்,இங்கே கேட்டதை இங்கேயும் கண் காது மூக்கு வைத்து 1 க்கு 10 ஆக சொல்வதால் தான் நடந்தேறுகிறது.

பாத்க்கப் படுபவர்களும் நமது
உறவினர் (brother,sister,uncle,aunty,in-laws)
இப்படிச் சொன்னாரா என்று விசாரித்து பார்க்காமால் இவர்களும் வார்த்தை களை கோபமாக கொட்டிவிட, அதை கேட்கும் முதலில் ஒன்றுமே சொல்லாதவர் அவர் பங்குக்கு சொல் அம்புகளை தொடுக்க ஒரு சங்கிலி த்தொடராய் தொடர்ந்து கடைசியில் பேச்சு வார்த்தை முறிந்து வீடுகளுக்கு போய் வருவதுகூட நின்றுவிடும்.பொது இடங்களில் மற்றும் குடும்ப விழாக்களில்
பாராமுகமாய் முகத்தை திருப்பிக் கொண்டு இருப்ப்பது தொடரும் துயரம்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பான்மையாக வாழும் சைவ வேளார் குடும்பங்களில் ( சில குடும்பங்களில்)இது இன்றும் நடை பெறும் செயல்.
தவிர்க்கப்பட்டால் உறவுகள் பலப்பட்டு நட்பு வட்டம் விரியும் எனும் உங்கள் கருத்தை 100 % ஏற்ருக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

உறவுகளை நமக்கு(என்னையும் சேர்த்துத்தான்) போற்றத் தெரியவில்லை என்பதுதான் என் கருத்து.

ஆ.கோகுலன் said...

//ஒருவர் “என்னங்க இவ்வளவு அசிங்கமாக டிரஸ் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்கிறார். இன்னொருவரோ “உங்க டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்கிறார். உண்மை எதுவாகவோ இருக்கட்டும், அடுத்த நாள் நாம் யாரைப் பார்த்து சிரிப்போம்? நமக்கு யார் ஒத்து வருகிறார்களோ அவர்களிடம் நமக்கு நட்பு பாராட்டத் தோன்றுகிறது. மற்றவர்களை ஒதுக்குகிறோம். இப்படி தேர்ந்தெடுக்கும் வசதி உறவுகளில் இல்லை என்பதால் அவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறோமோ?//

:) அறிவுபூர்வமான அணுகுமுறை!!

கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது,

இதே போன்ற கருத்தை நானும் எழுதி இருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நட்பையும் உறவையும் பற்றி நல்ல அலசல்! கார்த்திக் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்பதைக் கருத்தில் கொண்டு எதையும் பெரிது செய்யாமல் வாழும் நாளில் எல்லார்க்கும் இனியவராய் இருக்க முயற்சிக்க வேண்டும். சரிதானே வாணி?

Post a Comment