Sunday, February 7

பெரிதாய் என்ன கேட்டு விட்டேன்?



என்னவன் பற்றி எனக்குத் தெரியாததா
என்றிருந்தேன்
ஒன்றுமே தெரியவில்லை எனும்போது
இன்னும் கீழே போனேன்...

உன் மீதான என் காதல்
பாலைவன மண்ணில்
புதையுண்டு விட்டதோ? - எனில்
என் மீதான உன் காதல்?
அப்படி ஒன்றை நான்தான்
உருவகப்படுத்திக் கொண்டேனா??

காதலைத் தொலைத்தவர்கள் பாக்கியவான்கள்..
காதல் என்ற ஒன்றை உணர்ந்தாவது இருப்பார்கள்...

நீ நல்லவன் என்று பெயர் வாங்க
எப்போதும் நான் கெட்டவளாகிப் போனேன்...

உன்னில் பாதி என்றிருந்தேன்.. - இல்லை
மூன்றாம் மனுசிதான் என்பதை நீ உணர்த்தும்வரை....
உணர்ந்த பின்பு இன்னும் என்னைக்
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...
எப்படி இருக்கிறாய் என் மனமே என்று??

உண்மைகள் சில விளங்கும் போது
அடிமனதில் ஒர் வலி வருகிறதே அதென்ன
உயிர்களுக்கிடையே உள்ள ஒட்டுத் தையல்...
பிரியும் வலியா....

நெஞ்சு நிறைய காதலோடு இருந்த போது
இதயம் இத்தனை கனக்கவில்லை...
காதல் என்பதே இல்லை என்னும் போது
கல்போலக் கனத்து இருக்கிறது....

என் கனவுகளில் நீ வராத அன்று
என்னை சந்தேகித்தபடியே திரிந்தேன்....
உன் கனவுகளில் நான் இல்லவே இல்லை
என்பதை உணரும் வரை...

காதல் இல்லா வாழ்வு சாத்தியமா?
என்ற சந்தேகம் இப்போது இல்லை..
காதல் இல்லா நானே இதோ இருக்கிறேனே....
எல்லாம் சாத்தியம்தான்
உடல் வாழ ஒன்றும் வேண்டாம்
உயிர் வாழத்தான் எல்லாம் வேண்டும்...

அப்படி என்ன பெரிதாய் கேட்டு விட்டேன்???
உன் மனதில் ஓரிடமும்
உன் கனவுகளில் என் இருப்பும் தானே

No comments:

Post a Comment